தலைமுறை – சிறுகதை

 
கிராம நிர்வாக அதிகாரியாய் இருந்த காலத்தில் இருந்தே கோபால் பிள்ளை இன்று வரை விடிகாலை நான்கு  மணிக்கெல்லாம் எழுந்துவிடுகிறார். நான்கு மணிக்கு எழுவதை இன்று வரை சிரமமாக பார்த்ததில்லை. இப்போது வயதாகி விட்டதால் தூக்கமும்  வரமாட்டேன்கிறது. காலைக் கடனை எல்லாம், பம்ப்செட் அருகில் உள்ள உடைமரப் புதர்களில் கழிப்பதுதான் அந்த ஊரில் உள்ள ஆண்களின் வழக்கம். கோபால் பிள்ளையும் எழுந்தவுடன் கையில் பல்பொடியையும், சோப்பு வில்லையும் எடுத்துக் கொண்டு பம்ப்செட்டில் குளிக்க கிளம்பி விடுவார். நட்சத்திரங்கள் கலையாத வானம். அழகான நிலா. இருந்தும் சாலைகளின் ஓரத்தில் உள்ள மரங்களின் கிளைகளில் உள்ள இலைகளின் அடர்த்தி நிலாவை தரையில் முத்தமிடாவண்ணம் உள்ளது.
 
காலையில் குளிக்கச் செல்லும் போது கையில் டார்ச் லைட் எடுத்துச் செல்வார். அந்த டார்ச் லைட் வெளிச்சத்தில், பச்சைப் பசேலென இருக்கும் புற்களின் மீது படிந்திருக்கும் பனித்துளி பார்ப்பதற்கு மின்னுகிறது. கால்கள் அதன் மீது படும்போது பாதம் மெல்லிய குளிர்ச்சியை புணர்கிறது. அதிகாலைக் காற்று உடலை இதமாய் வருடுகிறது. சில நேரங்களில் காய்ந்த நெறிஞ்சி முள் மீது பாதம் பட்டால் உயிர் வலிபோகிறது. அதிகாலை சேவலின் கூவலும், குயில் பாட்டும்,  காகம் கரைதலும் காதுகளில் ரீங்காரமிடுகிறது.
 

கோபால் பிள்ளை அந்த கிராமத்தில் வாழ்வதை மிகப் பெருமையாகக் கருதுகிறார். பம்ப்செட்டில் குளிப்பதில் உள்ள சுகமே தனி. அதுவும் குறிப்பாக, அந்த தண்ணி தொட்டியில் கழுத்துவரை உட்கார்ந்து கொண்டு, அவ்வப்போது தலையைத்  தொட்டிக்குள்ளும், மீண்டும் உடலை தேய்த்து கொண்டே  வயல்வெளியை  வேடிக்கைப் பார்த்துக் கொண்டும்  குளிப்பது சுகந்தம்.  சோப்பு போட்ட பிறகு, குழாயிலிருந்து வேகமாக மிகுந்த அழுத்தத்துடன் வரும் தண்ணீரில் தலையைக் காட்டினால்தான் முழுமையாக குளித்த உணர்வு வருகிறது. அதில் உள்ள சுகந்தத்தை அனுபவித்தவர்கள் மட்டுமே உணரமுடியும்.  வயல் பகுதிகளில் வெற்று நிலம் காணாத வகையில், எங்கு பார்த்தாலும் நெற்பயிரும், வாழை மற்றும் தென்னைத் தோட்டமும் நிரம்பிய கிராமம் அது.  இயற்கையின் ஒட்டு மொத்த உருவத்தையும் அக்கிராமம் தன்னகத்தே கொண்டுள்ளது. 
 
