நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாகம் 3

நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!

 
பாகம் 2 ல் , நேதாஜி  காங்கிரசில் இணைந்து பணியாற்றியதையும், காங்கிரசில் அவர் வகித்த பதவிகளையும், காந்தியுடன் அவருக்கு ஏற்பட்ட முரண்களையும் கண்டோம்.  இந்த வாரம், நேதாஜி ஆங்கிலேயருக்கு எதிராக எவ்வாறு சர்வதேச ஆதரவை பெற்றார் என்பதையும், என்னென்ன பிரச்சினைகளை அவர் எதிர் கொண்டார் என்பதையும் மற்றும் தான் உருவாக்கிய ராணுவ அமைப்பு மூலம் கண்ட வெற்றிகளையும், சில சமயம் சூழ்நிலைக் காரணமாக படைகள் பின்வாங்கிய இடங்களையும், தேசத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு எத்தகையது என்பதையும் அறிவோம்.
 
அமைதியான சாத்வீக வழியிலான போராட்டங்கள் மட்டும் ஆங்கிலேயரை வெளியேற்ற உதவாது என்றெண்ணிய நேதாஜி அவர்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்து  வெளிவந்த பிறகு பார்வர்ட் பிளாக் என்ற கட்சியை நிறுவினார். இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சக் கட்டம் அடைந்த நேரம் அது. 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மிகப் பெரிய மக்கள் இயக்கத்தின் மூலம் ஆங்கிலேயர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். சிறைச்சாலையில் இரண்டு வாரமாக ஏதும் உண்ண மறுத்ததாலும், அவருக்கு நாடு முழுவதும் பெருகி வந்த ஆதரவைக்  கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை வீட்டுக் காவலில் வைத்தது. அப்போதுதான் அவர் வீட்டுக் காவலில் இருந்து, ஆங்கிலேயர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பீகார் வழியாக பெஷாவரை அடைந்தார்.
 
ஆப்கானிஸ்தான், ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்றார். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த அந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, ஜெர்மன்- இத்தாலி உதவியுடன் (ஹிட்லருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.) ஆயுத போரை துவக்க திட்டம் வகுத்தார்.
 
இந்திய தேசிய ராணுவ அமைப்பின் தலைவர்:
 இந்திய தேசிய ராணுவத்தை உயிர் பெறச் செய்து அதன் மூலம் வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்யும் முயற்சியில் இறங்கினார்.
அதன் விளைவாக, 1943-ஆம் ஆண்டு அவருடைய கனவு நிறைவேறியது. ஜெனரல் மோகன் சிங் தலைமையில் துவக்கப்பட்டு, ஆனால் செயல்படாமல் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் சுணங்கி கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு உயிர்கொடுத்தார்.1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி பர்மா தலைநகர் ரங்கூனில் இருந்து இந்தியாவின் கிழக்கு எல்லையை நோக்கி புறப்பட்டது இந்திய தேசிய ராணுவம்.

அடுத்த இரண்டு மாதங்களில் கொஹிமா கோட்டையையும், திம்பாம்பூர் – கொஹிமா சாலையையும் பிடித்தது. இந்திய தேசிய ராணுவத்தின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் படைகள் பின் வாங்கி ஓடின.

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இம்பால் நகரை இந்திய தேசிய ராணுவம் சுற்றிவளைத்து தாக்கியது. ஒரு மாதம் இம்பாலை கைப்பற்ற கடும் போர் நடந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை பொழியத் தொடங்கியது. பொத்துக் கொண்டு கொட்டிய பெருமழையின் காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் இந்திய தேசிய ராணுவத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. ஜூன் 27 ஆம் தேதி இம்பால் முற்றுகை கைவிடப்பட்டது. இந்திய தேசிய ராணுவம் பின்வாங்கத் தொடங்கியது. இந்திய தேசிய ராணுவத்தின்  அப்படையெடுப்பு தோல்வியடைந்தது.

பிரிட்டிஷ் ராணுவத்தின் படைபலம் அல்ல, பெருமழையும், வெள்ளமும், சேறும், சகதியும் இந்திய தேசிய ராணுவத்தின் முதல் முயற்சியை முறியடித்தன.

ஆனால் தாக்குதல் தொடரும் என்றார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். “இம்பாலை மீண்டும் தாக்குவோம். ஒரு முறை, இரண்டுமுறையல்ல பத்து முறை… தொடர்ந்து தாக்குவோம்” என்று அறிவித்தார்.
ஆனால் அது நிறைவேறாமல் முடிந்தது. போரின் போக்கு மாறியது. ரங்கூனை நோக்கியும், சிங்கப்பூரை நோக்கியும் பிரிட்டிஷ் படைகள் நெருங்கின. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய தேசிய ராணுவத்திற்கு உறுதுணையாக இருந்த ஜப்பான் நேச நாடுகளிடம் சரணடைந்தது.நேதாஜி சிங்கபூரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனது படைகளுக்கும், தெற்காசியாவில் தம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட இந்தியர்களுக்கும் சிறப்பு வானொலி வாயிலாக நேதாஜி இவ்வாறு உரையாற்றினார் :

“நமது சரித்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத சிக்கலான வேளையில் உங்களுக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் துவண்டுவிடாதீர்கள். உங்கள் உணர்வுகளை தளரவிடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் விதியில் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்தியாவை அடிமைத் தளையிலேயே வைத்திருக்கும் சக்தி இந்த உலகில் எதற்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல… விரைவில் இந்தியா விடுதலை பெறும். ஜெய்ஹிந்த்.”

சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு தேசப்பற்றை ஊட்டிய ஸ்ரீ அரவிந்தர் பிறந்த நாளான ஆகஸ்ட் 15-ஆம் தேதி, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது.

தேச விடுதலைக்காக போராடிய உன்னத தலைவனின் இறப்பை யாரும் உறுதி செய்யவில்லை. அவனுக்கு இறப்பு என்பது என்றும் இல்லை என்பதை அனைத்து இந்தியர்களும் அறிவர். தேச விடுதலைக்குப் போராடிய தலைவனின் வாழ்க்கை வரலாறை எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
 
இக்கட்டுரையை பல ஆங்கில கட்டுரைகள், விக்கி பிடியா, வெப் துனியா மற்றும் இன்னபிற இணையங்களில் கற்றவற்றை கொண்டே  படைக்கப் பட்டுள்ளது. நன்றி.

3 responses

  1. மாவீரர் நேதாஜி பற்றி மக்கள் மறந்திருந்த வேளையில் நினைவூட்டிய தங்களுக்கு நன்றி. ஆனால் இந்திய தேசிய ராணுவத்துக்கு மாபெரும் தொகையை நன்கொடையாக வழங்கிய வள்ளல் ஹபீப் அவர்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பையாவது சேர்த்திருக்கலாமே

  2. வெகுநாட்களாக நேதாஜியை பற்றி அறிந்துகொள்ள அவாவுடன் சில சிறிய தேடல்களை நிகழ்த்தி வந்தேன் தங்களுடைய தொகுப்பின் மூலம் மேலும் அறிந்துகொண்டேன்… மிக அருமையான தகவல்கள்… மிக்க நன்றி

  3. நேதாஜியைப் பற்றி விரிவாக எழுதிய நீங்கள் ஃபார்வேர்டு பிளாக் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் பற்றி எதுவும் எழுதாமல் விட்டது ஏனோ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s