கோகிலவாணியின் பக்குவம்

சில நேரங்களில் இறைவன் கருணை காட்டத் தவறி விடுகிறான் என்பதற்குக்
 கோகிலவாணி ஒரு சாட்சி. கோகிலவாணிக்கு இப்போது வயது பதினாறு. பிறந்த போதே இறைவன் தந்தையை அழைத்துக் கொண்டான். தாய் மட்டுமே அவளை வளர்த்து வந்தாள். அவளும் கோகிலவாணிக்கு 13 வயதாக இருக்கும் போது,புற்றுநோய் என்ற அரக்கனுக்கு ஆளாகி இன்று இல்லாமல் போய்விட்டாள்.
 
சில நோய்கள் ஏன் நமக்கு வந்துள்ளது என்று இதுவரை எல்லோரும் யோசிக்கிறோம். குடிப்பதில்லை. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனாலும் நோய் சில நேரங்களில் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. அடுப்படியில், புகையோடு வேலை பார்த்ததால் கோகிலவாணியின் தாய்க்கு புற்று நோய் வந்திருக்கலாம்.
 
கோகிலவாணிக்கு ஒன்பது வயதில் ஒரு தம்பி. அக்காவின் அரவணைப்பிலேயே வளர்கிறான். இருவருக்கும் மெலிந்த தேகம். கோகிலவாணியின் முகத்தை உற்று நோக்கினால், சோகம் தெரிகிறது. அம்மா வேலை பார்த்த வீட்டிலேயே, அவளை வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். அது பெரிய பணக்கார வீடல்ல. நடுத்தர வர்க்கத்திற்கும், கோடீஸ்வர வர்க்கத்திற்கும் இடையேயான வர்க்கம். கோகிலவாணி, தர்மம் வீட்டிலேதான் வேலை செய்கிறாள்.
 
தர்மம் படபடப்பாக பேசுவாளே தவிர நல்லவள்தான். தர்மத்திற்கு ஐம்பது வயதாகிறது. சற்று பெருத்த உடம்பு. இந்த வீட்ல மிச்சம் விழுந்ததை சாப்பிட்டு.. சாப்பிட்டு தான் பெருத்து விட்டதாக பல நேரங்களில் புலம்பியிருக்கிறாள். சில நேரங்களில் தனக்குத்  தானே பேசிக் கொள்வாள். யாரேனும் தவறு செய்தால் கண்டபடி கோபப்படுவாளே தவிர மனதில் எந்த வஞ்சனையும் இல்லாதவள்.
 
தர்மத்தின் மகனுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் கல்யாணம் நடந்தது. மகனின் ஆசைப்படியே, திருமணம் நடந்தது. ராணிதான் அந்த வீட்டு மருமகள். பெயருக்கு ஏற்றாற்போல் அவள் தோற்றமும் ராணியாகவே இருக்கிறது. நல்ல சிகப்பு. சிரித்த முகம். அவள் புன்னகை அவ்வளவு அழகு. ஒரே குழந்தை. அவளைப் போல, அழகான ஆண் குழந்தை!
 
ராணிக்கும், தர்மத்திற்கும் கோகிலவாணியை ரொம்பப் பிடிக்கும். கோகுலவாணியின் பொறுமை, செய்கிற வேலையை குறையில்லாமல் செய்வது, அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்றவாறு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வது என எல்லாவற்றிலும் பெயரெடுத்தவள். தர்மம், கோகிலவாணி பெருமையை பலமுறை அக்கம் பக்கத்தாரிடம் சிலாகித்தது உண்டு.
 
