அரசுகளின் பட்ஜெட்டுகளில் இலவசங்களும் மானியங்களும் ஓர் ஆய்வு

தமிழக பட்ஜெட் சில தினங்களுக்கு முன்பாக வெளியிடப் பட்டிருந்தது. அதில் வளர்ச்சி திட்டங்களுக்கான அறிவிப்புகளும், இலவசங்களும்,
மானியங்களும் குறிப்பிடப் பட்டிருந்தன. இந்த கட்டுரையில் இலவசங்களையும், 
மானியங்களையும் மட்டுமே அலசி ஆராய்வோம்.
 
அரசுகள்: 
 • அரசுகளின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழல், மக்களுக்குச் சென்று சேர வேண்டிய பொருள்/சேவையில் பல                                                                         குளறுபடிகள் உள்ளன என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
 • அரசுகள் மீது அறிவுஜீவிகளின் குற்றச் சாட்டு இலவசங்களை வாக்கு வங்கிகளுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே. ஆகையால் இலவசங்கள் பெரும்பாலும் பொத்தாம் பொதுவாக எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளன.
 • அரசுகள் மீதான அடுத்த குற்றச்சாட்டு,  இலவசங்கள் என்பது மேலும் மனிதனை சோம்பேறியாக்கும் என்பது அவர்களின் வாதம்.
மக்கள்:
 • மக்கள் கூட்டத்தின் ஒரு சாரார், இலவசங்களுக்காக மக்கள் ஏமாந்து போய் வாக்களிப்பதை மடத்தனம் என்கிறார்கள். 
 • இலவசங்களை பெறும் மக்கள், அதைக் குறைந்த விலைக்கு விற்று விடுகிறார்கள் என்பது அடுத்த குற்றச் சாட்டு.
 • இலவசங்கள் இருக்கிற வரையில் இந்த நாடு முன்னேறப்போவதில்லை என்பது அவர்களின் மிகப் பெரிய கவலை.
அரசுகளின் நிர்வாகத் திறமையின்மையில் எந்த அளவு குறைபாடுகள் உள்ளனவோ அதே அளவு மக்களின் மனப் பாங்கிலும் “ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே” என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. அரசுகளின் குறைகளையோ, மக்களின் எண்ணங்களையோ  பற்றிக் குறை சொல்ல வேண்டுமானால், பாகம் 1 , பாகம் 2 என எத்தனை பக்கங்கள் எழுதினாலும் அது முடிவில்லாக் கட்டுரையாகவே இருக்கும்.
 
ஒரு அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இன்னொரு கட்டுரையில் தெளிவுபடுத்துகிறேன். இக்கட்டுரை எழுதுவதற்கான அவசியம், இலவசத்தை எதிர்க்கிற மனோபாவத்தையும், மானியங்கள் பற்றி அதிகம் விவாதிக்காமல், ஏன் அதைப் பற்றி சிறிது கூட மாற்றுக்  கருத்தோ, விவாதமோ செய்யாமல்  இருக்கும் புத்திசாலிகளுக்காகவும் தான் படைக்கப்படுகிறது.
 
ஒவ்வொரு அரசும், இலவசங்களையும், மானியங்களையும் அதிக வரி செலுத்துபவர்களிடம் இருந்து வாங்கி, இல்லாதவர்களுக்கும் பலன்கள் போய் சேரவேண்டும்/ பலன்களை அவர்களும் பெற வேண்டும், என்ற நோக்கை அடிப்படையாகக் கொண்டே வழங்கி வருகின்றன. என்னைப் பொறுத்தவரையில், இவை இரண்டுமே வளர்ந்து வருகிற நாடுகள், குறிப்பாக ஏற்றத் தாழ்வுகள் அதிகமுள்ள சமுதாயமாக உள்ள நாடுகள் செய்ய வேண்டும். அதிலும் வறுமைக் கோட்டுக்கு கீழான மக்கள், சற்றேனும் முன்னேற வேண்டுமானால் இலவசங்கள் அத்தியாவசியமாகிறது.
 
இலவசங்களையும், மானியங்களையும் கிட்டத்திட்ட எல்லா மக்களும் அனுபவித்து வருகிறார்கள் என்பதே உண்மை. பிரச்சினை எங்கு வருகிறது என்றால், அரசு கொடுக்கிற மானியங்களை அத்தியாவசியம், அத்தியாவசியமற்றது என எதில் இருந்தாலும், சத்தம் காட்டாமல் வாங்கி விட்டு, இலவசங்களுக்கு மட்டும் இதுவெல்லாம் அத்தியாவசியமா என்று தங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் மனப்பாங்கு என்பது கண்டிக்கத்தக்கது.
 
