திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

 

’தாருகாவனத்து வாழுந் தாபர் முன்னோர் காலஞ் சேருமெய்த் 
 தருமந்தானே தெய்வமென்றிருந்தேன் கோனைக் கோரமாய்
 நிந்தை செய்த கொடியதோர் பாவந் தீர வாரமாய் தொழுது
 போற்றி மகிழ திருமூல லிங்கம்”
 
-என்கிறது திருநெல்வேலித் தல புராணம். 

 நெல்லையப்பர் கோவில் வரலாறை அறியுமுன் கோவிலின் சிறப்புகளைக் காண்போம்.

 • சிவபெருமான் நடனமாடியதாகச் சொல்லப்படும் ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று. இது ஐம்பெரும் சபைகளில் தாமிர சபை என்று போற்றப்படும் சிறப்புடையதாகும். ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.
 •  திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற புகழ் மிக்க தலமாக விளங்குகிறது.
 •  அருணாசல கவிராயரால் வேணுவன புராணத்திலும், சொக்கநாத பிள்ளையால் காந்திமதியம்மை பதிகத்திலும் பாடப்பெற்ற பெருமையுடையது.
 •  இத்திருத்தலம் 32 தீர்த்தங்கள் கொண்டது என்கிற பெருமையுடையது.
 • இக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்தது.
 • ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
 
வேணுவனம் என்ற பெயரில் அழைக்கப்பெற்ற ஊர்தான் இன்று திருநெல்வேலியாக அழைக்கப்படுகின்றது. திருநெல்வேலியாக பெயர் மாற்றம் பெற ஒரு வரலாறு நடந்தேறியுள்ளது. 
 
திருநெல்வேலி பெயர்க்காரணம்:
வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினார். தன் மேல் அளவு கடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான்,  வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்குப் பயன்படுத்தி வந்தார். இப்படிப் பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

 
குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழைத் தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்த்தார். நெல்லைச் சுற்றி இருந்த மழைநீர், நெல்லைக் கொண்டு செல்லாத படி இருப்பதையும், நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியந்தார்.
 
மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். அரசன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண வந்தார். நெல் நனையாமல் இருந்தது. உலகிற்காக மழை பெய்வித்து, வேதபட்டரின் நெல் மட்டும் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றழைக்கப்பட்ட அப்பகுதி இந்நிகழ்வுக்குப் பின்னர் நெல்வேலி என்று அழைக்கப்பெற்றது.
நெல்வேலி என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போது திருநெல்வேலியாக மாறிவிட்டது. நெல்வேலி நாதர் நெல்லையப்பர் என்று ஆகிவிட்டார்.
 
இங்குள்ள இறைவன் சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்று பிற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
 
கோவில் உருவான வரலாறு:
ராமக்கோனார் என்கிற சிவபக்தர் அந்த ஊரின் அரசருக்கு(ராம பாண்டியனுக்கு) வேணுவனம் என்கிற மூங்கில் காட்டைக் கடந்து சென்று தினமும் பால் கொண்டு போய் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர் அந்தக்காட்டின் வழியே வரும் வரும்போதெல்லாம், ஒரு இடத்தில் கால் இடறி பால் குடம் கீழே விழுந்து பால் சிதறும். பானை மட்டும் உடையாது!. இப்படியே தினமும் நடந்து கொண்டிருந்தது. பால் குறைவதற்குக் ராமக் கோனார் சொன்ன காரணம் கேட்டு அரசர் கோபமடைந்து சத்தம் போட்டார்.

 
மறுநாள் பால் கொண்டு வந்த ராமக் கோனார் கையில் கோடாலி ஒன்றையும் கொண்டு வந்தார். அந்த இடத்திற்கு வந்ததும் வழக்கம் போல் இடறியது. பால் பானை கீழே விழுந்து பால் சிதறியது. பானை உடையவில்லை. பூமிக்குள் புதைக்கப்பட்ட அல்லது வெட்டி எடுக்கப்பட்டது போக எஞ்சி நிற்கும் மூங்கில் துருத்திகள்தான் தன் காலை இடறி விடுகிறது என்கிற எண்ணத்துடன் தன் கையில் கொண்டு வந்த கோடாலியால் அவற்றை அகற்ற வெட்டத் துவங்கினார்.
 
அப்போது வெட்டப்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியேறிப் பெருக்கெடுத்தது கண்டு பயந்து போனார். அங்கிருந்து ஓடிச் சென்று அரசரிடம் தான் கண்ட காட்சியைக் கூறினார். தினமும் பால் கொட்டுவதற்கான காரணம் கூறி வந்த கதையை நம்ப மறுத்த அவர் இந்தக் கதையைக் கேட்டு மிகவும் கோபமடைந்தார். இருப்பினும் ராமக்கோனார் சொல்லும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டு முடிவெடுக்கலாம் என்கிற எண்ணத்துடன் தனது படை வீரர்களுடன் சென்றார்.
 
