பாவைக் கூத்து – மறந்து போன மக்கள்

பதினாறாம் நூற்றாண்டுக் காலத்தில் தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலைகள் எட்ட முடியாத உயரத்தில் மிக புகழ் வாய்ந்தவைகளாக இருந்தன. அக்காலக்கட்டத்தில்தான்,  நடன வடிவில் இருந்த கலை, பேச்சு வடிவத்திற்குள் உருவெடுத்தது.
 
இயல் என்பது சொல்வடிவம். இசை என்பது சொற்களோடு, இசையும் சேர்ந்த வடிவம். நாடகம் என்பது சொல், இசையோடு, உடல் அசைவையும் உள்ளடக்கியது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், நாடகம் என்பது தெருக்கூத்தாகவோ, பாவை நாடகங்களாகவோத் தான் நடத்தப்பட்டு வந்துள்ளன. காலம் மாற மாற அவை மேடை நாடகங்களாக உருவெடுக்க ஆரம்பித்தன.
 
இயல் வடிவே, இசை வடிவை பிறப்பித்தது. உடல் அசைவோடு கூடிய நாடகங்கள் கண்ணுக்கு விருந்தாக, உழைத்து, களைத்து வருகிற மக்களுக்கு இரவு பொழுதுபோக்காக இருந்து வந்தது. மக்களை மகிழ்வித்த கலைகளுள் ஒன்றாக பாவைக் கூத்து விளங்கி வந்தது.
 
பாவைக் கூத்து என்பது மான், ஆடு தோல்களினாலோ அல்லது உரத்த அட்டைகளாலோ செய்யப்பட்ட பொம்மைகளைக் கொண்டு, தெள்ளத் தெளிவாக உள்ள எளிதாக தெரியும் வண்ணமுள்ள திரையை உருவாக்கி, திரைக்குப் பின்னால் இருந்து பொம்மைகளைக் கொண்டு கதை சொல்லி மக்களுக்கு பொழுதுபோக்கோடு நல்வழிக் காட்டிய நாடக வடிவிலான ஒரு கலை. இரண்டு பல்புகள் திரைக்கு உள்பக்கம் எறியும். அந்த வெளிச்சத்தில் தான், அட்டைப் பட உருவங்கள் தெரியும். ஒருவர் அட்டைகளை ஆட்டிக் கொண்டே, கதையை சொற்களாகவும், பாடலாகவும் எடுத்தாள்வார்.
 
 
நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் கிராமத்திற்கு ஒவ்வொரு வருடமும் பாவைக் கூத்து குழு வரும். பாவைக் கூத்து குழுவினர் என்றவுடன் பெரிய பணக்கார குழு என்று கருதிவிட வேண்டாம். அவர்கள் வயிற்றுப் பிழைப்பே, இரவு நடத்துகிற இக்கலை மூலமாக வரும் குறைந்த அளவு வருமானமும், மறுநாள் வீடு வீடாக வந்து அரிசி வாங்கியும்தான் வாழ்க்கையை ஓட்டி வந்தனர்.
 
பாவைக் கூத்து பெரும்பாலும் முச்சந்திக்கு அருகில் உள்ள மிகப் பெரிய மைதானத்தில்தான் நடைபெறும். அந்த இடத்தை சுத்தம்  செய்து, சுற்றிலும் கம்புகளை நட்டி, மொத்தமும் மறைக்கும் வண்ணம் வெள்ளைத் துணியால் கட்டிவிட்டு ஒரு திரை அரங்கு போன்று உருவாக்குவார்கள். நபர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வசூலிப்பார்கள். சிறுவர்களுக்கு ஐம்பது காசு வசூலிப்பார்கள். அவர்களே ஏழைகள். ஆனால் அவர்களைக்  காட்டிலும் ஏழைக் குழந்தைகள், பைசா இல்லாமல் அவ்விடத்தைச் சுற்றி சுற்றி வருவார்கள். பாவைக் கூத்து குழுவினர் அவர்களைக் கடைசியாக உள் அனுமதிப்பார்கள். பாவைக் கூத்து நடந்து கொண்டிருக்கும் போது, குழுவில் உள்ள சிறுமியோ, சிறுவனோ தட்டேந்தி வருவார்கள். ஒவ்வொருவரும் அவர்களால் ஆன பணத்தைப் போடுவார்கள்.
 
