நல்ல தலைவனை அடையாளம் காட்டாத ஊடகங்களும், அடையாளம் காணாத மக்களும்

வாழ்ந்த தமிழகத் தலைவர்களான காமராஜர், ஜீவா,கக்கன் பெருமைகளை அறிந்த தமிழக மக்களுக்கு, இன்றும் அரசியலில் சிறந்த அரசியல்வாதி யாரேனும் உள்ளனரா என்றால், எந்த ஒரு தேடலும் இல்லாமல், உடனடியாக  யோக்கியமான அரசியல்வாதி யாரும்  இல்லை என்று பதில் அளிப்பார்கள். நல்ல மனிதனாக, எளிமையான மனிதனாக, விவசாயிகளின் நன்மைக்காகவே போராடிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல அரசியல்வாதியாக ,சிறந்த  தலைவராக தோழர் நல்லக் கண்ணு என் கண்களுக்குப் படுகிறார்.

   நல்ல கண்ணு அவர்கள் 1929 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார். தன்னை அரசியலில் ஈடுபடுத்திய நாள் முதல் இன்று வரை முழுமையான கம்யூனிஸ்ட்டாகவே  நிறுவிக் கொண்டவர் தோழர். எளிமையான முகபாவம் மட்டும் கொண்டவராக அல்லாமல்  தன் வாழ்நாளை எளிமையாக கழிக்கும் ஒப்பற்ற தலைவராகவே பார்க்கிறேன்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் செயலாளராக 5 ஆண்டும், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளராக 1968 முதல் 1991 வரையும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்களில் ஒருவராக சில காலமும் பணியாற்றிய தோழர், 1991 ஏப்ரலில் மதுரையில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தமிழ் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2005ல் அப்பொறுப்பில் இருந்து விடுபட்டு தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
 
தோழர் மீது அபரிமிதமான மரியாதை ஏற்பட்டதற்கு இரு நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். முதலாவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழருக்காக 80ஆவது பிறந்த நாள் விழா எடுத்தது. ஒரு கோடி ரூபாயை வசூலித்து அவரது சேவைக்கான தியாகத்துக்கான மரியாதையைச் செலுத்த விரும்பியது. மேடையில் யாருக்கோ விழா எடுப்பது போல அமர்ந்திருந்த தோழர், பேச வருகையில் அத்தொகையை கட்சி நிதிக்காக திரும்ப அளித்தது, இன்னொரு ஜீவாவை அடையாளம் காண உதவியது.

இன்றும் கட்சி தருகிற சொற்ப ஊதியத்தில் தன் தேவைகளைப் சுருக்கிக்கொண்டு மக்களக்காக பாடுபட்டு வருகிறார். இரண்டாவதாக  மனப்பாறையில் ஒருமுறை ஆடம்பர மேடையிட்டு பேசுவதற்கு தோழரை அழைத்த போது ‘நாட்டு கஷ்டத்தை இத்தனை அலங்கார விளக்குப் போட்டா பேசுவது’ என கோபித்துக் கொண்டிருக்கிறார். இக்கருத்தை நான் யுகபாரதியின் கட்டுரையில் இருந்தே பதிவு செய்கிறேன்.  மேலும் யுகபாரதி தோழரைப் புகழும் வண்ணம் இன்னொரு கருத்தை பதிக்கிறார்.  ” ஏனையக் கட்சி தலைவர்களும் மதிக்கத்தக்க தலைவராக, தோழர் இருப்பதற்கு அவர் எளிமை அல்ல காரணம். எடுத்துச் செயல்படுத்தும் கொள்கைத் தெளிவு. வேட்டி சட்டைகளின் எண்ணிக்கை குறைவாக வைத்திருப்பதால் ஒரு தலைவரை மக்களுக்குப் பிடித்துவிடுவதில்லை. எந்த நேரத்திலும் தன்னை மக்களின் அடையாளமாக மாற்றிக் கொள்வதாலேயே பிடிக்கிறது.தோழர், மாற்றிக் கொண்டவரில்லை. அவரது இயல்பே மக்களின் அடையாளம்தான்.”

ஆனால் அதற்கு நேர்மாறாகவே நான் பார்க்கிறேன். வேட்டி சட்டைகளின் எண்ணிக்கை குறைவாக வைத்திருந்ததாலவோ என்னவோ, இருமுறை தேர்தலில் நின்று தோல்வி முகம் கண்டவர் தோழர் நல்லக் கண்ணு. ஆம்.
1977 சட்டசபை தேர்தலில் ஈஸ்வரமூர்த்தி என்ற சந்தானத்திடம் (23356 ஓட்டுகள்) ஆர்.நல்லக் கண்ணு(21569 ஓட்டுகள்) தோல்வியுற்றார்.
 1999 லோக்சபா தேர்தலில் சி.பி.ராதாக்ருஷ்ணனிடம் 54000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றார்.

இம்மாதிரியான நல்ல தலைவர்களைத் தோற்கடித்த மக்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகளே. இவ்வாறாக  மக்கள், தொகுதியில் நிற்கும் வேட்பாளரை பார்த்து போடாமல், கட்சி மற்றும் கூட்டணி அடிப்படையில் வாக்களிப்பதும், பின்னர் ஒட்டு மொத்தமாக ஒருவர் கூட அரசியலில் நல்லவன் இல்லை என்று சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதும் வேதனைக்குரியதே. ஒரு கைபேசி, புது மாதிரி வந்தால்  தேடித் தேடி அலையும் மனிதன், தன் நாட்டை ஆளும் தகுதிள்ளவர்களை அடையாளம் காண முற்படாதது 
வெட்கப்பட வேண்டிய விஷயம். இப்படிப்பட்ட ஒரு நல்ல தலைவனை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு இன்றளவும் ஏற்படுத்தாத  ஊடகங்கள் சாபக் கேட்டுக்கு உள்ளானவை. தன் பத்திரிக்கை லாபத்திற்காக கொள்கைகளை அடகு வைத்தும், உண்மையானவர்களைப்  பற்றி அதிக முக்கியத்துவம் கொடுக்காமல்  ஊடகங்கள் செயல்படுவது இந்தியாவிற்கான சாபக்கேடாகவே பார்க்கிறேன். ஊடகங்கள் நடுநிலை மறந்து பல வருடங்கள் ஆகி விட்டன. நல்ல தலைவனை அடையாளம் காணத் தெரியாத மக்களும் குற்றவாளிகளே. ஏனெனில், விவசாயிகளுக்கு போராடுகிற ஒரு நல்ல மனிதனை பற்றி அறியாத பாமரத்தனம், படிக்காத பாமரர்களுக்கு இருக்கலாம். ஆனால் படித்த அறிவுஜீவிகள் பெரும்பாலும் தனக்கு அரசியலில் விருப்பமில்லை என்று சொல்வது இன்று நாகரிகமாகிப் போனது. அதற்கு பெரும்பாலான அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் காரணமாக இருக்கலாம்.
 நல்ல தலைவனை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தாத ஊடகங்களும்,
சுயநல தேடலை மட்டும் பிரதானப்படுத்தும் மனித வாழ்வியலை
 என்னவென்று சபிப்பது? 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s