இங்கு இலவசத்திற்கு மட்டும் ஆளாளுக்கு, இது அத்தியாவசியம், இது அத்தியாவசியமற்றது என தாங்கள் விரும்புகிற/ஏற்றுக் கொள்கிற விடயங்களுக்கு விளக்கம் கொடுத்து விட்டு, மற்றவைகளுக்கு எதிர் கேள்விகளைப் போட்டு மடக்குவதாக எண்ணுகிறார்கள்.
 
உதாரணத்திற்கு என்னுடைய நண்பர், கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்கு மட்டுமே இலவசம் கொடுப்பது சரி என்கிறார். அதைத் தவிர்த்து தொலைக்காட்சி, கிரைண்டர் மற்றும் மிக்ஸ்சி கொடுப்பது அத்தியாவசியமற்றது. அதுவும் கழிப்பறை வசதி கூட செய்யாமல் அரசுகள் மேற்கூறியவற்றைக் கொடுப்பதை குறை என்கிறார். அரசுகள் கழிப்பிட வசதிகள் செய்து கொடுப்பது போன்றவை, சுகாதாரத்தில் இலவசம் என்ற அடிப்படையில் தனி ஒதுக்கீடு செய்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
 
அவருடைய பார்வையில், இலவசத்திற்கு கல்வி மற்றும் மருத்துவம் மட்டுமே தகுதியானவையாகப் பார்க்கப் படுகிறது.  இன்னொரு நண்பர்  ஒருமுறை பேசிய போது லேப்டாப் எல்லாம் தேவையற்றது என்கிறார். அவர்கள் அதை சரியான முறையில் பயன்படுத்த மாட்டார்கள் என்பது அவர் கருத்து.
 
இவர்களை குறை சொல்வது என்பது என் நோக்கமல்ல. அவரவர் பார்வையை/ அவரவர் விரும்பும் அரசாங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்கிற கருத்தாகவே எடுத்துக் கொள்கிறேன். ஆனால், இவர்களுக்கு சில கேள்விகள் முன்வைக்கப் பட்டால் நிச்சயமாக சற்று யோசிப்பார்கள்.
 
கேள்விகள்: 
 • பசி தீர்க்க, ஏழைகளுக்கு இலவசமாக உணவுப் பண்டங்களைக் கொடுக்கலாமா?
 • வயதானவர்களுக்கு அதுவும் குறிப்பாக வரி கட்டாமல் வாழ்நாள்(58 வயது வரை) முழுவதும் பணி செய்தவர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்கலாமா?
 • அராபிய நாடுகளிலே கூட இலவச வீடுகளை அரசுகள் ஏழைகளுக்கு கட்டிக் கொடுக்கின்றன. அதை இந்தியாவில் கொடுக்கக் கூடாதா?
 • அரசு அறிவித்துள்ள இலவச நாப்கின் போன்ற திட்டங்களை எவ்வாறு பார்க்கிறோம்?
 • பொறுப்பில்லாத அல்லது நிரந்தர வேலை வாய்ப்பில்லாத ஏழை பெற்றோருக்கு குழந்தைகளாக பிறந்த பெண்களுக்கு  இலவச திருமணமாக அரசுகள் செய்வதை எதிர்கிறீர்களா?
 • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்டுள்ள 2009 ஆண்டு அறிக்கையின்படி, பெட்ரோல் இறக்குமதி செய்யும் நாடுகளிலேயே அதிகபட்ச மானியங்களை வழங்குவது இந்தியாதான். சீனாவில் வழங்கப்படுவதைவிட இந்தியாவில் பெட்ரோலுக்கு ஒரு நபருக்கு வழங்கப்படும் சராசரி மானியம் மூன்று மடங்கும், எரிவாயுக்கு வழங்கப்படுவது ஆறு மடங்கும் அதிகம்.அப்படிப் பார்த்தால், மின் விசிறி, கிரைண்டர், மிக்ஸ்சி ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது பெட்ரோல் அத்தியாவசியமா என்றால் என்ன பதில் இருக்க முடியும். ஆகையால் எது அத்தியாவசியம் என்பது தனி நபர் பொறுத்து மாறிக் கொண்டுதான் இருக்கும்.
 • வண்ணத் தொலைக்காட்சி கொடுத்த அரசின் ஊழல் நடவடிக்கைகளை அனைவரும் அறிய உதவியது, அவர்கள் இலவசமாகக் கொடுத்த வண்ணத் தொலைக்காட்சி தானே.. அதேபோல் நடைமுறையில் உள்ள அரசும் மிக்ஸ்சி, மின் விசிறி மற்றும் கிரைண்டர் கொடுத்து விட்டு, மின்சாரம் வழங்காது போனால் அடுத்த முறை அவர்களுக்கும் இதேகதிதானே.
 
