உத்திரப் பிரதேச மாநில தேர்தல் 2012 ஐ 2006 தேர்தலோடு ஓர் ஒப்பீடு:
உத்திரப் பிரதேசம் மொத்த இடங்கள் : 403
கட்சிகள் வெற்றிபெற்ற இடங்கள்
2006 2012
சமாஜ்வாடி 97 226
பகுஜன் சமாஜ்வாடி 206 80
பாரதிய ஜனதா 51 47
காங்கிரஸ் 22 28
ராஷ்ட்ரிய லோக்தள் 10 9
மற்றவர்கள் 17 13
இத்தேர்தல் முடிவுகள் கற்றுத் தந்த பாடங்கள் என்ன?
- எந்தெந்த மாநிலங்களில், இரு மாநிலக் கட்சிகள் ஒரே ஒருமுறை, எண்ணிக்கை அளவிலான வெற்றியில் முதல் இரண்டு இடங்களை பிடித்து விட்டால், அதன் பிறகு அங்கு தேசியக் கட்சிகளின் நிலை மிகப் பரிதாபத்திற்குரியது. தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சியுடன் கூட்டணி வைத்தோ அல்லது மத்திய ஆட்சியில், மாநிலக் கட்சிகளின் கூட்டணியை சார்ந்தேதான் பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது. உதாரணங்கள், தமிழ்நாடு, பீகார், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியன.
- காங்கிரஸ்க்கு எந்தெந்த மாநிலங்களில் எல்லாம், கிளை கட்சிகள் (காங்கிரசிலிருந்து வெளி வந்த கட்சிகள்) தோன்றினவோ அதன் பிறகு காங்கிரஸ் அக்கட்சிக்கு அடுத்த நிலையிலோ அல்லது அதைச் சார்ந்தே காலம் நகர்த்த வேண்டியுள்ளது. அவ்வகையில், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியும், மம்தா பானர்ஜி மற்றும் சரத்பவார் வரிசையில் இணைவார் என எதிர் பார்க்கலாம். பாரதிய ஜனதாவைப் பொறுத்த வரையில், கிளைக் கட்சிகள் தோன்றா விட்டாலும் பெரும்பாலான மாநிலங்களில், அது மாநிலக் கட்சியின் தயவோடுதான் காலம் நகர்த்துகிறது. பிகார், பஞ்சாப், மகாராஷ்டிரம்,தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் ஆகியன மிகச் சிறந்த உதாரணம் .
- பிராந்தியக் கட்சிகள் மீது வைத்துள்ள நம்பிக்கை, தேசியக் கட்சிகள் மீது இல்லாமல் போனதற்கு தேசியக் கட்சிகளே பொறுப்பெடுக்க வேண்டும். ஆனால், பிராந்தியக் கட்சிகளைத் தேர்வு செய்யும் மக்களும், புதியதாக வருகிற கட்சிகளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது அவர்களின் குறுகியப் பார்வை மட்டுமல்லாது மிகப் பெரிய ஊழலை வளர்க்க உதவுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், முந்தைய தேர்தலில் ஆட்சியில் இருந்த கட்சிக்கு ஊழல்,விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், தொழில் வளம், சட்டம் ஒழுங்கு, மற்றும் இன்னபிற காரணங்களால் அவ்வாட்சியின் மீது வெறுப்புக்கு உள்ளாகி, மாற்றுக் கட்சியாக மக்கள் மீண்டும் தேர்ந்தெடுப்பவர்கள், ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது எந்த மாறுதலையும் கொண்டு வராதவர்கள் என்று தெரிந்தும் வாக்களிப்பது என்பது ஜனநாயக முறையில் தன் கடமையைச் செலுத்துவதாகவே தெரிகிறது.
- அன்னா ஹசாரேவின் போராட்டங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்றே கருதுகிறேன். காரணம் காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு பிறகும், இத்தனை சீட்டுகள்தானா என்று யாரும் ஆராய வேண்டியதில்லை. அவையாவும் , ஆங்கில ஊடகங்கள் ஊதி பெரிதுபடுத்தின விசயங்கள்தான். எண்ணிக்கை அளவில், காங்கிரஸ்க்கு 6 இடங்கள் அதிகமாகவே கிடைத்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி கடந்த முறையைக் காட்டிலும் 4 இடங்கள் குறைவு என்பது அக்கட்சி உத்திரப்பிரதேசத்தில் தன் நிலையை வளர்க்கவில்லை என்பதற்கு ஓர் உதாரணம். அன்னா ஹசாரே குழுவினரும், மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்று கூறிக் கொள்ளலாம். ஏனெனில், அவர்களுக்கும் நன்றாகத் தெரியும், 49 “O” க்கு மக்களை வாக்களிக்கச் சொன்னால், மக்கள் அவர்கள் கூற்றை ஏற்கவில்லை என்று தீர்ப்பு வந்த மாதிரி ஆகி விடும்.
- உத்திரப் பிரதேசத் தேர்தல் முடிவுகள், தேசியக் கட்சிகள் இனி மத்தியில் தனித்த ஆட்சி என்பது இயலாத காரியம் என்பதற்கான கூடுதல் அடையாளம். இதுதான், தேசியக் கட்சிகள் எல்லா மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் தர உதவும் என்றே நம்புகிறேன்.
- உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் ஒரு சம்பிரதாய , சடங்கு முறையில் முடிந்த ஒன்றே. பகுஜன் சமாஜ்வாடி கட்சி போலவே சமாஜ்வாடியும் செயல்பட்டால் அடுத்த தேர்தல் முடிவுகள் அவர்களுக்கும் இதுபோலவே இருக்கும். நரேந்திர மோடி போல மாநில நலனில் அக்கறை செலுத்தாத வரையில் தமிழகமும், உத்திரப் பிரதேசமும் இதே போன்ற தேர்தல் முடிவுகளைக் காட்டிலும் பெரிதாக எதையும் காணப் போவதில்லை.