  பாவைக்கூத்து பத்து முதல் பன்னிரண்டு நாட்கள் வரை நடைபெறும். வருடா வருடம், ராமாயணக் கதைகளும், நல்ல தங்காள் மற்றும் ஹரிச்சந்திரா கதைகளும் காண்பிப்பார்கள். அப்போதெல்லாம், பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் படித்து முடித்தால் மட்டுமே வீட்டில் அனுமதிப்பார்கள்.
 
முதல் நாள் தசரத சக்கரவர்த்தியின் ஆட்சியையும், அவரின் வாரிசு பற்றியும் காண்பிப்பார்கள். இரண்டாம் நாள் ராமர் வில் உடைத்து சீதையைக் கைப்பிடிப்பதையும், அடுத்தடுத்த நாட்களில் கைகேயி ராமரிடம் சத்தியம் வாங்கி வனவாசம்,  ஜடாயு கதை, சூர்ப்பனகையின் மூக்கை லக்ஷ்மணன் அறுத்த கதை,வாலி வதை, தாடகையை ராமன் வீழ்த்திய கதை, ராவணன் சீதையைக் கடத்தும் நாள், ஹனுமான் வாலை வைத்து வித்தை காட்டுதலையும், ஹனுமான் சஞ்சீவி மலையைப் புடுங்கும் காட்சிகள், கும்பகர்ணன், ராவணன் கதைகளையும், ராம ராவண போர்க்களத்தையும் ஒவ்வொரு நாளாக காண்பிப்பார்கள். இறுதி நாளில் இராமருக்கான பட்டாபிசேகம் நடைபெறும். பட்டாபிசேகம் மட்டும் மூன்று நாட்கள் காண்பிப்பார்கள். பட்டாபிசேகத்தன்று, கூட்டம் அலை மோதும்.  இடையில் ஒருநாள் நல்லதங்காள் கதையை, நல்லதங்காள் ஏழு குழந்தைகளையும் கிணற்றில் போட்டு அவள் விழுகிற கதையைக் காண்பிப்பார்கள்.
 
உளுவத்தலையன் உச்சிக் குடும்பன் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா? உளுவத்தலையன், எதற்கெடுத்தாலும் பாம் போடுவதையும், உச்சிக்குடும்பன், கவுண்டமணி செந்திலை அடிப்பது போல, உளுவத்தலையனை அடிக்கும் போது குழந்தை முதல் ஒட்டு மொத்த ஊரும் கொல்லென சிரித்து ரசிக்கும். அவர்களின் காமெடிக்காகவே சிறுவர்கள் விழித்திருப்பார்கள்.
 
ஒவ்வொரு நாளும், மாட்டு வண்டி போன்ற சிறு வண்டியில், மிகப் பெரிய போஸ்டரை ஒட்டி ஊர் முழுக்க வலம் வருவார்கள். கூடவே  நீண்ட குழாயுடைய ஸ்பீக்கர் கொண்டு அறிவித்துக் கொண்டும், ஒரு மேளத்தை வைத்து உரக்க அடித்து அனைவருக்கும் தெரிகிற வண்ணத்தில் விளம்பரப்படுத்துவார்கள். அவர்களோடு கிராமத்து சிறுவர்கள் வலம் வருவார்கள். சில நாட்களில் கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க மறு ஒளிபரப்பு செய்வார்கள்.
 
