கார்த்திக்கிற்கு தேவியை இப்போதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பாக
கார்த்திக்கிற்கும், தேவிக்கும் திருமணம்
ஊர் மெச்சுகிற அளவுக்கு வெகு விமரிசையாக நடந்தது.
தேவி கார்த்திக்கிற்கு சொந்த தாய்மாமன் மகள்.
தேவி பன்னிரெண்டாம் வகுப்பு வரையில்தான் படித்திருந்தாள்.
தேவி வெகுளி. அழகு.. கொள்ளை அழகு. சேலை கட்டியிருந்தால்
அவள் அழகை மிஞ்ச ஆளில்லை. லட்சுமி கடாட்சமான முகம்
என்றால் தேவிக்கு அது நூறு சதவிகிதம் பொருந்தும்.
எதுவெல்லாம் பிடித்துப்போய் தேவியைக் கார்த்திக் கல்யாணம் செய்தானோ அதுவெல்லாம் இன்று அவனுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக அவளது வெகுளித்தனமான பேச்சு. அடுத்து அவள் அணியும் சேலை என்ற ஆடை. மனிதர்களின் ரசனை மாறிக் கொண்டிருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. மனிதர்கள் எதையெல்லாம் ரசித்துச் செய்கிறார்களோ அது குறிப்பிட்ட காலம் கடந்த போது அதை அர்த்தமற்றதாகப் பார்ப்பதும், கோமாளித்தனமாகப் பார்ப்பதும், வியந்து பார்ப்பதும் இயல்புதான். ஆனால் கார்த்திக்கின் ரசனை தேவியை கழட்டிவிடும் அளவுக்கு மாறி இருப்பதுதான் பிரச்சினை. தேவியைக் கல்யாணம் பண்ணுறவன் கொடுத்து வைத்தவன் என்ற வார்த்தைகள் இன்று அர்த்தமற்றுப் போய்க் கொண்டிருப்பதை தேவி உணர்கிறாள். அழகான பெண்களின் வாழ்க்கையிலும் சூறாவழி சுழன்று அடிக்கும் என்பதற்கு தேவியும் விதிவிலக்கல்ல என்பதை புரிந்துகொண்டிருக்கிறாள்.
கார்த்திக் இவ்வளவும் மாறியதற்குக் காரணம் இந்த ஒருவருட வாழ்க்கையில் அவனது வாழ்க்கைத் தரம் வேறொரு தளத்தில் மாறியதே. திருமணமான மூன்று வருடங்களுக்கு மதுரையில் தான் வேலை பார்த்தான். மென்பொருள் பொறியாளனகப் பணிபுரிந்தவனுக்கு மொரோக்கா என்ற நாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
ரீட்டாவை ஒரு ரயில் நிலையத்தில் சந்தித்தான். ரீட்டாவின் ஜீன்ஸ் ட்ரௌஷரும், டைட் டி- ஷர்ட்டும் அவனையும் அறியாமல் அவளையே பார்க்க வைத்தன. பற்றாக்குறைக்கு அவளின் காந்த கண்களும், சின்ன அழகான உதடும் அவனை தன்னிலை மறக்க செய்தது.
ரீட்டாவிற்கும் கார்த்திக் ரொம்ப ஹன்ட்சம் ஆக இருந்ததும்
அவனுடைய அடர்ந்த மீசையும் அவளை மறந்து அவன் மேல் ஒரு ஈர்ப்பை உண்டாக்கியது.
இருவரும் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டார்கள்.
மூன்றாம் சந்திப்பிலேயே தனக்குத் திருமணமாகிவிட்டது என்ற உண்மையையும் சொல்லி விட்டான். ரீட்டா தனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றாள். பின்னர் தான் கார்த்திக் மெல்ல மெல்ல தேவியை உதாசீனப் படுத்தலானான்.
ஆரம்பத்தில் தேவியிடம் சேலையைத் தவிர உனக்கு எந்த ஆடையும் பொருந்த வில்லை.
நீ ஒரு பம்பிளிமாஸ் என்றான். பொதுவாக சேலையில்
அழகாக தெரியும் பெண்கள், ஜீன்ஸ் ப்பேன்டிலோ
அல்லது நாகரிக ஆடை என்று நம்மால்
அடையாளப்படுத்தப் பட்ட ஆடைகளில்அழகாய் இருப்பதில்லை.
நாகரிக ஆடை என்ற சாயம் பூசியவர்களுக்கு, சேலை அழகாய் இராது என்ற
அடிப்படை சிந்தனை அற்றவனாய், ரீட்டா என்கிற தேவதைக்காக,
தேவியை குத்திப் பேசுவதும், மதிக்காமலும் நடத்தினான்.
ஒருமுறை உனக்கு சபை நாகரிகம் தெரியாது, ஆங்கிலத்தில் பேசத்தெரியாத பெண்ணை என் தலையில் கட்டி வைத்து விட்டார்கள் என்று புலம்பினான். ஒவ்வொரு வார்த்தைகளும் அவளைக் குத்திக் கிழித்தன. உறவினர்கள் இல்லாத, தன் மொழி பேசுகிற மனிதர்கள் இல்லாத ஊரில் யாரிடம் புலம்புவது…
உறவினர்கள் உடன் இல்லாத பட்சத்தில் எப்படிக் கையாள்வது என்பதையும்,
மொழி எவ்வளவு முக்கியம் என்பதையும் தேவி உணர்ந்த தருணம் அது.