பகல் நேரத்தில், கோகிலவாணி வீட்டு வேலையாக இருப்பாள். தர்மம், கோகிலாவிடம், ஏட்டி..  கோகிலா… அழகி நாடகம் ஆரம்பிச்சிருச்சி… சீக்கிரம் வாடி என்று அழைப்பாள். கோகிலாவும், இந்தா அரிசியை போட்டுட்டு வர்றேம்மா என்பாள். அது கிடக்கட்டும் சீக்கிரம் வாடி.. முக்கியமான ஸீன் என தர்மம் கூப்பிடுவதை ராணி கேட்கிறாள். தன் அத்தை வேலைக்காரப் பெண்ணிடம் சொந்த மகள் போல செயல்படுவதை வியப்பாகவே பார்க்கிறாள். ராணிக்கும் அந்த வீட்டில் கோகிலா தான் தோழி. ராணி கோகிலாவிடமும், கோகிலா தனக்குத் தெரிந்த கதையை ராணியிடமும் பகிர்ந்து கொள்வார்கள். 
 
அன்று அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராணியின் குழந்தைக்கு முதல் பிறந்த நாள். நிறைய விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அக்கம் பக்கத்தார் என கூட்டம் நிரம்பி வழிந்தது. பிறந்த நாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
கோகிலாதான் வந்திருந்த அத்தனை பேரின் 
தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டிருந்தாள். 
வந்திருந்த எல்லா விருந்தினர்களும் மாலை டிபனுக்குப் பிறகு 
கலைந்து சென்று விட்டார்கள். தர்மம் குழந்தையிடம் கொஞ்சும்போதுதான்,
குழந்தையின் கழுத்தில் இரண்டு பவுன் தங்கச் செயின் இல்லாததைக் கண்டாள்.
ராணியிடம் வீடு முழுக்க தேடு என்றாள். தர்மத்திற்கு கோபம் தலைக்கேறியது.
யார் எடுத்தார்களோ என்று புலம்ப ஆரம்பித்தாள்.
 
தங்கச் செயின் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 
பாத்திரங்கள் அதிகம் கழுவ வேண்டியிருந்ததால் 
அதைக்  கழுவுவதிலேயே கோகிலா குறியாக இருந்தாள்.  
 
செயினைத் தேடிக் களைத்துப் போன தர்மம், கோகிலா உன்னோட டிபன் பாக்ஸ் எங்கடி சொல்லு. நானே  உனக்குத் தேவையான சாப்பாட்டை எடுத்து வைக்கிறேன் என்றாள். தெரியலம்மா… நானே பாத்திரம் கழுவிட்டு வந்து எடுத்துக்கிறேன் என்றாள். போடி .. நீயே காலையிலிருந்து எல்லா வேலையையும் செய்கிறாய்.. இந்த ஒன்னையாவது நான் செய்கிறேன் என்றாள் தர்மம். டிபன் பாக்ஸ் கட்டிலுக்கு அடியில் இருந்ததைக் கண்ட தர்மம், சாப்பாட்டை தானே வைக்கலாம் என்று எண்ணியவளுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.
 
கோகிலாவின் டிபன் பாக்ஸில் செயினைக் கண்டதும் கோபம் தலைக்கேறியது. ஏண்டி.. கோகிலா… உனக்கும் நகை மேலே ஆசை வந்துருச்சிள்ள.. இனி என் முகத்தில முழிக்காத…  என்று கத்தினாள். கோகிலா தனக்கு ஏதும் தெரியாது என்றாள். உனக்குத் தெரியாமத்தான் செயின் உன் டிபன் பாக்ஸில் வந்ததோ.. அதுக்குத்தான் நீயே சாப்பாடு வச்சுக்கிறேன்னு சொன்னியா.. நல்ல… நேரம் பார்த்துதான் காரியம் செஞ்சிருக்கடி என கண்டபடி திட்டினாள். இனி நீ வேலைக்கு வர வேண்டாம் என்றாள்.
 
கோகிலாவும் நான்கைந்து நாட்களுக்கு வேலைக்கு வரவுமில்லை. வேறு வேலைக்குச் செல்லவுமில்லை. மீண்டும் தர்மத்திடமே வந்தாள். அம்மா.. இனி இதுமாதிரி நடக்காதம்மா.. என்னை மன்னிச்சிடுங்க.. என்று கெஞ்சினாள். உங்களை விட்டால், நான் வேறு எங்கே போவேன் என்று அழுதாள். தர்மத்திற்கும் ரொம்ப சங்கடமாகிப் போனது.
 