மானியங்கள் கொடுப்பது தவறு என்பது என் வாதமல்ல. மானியங்களுக்கு வாய் திறக்காது இருந்து கொண்டு மீண்டும் மீண்டும் மிக்ஸ்சி, கிரண்டருக்கு மட்டும் எதிராகக் குரல் கொடுப்பது என்பது எனக்கு ஏற்புடையதல்ல. நீயா நானாவில் பங்கு பெற்ற திட்டக் குழு உறுப்பினர் சீனிவாசன் சொன்ன கருத்து இதுதான்…
 
” கடந்த 2006 – 2011 வரையிலான காலக் கட்டத்தில் கிட்டத்திட்ட அரசுக்கான மொத்த செலவு 3,00,000 இலட்சம் கோடி. அதில் வெறும் 3300 கோடி இலவச வண்ணத் தொலைக்காட்சிக்கும், இலவச வாயு எரி அடுப்புக்கும் ஐந்தாண்டு செலவாக ஒதுக்கப்பட்டு செலவிடப் பட்டது. ஆனால் ஒரு வருடத்திற்கு மானியம் வாயிலாக 56000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகத் தெரிவித்தார். ஒரு சதவிகிதம் இலவசமாக மக்கள் பெற்றதை, பூதக் கண்ணாடி போட்டு கேள்விக் கணைகளைத் தொடுப்பதை குறிப்பிட்டார். “
 
அதையே தான் நானும் வழிமொழிய ஆசைப்படுகிறேன். இலவசங்களை எதிர்ப்பவர்கள் யாரென்று உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்தால், நன்கு படித்து பணியில் உள்ளவர்கள், நகர வாசிகள், சமூக அக்கறையாலராக தங்களை அடையாள படுத்தி கொள்பவர்கள், தாங்கள் அனுபவிப்பவற்றை அதாவது அடிப்படைத் தேவைகள் என்று அவர்கள் நிர்ணயிக்கிற, அதே நேரம் அவர்கள் உபயோகிக்கிற சாதனங்களை இல்லாதவர்களுக்கு கொடுக்கும் போது எதிர்ப்பவர்களாகத் தான் பார்க்க முடிகிறது.
 
வேலை வாய்ப்பை வழங்குகிற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், மிகப் பெரிய தொழிற்சாலைகளுக்கும் சர்வ மானியமாக கொடுக்கப் படுகிற விடயங்களைப் பற்றி அறிந்தும், அவ்வேலைவாய்ப்பு தங்களுக்கோ, தங்கள் மகனுக்கோ என்பதால் அதுபற்றிய விவாதங்களை அரங்கேற்றாமல் மேம்போக்கான எண்ணத்தில் இலவச எதிர்ப்பு என்பது சரியல்ல. இங்கு இன்னொரு மனோபாவமும் உள்ளது. அதாவது அரசு தருகிற எல்லா சலுகைகளையும் அரசு அதிகாரிகளும், தொழிற்சாலைகளில் பணி புரிகிறவர்களும் பெற்றுக் கொள்கிறார்கள்.  சம்பளம் மட்டுமே தங்கள் குடும்ப செலவுகளுக்கும் சேமிப்புக்கும் போதுமானது என்ற போதிலும் போனஸ், இலவச ரயில் பயணம், இலவச போன் வசதிகள் என எல்லாவற்றையும் கேட்டு/பெற்று அனுபவித்து விட்டு இலவசங்களில் இவையெல்லாம் அத்தியாவசியமற்றது என்று கொக்கரிப்பது விந்தையிலும் விந்தை! 
 
வல்லரசுகளுக்கு வேண்டுமானால் இலவசங்களுக்கு பதிலாக மானியங்கள் மட்டும் போதுமானதாக இருக்கலாம். மக்கள் தொகை அதிகமிக்க, ஏழைகளை ஏமாற்றுகின்ற அரசுகளே அதன் பாவங்களைப் போக்கும் வண்ணம் செயல்படுகிற ஒரே செயல் இலவசங்கள் மட்டுமே! ஒரு அரசு இலவசங்களுக்கும் மானியங்களுக்கும் கொடுக்கிற முக்கியவத்துவத்தை, நீண்ட நெடிய திட்டத்துடன் பயணிப்பதற்குத் தன்னைத் தயார் செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் எதிர் கருத்து இருக்கப் போவதில்லை.
 
