ரயில் பயணம் பாகம் 1 ல், ரயில் நிலையக் காட்சிகளையும், நான் சந்தித்த சுவாராஸ்யமான மனிதரைப் பற்றியும், ரயில் நிலைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டேன்.
ரயில் பயணத்தில் இரவு நேர பயணத்திற்கும், பகல் நேர பயணத்திற்கும்தான் எத்தனை மாறுபாடுகள்… எத்தனை வித்தியாசங்கள்… பகலில் யார் யாரோ எங்கெங்கோ அமர்கிறார்கள்… இது என் இடம் என்று சண்டைப் போட்டுக் கொள்வதில்லை. சிறிது நேரம் வாயிற்கதவுப் பக்கம் போய் நிற்கிறார்கள். சிறிது நேரம் மேல் படுக்கையில் படுத்துக் கொண்டு கதைப் புத்தகங்களோடு ஒன்றி போய் விடுகிறார்கள். நிறைய பேர் புத்தகங்களை படிக்கக் கூடிய இடமாக ரயில் பயணத்தை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் பயணத்தில், புத்தகம் படித்தல் என்பது பொழுது வேகமாக செல்லவும், புத்தகத்தை படித்துக் கொண்டே அவ்வப்போது ரயில் எங்கு நகர்கிறது எனப் பார்க்கிறார்கள். அவ்வப்போது கான்டீன் பக்கம் போய் சுவையில்லாத எதோ ஒன்றை வாங்கித் தின்கிறார்கள்.
பகல் பயணத்தில் மட்டுமே நிறைய நண்பர்களை அடையாளம் காண முடிகிறது. குறிப்பாக இரவு எட்டு மணிக்கு கிளம்பி, காலை ஆறு மணிக்கெல்லாம் பயணப்படுகிற பயணங்கள் பெரும்பாலும் புதிய உறவுகளை அடையாளப்படுத்தவில்லை.
இரவு நேரப் பயணம் மட்டும் இருக்கிற பட்சத்தில், அவரவர் இருக்கையே பிரதானமாக உள்ளது. மனிதர்கள் இருட்டைப் பார்க்க விரும்பவதில்லை. பெரும்பாலானோர் என்னிடம் சற்று சன்னலை அடைத்து விடுங்கள் என்று கூறிப் பார்த்திருக்கிறேன்.
ஆனால் எனக்கு இருட்டும், நிலவு வெளிச்சத்தில் இயற்கையை ரசிப்பது என்பதும் ரொம்பப் பிடிக்கும். இருட்டையும், தூரத்தில் தெரியும் மின் விளக்கையும் ரசித்திருக்கிறீர்களா? ரயில் ஆற்றைக் கடப்பதை நடு இரவில் கண்டிருக்கிறீர்களா? நீரின் மெல்லிய நடனமும், நடனத்தின் போது மின்னுவது போல வெளிர் நிறம் தோன்றுவதும் , மறைவதையும் பார்த்திருக்கிறீர்களா? வயல் வெளிகளில் மின்மினிப் பூச்சி தன்னை அடையாள படுத்த முயல்வதை கவனித்திருக்கிறீர்களா?
இரவு நேரத்தில் நகரங்களை கடக்கும் போதும் ரயிலின் வேகம் குறைகிறது. வயதானவர் ஒருவர் நம்மிடம், தம்பி எந்த ஊரு வந்திருக்கிறது என்கிறார். விடை கிடைத்த மாத்திரத்திலேயே கண்களை மூடிக் கொள்கிறார். நகரத்தைக் கடக்கையில் ஆங்காங்கே தென்படுகிற கட்டிடங்கள் முதுகையும், முன் உடம்பையும் காண்பித்த வண்ணம் உள்ளன. கட்டிடங்களில் எரியும் மின் விளக்குகள் சன்னல் திறந்த வீடுகளில், வெளியைப் பார்க்கின்றன. ரயில் பயணிக்கிற பாதையில் தென்படுகிற நகரத்தின் இரு புறங்களிலும் உயர்ந்த கட்டிடங்களும், சேரிக் குடிசைகளும் இல்லாத ஊர்களைக் கண்டதில்லை. தூரத்திலும் அருகிலும் தெரியும் விளம்பரப் பலகைகள் பகலைக் காட்டிலும், இரவு வெளிச்சத்தில் ஆடை கழற்றிய கவர்ச்சிக் கன்னியாய் தோற்றமளிக்கின்றன.
எல்லோரும் தூங்கி வழிகிற வேலையில் என்னோடு இரவில் பயணப்பட்ட நிலவு எத்தனை அழகானது. காவிரி ஆறு சலனமில்லாமல் ஓடுகிறது. குகைகளைக் கடக்கும் போது மனதில் தன்னையும் அறியாது ஏற்பட்ட பயம், மலை மீது இருக்கிற வீடுகள், கடந்து செல்கிற மரங்கள் என எல்லாமும் இரவுப் பயணத்தைக் கண்ணுக்குள்ளேயே வைத்துள்ளது.
