ரயில் பயணம் பாகம் 1

 
 
 
 
 
 
″A traveler without observation is a bird without wings.” – Moslih Eddin Saadi. சற்றே தொலைவில் உள்ள இடங்களுக்கு பயணப்படுவதில் யாருக்கும் சலிப்பில்லை. நெடுந்தூரப் பயணங்களில் சிலருக்கு மட்டுமே விருப்பம் உள்ளது. பலரும் போய் சேருகிற இடம் எப்போது வந்து சேரும் என்றே நினைக்கிறார்கள். பேருந்து பயணம், விமான பயணம், ரயில் பயணம், ஒவ்வொன்றிலும் ஒரு அனுபவம் இருக்கிறது. பேருந்து பயணத்திலும், விமான பயணத்திலும் ஏதோ சுதந்திரமில்லா தன்மை நிலவுகிறது. ரயில் பயணம் மட்டும் அவ்வாறல்ல. 
 
ஒவ்வொரு ரயில் பயணமும் ஆயிரம் கதைகள் சொல்லும். பெரும்பாலும் வயதானவர்கள் ரயில் வந்து சேர்வதற்கு முன்பாகவே, ரயில் நிலையத்தை அடைந்து விடுகிறார்கள். அடிக்கடி பயணிப்பவர்கள், ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக வந்தால் கூட பதட்டப் படுவதில்லை. ரயில் நிலையத்திலேயே வித்தியாசமான நிகழ்வுகளை காண முடிகிறது. கூலியோடு பேரம் பேசுபவர்கள், டிடிஆரிடம் தங்கள் இடத்தை உறுதிப்படுத்த அவர் பின்னாலேயே சுற்றி சுற்றி வருபவர்கள், எடை போடக் கூடிய இடத்தில் பேரம் பேசுதல் என பேரம் பேசுபவர்கள் ஒருபுறம். டீ, காப்பி  மற்றும் இன்னபிற  விற்பவர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாத பைத்தியக்காரர்கள், பிச்சைக்காரர்கள் என இன்னொரு புறம்.  
 
சிலர் ஓடுகிறார்கள். சிலர் இடத்தை அடைத்துக் கொண்டு சாகவாசமாக நடக்கிறார்கள். சிலர் சுமையைத் தூக்க முடியாமல் தூக்கிச் செல்கிறார்கள். சிலர் சிரிக்கிறார்கள். சிலர் சோகமாய் தென் படுகிறார்கள். ஒவ்வொருவரிடத்திலும் வேகம், சோகம், மகிழ்ச்சி,சாகவாசம்,பிரகாசம்,அலங்காரம்,அகங்காரம்,அலட்சியம் என எல்லாவற்றையும் ரயில் பயணத்திலும், ரயில் நிலையத்திலும் காண முடிகிறது. 
 
குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பத்தடி முன்னரே நடக்கிறார்கள். தாய், நில்லுங்கடா.. மெதுவாக போங்க என்கிறாள். தந்தை ஏன் புலம்புகிறாய்.. எங்கே போயிடுவார்கள் என்கிறார். தாய்,  தன் குழந்தைகள் எப்போதும் தன் அரவணைப்பிலேயே இருக்க ஆசைப்படுகிறாள். தந்தை தன் குழந்தைகள் தனித்தே எதிர் நீச்சல் போட ஆசைப்படுகிறார். அது தாயின் அன்பா.. குழந்தை தன் கட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என நினைக்கிறாளா.. தெரியவில்லை. தந்தைக்கு குழந்தை மீதான எதிர்பார்ப்பா, 
நம்பிக்கையா, அசட்டுத் தைரியமா.. புரியவில்லை. 
ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான பிரச்சினைகளோடு
 ரயிலைப் பிடிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். 
 