அங்கே துருத்திகள் வெட்டப்பட்ட இடத்தில் இரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம்.

அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். (இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம்.) சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

இந்தக் கோயில் தான் இன்று நாம் வழிபடுகிற நெல்லையப்பர் கோவிலாக உள்ளது.
 
கோயிலின் அமைப்பு:
கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி இருக்கிறது. அதனைக் கடந்து சென்றால் கொடிமரம் இருக்கிறது. கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். அதற்கு முன்பு மிகப்பெரிய விநாயகர் வீற்றிருப்பார். சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சிலைகளும் இருக்கிறது. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார்.
 
 
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. இதன் துவக்கத்தில் “இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஏழு ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் போன்ற சிலைகளும் இருக்கின்றன.
 
 
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சன்னதிகள் உண்டு. கோயிலின் மிகப்பெரிய உள் தெப்பம் இங்கு உள்ளது. கோயிலுக்கு வெளியே 50 மீட்டர் தொலைவில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.
 
 
இரண்டு கோயில்களுக்கும் கிழக்குப் பக்கத்தில் தனித்தனியே பெரிய கோபுரம் உள்ளது. அம்மன் கோயிலுக்குத் தென்பகுதியில் ஒரு வாசலும், வடக்குப் பகுதியில் சங்கிலி மண்டபத்தின் மூலையில் ஒரு வாசலும் உள்ளது. இதைப் போலவே சுவாமி கோயிலுக்கு வடபுறமும், மேற்குப் புறமும் தனித்தனியாக இரு வாசல்கள் இருக்கின்றன.
 
காந்திமதியம்மன்:
இத்திருத்தலத்தில் நெல்லையப்பருக்கு இருப்பது போன்றே காந்திமதியம்மனுக்கும் சமமானப் பிரிவுகளுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மன் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
 
சிறப்புப் பூஜைகளும் கோவில் திருவிழா நாட்களும்:
 
தனித்தனி பூஜை:நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்கு தனி ராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி ராஜகோபுரமும் உண்டு. இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது. பார்ப்பதற்கு தனித்தனி கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும். பொதுவாக கோயில்களில் சுவாமி, அம்பாள்   இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும். ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக  ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.
காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் “தங்கப் பாவாடை” அலங்காரம் செய்யப்படுகிறது.
 
தன்னில் நீராடும் தாமிரபரணி :இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை     வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாகஎடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர்.  தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை   வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு. அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும்   துவாரபாலகிகளாகவும்  காணலாம். கங்கையும், யமுனை யும் தாமிரபரணி நகர்   நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின்       மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.
 
 
தாமிரபரணியில் தண்ணீர் வற்றாதது ஏன்? : திருநெல்வேலியில் ஓடும் தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர்  வற்றுவதில்லை. இந்நதியை அகத்தியர் உண்டாக்கியது ஒரு காரணம்  என்றாலும், நதி செழிப்புடன் இருப்பதற்கு நெல்லையப்பரே மூலகாரணம் என்கிறார்கள். ஆம்! இக்கோயிலின் அமைப்பை பார்த்தால் இவ்விஷயம் புலப்படும்.

கோயில்களில் சுவாமி அபிஷேக தீர்த்தம் வட பகுதியில் விழும்படியாகத்தான் கோமுகி இருக்கும். ஆனால், இங்கு வருணனின் திசையான மேற்கில் இருக்கிறது. இந்த புனித நீர், தன் திசையில் விழுவதால் மகிழும் வருணபகவான் எப்போதும் இப்பகுதியில் மழை பொழிவித்து, தண்ணீர் பஞ்சம் இல்லாத நிலையில் வைத்திருக்கிறார் என்பது ஐதீகம்.

ஆனிப் பெருந்திருவிழா:
ஆனிப் பெருந்திருவிழா 10 நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் தேரோட்டம் மிகச் சிறப்பான ஒன்றாக உள்ளது. தேரோட்ட நாளன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அரசுப் பணிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.  
ஆடிப்பூர உற்சவம், நவராத்திரி திருவிழா, ஐப்பசித் திருக்கல்யாண விழா போன்றவை இக்கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள்.
 