எதிராக தூங்கிக் கொண்டிருக்கிற நபர் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிற யாரையாவது பாருங்கள். அப்போதுதான் அவரின் அழகு நமக்குப் புரிகிறது. லேசாக உலைந்த தலை, சரிந்து படுத்த, சற்றே காலைக் குறுக்கி, ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போல தூங்குகிற நபர் அப்போதுதான் அத்தனை அழகாக கண்களுக்குப் படுகிறார். தூக்கம் மட்டுமே உலகத்தை மறந்த நிலைக்கு மனிதனை இட்டுச் செல்கிறது.
ரயில் பயணத்தில் காற்றை ரசித்திருக்கிறீர்களா? காற்று நேரத்திற்குத் தகுந்தாற்போல தன் இயல்பை வெளிப்படுத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா? அதிகாலை விடிந்து கதிரவன் எட்டிப்பார்க்காத ஆறுமணிக்கு, ரயிலில் வாயிற்கதவுப் பக்கம் நின்று இயற்கையை ரசித்திருக்கிறீர்களா? அதிகாலைக் காற்று முகத்தில் மெல்லிய முத்தங்களை இட்டுக் கொண்டே வருகிறது. சட்டைக்குள் செல்கிற காற்று முன்பக்கத்திலிருந்து, சற்று திரும்பும் வேலையில் முதுகையும் சேர்த்தே வருடுகிறது. காற்று நம்மைக் கட்டி அணைப்பதை உணர்ந்து பாருங்கள். மொத்த கேசத்திற்கும் முத்தமிடுகிற காற்று, அத்தனை அழகு. எங்கிருந்தோ வந்த ஆழ்ந்த வாசனை
மூக்கைத் துளைக்கிறது. காற்றை வேறெங்கும் இத்தனை அருகில் அனுபவித்ததில்லை.
காற்று ஒருபுறம் புணர்கிறது. கண்கள் எதிரில் வரும் சிறு கிராமங்களின் அழகைக் கண்டு வியக்கிறது. மழை பொழிந்த கிராமங்களின் குட்டைகள் நம்மைக் கடந்து செல்கின்றன. இரவு நல்ல மழை போல, என்றெண்ணி முடிப்பதற்குள் வெட்டையான ஈரம் படாத பூமி வந்து தொலைக்கிறது. புற்களின் மீது இருந்த பனித் துளிகளும், நெல் வயல்களும் கண்களைக் கொள்ளை கொள்கின்றன. வேகமாக பின் நோக்கிச் செல்லும் மரங்கள், எதிரில் கடந்து செல்கிற ரயிலைப் பார்ப்பதில் இருக்கிற ஆர்வம் என எல்லாமும் மனதிற்குள் புதைந்து கிடக்கின்றன.
கதிரவன் உச்சிக்கு வர, மெல்ல எதிரில் இருப்பவர்களைப் பற்றிய குசலம் விசாரிப்புகள், புத்தகம் படிப்பது, விற்க வருபவர்களிடம் பசிக்கிறதோ இல்லையோ எதையாவது வாங்கித் தின்பது, வெறுப்பை உமிழ்கிற காற்றை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது, படுத்து உறங்குவதும், எழுந்து ரயில் எங்கு செல்கிறது என்பதைப் பார்ப்பதுமாக பயணப் படுகிறோம்.
ஒவ்வொரு நகரங்களைக் கடக்கிற போது அந்த நகரத்தின் சிறப்பை அறிய எப்போதாவது முற்பட்டிருக்கிறோமா? ஒருவேளை எப்போதாவதுதானே பயணப்படுகிறோம் என்ற எண்ணம் அதைத் தடுத்திருக்கிறதா? அதிகம் பயணப்பட்டதால் எந்த ஊரில் எது சிறப்பு என்பதையும், இந்த ஊர் வரும் போது ரொம்ப ஜாக்கிரதையாக இருந்து கொள், இல்லையேல் செருப்புகள் திருடுபவர்கள், கொண்டு வந்த மூட்டை முடிச்சுகளைத் திருடுபவர்கள் நிறைந்த ஊர் அது என நண்பர்கள் சொல்லியும், நண்பர்களுக்குச் சொல்லியும் அனுபவமுண்டு.
ரயிலில் வருகிற தக்காளி சூப்பை சூடாக சுவைத்துக் கொண்டே பயணிப்பதும், இந்த ஊரில் இந்த உணவு மிக சுவையானது என நண்பர்கள் சொல்லி, அந்த ஊர் வந்ததும் பசிக்கிறதோ இல்லையோ நண்பர்கள் சொன்ன உணவை வாங்கி சுவைத்த அனுபவம், அடிக்கடி ரயிலில் பயணப்படுகிறவர்கள் மட்டுமே உணர்ந்தவைகளாக இருக்கக் கூடும்.
ரயில் பயணத்தின் இயற்கை ரசிப்பை இன்னும் … இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ரயில் பயணத்தில் நான் கண்ட சில சுவாராஸ்யமான சம்பவங்களையும், சில வித்தியாசமான மனிதர்களையும் அடுத்த கட்டுரையில் பகிர்கிறேன். அதுவரை பயணப்படுகிற ரயிலும், எண்ண ஓட்டங்களும் ஓய்வெடுக்கட்டும்.