மாலைக் கறுக்கும் நேரம்தான், நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை நோக்கி பயணப்பட ஆரம்பித்திருந்தது. எனக்கு எதிரே முகத்திற்கு மெல்லிய வர்ணம் பூசிய 19 வயது வண்ணக்குயில் ஒன்று தன் தாய் தந்தையுடன் அமர்ந்திருந்தாள்.
ரயில் நகர எல்லையைத் தாண்டிய வேலையில், அவள் தந்தைதான் என்னிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார். தம்பி, தமிழா என்றார். ஆமாங்க என்றேன். என் பெயரைக் கேட்க, அகிலன் என்றேன். என்ன பண்ணுறீங்க என்றார். நான் எலெக்ட்ரிகல் எஞ்சினியர் சார். செர்விசிங் பீல்ட்ல இருக்கேன் என்றேன்.
நான் எலெக்ட்ரிகல் எஞ்சினியர் என்ற அடுத்தகணம், வண்ணக்குயில் நானும் எலெக்ட்ரிகல் தான். வேலை வாய்ப்பெல்லாம், கேர்ள்சுக்கு எப்படிங்க என்றாள். கல்லூரி பேராசிரியர் மற்றும் டிசைன் பீல்ட் தான் பெஸ்ட் என்றேன். அவள் பெயர் கவின் என்றாள். கவின் என்றால் அழகு. அழகிற்கு அழகு என்று பெயர் சூட்டியதால் அவளுக்கு வர்ணனை ஏதும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இரண்டு மணி நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த சாப்பாட்டை, சாப்பிட சொல்லுமளவுக்கு நெருக்கமாக பழகிவிட்டேன்.
எல்லோரும் இரவுப் படுக்கைக்கு சென்றவுடன், மெல்ல அந்த வேலையை செய்ய ஆரம்பித்தேன். ரயில் என்றோ, மற்றவர்கள் இருக்கிறார்கள் என்றோ இதற்கு முன் ஒருமுறையேனும் கவலைப்பட்டதில்லை. போர்வைக்குள்ளிருந்தபடியே, எனது கைகள் மெல்ல செயல்பட துவங்கியது. யாரும் பார்ப்பதற்குள் அந்த வேலையை செய்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாக எனது கைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அவள் பார்த்து விட்டாள். பார்த்தவள், பார்க்காதது போல திரும்பி படுத்துக் கொண்டாள்.
அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தவுடன், எனக்கு என்னவோ போலாகி விட்டது. ச்சே…. நம்மை ரொம்ப கேவலமா நினைச்சிருப்பாளோ என்ற குழப்பத்துடனேயே தூங்கி விட்டேன்.
மறுநாள் காலை. அவளைப் பார்ப்பதற்கே ரொம்ப சங்கோஜமாய் இருந்தது. அவள் பெற்றோர், பல் துலக்க சென்ற போது நானே மெல்ல பேச்சை ஆரம்பித்தேன். என்னை தப்பா எடுத்துக்காதிங்க… எனக்கு உள்ள ஒரே கெட்ட பழக்கம் அதுதான். நான் எப்போ பயணம் செய்தாலும், ரயிலில் எதையாவது எழுதிவைத்து விட்டு, என் பெயரை எழுதிவிடுவேங்க…. அதுல எனக்கு ஒரு நப்பாசைங்க… உங்களுக்கு என் மீது ஏதும் கோபமோ வருத்தமோ இல்லியே என்றேன்.
அட போங்கங்க.. உங்கள் மீது கோபமெல்லாம் இல்லிங்க… நீங்க செய்த செயல்தான்… எனக்கு ரொம்ப வருத்தத்தை தந்தது. பின்ன.. என்னங்க… ஐ லவ் கவின் பை அகிலன் என்று எழுதியிருப்பீங்கன்னு நினைச்சா, ஐ லவ் இந்தியா பை அகிலன்னு எழுதி வச்சிருக்கீங்க…. என்றாள். அவ்வளவுதான்… பின்ன என்ன… எனது முப்பத்தி ரெண்டு பற்களும் தெரியும் வண்ணம் அவள் முன்பாக வழிந்து கொண்டிருந்தேன்.
பின்குறிப்பு: குமுதத்திற்கு அனுப்பினால் வெளிவரும் என்ற நம்பிக்கையில், எப்போதோ நான் எழுதிய கதை. இன்று வரை குமுதத்திற்கு அனுப்பி முயற்சி செய்ததுதான் இல்லை.
ஹா ஹா நன்றாக இருந்த்தது. எப்படியும் தவறாக இருக்காது என்று நினைத்தேன். நான் நினைத்தது தவற வில்லை. அருமையாக இருந்தது
HA HA HA SUPERRRRRRRRRRRRRRRRRRRRRRRR…..