கோலி விளையாட்டு

கிரிக்கெட் என்ற விளையாட்டு, பல விளையாட்டுக்களுக்கு சாவுமணி அடித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. கிரிக்கெட் பிரபலமடைவதற்கு முன்பாக கிராமங்களில் கோலி,பம்பரம், கில்லி, திருடன் போலீஸ்,  இன்னும் சில விளையாட்டுக்களை   சின்னஞ் சிறார்கள் விளையாடிய காலம் அது. இந்த கதையை, நான் எழுத காரணம் கோலி விளையாட்டின்  விதிமுறைகளை எதிர்கால சந்ததி  மறந்து விடக்கூடாது என்பதும், கோலி வெறும் விளையாட்டு அல்ல, அது கிராம விளையாட்டின்  சின்னங்களுள் ஒன்று என்பதும் காரணம். கோலி விளையாடிய ஒரு சிறுவன் அது தனக்கு சொல்லி கொடுத்த பாடத்தையும் பகிர்வதே கதையின் நோக்கம் . சிறு வயதில் தான் கோலி விளையாடிய  அனுபவத்தை எண்ணி பார்க்கிறான்.
 
கிராமத்தில் கோலி விளையாட்டு சனி ஞாயிறு ஆகிய  இரு தினங்களில் அதிக சூடு பிடிக்கும். மற்ற நாட்களில் அதிக பட்சம்  இரண்டு மணி நேரம்தான் விளையாடமுடியும்.  அவன் விடுமுறை  நாளில் காலை பல் துலக்கிய  கையோடு கோலியும்கையுமாகத்தான் இருப்பான். கோலி விளையாட்டில் எல்லோரையும் சேர்ப்பதில்லை. நாலாம்(நான்காம்) வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தனியாகவும், எட்டு முதல் பதினேழு வயதுள்ளவர்கள் தனியாகவும் விளையாடுவார்கள். குறிப்பாக கோவில் மைதானத்திலோ, பள்ளி மைதானத்திலோ, முச்சந்தியிலோ, பஞ்சாயத்து போர்டு கிரௌண்டிலோதான் விளையாடுவார்கள். கோலி வெறும் சாதாரண விளையாட்டு அல்ல. கோலி விளையாடும் போது கள்ளத்தனம் செய்தால் அவனை மூன்று நான்கு நாளைக்கு ஆட்டத்தில் சேர்க்க மாட்டார்கள்.
 
கோலியில் பல விளையாட்டுக்கள் உள்ளது. வட்டம், எறி விளையாட்டு, குழி தோண்டி அதனுள் கோலிக்காய் (கோலியை கோலிக்காய் என்பார்கள்  ) இடுதல், ஒன்பது குழி விளையாட்டு என பல வகைகள் உண்டு.
 