சரிடி.. எனக்கும் உன்னை வேலைக்கு நிப்பாட்டினப் பிறகு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. நீ என்ன பண்ணுவ.. உன் வயசு அப்படி.. என்றவள் நாளைலருந்து வேலைக்கு வா என்றாள். ராணிக்கு இதை பார்த்த போது ரொம்ப ஆச்சர்யம்.
 
மறுநாள் காலை. தர்மம் கோவிலுக்குச்  சென்றிருந்தாள். ராணி, கோகிலாவிடம் மன்னிப்புக் கேட்டாள். என்னை மன்னிச்சிடு கோகிலா. அன்னைக்கு உன்னோட டிபன் பாக்ஸை நான்தான், என்னுடைய குழந்தையிடம் விளையாடக் கொடுத்தேன். அவன்தான் உள்ளே போட்டு மூடிவிட்டான். நானும் ரொம்ப பிஸியா இருந்தததால் மறந்து போயிட்டேன். அத்தை உன்னை திட்டும் போது, உண்மையைச் சொல்ல எனக்குப் பயமாயிருந்தது. அதான் சொல்லல.. என்னை மன்னிச்சிடு. அத்தைகிட்ட நானே நடந்த உண்மையைச் சொல்ல போறேன் என்றாள்.
 
கோகிலா தடுத்தாள். வேண்டாங்கா.. இப்ப நீங்க போய் சொல்லாதீங்க. இப்ப நீங்க சொன்னீங்கன்னா, நாளப்பின்ன அம்மா எது நடந்தாலும், நீங்க என்ன சொன்னாலும், உங்களை சந்தேகப் படுவாங்க…. அதனாலே நீங்க சொல்ல வேண்டாம் என்றாள். ராணி, கோகிலாவிடம் நீ ஏன் வேறு வீட்டுக் வேலைக்குச் செல்லவில்லை என்றாள். இல்லக்கா.. வேற வீட்டுக்குப் போனா வேலை கிடைக்கும். ஆனால், எல்லோரும் நீ ஏன் அந்த வேலையை விட்டுட்டே .. என்பார்கள். நான் பொய் சொன்னால்கூட.. சில தினங்களில் வேறு யார் மூலமாகவோ தெரிய வந்தால் வேலையை விட்டு நீக்கி விடுவார்கள்.
 
எனக்கு அம்மாவைப் பற்றி நன்றாகத் தெரியும். கோபத்தில் பேசுவார்களே ஒழிய, அம்மாவுக்கும் என்னை விட்டால் யாரையும் பிடிக்காது. அதான் தப்பை நான் செய்த மாதிரி ஒத்துக்கிட்டேன். கோகிலா ரொம்பப் பொறுமையாகச் சொன்னாள்.
உனக்கு எப்படிடி.. இந்த அளவுக்குப் பக்குவம் வந்தது என்று கோகிலாவிடம் கேட்டாள் ராணி. ஒன்னுமில்லக்கா.. ஆற்றைக் கடந்தால்தான் அந்தப்பக்கம் போக முடியும்ன்னு இருந்தா.. எல்லோரும் நீச்சல் கற்றுக் கொள்வார்கள்.. கட்டாயம்னு வரும் போதுதான்  மனுஷன்  எல்லா விஷயங்களையும் கத்துக்கிறான்.. புரிஞ்சு நடந்துக்கிறான்.. என்றாள் கோகிலா.
 
ராணி கட்டிலில் புரண்டு அழுகிறாள். தன் மனசாட்சி கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாதவளாய் தவிக்கிறாள்.  ராணிக்கும் பக்குவம் கொஞ்சம் கொஞ்சமாய் வந்து விட்டது.
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s