கண்ணனின் காதல்

இப்போதெல்லாம் கண்ணனுக்கு கனவிலும் அவள், நினைவிலும் அவள். என்னத்த சொல்றது… கருமம் காதல் யாரைத்தான் விட்டுத் தொலைச்சது… ராவும் பகலும் அவள் நினைப்பே அவனைப் புரட்டி எடுக்கிறது. கண்ணன் பன்னிரெண்டாம்  வகுப்பு படிக்கிறான். படிக்கிறான் என்று சொல்வதை விட பன்னிரெண்டாம்  வகுப்பிற்கு போய் வருகிறான் என்றே சொல்ல வேண்டும். கண்ணன் படிக்கிற பள்ளி செந்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. செந்தூரிலிருந்து  ஏழு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற அய்யனார்விளை தான் அவனது ஊர். மிதிவண்டியில் தான் பள்ளிக்கு வந்து செல்கிறான்.கண்ணன் படிப்பில் மக்குமல்ல, முதலாமவனும் அல்ல. கண்ணனை பற்றிப் புகழ வரலாறு ஏதுமில்லை.
 
இப்போதெல்லாம் அவன் முனகுகிற பாடல் “உனைப் பார்த்த பிறகு நான் நானாக இல்லையே.. என்பதுதான். சார்தான், அவளைப் பார்த்த பிறகு இவ்வளவு உருகுகிறாரே ஒழிய, இன்னும் அவள் அவனைப் பார்க்க வில்லை என்பதை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் கோயிலுக்கு அம்மாவுடன் சென்றான். கோயிலுக்கு வெளியே நிற்கும் போதுதான் தன் உலக அழகியைக் கண்டு தொலைத்து விட்டான். உலக அழகி கோயில் பக்கத்தில் உள்ள அடிபம்புல தண்ணி பிடிக்க வந்தபோதுதான் பார்த்தான்.
 
கண்ணனின் உலக அழகியின் பெயர் முத்துப் பரணி. நீண்ட கூந்தல். சரியாக வார்த்தெடுத்த உடல் வாகு. நல்ல பெரிய கண்கள். முத்துப் பரணி என்ற பெயரை கண்டுபிடிக்கவே முப்பத்தேழு நாட்கள் ஆகிவிட்டது. மருதுதான் உலக அழகியின் பெயரை கண்டுபிடித்து கண்ணனுக்கு வழங்கிய நிபுணன். மருதுவும் அவனோடுதான் படிக்கிறான். அவன் அந்த ஏரியா என்பதால் மருதுவின் உதவியை நாடினான். மருதுவும், முத்துப்பரணியின் தோழியும் ஒரே காம்பவுண்ட். அவளிடம் கெஞ்சி கூத்தாடி நண்பனின் தெய்வீகக் காதலுக்கு துணையாய் இருக்கிறான். இப்போதெல்லாம் மருதுவுக்கு கண்ணனின் புண்ணியத்தால் தினமும் டீ, வடை, சாக்லேட் கிடைக்கிறது. நண்பர்கள் செய்கிற தேசத்தின் சிறந்த செயல் ஒன்றே ஒன்றுதான். அது காதலுக்கு உதவுவது.
 
முத்துப் பரணியிடம் இன்னும் பேசவே இல்லை. அதற்குள்ளாக, அவளை முத்து என்றழைப்பதா, பரணி  என்றழைப்பதா என்ற யோசனையிலேயே இருக்கிறான். அம்மா கண்ணனிடம், டேய்.. கொஞ்சம் விஷாலாட்சி அம்மன் கோயில்ல போய் அக்காவுக்காக எள்ளும் எண்ணையும் ஏற்றி வச்சிட்டு வாடா என்றாள். போம்மா நான் கிரிக்கெட் விளையாடப் போப்புறேன் என்று பிகு பண்ணினால்தான் அம்மாவுக்கு சந்தேகம் வராதுன்னும் கடைசியில் ஒத்துக் கொள்வதுமாக இருக்கிறான். அவன் அம்மா லேசுப் பட்டவள் இல்ல.. இவன் பொசுக்குன்னு ஒத்துகிட்டா ” என்ன ஒருநாளும் இல்லாத திருநாளா ஒத்துக்கிறானே” என்று நினைக்கக் கூடியவள்தான். 
 
சைக்கிளை மிதிப்பான். அவளைப் பற்றி கவிதைகள் வரும். தன் உலக அழகியிடம் பின்வரும் கவிதையைத்தான் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்திருந்தான்.
 
