நான்காம் எஸ்டேட் – நிதர்சன சிறுகதை

அன்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்தி முழுவதும் ராஜேஸ்வரியின் பெயர் ஆக்கிரமித்திருந்தது. ராஜேஸ்வரி இப்படி ஒரு காரியத்தைச் செய்வாள் என்று அவளது உறவினரோ, தாயோ ஒருநாளும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன்.. ராஜேஸ்வரிக்கும் கூட, தான் ஒரு தலைப்புச் செய்தியாவோம் என்று கனவிலும் நினைத்ததில்லை.
 
ராஜேஸ்வரி தன் வாழ்க்கையை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறாள். ராஜேஸ்வரிக்கு அப்போது வயது பதினாறு. பதின்மூன்று வயதிலேயே வயதுக்கு வந்துவிட்டதால் அவள் உடல் வாளிப்பாக இருந்தது. அவளது நீண்ட கூந்தலும், பின்புற அழகும் பார்ப்பவர்களை குறுகுறுவெனப் பார்க்கத் தூண்டும். அவளின் பின்புற அழகை பார்த்தவன் அவள் முன்புறம் கண்ட போது மொத்தமுமாய் தன்னை இழந்து விட்டிருப்பான்.
அளவாய்த் தைத்தெடுக்கப் பட்ட ரவிக்கை, அவளின் அழகை மேலும் தூக்கிக் காண்பித்துக் கொண்டிருக்கும்.
 
அவள் பின்னால் சுற்றிய ஆண் பிள்ளைகள் ஏராளம். தன் அழகை நினைத்தால் அவளுக்கே அத்தனைப் பொறாமை. கண்ணாடி முன்பாக நின்றுகொண்டு தன் அழகைக் கண்டு அவளே வியந்த நாட்கள் உண்டு. யாருக்குத் தான், தான் அழகாக இருந்தால் கர்வம் இருக்காது. அழகோடு காண்பவர்களை சுண்டி இழுக்கும் உடல் வாளிப்பும் ஒருங்கே அமைந்திருந்ததால் அந்த ஊருக்கே அழகு ராணியாய்க் காட்சி அளித்தாள். அந்த பேரழகுதான் தன்னை, சமூகத்தின் வேடிக்கைப் பொருளாக மாற்றும் என்று கனவில் கூட அவள் நினைத்திருக்க மாட்டாள்.
 
எழ்மையாய்  பிறந்ததால் அவள் வீட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்ட பிறகுதான் அத்தனைக் கன்றாவிகளும் நடந்தேறி இருக்கின்றன. ஏழ்மையை ஆயுதமாகப் பயன்படுத்தி அவளின் உடலை விலை பேசிய புண்ணியவான்களைப் பற்றிக் காவல் துறையில் புகார்கள் அளித்த போது, தங்கள் பணத்தையும் சமூக அந்தஸ்த்தையும் கொண்டு வெளியில் நல்லவர்களாக உலவிக் கொண்டிருந்தவர்களை கொலை செய்ததில் அவளுக்குத் துளியும் வருத்தமில்லை. கணவர்களைக் காப்பாற்ற துணை போன மனைவிகளை நினைத்தால் அவர்களெல்லாம் பெண்களா என்று கம்பி வலைகளுக்குள் எண்ணிக் கொண்டிருந்தவளை, காவலர் அவளைத் தன் நிலைக்கு அழைத்து வருகிறார். ஏம்மா… உன்னை உங்க மாமன், வக்கீலை வைத்து ஜாமீனில் எடுக்க வந்திருக்கிறார் என்றார்.
 
ஜாமீனில் வெளிவந்தவள் அவள் குறித்த செய்திகளை தினசரி பத்திரிக்கைகளிலும், வார இதழ்களிலும் கண்டபோது அதிர்ச்சியுறுகிறாள். ஆனால் அவளைத் தவிர ஒட்டு மொத்த சமூகமும் அவள் செய்தியைக் கண்டு மகிழ, தவம் கொள்கிறது. வால் பேப்பரில் அவள் பெயரில் ஆபாசத் தலைப்போடு நாளிதழ்கள் வெளியிட, நாம் ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறோம். மனிதர்கள் தனக்கு அது ஏற்பட்டாலோ, தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு ஏற்பட்டால் மட்டுமே அதிக வருத்தம் கொள்கிறார்கள். அது எங்கோ, யாருக்கோ இழைக்கப்பட்ட அநியாயம் என்று வரும் போது, அதை ஒரு செய்தியாகப் படிப்பதோடு மறந்து போகிறோம்.
 
