நீதி என்பது பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரும்பான்மையான மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றே. நீதி ஒட்டு மொத்த உலகத்திற்கும் பொதுவானதாக இல்லை. ஒவ்வொரு நாடும் அதனதன் வாழ்வியல் சூழல் முறையிலும் , மதக் கோட்பாட்டின் அடிப்படையிலும், ஜாதிய வழிமுறைகளாலும், இன அடிப்படையாலும் தங்களுக்கு ஏற்றவாறு சட்டத்தை உருவாக்கிக் கொண்டார்கள். ஆகையால்தான் ஒவ்வொரு நாட்டிற்க்கும் நீதி வேறுபடுகிறது. சரி இது, தவறு இது என்று ஒழுங்குபடுத்திக் கொண்டு, செய்கிற தவறுகளுக்கு தகுந்தவாறு தண்டனையை வகுத்துக் கொண்டார்கள். சட்டத்தை ஆதி காலத்தில் உருவாக்கியவர்கள் ஆண் வர்க்கதினராகத்தான் இருந்திருக்கக் கூடும் . அவர்கள் தங்களுக்கு சாதகமாக பல சட்டங்களை அதாவது பெண்களை கட்டுக்குள் வைத்திருக்கும் படியான ஒரு முறையையும் வைத்துக் கொண்டார்கள். பெண்மைப் புரட்சி ஏற்படுத்துவது என் நோக்கமல்ல.
நீதியும் நியாயமும்
எனக்கு மிகப் பெரிய கேள்வி ஒன்று உள்ளது. எல்லா மதத்திலும் எப்படி, ஆண் கடவுளே அல்லது ஓர் ஆணே இறைத்தூதராக வடிவெடுத்தார்கள். இன்ன பிற பெண் கடவுள்களும் இணைக்கடவுள்களாகவே (இந்து மதத்தில் கூட சிவன்தான் அர்த்தனாரிஸ்வரராக இருக்கிறார்). நீதி எப்படி நாட்டிற்கு ஏற்றால் போல் வெவ்வேறாக இருக்கிறதோ அப்படித்தான் சட்டங்களும், அதனடிப்படையில் நீதி முறைகளும் காலத்திற்கும், நாகரிகத்திற்கும் ஏற்றால் போல மாறிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம் என்ற பெயரில் மனித இயற்கை உந்துதல்களையும் மீறி நாகரிகத்தின் அடிப்படையில் மனிதன் சில சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டான்.
நீதி, பண பலம் வாய்ந்தவர்களாலும் அதிகாரபலம் மற்றும் ஆள் பலம் வாய்ந்தவர்களாலும், அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவே பார்க்கிறேன். இப்படி உருவாக்கப்பட்ட நீதிமுறை எல்லா காலக்கட்டத்திலும் பலம் வாய்ந்தவர்களால் ஆளப் படுகிறது என்பதுதான் நிஜம். மிக மிகக் குறைந்த அளவிலேயே , பலம் வாய்ந்தவர்களுக்கு நீதி, தண்டனையை வழங்கியுள்ளது. அவ்வாறு தண்டனை வாங்கியவர்கள், மற்ற அதிகாரபலமிக்கவர்களால் கைவிடப்பட்டவர்களாகவோ அல்லது சில நேரங்களில் நீதி இருக்கிறது என்று பொது மக்களை ஏமாற்றுகிற ஒன்றாகவே நீதி வெளிப்படுகிறது. நீதி, எல்லா நேரங்களிலும் நியாத்தை வழங்கி விடுவதில்லை.
நீதி வேறு. நியாயம் வேறு. குற்ற செயல்களுக்கு, நீதி சாட்சிகளின் அடிப்படையில் இயங்குகிறது. நியாயம் மனச்சாட்சிகளின் அடிப்படையில் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.ராமாயாணத்தில், வாலியை ராமர் வதம் செய்தது நீதி. ராவணனை வீழ்த்தியதில் நியாயம் இருந்தது. சிலப்பதிகாரத்தில், கோவலனுக்குக் கிடைத்தது நீதி. கண்ணகி கேட்டதோ நியாயத்தை…..
Pingback: கொலையா? கொள்ளையா? எது கொடிய குற்றம் ? | lakshmanaperumal