உன் பெயர் முத்து
உனைப் பார்த்த பிறகு பிடித்தது எனக்கு காதல் பித்து
நீ மட்டும் சம்மதித்தால் நீயே எனது சொத்து”
 
இப்படி தத்து பித்துன்னு எதையாவது எழுதி விட்டு, நல்ல கவிதை எழுதிவிட்டோம் என்று  தன்னைத்தானே மெச்சுக்குவான். 
 
இப்பெல்லாம் பாண்ட்டு போட்டா சிப்பு போட மறந்து விடுகிறான். சூ போடுகிறான்.. சாக்ஸ் போட மறந்துவிடுகிறான். அம்மா கேட்டா, சாக்ஸ் இல்லாமல் போடுறதுதான்  ஸ்டைன்னு சொல்லி சமாளிக்கிறான். வகுப்பில் ஆசிரியர் தெரியாத்தனமாக “பரணி கொண்டான் தரணி ஆள்வான்” னு சொல்லிப் பாடம் எடுக்க, நம்ம ஹீரோவுக்கு அடுத்த கவிதை ரெடியாயிடுச்சு.
 
“நீ பரணி
என் காதலுக்கு நீயே காரணி
எனை நீ ஏற்றால் ஆள்வேன் தரணி”
 
இப்பெல்லாம் சனிக்கிழமை சார் சாயங்காலம் கோயிலுக்கு வந்துவிடுகிறார். வெளியே தன் உலக அழகிக்காக தேவுடு காப்பான். யாராவது பார்த்தால் தவறாக எடுப்பார்கள்ன்னு கோயிலுக்குள் போவான். சாமியிடம், பிள்ளையாரப்பா இன்னக்கு நான் அவளை எப்படியாவது பார்க்கணும்னு வேண்டிகிட்டிருக்கும் போதே, ஒருவேளை சாமி கும்பிடுகிற சமயம் பார்த்து, தன்னோட ஆள்  வந்துட்டு போயிட்டான்னா என்ன செய்றதுன்னு நினச்சு உடனே கோயிலுக்கு வெளியே வந்து காத்துக் கிடப்பான். சனி யாரை விட்டது, நம்ம ஹீரோவையும் போட்டுத் தாக்கியது. என்னத்த சொல்றது… அந்த புள்ளை இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே தண்ணி எடுக்க வந்துச்சு. இவனை பார்க்கும் போது சிரிச்சதே ஒழிய, அது வேற ஒன்னை நினச்சு சிரிச்சதுன்னு தெரியாத நம்மாளு, பிள்ளையாரப்பா என் காதலுக்கு ஒரு வழி காட்டிவிட்டாய் என்று நன்றி தெரிவித்துக் கொண்டான்.
ஒருவாரம் மருதுவும்,கண்ணனோட தொல்லைக்காக  கோயிலுக்கு வந்திருந்தான். அவள் தண்ணி எடுக்க வந்த போது ஹீரோவுக்கு ஒரு கவிதை வந்திருச்சு.. மருதுவிடம் சொல்லிப் பார்ப்போம்னு சொன்னான்.
 
” அவள் கையில் இருப்பது குடம்
என் இதயத்தில் அவளுக்கு இருக்கிறது ஒரு இடம்
அவள் பாதம் பட்ட இடமே எனக்குத் தடம் ..
அவள் பிடிக்க வந்திருக்கா தண்ணி
நிச்சயம் ஒருநாள் என் தங்கைக்கு ஆயிடுவா அண்ணி”
 
இதற்கு மேல் இங்க நின்னால் தனக்குப் பைத்தியம் பிடித்தும் விடும்னு நினச்ச மருது போடா பன்னி.. கவிதை எழுதுறானாம் கவிதைன்னு சொன்னதுக்கு, உனக்கு காதல் வரலடா அதான் கவிதையை ரசிக்கத் தெரியல  என்றான்.  ஆனந்தவிகடன்ல மட்டும்  ‘எதுகை மோனை மொக்கக் கவிதைக்கு’ முதல் பரிசுன்னு போட்டி வச்சா நம்ம ஹீரோவுக்கும், T.R.க்கும்தான் போட்டி வரும். நம்ம ஹீரோதான் ஜெயிப்பான்.
 