நான் நெல்லை என்பதால் நெல்லையப்பர் கோவில் சுற்றிய பகுதிகளை நன்கு அறிவேன். ஆகையால் கோவிலைச் சுற்றியுள்ள சில சுவாராஷ்யமான தகவல்களை கீழே குறிப்பிட்டுள்ளேன். 
 • நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ள இடம் திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவில் அமைந்துள்ள இடம் டவுன் அன்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் பேருந்துகள் ஜங்ஷனிலிருந்து ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை டவுனுக்கு வந்து செல்கின்றன. ஒரு வழித் தடமாக உள்ளதால், ஜங்ஷனிலிருந்து செல்லும் போது கோவில் அருகில் இறங்கிக் கொள்ளலாம்.
 • வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பாளை வேய்ந்தான்குளம் பேருந்து  நிலையத்தில் இறங்கி டவுன் அல்லது ஜங்ஷன் சென்றும் இக்கோவில் செல்லலாம். தென்காசியில் இருந்து வருபவர்கள் கோவிலுக்கு பின்புறம் இறங்கி நடந்து வரலாம்.
 • நெல்லையப்பர் கோவிலுக்கு எதிராக 50 மீட்டர் தள்ளி, நெல்லையின் இருட்டுக்கடை அல்வா கடை உள்ளது.
 • நெல்லையப்பர் கோவிலின் இடப்பக்கத்தில்தான் RMKV மற்றும் போத்திஸ் கடைகள் உள்ளன. இக்கோவிலைச் சுற்றி கடைகள் உள்ளதால் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்வதில் சிரமம் உள்ளது.
 • இக்கோவிலைச் சுற்றியுள்ள கடைகள் பெரும்பாலும் மொத்த வியாபாரக் கடைகளாக உள்ளன. டவுன் சந்தையும் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது.
 • நெல்லைக்கு பல சிறப்புகள் இருந்தபோதிலும் நெல்லையப்பர் கோவிலும், தாமிரபரணி நதியும் மிக முக்கியமான ஒன்று.
 

7 responses

 1. நானும் நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவன் தான். இருந்த போதிலும் பல பேரிடம் தல புராணமும் ஊர் பெயர்க் காரணமும் கேட்டுள்ளேன் ஒருவருக்கும் சரியான தகவல் தெரியவில்லை. அனால் இன்று அறிந்த கொண்டேன். என்னுடைய மகிழ்ச்சியை வெளிபடுத்த வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு நன்றிகள் பல நூறு.

  இதை பலரும் அறிய வேண்டும் என்ற காரணத்தால் உங்கள் அனுமதி பெறாமலேயே இந்தக் கதையை எனது முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளேன். உங்கள் பங்கள் தல முகவரியை அத்துடன் இணைத்துள்ளேன்.

  நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன். நன்றி

 2. நண்பர் சீனிவாசனுக்கு,
  தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. தங்கள் முக புத்தகத்தில் வெளியிட்டமைக்கு எனது நன்றிகள் பல. தென்காசி ராஜ கோபுரம் பற்றியும், குற்றாலப் பெருமைகளையும் எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தகவல்களை சேகரித்த பின்பு எழுத வேண்டும்… பார்க்கலாம்.

  தங்கள் மறுமொழிக்கு நன்றி.

 3. I HAVE READ YOUR ARTICLE ON THIRUNELVELI NELLAIYAPPAR KOIL.
  A NICE ONE. HEREAFTER I WRITE MY THOUGHTS RELATED TO THIS
  IN TAMIL i.e., IN MY MOTHER TONGUE by means of ENGLISH TRANSLITERATION :
  arumaiyana pathivugal lakshmana perumal. podhuvaaga indukkal murkaalankalil perumpaalaana koilkalil ” moorthi, thalam, theertham ” indha moonraiyum amaiyum padi seithirundhanar. moorthi enraal silai, theertham endraal neernilai, thalam endraal oru idathai kurippathu.
  sutruchoozhalai nandraaga vaippadharga marangal, nandhavanangal
  avatrai kaaka kulam, kinaru pondravatrai amaithu (bio- cycle) vilakkam
  sollaamal erpaduthi padhugathu vandhanar indhiyargal . kurippaaga thamil
  mannargal, thamizh selvanthargal, matrum palankaalathu munnorgal. oru nalla aranilayamaga aalayathai erpaduthi ange anma layikkum vannam isai matrum inna pira kalaikalaigalai kaathum, pasippini pokkiyum, yaathirai seivorukku anna chaththiram, mandapangal kattivaithum manithasamuthaayaththai peni sarisamamaga ara unarvodu, dharma sindhanaiyodu, ezhai panakkaaran pagupadu illadhu muraiyaaga nadathi vandhanar. melum uyir samudhaayam,
  sutrusoozhalaiyum muraiyaaga padhugaathu vandhanar. raajaakkal thangal
  aranmanayay vida koilukku mukkiyaththuvam koduththaargal. Atharkaaga
  nilangal, soththukkal erpaduthi saasanangal, pattayangal, kalvettukkal erpaduththinaargal. Dharmakarthakkal athanai paadhu kaathu vandhaargal.
  kodiya pambukkum( snake ) putru vaithu paalvaarthu athai paadhukaaththaargal.
  kadavul maruppu kolgai ullavargal pambu paal kudikkumaa kudikkaadha
  endru aaraichi seiyaalaam. Anaal antha pambu inam kooda ulagil paadhukakkap padavendiya onru enru sollaamal seithu nadaimurayil vaazhnthu
  kaati irukkiraargal. seiya mudinthavarkalaga entha nalla kaariyankalaiyum
  vilakkam koorikkondu irukkkamal nalla vidhamaga seidhuvaruvathaiye vazhakkamaga kondu vaazhnthu vandhullargal.