எனது இறுதி கருத்து இதுதான்:
 1. மானியங்களும், இலவசங்களும் இருப்பவர்களிடம் இருந்து இல்லாதவர்களுக்கு கொடுப்பதனால் அதில் தவறேதும் இல்லை.
 2. இலவசங்களுக்கு மட்டும் புத்திசாலித் தனமாக அத்தியாவசியத் தேவைகள் இது என்று தனி நபர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதை எதிர்கிறேன்.
 3. இலவசங்களுக்கு இது அத்தியாவசியம் என்று கூச்சலிட்டால் மானியங்களுக்கும் கூச்சலிடுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.
 4. வளர்ந்த நாடுகளோடு எவரேனும் இலவசங்களை ஒப்பிட முயல்வார்களேயானால், அவர்களுக்கு என்னுடைய பதில் இலவசங்களை வாரி வழங்குகிற நாடுகளைத் தான் உதாரணம் சொல்ல முடியும்.
 5. ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல அரசின் நடவடிக்கைகளை இன்னொரு கட்டுரையில் விமர்சிக்கலாம்.
 

8 responses

 1. தினமும் காரில் நீண்ட வரிசைகளில் மக்களை நிற்கச் செய்து பல் விளக்கி விட்டு, காபி, சிற்றுண்டி ஆகியவற்றை இலவசமாக வழங்கலாம். மதியம் வரை அவர்களை உலக அரசியல், தமிழ் சினிமா இவற்றில் திளைக்கச் செய்து மதிய உணவு வழங்கலாம். பிறகு இரவு வரை தொலைக்காட்சியில் வரும் குடும்ப மதிப்பீடுகள் கொண்ட தொடர்களைக் காட்டித் தாலாட்டித் தூங்கவைக்கலாம். வருடத்திற்கு இரண்டு முறை இலவச உடைகள் தந்து, ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வாக்களிக்கச் செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்றலாம்.

  மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, உணவு, மருத்துவ வசதிகள், சாலைகள், இவையே கேள்விக்குறியாக, எட்டாத கனவாக இருக்கும்போது, ஒவ்வொரு அரசாங்கமும் அரசாங்க கஜானாவைத் தங்களுக்கு பிடித்த எதாவது ஒரு இலவசத்தில் செலவழித்துக்கொண்டிருப்பது தமிழகத்தை முன்னேற்றப் பாதையிலிருந்து வெகு தொலைவிற்குத் தடம் மாறி இட்டுச் செல்கிறது. அது மட்டுமின்றி மக்களின் சுயமரியாதையையும் ஆணிவேரோடு அழிக்கவும் செய்கிறது.இதை சரி என்று கூறுவதற்கு ஒரு கட்டுரை வேறு. தனக்கு தேவையான கருத்துக்களை மட்டும் வைத்து கொண்டு சரி என்று கூறுவது ஏற்புடையது இல்லை . இலவசங்களை கொடுத்து மக்களுக்கு தேவையான தினசரி பொருள்களின் விலையை உயர்த்துவதுதான் நடக்கின்றது .

 2. ராஜ்குமார்,
  தங்கள் மறுமொழிக்கு நன்றி.
  தங்களின் மறுமொழியில் இலவசங்கள் எத்தனைக் கேடு என்பதை விளக்குவதாகப் புரிந்து கொள்கிறேன். ஆனால் தாங்களும் மானியங்கள் பற்றி வாய் திறக்காது இருப்பதுதான் என் போன்றோரின் கேள்வி.

  ஏதோ ஒருவகையில் தாங்களும் இலவசங்களையோ மானியங்களையோ பெற்று இருப்பீர்கள் என்றே நம்புகிறேன். அப்படி அனுபவித்த நாம் இன்று இலவசத்திற்கு மட்டும் எதிராகக் கொடிபிடிப்பதுதான் விந்தை.

 3. நீங்கள் விலைவாசி உயர்வு பற்றி வாய் திறக்காதது ஏனோ.ஏன் இந்த கம்ப்யூட்டர் , மிசீஸ் ,பேன் அதற்கு அரசு எவ்வளவு செலவு செய்கிறது என்று வாய் திறக்காதது ஏனோ?சங்கரன் கோவிலி அவ்வளவு அவசரம்மாக இல்லவச பொருட்கள் அரசு தருவதற்கு காரணம் என்ன என்று கூறது ஏனோ .