அத விடுங்க.. இப்படியே எத்தனை நாள் தான் பார்த்துகிட்டே கிடப்பது. ஒருவழியாக தன் காதலை உலக அழகியிடம் சொல்லிவிட்டான். கைகால் எதுவும் உதறல. லேசானப் புன்னகையுடன் சொல்கிறான். அதற்கு நம்ம உலக அழகியும், நான் காதலிக்கிறேன் என்பதை சிம்பாலிக்காக நோட்டில்,
” கண்ணன் வருவான் காதல் சொல்வான்” , “கண்ணன் என் காதலன்” என்று தான் எழுதி வைத்ததைக் காண்பிக்கிறாள். . நம்ம ஹீரோவைக் கையில பிடிக்க முடியல… அட நீங்க வேறங்க.. ஹீரோவுக்கு  கை கால் உதறலன்னு சொன்னப்பவே நீங்க உசாராகவேண்டாமா.. எல்லாம் கருமம் கனவுலதான் நடந்தது.
 
ஒருநாள் முத்துப்பரணி கோயிலுக்குவர, நம்ம ஹீரோவுக்கு சந்தோசம் தாளவில்லை. அதுவும் பூஜை முடிந்தவுடன் அய்யர், கண்ணனிடம் இந்த பிரசாதத்தை எல்லோருக்கும் கொடுடா என்று சொல்ல, கண்ணன் பரணிக்கு குங்குமம் கொடுத்தான். அன்று இரவு முழுக்க கண்ணன்  தூங்க  வில்லை. பிள்ளையாரப்பா தனக்கு ஒருவழி காட்டிக்கொண்டிருக்கிறார் என்று மீண்டும் நன்றி தெரிவித்தான். இல்லையேல் ஏன் அய்யர் இன்னைக்குப் பார்த்து பிரசாதம் கொடுண்ணு சொல்றார் என்று தன் காதல் வெற்றிப் பாதையில் பயணிப்பதாக எண்ணினான்.
 
இன்னும் ஹீரோயின் அப்பாவை பற்றி அறிமுகம் செய்யலன்னு வருத்தப்படவேண்டாம். ஹீரோயின் அப்பாவைஎல்லாம்  வருணிக்க முடியாதுங்க. நீங்களாகவே அவர் பூந்தோட்டக் காவல்காரன் விஜயகாந்த் மாதிரி இருப்பார்ன்னு நினைச்சுக்கோங்க. அவருடைய உருவத்தைப் பார்த்த பிறகுதான், ஜாதி தன் காதலுக்குத் தடையாய் இருக்கக் கூடாதுன்னும், நம்மாளு என்ன ஜாதின்னு  புலன் விசாரிக்கும் முயற்சியில் இறங்கினான்.
கோயில் அய்யரிடம் போய், சாமி இந்த தெரு முழுக்க எல்லாம் நம்ம ஆளுங்களா(தன் ஜாதிக்காரங்களா) என்றான். அது உனக்கு எதுக்குறா என்று சொல்லிவிட்டு பூஜை செய்யப்  போய்விட்டார். தான் அறிந்து கொள்ள வேண்டியது மிக்க முக்கியம்கிறதால, சாமி வரும் வரை காத்துக் கிடந்தான். மீண்டும் மெல்ல ஆரம்பித்தான். அம்பி நானும் உன்னைப் பார்க்கிறேன்.. நீ அந்த முதல் வீட்டுப் பெண்ணுக்குத்தானே ரூட் விடுறே என்றார். சாமி யார்கிட்டேயும் சொல்லிடாதிங்கன்னு அழாத குறையாய் புலம்பினான். அம்பி அவங்க அப்பா யார் தெரியுமாடா என்றார்.
 
ஹீரோயினோட அப்பா சமூக சேவையில் உள்ளார். சமூக சேவைன்னதும், ரொம்ப நல்லவர்னு நினைச்சிடாதிங்க. அரசியலில்தான் இருக்கிறார். இதற்கு முன்பு ஒயின்ஷாப் தான் வைத்திருந்தார். அதில் வந்த வருமானத்தில்தான் இன்னைக்கு அரசியலில் வார்டு கவுன்சிலராக இருக்கிறார். அரசியலை அவர் தேர்ந்தெடுக்கக் காரணம், ஒயின் ஷாப் மூலம் குடிக்கிறவனை மட்டும்தான் ஏமாற்றிப் பிழைக்க முடியும். ஆனால் அரசியலில் இருந்தால் ஒட்டு மொத்த சமுகத்தையும் ஏமாற்றிப் பிழைக்கலாம் என்றக் கொள்கை முடிவுதான், இன்று அவர் கவுன்சிலராக இருப்பதற்குக் காரணம். இன்னும் சில ஆண்டுகளில் MLA ஆகிவிட்டால் இன்னும் கொஞ்ச பெரிய வட்டத்தை ஏமாற்றி சம்பாதிப்பார் என்று நாம் எதிர் பார்க்கலாம்.
 