கோபால் பிள்ளை குளித்த கையோடு, பூஜைக்காக அருகம்புல் பறித்து வருவார்  வீட்டுக்கு வந்தவுடன் மஞ்சனத்திப் பூவைப் பறிக்கிறார். தேவாரம், கந்தசஷ்டி கவசம், திருவாசகம் ஆகியவற்றின் பாடல்களை பாடி முடிக்காமல் பூஜையை முடிப்பதில்லை. அவருக்கு அத்தனைப் பக்தி. பிரதோசச் செலவுக்கும், மகா சிவராத்திரி முதல்கால பூஜைக்கும், சஷ்டி திருவிழாவின் இரண்டாம் நாள் திருவிழாவுக்கும் கட்டளைதாரர். கடவுளுக்கு சேவகம் செய்வதிலும், கிராம ஏழைகளுக்கு தன்னாலான உதவி செய்வதிலும் அவருக்கு  
அவ்வளவு அலாதி.   இப்பழக்கத்தை கடந்த முப்பத்தைந்து வருடங்களாக செய்து வருகிறார். 
 
கோபால் பிள்ளையின் மனைவி திலகவல்லி. கணவனை போலவே அவளும் நாலு மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறாள். கோபால் பிள்ளைக்கு, தான் குளித்து திரும்பி வரும் போது வீடு, முற்றம் தூத்து தொளித்திருக்க வேண்டும். திலகவல்லிக்கு சற்றே கனத்த உருவம். மூச்சு மூசு மூசு என்று இளைத்தாலும்,  எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு தானே செய்வாள். எத்தனையோ முறை வீட்டுக்கு வேலையாள் வைத்துக் கொள் என்றாலும் முடியாது என்று இன்றுவரை அவளே வீட்டு வேலைகளை செய்து கொள்கிறாள். கோபால் பிள்ளை ஊருக்கு செய்கிறார். கடவுளுக்குச் செய்கிறார். திலகவல்லியின் புலம்பலை மட்டும் பொருட்படுத்துவதில்லை. திலகவல்லிக்கு உடம்புக்கு முடியாவிட்டால் கூட அதிகமாய் கண்டுகொள்வதில்லை. ஒட்டு மொத்த ஊரும் போற்றப்படுகிற மனிதர், என்னவோ பெரும்பாலான ஆண்களைப் போலவே  மனைவி விடயத்தில் மட்டும் அவ்வாறே உள்ளார்.
 
1960 லிருந்து இன்றுவரை எங்கு சென்றாலும் சைக்கிளில் தான்  செல்கிறார். சைக்கிளின் வயது 75 . அப்பாவின் நினைவுச் சின்னமாக அவர் வைத்திருக்கும் பொருட்களில் சைக்கிளும் ஒன்று. சைக்கிளில் பயணப்படுவதாலோ என்னவோ இன்றுவரை மனிதர் கம்பீரமாகவே தோற்றமளிக்கிறார்.
 
அவருடைய பதவியும், அவருடைய நடவடிக்கைகளுமே ஒட்டு மொத்த கிராமமும் அவரை மதிக்கத்தக்க மனிதராக மாற்றியுள்ளது. ஐயா… என்றே அவரையும், அம்மா.. என்றே அவரது வீட்டம்மாளையும் ஒட்டு மொத்த கிராமமும் கூப்பிடுகிறது. இன்று வரையிலும் அதற்கு பங்கம் விளைவிக்காமல் பார்த்துக் கொள்கின்றனர்.
 
கோபால் பிள்ளைக்கும் திலகவல்லிக்கும் ஒரே மகன். பெயர் கணேஷ். சென்னையில் உள்ள இந்தியாவின் பெரிய வர்த்தக நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறான். கணேஷ் ஆறடி. நல்ல சிவப்பு நிறம். தோற்றத்தில் கிராமத்தில் வளர்ந்த மனிதனுக்கான எந்த அடையாளத்தையும் இன்று அவனிடத்தில் யாரும் காண இயலாது. மொழி உச்சரிப்பில், நடையில்,பார்வையில், செயல்களில், எண்ணங்களில் மாநகரத்து மனிதனாகவே மாறி விட்டான். வேலைக்குச் சென்ற இரு வருடங்களிலே சொந்த கிராமத்திற்கு வருடத்திற்கு இருமுறையோ, மூன்று முறையோ வந்தவன் திருமணமான பிறகு கடமைக்காக வந்து செல்கிறான். கணேஷ் , அப்பாவையும் அம்மாவையும் பலமுறை தன்னுடன் வந்து இருக்கும்படி அழைத்திருக்கிறான்.
 