சில மாதங்களில் ரீட்டாவை ஒருமுறை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டான். தனிமையில் அவளால் அவனை வெல்ல முடியாது என்பதை நன்கு உணர்ந்தவள் சண்டை போடுவதைத் தவிர்த்தாள். ஆனால் அதுவே கார்த்திக்கிற்கு ரொம்ப சவுகர்யமாகி போனது. ரீட்டா ஒருமுறை கார்த்திக்கிடம் உன் மனைவியை டைவர்ஸ் செய் என்றாள்.
ரொம்ப சிந்தித்தவன் தேவியை டைவர்ஸ் செய்வது என்று முடிவெடுத்தான். ரீட்டாவோடு வீட்டிற்கு வந்தவனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது.
தேவியை டேவிட்டோடு பார்த்தான். டேவிட் வேறு யாருமல்ல. கார்த்திக்கின் பாஸ். கடந்த ஆண்டு தன் மனைவியைக் கூப்பிட்டு வந்தவுடன், கம்பெனியில் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு விருந்து கொடுத்த போதுதான் தேவிக்கு டேவிட்டைத் தெரியும். டேவிட் நான்கு ஆண்டுகள் சென்னையில் உள்ள தன் கிளைக் கம்பெனியில் பணிபுரிந்திருந்த போது, தமிழ் மொழியை சரளமாகப் பேசக் கற்றிருந்தான்.
தேவிக்கு மொழி தெரியாத ஊரில், பழக்கமான ஒரே ஆண் டேவிட் மட்டுமே.
தேவி டேவிட்டோடு வீட்டில் இருப்பதைப் பார்த்துப் பொறுக்காத கார்த்திக், நொடியில் தமிழனாக மாறிவிட்டான். அடச்சீ… நீயெல்லாம் ஒரு பெண்ணா என்றான். அண்ணா.. அண்ணா.. என்று என் முன்னால் கூப்பிட்டு விட்டு எனக்குத் தெரியாமல் இவனை வீட்டுக்கு வர வைத்துள்ளாயா..
மொழி தெரியாத ஊரில் ஒரே ஒரு ஆம்பிளை கிடைச்ச உடனே வளைச்சுப் போட்டுட்டே…. இன்னும் இன்னும் வார்த்தைகளை உதிர்க்கும் முன் டேவிட் தடுத்தான்.
கார்த்திக்…. லிமிட் யுவர் வோர்ட்ஸ்.. என்றான் டேவிட். உன் மனைவி இந்த திட்டத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை. நான்தான் உன் மனைவியிடம், உன் கணவன் போன்ற ஆசாமிகளுக்கு இப்படிப்பட்ட ட்ரீட்மெண்ட் கொடுத்தால் மட்டுமே உரைக்கும் என்றேன். மேலும் டேவிட் கார்த்திக்கிடம், உன் மனைவி வெகுளிதானே ஒழிய ஏமாளி அல்ல.. வெகுளியானப் பெண் என்பதால் உன் மனைவி புத்திசாலிப் பெண் இல்லை என்றாகிவிடாது. இன்னும்கூட தன் வீட்டிற்கோ , உன் வீட்டிற்கோ, உன்னுடைய நடவடிக்கைகளை தெரியப்படுத்தாதவள் அவள். அவளை டைவர்ஸ் பண்ணுகிறேன் என்கிற முடிவு எவ்வளவு முட்டாள்தனமானது என்பதைப் போகப் போக புரிவாய் என்றான்.
ரீட்டாவைப் போல பல வசிகரிக்கும் தோற்றமுடைய பெண்கள் உன் வாழ்க்கையில் கிராஸ் பண்ணுவார்கள்.. ஆனால் தேவி போல உன்னையே நினைத்து உனக்காக வாழும் பெண் கிடைக்க மாட்டாள். ரீட்டா பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவள் என்றும், அவள் பலமுறை ஜெயிலில் இருந்தவள் என்றும் டேவிட் விளக்கினான்.
தேவி கார்த்திக்கிடம் என்னை மன்னிச்சிடுங்க.. வேற வழி இல்லாமத்தான் டேவிட் அண்ணாவிடம் நடப்பதைச் சொன்னேன் என்றாள்.
கார்த்திக்கிற்கு, தான் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துள்ளோம் என்பதை உணர்ந்தான். தேவியிடம் மன்னிக்க வேண்டியது நீதானே ஒழிய நானல்ல என்றான். என்ன பேசிக் கொண்டார்கள் என்று புரியாத ரீட்டாவிற்கு, கார்த்திக் இறுதியாய்ச் சொன்னது குட் பை…
தேவிக்கு தன் கணவனை மீட்டியதில் மிக்க மகிழ்ச்சி. அந்நிய நாட்டைச் சேர்ந்த
டேவிட்டிற்கு இருவரும் மனமார நன்றி சொன்னார்கள்.