அவுங்க அப்பா கதை நமக்கு  எதற்கு. நம்ம ஹீரோ கதைக்கு வருவோம். அவளின் நகம், கூந்தல், கண், தேகம் எனக் கவிதை எழுதி வந்தவன், செயலில் இறந்குவதென நினைத்தான். மீண்டும் மருது நினைவுக்கு வர, மச்சி உங்க காம்பவுண்ட்ல இருக்கிற என்னோட ஆள் தோழி மூலம் அவளைக் கோயிலுக்கு வர சொல்லிக் கெஞ்சினான்.
 
 முத்துப்பரணி கோயிலுக்கு வந்துவிட்டாள். எதேச்சையாகத்தான் கோயிலுக்கு வந்தாள். மருது வீட்டுக்கும், ஹீரோயின் தோழியின் வீட்டுக்கும் கொஞ்ச  நாள் பேச்சுவார்த்தை இல்லை. இது அறியாத நம்ம ஹீரோ, நம்ம சொல்லித்தான் நம்ம ஆளு வந்திருக்கான்னு தப்புக் கணக்கு போட்டுக் கொண்டான்.
 
யாரும் வராத நேரத்தில் பிரகாரத்தில் வைத்து , மெல்லக் காதலை சொன்னான். ரொம்ப நல்லவனாக, ஒரு வாரம் யோசிச்சு சொல்லுங்க.. சொல்ல முடியலன்னா பரவாயில்லை. மஞ்சள் கலர் தாவணியில் அடுத்த வாரம் கோயிலுக்கு வாங்க என்றான். பதில் சொல்லாதவளாய், நம்ம ஹீரோயின் போய் விட்டாள்.
 
வாரம் கழிந்தது. ஹீரோயின் சிவப்புக் கலர் தாவணியில் வந்தாள். நம்ம ஹீரோவுக்குப் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது. பிள்ளையார் மீது கோபம் வந்தது. யோவ் உன்னைக் கும்பிட்டதுக்குப்  பதிலாக, காதலிச்ச முருகனை கும்பிடாம விட்டது என்னோட தப்புதான்.. முருகனைக் கும்பிட்டால் தன் பக்தர்களுக்கு சோதனைத் தருவார், ஆனால் நிறைவேற்றி இருப்பார் என்று மனதுக்குள் புலம்பினான். பிள்ளையாரை சபித்தான்.
 
அவனுக்கு ஒட்டு மொத்த பெண்கள் மீதும் கோபம் வந்தது. இந்த பொண்ணுங்களே இப்படித்தான். பல்லைக் காட்டுவார்கள். இளிச்சு  இளிச்சு பேசுவார்கள்..  கடைசியில் தான் காதலிக்க வில்லை என்று பேத்துவார்கள்.  தன் கோயில் காதல், குருட்டுத் தனமான காதலா என்று சுய பரிசோதனை செய்யலானான். அவளைப் பார்க்கப் பிடிக்காதவனாய், கோயிலுக்குப் பின்புறம் சென்றான்.
 
முத்துப்பரணி மெல்ல யாரும் நோக்கா வண்ணம் அவனிடம் வந்தாள். என்னை மன்னிச்சிடுங்க. நீங்க பார்க்கும் போது, இன்னைக்கு அழகாக வரணும்.. உங்களுக்குப் பிடிச்ச அந்த மஞ்சள் தாவணியில் வரணும்னுதான் நினைச்சேன்.அதற்காக  நேற்று தொவச்சு காயப் போட்டேன். தாவணியை எடுப்பதற்குள், பாழாய் போன மழை வந்து, மஞ்சள் துணியை நனைச்சிடுச்சு என்று பவ்யமாக சொன்னாள்.
 
நம்ம ஹீரோ வேறென்ன செய்வான். பிள்ளையாருக்கு நன்றி தெரிவித்தான். அவன் இப்பொழுது அவளுக்கு மொக்கக் கவிதை சொல்லிக் கொண்டிருக்கக் கூடும். இல்லை. முத்தக் கவிதை சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.
 

6 responses

 1. அருமையான பதிவு

  மே தின வாழ்த்துகள்
  உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

  தமிழ்.DailyLib

  we can get more traffic, exposure and hits for you

  To get the Vote Button
  தமிழ் போஸ்ட் Vote Button

  உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

  நன்றி
  தமிழ்.DailyLib

 2. மிகவும் நன்றாக இருந்தது உங்களின் சிறுகதை.இது உங்களின் சொந்த அனுபவம் போல தோன்றுகிறது. மேன்மேலும் இதுபோல பல சிறுகதை படைப்பை உங்களிடம் எதிர்பார்கிறோம்.
  ராம்கி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s