நான் மென் பொருள் பற்றிய குறுகிய கால பயிற்சி எடுத்த போது, ஒரு பெண் என்னிடம் பேசலானாள். அவள் பேசும் போது, அவள் சொற்களைக் காட்டிலும் விரல்கள் அதிகம் பேசின. பேசியவள் சென்று விட்டாள். அதுநாள் வரை விரல்கள் பற்றிய எந்த எண்ணமும் இல்லாதவனாகவே இருந்தேன். நீளமான விரல்கள். நகங்கள், கழுகின் அலகு போன்ற கூர்மை. இளஞ் சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு இருந்தன. எவ்வளவு வெண்மை. எவ்வளவு அழகு.
குழந்தையின் விரலும் பெண்ணின் விரலும் கடிப்பதற்கு அதிகம் தூண்டும். விரல்களில் கண்ணுக்கு தெரியாத மயக்கம், காமம் மறைந்துள்ளது. வித வதமான விரல்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். விரல் ஒரு ஆட்காட்டி. விரல் கேள்வி எழுப்புகிறது. விரல்களும் உள்ளங்கையும் யாசகம் செய்கிறது, கேட்கிறது. ஓங்கி அடிக்கிறது, அணைக்கிறது. பெருவிரல் கையொப்பம், சொத்துக்கான ஆதாரம். சொல்லப்போனால் அவனே இவன் என்று அடையாளம் காட்டுகிறது. பொதுவாக பேசும் போது பதற்றத்தை மறைத்துக் கொள்ள விரும்புவோர், கையில் பேனாவையோ அல்லது எதையாவது கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருப்பது போன்றவற்றை செய்வார்கள். அவ்வாறு கைக்கு ஏதும் கிடைக்காத போது விரல்களை பிண்ணிக் கொண்டும், விரல்களை வளைத்துக் கொண்டும், சொடக்கு போட்டுக் கொண்டும் உரையாடுவார்கள். விரலுக்கான அழகு இங்கு ரசிக்கப் படவில்லை.
கண், கூந்தல், மீசை, தாடி, உடல் வாகு என ரசித்த மனிதர்கள் விரலை ரசிக்கவில்லை என்றே தோன்றுகிறது. தன்னையும் அறியாமல் மனிதன் சிந்திக்கும் போது விரல்களை நெற்றிக்கும், கன்னத்திற்கும், கண்களுக்குமாய் பயணிக்க வைக்கிறான். பந்தயத்தின் போது, தான் சொல்கிற கருத்து தவறாகும் பட்சத்தில் என் பெருவிரலை(பெயரை மாற்றிக் கொள்கிறேன் என்றும் சொல்வார்கள்) வெட்டிக் கொள்ள தயார் என்கிறான்.
வெள்ளை உள்ளங்கையில், கோடு போடப் போட்ட தார் சாலைகள், அதன் குறுக்கும் நெடுக்குமான ரேகைகள் . சுக்கிர மேடு, புதன் மேடு என பல மேடுகளைக் கொண்டது. கைராசி ஜாதகத்தின் மூலதனம் உள்ளங்கை. மூடிய உள்ளங்கை சொன்ன ரகசியம், மூடி மறைக்கும் வரையில்தான் உலகில் எதற்கும் மதிப்பு,மரியாதை. உள்ளங்கை வரை இழந்தவனை பார்க்கையில் மனதில் ஆழமான வலி ஏற்படுகிறது. கை, விரலுக்கும் உள்ளங்கைக்குமான ஒரு துடுப்பே. விரலும் கையும் காலை முதல் இரவு வரை செய்கிற பணி அளவிடற்கரியது.
மருத்துவர் ஷாலினியின் ஒரு கட்டுரையில் படித்த ஞாபகம், உடலுறவில் முக்கியப் பங்களிப்பு அளிக்கும் உறுப்பு எது என்று பேராசிரியர் கேள்வி கேட்ட போது, ஒவ்வொருவரும் உடலின் அந்தரங்க உறுப்பு தொடுத்து, மார்பு, உதடு முக்கியம் என்றார்களாம். கைதான் மிக முக்கியப் பங்களிப்பு அளிக்கிறது என்று பேராசிரியர் விளக்கியுள்ளார். விரல்களும் உள்ளங்கைகளும்தான் அவை என்று நான் நினைக்கிறேன். என் விரல்கள் பிடித்த பேனா , விரல்களின் மகத்துவம் பேசி விட்டது.