பத்தாண்டுகளுக்கு முன்னர், என்னுடைய  பணி நிமித்தமாக ரயிலில் அடிக்கடி பயணிக்க வேண்டிய சூழல். ஒவ்வொரு ரயில் பயணமும் பல அனுபவங்களைத் தந்துள்ளது. இருக்கையும், படுக்கையும் கிடைத்து விட்டால், நான் செய்கிற முதல் விஷயம், வெளியில் ஒட்டியுள்ள பெயர்ப் பட்டியலை பார்ப்பதுதான். ஏதேனும், என் வயது பெண்ணோ, வயதொற்றிய பெண்ணின் பெயரோ உள்ளதா என பார்ப்பேன். இருந்ததென்றால், அவள் வந்து விட்டாளா என என் இருக்கையில் சென்று பார்ப்பேன். 
 
அவள் வரவில்லை என்றால் என்னென்னவோ  நினைக்கிறேன். அவள் சிவப்பா, கறுப்பா, ஒல்லியா, குண்டா, அழகானவளா, அழகற்றவளா, நன்கு கற்றவளா, கிராமத்துப் பெண்ணா, நகரத்துப் பெண்ணா.. எங்கெங்கோ மனம் அலைபாய்கிறது. 
 
இப்படி  ஒவ்வொரு இளைஞன் நினைத்தாலும், அருகில் வயதானவர்களோ, கைக் குழந்தையோடோ ஒரு பெண் வந்தால் அவர்களுக்கு ஏற்றவாறு, உதவி செய்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்க அப்பெண் நெளியும்போது, அவ்விடத்திலிருந்து நாசுக்காக வெளியில் சென்று நிற்கிற பண்பாடோடு நடந்துகொள்கிறார்கள்.  
 
இப்படி ஒவ்வொரு பயணத்திலும் வித்தியாசமான அனுபவங்கள். ஒருமுறை இருக்கையும், படுக்கையும் உறுதியாகாத சூழ்நிலையில் unreserved compartment ல் பயணிக்க வேண்டிய சூழ்நிலை. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், எந்த கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் unreserved compartment ல் காலம் முழுக்க பயணிக்கிறார்கள். அப்படி பயணித்ததாலோ என்னவோ, இருக்கைக் கிடைத்தால் மட்டுமே உட்காருவேன் என்ற கொள்கைகளை அவர்கள் வைத்துக் கொள்வதில்லை. பல நேரங்களில், வீராப்போடு நின்று கொண்டு செல்ல நான்  நினைத்தாலும், தொலைதூரப் பயணம் என்னை பலமுறை தரையில் நாளிதழை விரித்து அமர வைத்துள்ளது.  
 
ரயில் பயணத்தில் யார் யாரோ இட்லி விற்கிறார்கள். பழங்கள் விற்கிறார்கள். ஊனமுற்றவர்கள் உழைத்து சம்பாதிப்பதைக் காணமுடிகிறது. பாட்டுப் பாடி சம்பாதிக்கிறார்கள்.  
 
ஊனமுற்றவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். குழந்தைகள்,திருநங்கைகள் பிச்சை எடுக்கிறார்கள். இப்படி பிச்சை எடுக்கிற ஒவ்வொரு நபருக்கும், பத்து.. பத்து ரூபாய் நோட்டாக ஒருவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி வசதியாய் இருப்பவர் ஏன், unreserved compartment ல் பயணிக்கிறார் என்று தோன்றியது. ஏனோ எனக்கு அவருடன் நட்புப் பாராட்டத் தோன்றியது.   
 
ரயிலில் பயணிப்பவர்கள் முதலில் பழகும் போது, அடுத்தவரின் பெயரையும், ஊரையும் அறிய முற்படுகிறார்கள். பின்னர் ஏன், எங்கு, எதற்காக பயணிக்கிறார்கள் என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு கேள்விகளை எடுத்துச் செல்கிறார்கள். பின்னர் அவர்களையும்  அறியாமல், குடும்பத்தைப் பற்றி, வேலையைப் பற்றி, காதலைப் பற்றி என என்னெனவோ பரிமாறிக் கொள்கிறார்கள். 40 மணி நேர ரயில் பயணம், ஒரு நல்ல நண்பரை அடையாளம் காட்டுகிறது. 
 
