சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிவுகள் ஓர் அலசல்

சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிவுகள்:
முத்துச் செல்வி – அதிமுக – 94,977
ஜவஹர் சூரியக்குமார் – திமுக – 26,220
சதன் திருமலைக்குமார் – மதிமுக -20,678
முத்துக்குமார் – தேமுதிக – 12,144
முருகன்- பாஜக – 1633
 
சங்கரன் கோவில் இடைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற தலைப்பில்  ஏற்கனவே ஒரு கட்டுரை  எழுதி இருந்தேன். அதில் என்னுடைய பார்வையில் அதிமுக வெற்றி பெறும் என்பதை எழுதி இருந்தேன்.  ஆனால் என்னுடைய கணிப்பில் ஒட்டு வித்தியாசம் தவறாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்து அனைவருமே வாக்கு வித்தியாசம்(68757 ஓட்டுகள்) இருக்கும் என கணித்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். மற்றபடி என்னுடைய வரிசைப்படுத்துதல் படியே கட்சிகள் தங்கள் நிலையை அடைந்துள்ளன.  இதை அழுத்தினால் சங்கரன் கோவில் இடைத்தேர்தல் பற்றிய எனது பார்வையோடு, தேர்தல் முடிவுகளை ஒப்பீடு செய்து கொள்ளுங்கள்.
 
ஜெயலலிதா இனி தான் விரும்புகிற நடவடிக்கைகளை அழுத்தமாகவே செய்வார். கூடங்குளம் விடயம் அதற்கு ஒரு உதாரணம். பெரும்பாலான மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்ற அடிப்படையில் ஆட்சி செய்தால் மட்டுமே, பொதுத் தேர்தலில் வெற்றி பெற இயலும். இல்லையேல், இடைத்தேர்தல் மட்டுமே ஆளுங்கட்சிக்கும், அடுத்து வருகிற பொதுத் தேர்தல் மாற்று ஆட்சிக்கு மட்டுமே வழி வகுக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம்.
 
திமுக தலைவர் கருணாநிதி, இது இடைத் தேர்தல் அல்ல.. மக்களின் ஆட்சி மீதான எடைத் தேர்தல் என்றார். தேர்தல் விடை கண்ட பிறகு இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வெல்வது இயல்பு என்றுள்ளார். மக்கள் இம்மாதிரி செயல்படுகிற வரையில், திமுக எந்த வருத்தமும் பட வேண்டியதில்லை. நிச்சயம் மக்கள் அடுத்த முறை அதிமுக ஆட்சி மீது வெறுப்புக்குளானால் தங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்பது திமுகவிற்கு நன்றாகத் தெரிகிறது.
 
மதிமுக பற்றி குறிப்பிடுகையில், எல்லா இணைய தள வாசகர்களும் ஏதோ மதிமுகவிற்கு அமோக ஆதரவு இருப்பது போலவும், மதிமுக வெற்றி பெற வேண்டும் என தங்கள் ஆதங்கங்களைத் தெரிவித்திருந்தனர். நான் மிகத் தெளிவாக,  தேர்தலுக்கு முன்னர் வைகோ பிரகாசமாகத் தெரிவார். ஆனால் தேர்தல் முடிவுகள் அவருக்குத் தனித்து நின்ற போதெல்லாம் ஒரு பாடமாகவே அமைந்துள்ளது என்று தெரிவித்திருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் மதிமுகவிற்கு கடந்த காலங்களோடு ஒப்பீடுகையில்,எந்த வளர்ச்சியும் இல்லை என்பதே உண்மை. ஏனெனில் 2001 தேர்தலில் தனித்து நின்ற போது என்ன வாக்குகள் வாங்கியதோ,அதே வாக்குகளை இந்த தேர்தலிலும் வாங்கியுள்ளது. அப்படியானால், அரசியலில் இனியும் எந்த மாற்றமும் மதிமுக கொண்டுவர இயலாது என மக்கள் நம்புகின்றனர் அல்லது மக்கள், திமுக மற்றும் அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளை அங்கீகரிக்கத் தயங்குகிறார்கள் என்பதும் புரியும். ஆகையால்தான் தேர்தல் முடிவுகள் மதிமுகவிற்கு ஒரு நல்ல அறிகுறியாக இருக்காது என்ற அடிப்படையில் எழுதி இருந்தேன்.
 
ஒருவேளை காங்கிரஸ் மற்றும் திமுகவிற்கு மாற்றாக அதிமுக வந்தது போல், மக்களின் ஓரளவு அங்கீகாரத்துடன்  தேமுதிக மட்டும் வளர்ந்து வருகிறது. காரணம் சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தேமுதிக 12 ,144 வாக்குகள் வாங்கியுள்ளது. கடந்த 2006 தேர்தலில் வெறும் 7 ,000 வாக்குகள் வாங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தது போல அவ்வளவு எளிதாக மக்களை தன் பக்கம் இழுப்பது என்பது  தேமுதிகவிற்கு கடினமான பணியாகவே உள்ளது. நிறைய கட்சிகள் பெருகிவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம். தேமுதிகவின் செயல்பாடுகளும், மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக செயல்படாதவரையில் அவர்களை மக்கள் முதலாமிடத்திற்கோ, இரண்டாமிடத்திற்கோ ஏற்பது என்பது கனவாகவே இருக்கும்.
 
மக்களுக்கு மாற்று சிந்தனை என்பது அதிமுக, திமுக என்ற நிலையில் இருப்பது வேதனைக்குரிய விடயமே. வேட்பாளர்களைப் பார்த்து வாக்களிப்பதுமில்லை, மூன்றாவதாக மற்றொரு கட்சியை தேர்வு செய்யும் தைரியமும் இல்லாத வரையில் புலம்பல்களைத் தவிர வேறு எதையும் செய்ய இயலாது. ஜன நாயகப் படுகொலைகளை ஊடகங்களோடு மக்களும் அரங்கேற்றி விட்டு பின்னர் கட்சிகளை பழிக்கும் மனோபாவம் என்பது எந்த விதத்தில் நியாயம். அதே நேரத்தில், தாங்கள் அதிமுக, திமுகவிற்கு மாற்று என்று சொல்கிற கட்சிகள் மக்களுக்கு நிஜ சேவையை செய்யாத வரையில் தேர்தல்கள் என்பது வெற்று சடங்காகவும், கூட்டணிகளை மாற்றிக்கொண்டு அரசியல் சதுரங்கத்தில் தங்களை நிலைநிறுத்துபவர்களாகவே செயல்படுவார்கள்.  
 
இன்றைய தேர்தல் முடிவு என்பது கொள்கை முடிவில் மக்கள் செயல்படவில்லை என்பது புரிகிறது. மாற்றாக மக்கள் தங்கள் கடமையை ஒரு திருமண விழாவில் பங்கேற்கிற வகையில் செய்து முடித்திருக்கிறார்கள். வாழ்க ஜன நாய (ய்)கம்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s