
மே ஒன்றாம் தேதி உழைப்பாளர் தினம் எனக் கூறப்படுகிறது. இதுதான் நாம் அறிந்த செய்தி. இத்தினம்தான் உலக நாடுகள் முழுவதும் ஏற்றுக் கொண்டாடுகின்றனவா? இத்தினம் எவ்வாறு மே ஒன்றாம் தேதியாக மாறியது…. என்பதை அறியும் பொருட்டே இக்கட்டுரை.
இரண்டாவதாக, உழைப்பாளர் தினம் ஏன் ஒரு தொழிற்சாலையோடு பணியாற்றுகிற தொழிலாளிகளுக்காக மட்டுமே கொண்டாடப் படக் கூடிய விழாவாக உருவெடுத்தது. அப்படியானால், விவசாயிகளுக்கான விழா எது? கைவினை பொருட்களை வடிக்கும் குயவர்களுக்கான விழா எது? கடலில் மீன் பிடிக்கும் தொழிலாளிக்கான விழா எது? இன்னும்…இன்னும்…தொழிற்சாலைக் கூடத்தில் பணியாற்றும் தொழிலாளிகளைத் தவிர மற்ற உழைப்பாளிகளுக்கான விழா என்கிற கேள்விக்கான விடை என்ன? இதற்கான காரணங்களை அறியுமுன் உழைப்பாளர் தினம் உருவான வரலாறு அறிவது என்பது அவசியத்திற்குள்ளாகிறது.

அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பினால், மே ஒன்றாம் தேதி 1886 ஆம் ஆண்டு, தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டது. அது ” எட்டு மணி நேர வேலை மட்டுமே ஒரு நாள் தர வேண்டும்” என்பதே. அதுவரையிலும் வாரம் 58 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதுதான் தொழிலாளர்களின் நிலையாக இருந்து வந்தது.
அப்போராட்டத்தில் நான்கு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். சிகாகோவில் உள்ள நாளிதழ் ஒன்று, இப்போராட்டம் குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் “எந்த ஒரு மின் ஆலையின் புகைபோக்கிகளிலிருந்தும், புகையோ மற்றும் ஆலைகளில் இருந்து எந்த ஒலியோ வெளிவரும் சத்தமில்லாமல், ஒரு மௌனமாய்த் தொழிற்சாலைகள் காட்சி அளிக்கின்றன” என்று வெளியிட்டிருந்தது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை, அராஜக வாதிகள் என்றும், அவ்வாறு நடத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப் படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் மிகப் பெரிய இயக்கமாக தொழிலாளர்களை ஒருங்கிணைத்தனர். அந்த நேரத்தில் சிகாகோதான் மிகப் பெரிய தொழிற்சங்கமாக விளங்கியது. அதுதான் “எட்டு மணி நேரப் பணி” என்ற போராட்டத்திக்கு வித்தாக இருந்தது.

மாக் கோர்மிக் கார்வேஷ்டோர் கம்பெனியில் இருந்துதான் முதன்முதலாக 6000 தொழிலாளிகள் போராட்டத்திகு உறுதுணையாக வெளிவந்தனர். தொழிற்சங்கத்தின் பிரதிநிதியான ஆகஸ்ட் ஸ்பீஸ் என்பவர் நிகழ்த்திய உரை, அங்கிருந்த தொழிலாளிகளை மேலும் ஒருங்கிணைத்தது. அவர் பேசிய பேச்சின் சாராம்சம் ” ஒற்றுமையாய் இருப்போம்… எக்காரணம் கொண்டும் முதலாளிகளுக்கோ, முதலாளித்துவத்துக்கோ விலை போக மாட்டோம் ” என்பதே அது.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது திடீரென 200 காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். காவல்துறையினர் எந்தவித முன்னறிவிப்புமின்றி அங்கு கூடி இருந்தவர்களைத் துப்பாகிகளாலும்,தடியடிய்ம் செய்தனர். அந்நிகழ்வில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஐந்து முதல் ஆறு பேர் படுகாயமுற்றனர்.
ஸ்பீஸ் உடன் ஆல்பர்ட் பார்சன்ஸ் மற்றும் பீல்டன் இணைய போராட்டம் இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. பீல்டன் பேசி முடிக்கும் தருவாயில் இரவு பத்து மணியாகும் போது, ஜான் என்ற காவல் அதிகாரி தனது காவலர் கூட்டத்துக்கு ஒரு அறிவுரை வழங்கினார். இவர்களை கலைந்து செல்லச் சொல்லுங்கள். இல்லைஎன்றால் சுட்டு வீழ்த்துங்கள்..
அந்நேரத்தில்தான் ஒரு பாம் காவல்துறையினரின் பகுதியில் விழுந்தது. அது போராட்டக்காரர்களின் சூழ்ச்சி என்று எண்ணிய காவல்துறை சுட ஆரம்பித்தது. அதில் எத்தனை பேர் காயமுற்றார்கள் என்ற தகவலோ எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தகவலோ இதுவரை யாரும் அறியவில்லை.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்களான பீல்டன், ஸ்பீஸ், ஆல்பர்ட் உட்பட எட்டு பேர் நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு உட்பட்டனர். அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரத்தையும் அரசு வக்கீல்களால் நிரூபிக்கப்படமாலேயே அவர்களைத் தூக்கில் இட்டனர். நீதிமன்றத்தில் அவர்கள்தான், குண்டு வீசக் காரணமானவர்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டை வைத்து தண்டனை வழங்கியது பின்னர் தெரிய வந்தது.
இவர்களின் போராட்டத்தின் பின்விளைவாகவே உழைப்பாளர் தினம் மே ஒன்றாம் தேதி கொண்டாப்படுகிறது.
மேற்கூறிய போராட்டத்தின் விளைவாகவே ஐரோப்பா மற்றும் பெரும்பாலான உலக நாடுகள் மே ஒன்றாம் தேதியையும், அமேரிக்கா, கனடா போன்ற நாடுகள் இன்றும் செப்டம்பர் மாதம் முதல் திங்களன்று கொண்டாடி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படியானால், உழைப்பாளர் தினம் என்று தமிழக அரசால், இந்திய அரசால் கொண்டாடப்படும் இந்த நாள் 1927 முதல்தான் வழக்கத்தில் உள்ளது. எதன் அடிப்படையில், நமது அரசுகள் இந்நாளை உழைப்பாளர் தினமாகக் கொண்டாடுகின்றன.