 4. ராஜ்குமார்,

  ஒரு கருத்தைத் தெரிவித்து விடுகிறேன். அரசுகளின் செயல்பாடுகள் பல விடயங்களில் எனக்கும் ஒவ்வாததுதான். மேலும் என்னுடைய கட்டுரையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். ”
  அரசுகளின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் ஊழல், மக்களுக்குச் சென்று சேர வேண்டிய பொருள்/சேவையில் பல குளறுபடிகள் உள்ளன என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.” என்பதையும், “அரசின் நடவடிக்கைகளை இன்னொரு கட்டுரையில் விமர்சிக்கலாம்.” என்பதையும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன் .
  மானியங்கள் தேவை என்பதைத் தாங்கள் உணர்ந்தமைக்கு நன்றி. அதே வேலையில் இலவசங்கள் மட்டும் சீர்கேட்டாக்கும் என்ற தங்கள் கருத்தும் மிகுந்த விமர்சனத்துக்குரியதே.
  மேலும் இக்கட்டுரை எழுதியதற்கான காரணம் மானியங்களை உவகையுடன் ஏற்றுக் கொண்டு இலவசங்களை ஏளனமாக பார்க்கும் புத்திசாலித் தனத்தை கேள்வியாக வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம் என்பதைத் தெளிவு படுத்தி விடுகிறேன்.
  என்னைப் பொறுத்தவரையில் “மானியங்களும், இலவசங்களும் இருப்பவர்களிடம் இருந்து இல்லாதவர்களுக்கு கொடுப்பதனால் அதில் தவறேதும் இல்லை” என்பதே எனது கருத்து .
  நிச்சயமாக அரசுகளின் நோக்கங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சிக்கலாம் என்றே இருக்கிறேன்.

 5. நீங்கள் கூறுவது போல் இருப்பவர்களிடம் இருந்து இல்லவதவர்களுக்கு அரசு கொடுக்கிறது என்றால், பால் வாங்குபவனும், பேருந்தில் பயணம் செய்பவனும், டாஸ்மாக்கில் தினமும் சாராயம் குடிப்பவனும், தினமும் மின்சாரம் உபயோகிப்பவனும் இருப்பவர்களா? தெருவில் பிச்சை எடுப்பவர்கள் இல்லாதவர்களா ? இது எப்படி இருக்கிறது என்றால் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி மக்களுக்கே உணவு அளிப்பது போல் உள்ளது. இது சரியாகுமா ஆசிரியரே?? “ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே” என்று மக்களின் மனநிலை இருப்பதாக கூறி உள்ளீர்கள். இந்த மனநிலை நமது மாநில மக்களிடம் அதிகம் காணப்படுவதேன்? இதற்க்கு காரணம் யார் மக்களா? அரசாங்கமா ? இந்த கருத்தை சொல்ல படித்த அதி மேதவிதனமோ அல்லது சுயநலமோ தேவையில்லை என்று நினைக்கிறேன் .

 6. அம்பானியின் மகன் 8000 கோடி ரூயில் 27 மாடி கட்டிடம் கட்டியிருக்கிறான். 27வது மாடியில் ஹெலிகாப்டர் இறங்கும்.இவருடைய கார் விலை 1கொடிக்கு மேல் .அதைவிற்கும் கம்பெனி சலுகை விலையில் டீசல் கொடுத்தால் தான் நாங்கள் காரை விற்கமுடியும் என்றது அம்பானிகளின் வாகங்களுக்கு எரி பொருள் சலுகை விலையில் கொடுக்கப்படுகிறது. விமானத்திற்கு தனியார் கம்பெனிகளுக்கு சலுகை விலையில் எரிபோருள். அதையும் கோடுக்க முடியாது என்று மல்லையாக் கள் நாடகமாடுகிறார்கள். இந்தப்பாவிகள் வரி கொடுப்பதில்லை. லட்சக்கணக்கானகோடி பாக்கி.

  நகத்தில் ரத்தம் வர நிலத்தை கீறீ நெல்லை விளைவிக்கிறானே அவனுடைய அழுக்குக் கோவணர்த்திர்க்கு வரி உண்டு. நேஞ்சிலே எம்.ஜி.ஆர் படத்தைபோட்டு கஞ்சாபீடி இழுக்கிறானே அவன் தீப்பெட்டிக்கு வரி உண்டு. “சாமி! இலவசம், மானியம் என்றால் வசதிஉள்ளவனுக்கு கொடுக்கப்படுவது யாருக்கும் தெரியாமல் கொடுப்பார்கள்”—காஸ்யபன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s