கோபால் பிள்ளைக்கும் திலகவல்லிக்கும் நான்கு நாட்களுக்கு மேல் சென்னை ஒத்துக் கொள்வதில்லை. பூட்டியே இருக்கும் வீடுகளும், யாரிடமும் பேச நேரமில்லாமல் பொருளாதாரத் தேடலை நோக்கிய வாழ்க்கை ஓட்டமும் , வார இறுதியில் மட்டும் குழந்தைகளுடன் கொஞ்ச , கொஞ்ச நேரம்… எதுவுமே அவர்களுக்குப் பிடிக்கவில்லை.
 
 கோபால் பிள்ளை தனக்குப் பிடிக்காத எதையும் வெளிக் காட்டிக் கொள்வதில்லை. ஆனால் திலகவல்லி அப்படி இல்லை. தன் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை உடனே வெளிப்படையாகச் சொல்லி விடுகிறாள். சென்னை பிடிக்கவில்லை என்பதை மட்டுமல்ல. மற்றவர்களின் செயல்களிலோ, பேச்சுகளிலோ ஒத்துவர வில்லை என்றால் முகத்துக்கு நேராக சொல்லி விடுவாள். நீ சொல்வது சரியோ தவறோ சில நேரங்களில் மற்றவர்களால் அது தவறாகப் பார்க்கப்படும் அல்லது அது அவர்களை சில நேரங்களில் காயப்படுத்தலாம் என்று கணவனோ மகனோ சொன்னால் திலகவல்லி  இன்று வரை கேட்பதில்லை. அவளைப் பொறுத்தவரை, பிடிக்காததை முகத்துக்கு நேராக சொல்லாமல் பின்னால் பேசுவதே தவறு என்று, இன்று வரை தர்க்க நியாயம் கற்பிக்கிறாள். பல நேரங்களில் திலகவல்லி சொல்வதில் நிறைய பேர் முகம் சுளித்தது உண்டு. யாருக்குத்தான் தன்னை குறைத்துச் சொல்வது பிடித்திருக்கிறது!.
 
ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வருவதும் போவதுமாக இருந்தவர்கள், முதுமை காரணமாக இப்போது அடிக்கடி செல்வதில்லை. அப்பாவும், அம்மாவும் எதிர்பாரா வண்ணம் கணேஷ் மனைவி குழந்தைகளோடு வந்த போது பேரானந்தம் அடைந்தவர்களுக்கு அவன் கொடுக்கப் போகிற அதிர்ச்சி செய்தியை அப்போது உணர்ந்திருக்கவில்லை. கணேஷும் வந்த கையோடு எதையும் பேசவில்லை.  குசலம் விசாரிப்புகளுடன், சென்னையை பற்றியும் கோபால் பிள்ளை கேட்டுக் கொண்டிருந்தார். கணேஷின் பிள்ளைகள் வீட்டு முன்பாக, அவர்களுக்கு சொந்தமான பெரிய மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வீட்டு முன்பிருந்த வேப்ப மரக் குளிர்ச்சி அவர்களுக்கு பிற்பகலின் வெயில் உச்சத்தை உணரச் செய்யவில்லை. கோபால் பிள்ளையின் வீட்டு பின்புறமிருந்த அழகிய தோட்டத்தில் எல்லோரும் வந்தமர்ந்தார்கள். வாழைமரம், எலுமிச்சை மரம், வளைந்து நெளிந்த உயரமான தென்னை மரம், முருங்கை மரம், கொடிவகைகள், கீரைத் தோட்டம் என வீட்டிலேயே எல்லாமும் இருந்தன. அவற்றையெல்லாம் ரசிக்க இயலாதவனாய், ரசிக்க விரும்பாதவனாய் கணேஷ்.
 