  koil aathi kaalathil moongilgal ( BAMBO FOREST ) niraindha kattil
  irundhadhu. enave than swami peyar ” VENU VANA NAATHAR ” ( NOW WE
  FIND SOME BAMBOO TREES AT ABOUT IN 10 NUMBERS BEHIND BUILDINGS
  OF THE MOOLASTHANAM AS CALLED STHALA VRUKSHAM ) endra peyar
  vandhullathu. thirunelveli marutha nilam aga irundhu vandullathu.
  erakkuraiya 100 aandukallukku munbu ange saalai vorangalil niraya
  “MARUTHA MARANGAL ” irundhana . avaigallellam pinnar ( municipality
  development and road extention ) vnettappattu saalaigalum , kattadangalum
  aagivittu irukkindarana.
  indrum pabanasam mudhal srivaikundam varai nedunsaalai
  vorangalil marutha marangal iruppadhai kaanalaam. avatril niraiya
  marangal 50 mudhal 60 vayadhirkku merpattavai. koil sella padha yaththirai
  selvorukku adhu pondra periya nizhal tharum marangal vazhiyil chaththirangal amaikka pattu irundhana.

  VEERA PANDIYA KATTABOMMAN THIRUCHENDHOOR MURUGAN KOIL
  POOSAI NADAKKIRATHU ENBATHAI SENTHOORIL IRUNDHU THAN
  ARANMANAI VARAI ANGANGA MANI THOONGAL, KOODANGAL AMAITHU
  MANIYOSAI KETTA PINBE UNAVU ARUNTHAVUM , ARASA KAARIYANGALAIYUM SEIVAARAAM.

  marangalaiyum, paravaikalaiyum kaappatrum saranalayangalaka koilgal
  irundhu vandullana endre naan nambukiren. andru koilgal dharma kaariyangalai evarathu manamum immiyum konaatha vagaiyil seithu
  vandhullana. andru athu muzhukka muzhukka dharmaththai kaappatrum
  oru kanniyamana idamaagave thigalnthu vandhullathu. naaladaivil indha
  kudiyarasu ( present democracy) matrum arasiyalvaadhikalin(politician)
  thalaiyeettaal thanathu nilaiyil maari vanigathalangala maarivittu irukkindrana.
  koil nilam vaiththiruppavan padiyalappathillai; koil idankalil kadai vaithuruppor muraiyana vaadagai ( Rent for the endowment buildings) koduppathillai. koilai saarnthu vaazhpavarkallu thanakku vaazha vazhi vitta
  oru sthapanaththirku ( samasthanam or trust or endowment) vilai vasikku
  thagunthaar pola vaaidagai kodukka manam illai. arusum athanai muraipadutha munaivathillai.

  mudiyarasugal koil meedhu vaithu irundha mariyadhai, nadaimurai
  paraamarippugalai, dharma sindhanaigalai eno entha kudiyarasaalum
  avvare seiya iyalavillai.

  koilai katti vaiththavargal vaasthu muraiyil kooda aanma iraivan meedhu
  layapada athavadhu manadhu onra aavana seithu ullanar.
  piragaram varum podhu naam nadakkindra paarai karkal nam kalgalil
  ( giving accupressure on our foot ) akku pressure Erpaduthi udal , manam
  orunge onrupada aavana seithullanar. amaithiyaga oruvan intha mathiriyana
  koilai muzhu mana eedupaatudan dharisippan enral avanathu udal valathodu
  manam valam petru irai sindhanaiyil munnetram adaivan. (Big and typical temples like swami nellaiappa temple five organs are regulated and integerated in such a way towards our mind to improve our spiritual status)
  ( THE PILLARS AND THE SCULPTRUE EVER REPRESENT THEIR
  ATTITUDES, AND KEEN ATTENTION TOWARDS FINE ARTS AND ESTABLISH
  THE SAME TO THE FUTURE GENERATION )
  ADHIGAM PESAAMAL SEYALAI SEITHU VAAZHNDHU KAATUVATHAIYE
  NAM MUNNORGAL VAZHAKKAMAGA KONDU IRUNTHIRUKKIRAARGAL.

  YOUR ARTICLE HAS BEEN ACCELARATING MY THOUGHTS
  ABOUT OUR ANCESTORS THOSE WHO ESTABLISHED SUCH A TRUSTS
  IN IDEAL WAY.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s