பிரம்மச்சாரி

 
 
 
 
 
 
 
 
 
 
 
சாத்தையிலிருந்து சென்னை நோக்கிப் படையெடுத்து வந்தவர்களில் குமாரும் ஒருவன். பெருவாரியான  கிராமத்து இளைஞர்களின் வாழ்வாதாரமாக சென்னை விளங்குகிறது. தன் நண்பன் சுந்தரம் கொடுத்த முகவரியில், முகம் தெரியாத மனிதர்களுடன் வாழப் பழக ஆரம்பித்தான்.  சென்னையில் யார் ஒருவரின் பரிந்துரையும் இல்லாமல் வேலை  கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே உள்ளது.  
 
குமாரின் குடும்பம் எளியது. தந்தை விவசாயி.குமாரின் படிப்பு டிப்ளோமா இன் எலெக்ட்ரிகல் அண்ட் எலேக்ட்ரோநிக்ஸ். குமார் படிப்பை முடிப்பதற்குள் படாதபாடு பட்டுவிட்டார் தந்தை. ஒரே தங்கை. பெயர்  கல்யாணி. வீட்டு நிலைமைக் கருதி தானாகவே படிப்பை நிறுத்தி கொண்டவள்.  
குமார் எளிமையானவன் என்று சொல்வதை காட்டிலும், ஏழ்மை அவனை எளிமையாக்கி இருந்தது. தன்னிலை உணர்ந்த ஒவ்வொருவனும் கிடைத்த வேலையை ஒப்புக் கொள்வான் என்பதற்கு குமார் ஓர் உதாரணம்.இப்போது குமார் காலணி உற்பத்தி  ஆலையில்,  மாத ஊதியம்  இரண்டாயிரத்துக்குப்  பணியாற்றுகிறான். வீட்டு வாடகையாக தன் பங்கிற்கு எண்ணூறு ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரே நல்லது, குமார் பணி செய்யும் தொழிற்சாலை  இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே இருந்தது. பணிக்கு நடைப் பயணம்  மேற்கொள்வதால்  மாதம் 200  ரூபாய் மிச்சம். 
வார இறுதி நாட்களில் தன் படிப்பு சம்பந்தமான நேர்முகத் தேர்வு எங்கேனும் நடந்தால் குமார்தான் முதல் ஆளாய் இருப்பான். நேர்முகத் தேர்வில் எவன் ஆளுமை குறித்த தேர்வில் ஆடையை சேர்த்துக் கொண்டான் என்று தனக்கு தானே கேள்வி எழுப்பிக் கொள்வான். ஆளுமை என்பது  எப்படி தொழில் சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறோம் என்பதையும், தேர்வு செய்பவர்களுக்குப் புரிகிற அளவு பேசுவதும் என்றே  கருதுகிறான். 
நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்பதற்காக மேற்படிப்பு வேறு படித்துக் கொண்டிருக்கிறான். தினமும் மூன்று வேலை சாப்பிடுவது என்பது குமாருக்கு குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் தன் அறைக்கு நண்பர்கள் வரும் போது இன்முகத்துடன் வரவேற்பான். மனம் உள்ளே அழுது கொண்டிருக்கும். ஆனாலும் அவர்களை அழைத்துக் கொண்டு போய் டீ, வடை வாங்கிக் கொடுப்பான். சிறிதளவும் தன் வறுமையை யாரிடமும் பங்குப் போட்டுக் கொள்ள விரும்பாதவன். நண்பர்கள் வந்து சென்றால் அன்றிரவு பட்டினி இருந்து செலவைச் சரி செய்துகொள்வான்.
வறுமை பசி, பட்டினிப் பசி, கட்டாயப் பசி மூன்றிலும் கட்டாயப் பசி ரொம்பவே கொடுமையானது. கையில் ஏதுமில்லை, சாப்பிட வில்லை.இது வறுமைப் பசி. பட்டினிப் பசி, இறைவனுக்காக விரதம் இருக்கும் போது ஏற்படுகிறப் பசி பட்டினிப் பசி. கையில் காசு இருந்தும் ஒருவன் சாப்பிடாமல் இருந்தால் அது கட்டாயப் பசி. பசியை அடக்கியவர்கள் உண்டு. பசியை வென்றவர்கள் யாரும் இல்லை. குமார் பலமுறை கட்டாயப் பசிக்கு இரையாகி இருக்கிறான்.
கடைக்குச் செல்வான். இட்லி சாப்பிடுவதா, தோசை சாப்பிடுவதா என்று பலமாக யோசிப்பான். தோசைக்கு காசு அதிகம் என்பதால் இட்லியையே இறுதியில் தேர்வு செய்வான். இட்லிக்கு சாம்பார் அதிகம் ஊற்றி குழப்பி சாப்பிடுவான். இல்லையேல் இன்னும் இரண்டு இட்லி அதிகம்  சாப்பிட வேண்டி இருக்கும் என்பதால்… கடைக் காரரும் அவன் நிலையை உணர்ந்தவாறு சாம்பாரை சற்று அதிகமாகவே ஊற்றுவார்.
இரவு தூங்கும் முன்பு டைரியில், தன் நிலை குறித்து எழுதுவான். டைரி என்பது அவனின் பழைய நோட்டுக்களின் எழுதாத பக்கங்களே.பேனாவை எடுப்பான். பேனாவில் மை இருக்காது.
பலமுறை படிப்புக்கு சம்பந்தமில்லா வேலை பார்ப்பதை நினைப்பான். ஒவ்வொரு முறை நினைக்கும் போதும், இங்கு நினைக்கிற வேலை கிடைக்காது, கிடைக்கிற வேலைக்குச் செல்வதும், நினைக்கிற சம்பளம் கிடைக்காது கிடைக்கிற சம்பளத்தில் சந்தோசம் அடைய வேண்டும் என்ற விசுவின் அரட்டை அரங்க வார்த்தைகள் அவனுக்கு சமாதானம் சொல்லும்.
தங்கை கல்யாணியின் திருமணத்தை சிறந்த முறையில் நடத்த வேண்டும் என்ற ஒவ்வொரு பிரம்மச்சாரியின் கனவும் அவனுள்ளும் குடி கொண்டிருந்தது. பிரம்மச்சாரி தன் வேதனையை யாரிடமும் புலம்புவதில்லை. மகிழ்ச்சியை மட்டுமே  பிரம்மச்சாரிகள் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரம்மச்சாரி தன் நிலை உணர்ந்தே தவறு செய்வதும் திருந்துவதும் நடந்தேறி இருக்கிறது.
இன்று தீபாவளித்  திருநாள். ஊரில் தாய், தந்தையுடன் தங்கைக் கல்யாணி ,அண்ணனின்  வரவை எதிர்நோக்கி…  ஆனால் குமாருக்குப் பதிலாக  பண அஞ்சல் வழியாக  பணம் மட்டும் பயணித்துக் கொண்டிருந்தது.

2 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s