அப்பாவிடம் எப்படி ஆரம்பிப்பது என்பதையே யோசித்துக் கொண்டிருந்தான். மனைவி சமையல் அறை சென்ற நேரத்தில்,அப்பாவே ஆரம்பித்து வைத்தார். அவருக்கு எங்கே தன் மனைவி எதுவும் நேரடியாகச் சொல்கிறேன் என்று மகனைப் புண்படுத்திவிடக் கூடாது என்றஞ்சினார். மகனிடம், என்னடா.. திடீர் விஜயம் என்றார். இல்லப்பா.. சென்னையில் ஒரு இடம் வாங்கலாம் என்று இருக்கிறேன். அதுக்கு பத்து லட்சம் தேவைப்படுது. அதான், அது விஷயமா உங்ககிட்டே பேசிட்டு போகலாம்னு… இழுத்தான். சொல்லுப்பா.. என்ன செய்யனும்.  இல்லப்பா.. இந்த வீட்டை விற்றோம்னா அந்த பணம் கிடைக்கும்லாப்பா. அதையும் நான் வங்கியில் கொஞ்சம் பணம் போட்டு வச்சிருக்கேன், அதை வச்சும் ஒரு வீடு வாங்கலாம்னு இருக்கேன் என்றான். அதனால, இந்த வீட்டை விற்றதற்கு அப்புறம், நீங்களும் எங்களோடு சென்னைக்கு வந்திடுங்கப்பா என்றான். 
 
கணப்பொழுதில் அவர் இதயம் சுக்குநூறாக நொறுங்கியது. சில நிமிட மவுனங்கள். யோசிக்கலாம்பா.. அம்மாகிட்டே நீ எதையும் இப்போதைக்குச் சொல்லாதே.. நானே என்ன பண்ணலாம்னு சொல்றேன் என்றார்.  இரவில் அவருக்குத் தூக்கமில்லை. நினைவுகளில் மூழ்கினார். அந்த வீட்டைக் கட்ட அவருக்கு கிட்டத்திட்ட ஏழு வருடங்களானது. பார்த்து.. பார்த்து கட்டின வீடு. ராசியான வீடு. அங்குதான் கணேஷே பிறந்தான். அது வெறும் செங்கல்லும் ஓடுமல்ல.. அவரது உழைப்பு. அவரது கனவு. காலம் முழுக்க வாழ ஆசைப்பட்ட வீடு.  ஆசை ஆசையாய் வளர்த்த செடி, கொடி, மரங்கள்..
 
அவருக்குள் பல ஓட்டங்கள்…வீட்டைக் கட்ட அவர் பட்ட கஷ்டங்கள், சிவன் கோவிலை யார் பார்ப்பார், இந்த இயற்கையை இழக்கப் போகிறேனா, குளிப்பதற்கு இனி வெறும் அடைபட்ட அறைதானா, வீட்டு முற்றத்தில் உள்ள மரங்கள் எத்தனை முறை தன்னோடு பேசி இருக்கின்றன, இந்த மதிப்பும் மரியாதையும் நகரத்தில் கிடைக்குமா, என் சைக்கிளை என்ன செய்யப் போகிறேன், வீட்டுத் திண்ணையில் உரையாடிய ஊர் கதைகள் , தேவர் கடையில் பேசிய அரசியல் கதைகளை இனி யார் பேசுவார், பஞ்சாயத்தில் பலமுறை தீர்ப்பு சொன்னவைகளை இழக்கப் போகிறேனா, நகரமே பிடிக்காத என் மனைவி என்ன செய்வாள், ஏன் எனக்கும் தானே…, என்னென்னவோ அவரது நினைவுகளில் அசை போடுகிறது. 
 
மறுநாள் காலை. மகனிடம் சரிப்பா.. இந்த வீட்டை விற்று விடலாம் என்கிறார். மருமகளுக்கும் மகனுக்கும் சந்தோசம். மனைவியைப் பார்க்கிறார். திலகவல்லியும் மகன், மருமகள் முகத்தில் உள்ள சந்தோசத்தைப் பார்க்கிறாள். இன்று வரை தனக்குப் பிடிக்காத விஷயத்தை நேருக்கு நேராக சொன்னவள், மகனுக்காக ஊமையாகிறாள். பிள்ளைப் பாசம் முன்பு வீடு மீதான பாசம் தோற்று நிற்கிறது. 
எதிர்கால சந்ததிகளுக்காக, தன் எல்லா எண்ணக்கனவுகளையும், ஆசைகளையும் தொலைத்து விட்ட பெற்றோர்களின் வரிசையில் இன்று கோபால் பிள்ளையும் திலகவல்லியும்!.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s