கர்நாடக அமைச்சர்கள் மூன்று பேர் சட்டசபையில் ஆபாசப்படம் பார்த்ததை தொலைக்காட்சி படம் பிடிக்க, மூவரும் சமூகத்தின் முன்பாக மாட்டிக் கொண்டார்கள். இப்படி அமைச்சர்களோ, சட்ட சபை உறுப்பினர்களோ நடந்தது ஒழுக்க விதிகளுக்கு நிச்சயமாக முரணானது. ஒழுக்க விதி என்று நான் குறிப்பிடுவது சட்டசபை ஒழுக்க விதிகளையும், சட்டசபையில் அவர்களின் செயலாக்கத்தையும்தான். அவர்களுக்கு சட்டசபை விதிப்படி, ஒழுங்கு மீறலுக்கு என்ன தண்டனையோ அது மட்டும் கொடுத்தாலே போதுமானது என்பதே எனது கருத்து. இவர்களை ஜெயிலில் போடவேண்டும் என்றெல்லாம் திருவாய் மலர்ந்திருக்கிறார் பெரியவர் அண்ணா ஹசாரே. இது போன்ற கருத்துக்கள் எல்லாம் தேவையற்றது என்றும் கருதுகிறேன். ஏனெனில், சட்டசபை விதிகளை பற்றியும் அதன் அடிப்படையில் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை பற்றி மக்களுக்கு தெரிவித்தால் போதுமானது. அதை விட்டு இவர்களை ஜெயிலில் போடவேண்டும் என்பதெல்லாம் உணர்சிகளின் அடிப்படையில் வெளிப்படுகிற கருத்தாகவே உள்ளது. இப்படி செய்தவர்களுக்கு இது போன்ற தண்டனை என்று அறிவுப்பூர்வமாக அண்ணா ஹசாரே சொல்வாரேயானால், எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள் உள்ளன. உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் பள்ளி வளாகத்தில் புகைபிடித்து விட்டார் என்றால்,என்ன மாதிரியான தண்டனை கொடுப்பது என்று அண்ணா ஹசாரே என்ன சொல்வாரோ.. நமது ஊரில் நித்யானந்தா பொதுவாழ்க்கையில் இருந்து கொண்டு, மக்களுக்கு அறிவுரை வழங்கி விட்டு, அவரின் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய போது, எப்படி அவர் செய்யலாம் என்று கொதித்த தொலைக்காட்சிகளே, இன்றும் இந்த விஷயத்தை ஊதி பெரிதுபடுத்துகின்றன. அமைச்சர் பதவியை விட்டு தூக்குவது என்பதோ அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டு தூக்குவது என்பதோ சட்டசபை விதிகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. அதை விட்டு பிஜேபி அமைச்சர் பதவியில் இருந்து தூக்கிவிடுவது என்பதெல்லாம் விஷயத்தை தற்காலிகமாக அணைக்க முயற்சிக்கும் என்ற அடிப்படையே தவிர வேறேதுமில்லை. முல்லை பெரியாறு அணைத்திட்டம், கூடன் குளம் போன்ற விஷயங்களுக்கு வாய் திறக்காத அண்ணா ஹசாரே இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளுக்கு திருவாய் மலர்வதன் உள்நோக்கத்தை அறிந்துகொள்ளுங்கள். மிக்க தெளிவான அரசியல்வாதிகள் கூட எல்லா நாட்டு நடப்புகளிலும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பார்கள். ஆனால் அண்ணா ஹசாரே ஆரம்பத்திலிருந்தே தனக்கு சவுகரியமான விஷயங்களுக்கு மட்டும் கருத்து தெரிவிப்பதை மக்களுக்கு அறியப்படுத்தவும், அமைச்சர்களின் நடவடிக்கைகளுக்கு சட்டசபை விதிப்படி தண்டை கொடுத்தால் போதும் என்ற கருத்தின் அடிப்படையில் தான் இக்கட்டுரையை பதிவு செய்கிறேன்.