வட்டம் என்னும் விளையாட்டின் விதிமுறையானது, ஒரு பெரிய வட்டம் போட்டு அதனுள் கோலிக்காய்களை வைக்க வேண்டும். வட்டத்திலிருந்து அஞ்சு(ஐந்து) அடி முதல் ஆறு அடி தள்ளி இரு புறமும் கோடிட வேண்டும். ஒவ்வொருவராக ஒரு கோட்டிலிருந்து கோலியை கெந்த  (தூக்கி போடுதல்) வேண்டும். யார் அடுத்த பக்கத்து கோட்டுக்கு  அருகில் போட்டானோ அவனுக்குதான் வட்டத்திலிருக்கும் கோலி அடிக்க வாய்ப்பு. ஒரே ஒரு முறை கோட்டை தாண்டி போட்டால் மீண்டும் கெந்த  வாய்ப்பு வழங்கப்படும். மீண்டும் தவறு செய்தால் அந்த முறை அவன் அவுட். முதலில் வந்தவன் வட்டத்தில் உள்ள கோலி அடிக்கும்  போது  எத்தனை கோலிக்காய்கள் வெளிவருகிறதோ அது அவனுக்கு சொந்தம். மேலும் வட்டத்தினுள் உள்ள கோலி மீது பட்டால்,  அவன் ஆட்டத்தில் உள்ளவர்களின் மற்ற கோலிகளை அடிப்பான். யார் யார் காயை சரியாக அடிக்கிறானோ அவர்கள் அவுட்.  இப்படி அந்த வட்டத்தில் இருக்கும் கோலிகாய்கள் தீரும் வரை விளையாடுவார்கள். இந்த ஆட்டத்தில் பிசினஸ் பார்ட்னர்களாக ஒருவருக்கொருவர் இருந்து கொள்வார்கள். அவனுடைய பார்ட்னெர் கோலியை  மட்டும் அடிக்க மாட்டான். வெற்றி பெற்ற பிறகு பங்கு வைத்துகொள்வார்கள். ஆம். கோலி மிகப் பெரிய தொழில் வெற்றி ரகசியம் சொல்லி தந்த விளையாட்டு. அடிப்பதற்கு  என்று டான்கன் கோலி, மண்டைகோலி, பெரியபூ கோலி என்று பெரிய சைசில் கோலி இருக்கும். ஆனால் விளையாட்டு ஆரம்பிக்கும் முன்பாகவே  எந்த கோலியை அடிப்பதற்கு உபயோகிக்க வேண்டும் என்று  முடிவெடுத்து விடுவார்கள்.
 
எறி விளையாட்டும், சாதாரண விளையாட்டு அல்ல. கிட்டதிட்ட குறி பார்த்து சுடுவதற்கு சமமான விளையாட்டு. இதில் வெற்றி பெறுபவர்கள். நிச்சயம் ஆர்மியிலோ போலீஸ் துறையிலோ இருந்தால் எதிரி தப்ப முடியாது. இந்த விளையாட்டின் விதிமுறையானது, ஒரு கோடு, அதற்கு மூன்று முதல் நான்கடியில் ஒரு சக்கா(காலை வைத்து, பெரும்காளால்  அரை வட்டம்) போடுவார்கள். விளையாட்டில் பங்கெடுப்பவர்கள்  ஆளுக்கு நவ்வாலு (நான்கு நான்கு), அஞ்சு அஞ்சு (ஐந்து ஐந்து) என முன்கூட்டியே  தீர்மானித்து, பின்னர் ஆட்டத்தை தொடங்குவார்கள். யார் கோட்டுக்கு அருகில் சரியாக காயை கெந்தினார்களோ அவருக்குதான் முதல் வாய்ப்பு. முதலில்  விளையாட வேண்டியவர், சக்காவில் குத்த வைத்து உட்கார்ந்திருந்து, காயை கோட்டைக்கு  அந்த புறம் பரப்பி வீசுவார். எந்த காயை அடிக்க வேண்டும் என்று மத்தவன் சொல்வான். அந்த காயை அடித்தால் மட்டும் போதாது. எறி சரியாக பட்டதும் மட்டுமல்லாமல் ஒரு முழம் தள்ளி போயிருக்க வேண்டும். அப்படி சென்றால் அடித்தவனுக்கே அத்தனை கோலியும் சொந்தம். ஒருவேளை எறியும் போது தவறாக வேறு காயை அடித்தாலோ, சரியாக அடித்து வேறு காயில் பட்டாலோ அதற்கு பச்சா என்று பெயர். அவர் மீண்டும் ஒரு காயை ஆட்டத்திற்கு கொடுத்து  விளையாட்டை தொடரலாம். இல்லையேல் மூன்றுமுறை வரும் வரை ஆட இயலாது.
 