இன்று இந்தக் கலைகள் அழிந்து போனதை நினைத்தால் மனம் வலிக்கிறது. தொல்லைக்காட்சி(பிழையில்லை) என்று வந்ததோ, மெல்ல மெல்ல தெருக் கலைகள் அழிந்து போயின. மனிதர்களோடு மனிதர்கள் ஒன்றாக பொதுவிடத்தில் அமர்ந்து மகிழ்ந்த காலங்கள் போய், வீட்டுக்குள் வெறும் 32 இன்ச் திரை முன்பு மனிதன் வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் உள்ள மனைவி சொல்லையோ, பிள்ளைகள் சொல்வதையோ கேட்க விரும்பாதவனாய்  தொலைக்காட்சி பெட்டிக்குள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
 
எது மிகச் சிறந்த கலாச்சாரம்? பழமை வாய்ந்த கலைகளை அழிய விடாமல் பார்த்துக் கொண்டே, நாகரிகத்தை அரவணைத்துக் கொண்டு செல்வதுதானே மிகச் சிறந்த கலாச்சாரமாக இருக்க முடியும். அதை விடுத்து புதுமையை மட்டும் எடுத்துச் செல்கிற ஒரு சமூகம், எமது  கலாச்சாரமே மிகச் சிறந்த கலாச்சாரம் என்று எப்படி தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியும்? உறவுகளோடு வாழ்ந்த மனிதர்கள்,  பொருட்களோடு எப்போது நெருக்கம் கொண்டார்களோ அப்போதிருந்துதான் தெருக் கலைகள் அழிந்து போக ஆரம்பித்தது.  ஏழைகள், நம்மை மகிழ்வித்த கலைகள்தான் மண்ணோடு மண்ணாக போய்க் கொண்டிருக்கின்றன. நல்ல வேலையாக பரதநாட்டியம் போன்ற சில கலைகள் உயர் வகுப்பினரால், பணக்காரர்களால் பராமரிக்கப்பட்ட கலைகளே எஞ்சி நிற்கின்றன.
 
நான் பார்த்த ரெகார்ட் டான்ஸ் இன்று அரை குறை ஆடைகளுடன் இன்னிசைக் கச்சேரிகளோடும், தனிக் கச்சேரிகளாகவும்  உருவெடுத்துள்ளன. மண்ணில் கால் பதித்தாடிய கலைகள் மண்ணோடு மண்ணாக மங்கிப் போவதற்கும், மேடையில் ஆடிய நடனங்கள் மட்டும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. கலைகளின் வடிவம் மாறுவதில் ஆட்சேபனையில்லை.
 
அழிந்து போன இம்மாதிரியான கலைகள், நூலகங்களின்  நோட்டுப் புத்தகங்களிலும், மியுசியத்திலும்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. என்னவென்று சொல்வது?
 
பின்குறிப்பு:
இக்கட்டுரைக்கு அப்பாற்பட்டதெனினும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு இன்று நினைத்தாலும் நெஞ்சு கனக்கிறது. பகிர ஆசைப்பட்டதாலே குறிப்பிடுகிறேன்.
 
எங்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்த அக்குழுவினர் சர்க்கசும் காண்பிப்பார்கள். மெல்லிய கயிற்றில் நடப்பதும், வளைந்து நெளிந்த ஒருவனின் மீது ஒவ்வொருவராக ஏறி நிற்பதும், சோடா பாட்டிலை ஒரு ஆள் உயரம் வைத்து அதன்  மேல் ஒரு சிறுமி ஏறி வளைந்து நின்ற சாகசக் காட்சிகளை அரங்கேற்றுவார்கள். ஒருவருடம் எங்கள் ஊருக்கு வந்த அக்குழுவில் பாட்டில் மீது ஏறி சாகசம் செய்த அழகிய அந்த குட்டிப்பெண், பக்கத்துக் கிராமத்தில் செய்தபோது சிறிது இடறி, பாட்டில்கள் குத்தி இறந்த போனாள். அச்செய்தி அறிந்த ஒட்டுமொத்த கிராமமும் கதறி அழுத காட்சிகள் இன்று நினைத்தாலும் சுளீரென்று அடிக்கிறது. ஏனோ பாவைக்கூத்து நினைக்கும் போதெல்லாம், அச்சிறுமியின் இறப்பும் மன ஓட்டத்தில் வந்து விழுகிறது.

3 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s