அவ்வாறே எங்களுடைய பேச்சும் பரஸ்பரம் அடுத்தவரைப் பற்றி அறிவதாக இருந்தது. அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், மேலாளராகப் பணி புரிவதாக அறிந்து கொண்டேன். பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு பெண் கைக்குழந்தையுடன் பிச்சைக் கேட்கிறாள். அவர் 10 ரூபாய் நோட்டைக் கொடுக்கிறார். நான் பிச்சை போடலாம்…  ஆனால் பத்து.. பத்து ரூபாயாக போடுகிற, மனிதராக உங்களை மட்டுமே பார்க்கிறேன் என்றேன். அவர் சிறிதாகப் புன்னகைத்தார். இல்லிங்க.. எனக்கு கம்பெனியில், முதல் வகுப்பில் செல்லும் தகுதி இருக்கிறது. நான் முதல் வகுப்பில் சென்றாலும், செல்லாவிட்டாலும் முதல் வகுப்பிற்கான பணம் கிடைக்கும். அப்பணத்தையே, 10 ரூபாய் நோட்டுக்களாக சில்லறை மாற்றி, என்னாலான உதவி செய்கிறேன் என்றார். அவரும் என்னைப் போல பதிவு இருக்கைக் கிடைக்காமல் பயணிக்கிறார் என்று கருதிய எனக்கு, அவர் ஏன் unreserved compartment ல் பயணிக்கிறார் என்ற  காரணம் புரிந்தது. 
 
சிறிது நேரத்தில், ரயில் ராஜமுந்திரியில் நின்றது. இருவரும் தேநீர் அருந்த கீழே இறங்கினோம். அங்கும் ஒரு நபர், எங்களிடம் 25 ரூபாய் கேட்டார். தான் கொண்டுவந்த மொத்த பணமும் திருட்டுப் போய்விட்டதாகவும், ஆகையால் தங்களால் முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் எனக் கெஞ்சினார். உடனே நண்பரும், 25 ரூபாயை கொடுத்தார். கேள்வியை நான் எழுப்பும் முன், எங்களிடம் தேநீர் விற்றவன், இவன் நிறைய பேரிடம் இப்படி ஏமாற்றியே பணம் பறிக்கிறான் என்றார். ஏன் இப்படி பணம் கொடுத்து ஏமாளியாய் இருக்கீறிர்கள் என்றார்.  
 
நண்பர் பதட்டப்படவில்லை. எந்த குழப்பமோ, ஏமாற்றமோ அடைந்தாற்போல எனக்கு தோன்றவில்லை.  பணம் தொலைத்த ஒருவனுக்கே தான் உதவி செய்ததாகவும், தெரிந்தே தான் ஏமாறாததால் அதில் எனக்கு துளி அளவும் வருத்தமில்லை என்று  தேநீர் விற்பவரிடம் விளக்கினார். என்னை ஏமாற்றினால் அதற்கான தண்டனையை அவன் அடைவானே ஒழிய, எனக்கல்ல. தான் செய்கிற உதவி, தன் ஆத்மா திருப்திக்காகவே என்றார். 
இன்றுவரை நண்பர், என் நினைவில் அப்படியே இருக்கிறார்.
 
  ஒவ்வொரு ரயில் பயணத்திலும், வித்தியாசமான மனிதர்களைப் பார்க்கிறோம். வித்தியாசமான நிகழ்வுகளை ரயில் பயணங்கள் கொண்டுள்ளது.  சில சோக நிகழ்வுகள் ரயில் பயணத்தில் நடந்தேறியுள்ளது. பல சுவாராஷ்யங்கள் ரயில் பயணத்தில் பொதிந்து கிடக்கிறது. இயற்கை ரசிப்பை ரயில் பயணம் போல வேறு எந்த பயணமும் தருவதில்லை. பயணங்கள் முடிவதில்லை. ரயில் பயண அனுபவங்கள் இன்னும் இனிதே பயணிக்கும்.

One response

  1. Pingback: ரயில் பயணம் பாகம் 2 | LAKSHMANA PERUMAL

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s