இந்த விளையாட்டு எங்கு சென்றது என்று இன்று வரை யோசித்துகொண்டிருக்கிறான். எத்தனையோ முறை கோலி விளையாட போய் சாப்பிட கூட வராமல் இருந்ததற்கு அடி வாங்கி உள்ளான். வெற்றி பெற்ற சிறுவன் வீட்டுக்கு போக வேண்டும் என்பான். தோற்றவன் இன்னும் இரண்டு முறை என்று வெற்றி பெற போராடிகொண்டிருப்பான். இதில் வேடிக்கை என்னவென்றால், தோற்றவன் வெற்றி பெற்றவனிடமே காசு கொடுத்து கோலி வாங்கி விளையாடுவான். சில நேரங்களில் கடையில்  கோலிக்காய் விற்று தீர்ந்திருக்கும். இப்படி கோலி விளையாடி அதில் பணம் சம்பாதித்து தனக்கு தேவையான மிட்டாய்களை வாங்கி சாப்பிடுகிற தன்னை அம்மா திட்டியதும்(தினமும்தான்), அப்பா கோபம் பொறுக்காமல் ஒரு நாள் அடித்ததும் இன்றும் அவனுக்கு வலிக்கிறது. வீட்டுக்கு விருந்தாட்கள் வந்தால்
ஏன் வந்தார்கள் என்று எண்ணுவான். விருந்தாட்கள் இருக்கும் போது விளையாட போனால் அம்மா திட்டுவாள். ஆனால் அதே அம்மா பலமுறை அப்பாவிடம் இருந்து காப்பாற்றிய நாட்களும் உண்டு.  சேர்த்து வைத்த கோலிக்காய்களை, அம்மாவுக்கு தெரியாமல் பதுக்கி வைப்பான். அடுத்த வருடம் விளையாட அது உதவும் என்பதால். ஆம், கோலி அவனுக்கு சேமிப்பை சொல்லி தந்திருக்கிறது, இன்று அந்த சேமிப்பு பழக்கம் அவனை பொறுப்பாளியாக்கி  இருக்கிறது என்றால்  அது மிகைஅல்ல. கோலியும் ஒரு சீசன் விளையாட்டுதான். ஒரு நான்கு மாதம் கழித்து பார்த்தால், பம்பரம் விளையாட்டு களை கட்டும். கோலியில் மிகப்பெரிய சண்டை கூட வந்திருக்கிறது. சில நேரங்களில், எவனாவது ஒருவன் மற்றவனை அடித்தால் அது பெரியவர் சண்டை வரை போய் முடிந்த வரலாறும் உண்டு.
 
கோலியின் மூலம் தொழில் ரகசியம், சேமிப்பு, வெற்றி பெரும் விதம் என பல நுட்பங்களையும், எது செய்தாலும் அது சண்டையில் போய் முடியாமல் பார்க்க வேண்டும், சூதாட்டம் போல தோற்கிற இடத்தில் இருக்க கூடாது என்ற எச்சரிக்கைகளை கோலி புரிய வைத்திருக்கிறது. கோலி கற்று தந்த பாடம் ஏராளம்.  இன்று வரையிலும் கோலி விளையாட்டு தனக்கு  நிறைய விஷயங்களை கற்று கொடுத்திருப்பதை  நினைத்தால், கோலி விளையாட்டின் மீது அவனுக்கு மிகுந்த பிரமிப்பு ஏற்படுகிறது.
 
இன்னும் கூட மற்ற கோலி விளையாட்டின் விதிமுறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு  ஆவல் இருந்தாலும், அது வாசிப்பவர்களுக்கு பொறுமையை சோதிக்கும் என்தால், எழுத முடியவில்லை.  இன்னொரு வாய்ப்பில் பம்பரத்தின் மகிமையையும் கில்லியின் மகிமையையும் பேசலாம்

One response

  1. கோலி மட்டுமல்ல இன்னும் பல விளையாட்டுகள் கிராமத்திலிருந்து சுத்தமாக மறைந்தே போய்விட்டன. உதாரணம் – கிட்டிபுள் ( கில்லி)..பம்பரம் . கிராமங்கள் மட்டும்தான் இந்த விளையாட்டுகளுக்கு அடையாளமாக இருந்தது அதுவும் 90 களோடு சுத்தமாக மறைந்து போய்விட்டது. விஞ்சி இருப்பது கபடி மட்டும்தான் அதுவும் அப்போவோ இப்போவோ என்று சாக கிடக்கிறது.மற்ற விளையாட்டுகள் அனைத்தும் செத்தே போய்விட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s