மேற்கத்திய நாடுகளின் தொழிலாளர் குறித்த பார்வைக்கும் நம் தேசத்தின் தொழிலாளர் குறித்த பார்வைக்கும் ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. தொழிலாளிகள் நன்றி சொல்லப் பட வேண்டியவர்கள். அதே வேலையில், முன்னர் நான் குறிப்பிட்டது போல விவசாயிகளுக்கான நாள் எது? கைவினை பொருட்களை வடிக்கும் குயவர்களுக்கான விழா எது? கடலில் மீன் பிடிக்கும் தொழிலாளிக்கான விழா எது?
இது குறித்தப் பார்வையை அரவிந்தன் நீலகண்டன் தனது கட்டுரையில் இவ்வாறாகப் பார்க்கிறார். ” மேற்கத்திய நாடுகளில் தொழில் என்பது ஒரு சாபம். வேறுவழியின்றி மேற்கொள்ளப்படும் ஒரு கடின சூழல். அதிலிருந்து பெறும் விடுப்பே சந்தோஷம். ஏன் இப்படி இருக்கிறது ?
ஏனெனில், மேற்கத்திய இறையியல் தொழில் செய்வதை, உழைப்பதை ஒரு சாபமாகக் கருதுகிறது. மேற்கத்திய இறையியல் காட்டும் சுவர்க்கத்தில் உழைப்பே கிடையாது.
ஆனால், பாரதத்திலோ உழைப்பு என்பது ஒரு படைப்பூக்கச் செயல். இறைவனே ஆதி தொழிலாளிதான். விஸ்வகர்மா எனும் முதல் தொழிலாளி.
தொழில் என்பது இங்கு வழிபாடு. உழைப்பு ஒரு சாதனை. தன் உழைப்பால் உணவு உற்பத்தி செய்து, வியர்வையால் உணவை இங்குள்ளோர் உருவாக்குவர். அங்கனம் உருவாக்கிய உணவை நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல் உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல், பகுத்துண்பதே பண்பாடு. கிராமத்து மனிதர்களைக் கொல்லாமல், பல்லுயிர் ஓம்புதல் மனிதனை வானுறையும் தெய்வத்துள் சேர்க்கும் ஆத்மசாதனை. இந்த வாழ்க்கை முறையின் தொன்ம வடிவுதான் விஸ்வகர்மா.
உழைப்பாளர் தினம் நமக்குப் பழக்கமான கிரிகேரியன் நாட்காட்டியின்படி செப்டம்பர் மாதம் (மே 1 அல்ல) வருகிறது. அதாவது, வானவியல் வளர்த்த விவசாயிகளான நமது மூதாதையர் பின்பற்றிய பஞ்சாங்கத்தின்படி, நமது தொழிலாளர் தினம் கன்யா சங்கிராந்தி அன்று வருகிறது. அதற்கு நம் முன்னோர் இட்ட பெயர்: விஸ்வகர்மா ஜெயந்தி. ” என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால் உழைப்பாளிகள் தினம் என்பது வெறும் எட்டு மணி நேர வேலைக்காகப் போராடிய ஆலைத் தொழிலாளர்களுக்கு மட்டுமே சொந்தமானதென்றால் மே ஒன்றாம் தேதியை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது. நமது நாடு விவசாயம் குறித்த பார்வைக்கு முன் வைக்க வேண்டுமாயின் விஸ்வஹர்மா ஜெயந்தியைத்தானே கொண்டாட வேண்டும்.
மே ஒன்றாம் தேதி ஆலைத் தொழிலாளிகளுக்கான தினம் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய, உழைப்பாளிகளுக்கான நாள் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக் கொள்ள முடியவில்லை. ” கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்தான் தொழிலாளி… விவசாயி…” என்பதை நினைவுபடுத்த விஸ்வஹர்மா ஜெயந்தியே உகந்த நாள்…
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
Different views..different analyse.. Superb article…