நம்மைப் பற்றிச் சொல்வதானால், தினசரி செய்திகளை சுவாராஸ்யமாக படிக்கிறோம். அலுவலகங்களில் உணவு இடைவேளையின் போது அது குறித்து பேசுகிறோம். அடுத்த நாள் அதைவிட கவர்ச்சியான செய்தி வந்துவிட்டால் அதைப்பற்றிப் பேசுகிறோம். பத்திரிக்கைகள் பெரும்பாலும் கொலை, கொள்ளை செய்திகளை வெளிவிடும் போது அது நம்மை எளிதாக ஆக்கிரமித்து விடுகிறது. உள்ளூர வன்மத்தை நாம் ஆராதரிக்கிறோமோ?
 
ராஜேஸ்வரி கதறி அழுதுகொண்டு சொன்ன வார்த்தைகள் பத்திரிக்கைகளால், ஆபாசக் கதை போல வெளியிடப்பட்டிருந்தது. பத்திரிக்கை  தர்மம் என்ற பெயரில், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற ஒற்றை வார்த்தையைத் தவிர, பத்திரிக்கைகள் வெளியிடுகிற செய்திகளில் வார்த்தை ஜாலங்களால் எப்படி அதைக் கவர்ச்சி செய்தியாக வெளியிட முடியும் என்பதில் குறியாக இருப்பதை வாசிக்கிற எவராலும் உணர முடிகிறது.
 
இல்லையெனில், ஒரு விபத்தைப் பற்றிய செய்திக்குக் கூட பல படங்களை வெளியிட்டு படிப்பவர்களின் மனதைப் பதைபதைக்கச் செய்யும் உன்னத வேலையை பத்திரிக்கைகள் செய்து வருகின்றனவே…ரத்தக்கறையோ, கொலை, கொள்ளை இல்லாத செய்திகளான பத்திரிக்கைகளை நீங்கள் இன்று பார்க்கக் கூடுமோ?
 
ராஜேஸ்வரி செய்த கொலை குறித்த செய்தியும் அன்றைய அனைத்து நாளிதழ்களிலும் இவ்வாறாகத்தான் வந்திருந்தது.
 
 ” 22 வயதான இளம்பெண்  லக்ஷ்மி( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), நான்கு ஆண் காமுகர்களை வன்மமான முறையில் கொலை செய்துள்ளாள். மூன்று முறை கொலை செய்த போது, காவல் துறையினரின் கண்காணிப்பு எல்லைக்குள் சிக்காமல் இருந்தவள் இன்று கைது….
 
அவள் கொலை செய்தவர்களின் பெயர்  விபரம், கண்ணன் (வயது 42 ), முருகன் (வயது 57 ), கார்த்திக் (வயது 27 ), ராஜு (வயது 50 ) .  நால்வரில் கார்த்திக்கை கொலை செய்ததை வைத்தே காவல்துறை அவளைக் கைது செய்துள்ளது.  ஆரம்பத்தில் காதல் தோல்வி என்ற கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்த காவல்துறைக்கு அவளின் நான்கு கொலைகள் குறித்த செய்தி ஆச்சர்யத்தைத் தந்தது. அவள் வேலை செய்த வீட்டின் முதலாளிகளே அவர்கள் என்பது காவல் துறையின் புலன் விசாரணையில் மேலும் தெரிய வந்துள்ளது. ஒவ்வொருவரும் எந்த சூழலைப் பயன்படுத்தி அவள் உடலை ஆராதரித்திருந்தனர் என்பதைத் தங்கள் கற்பனையில் விலாவாரியாக வாசிப்பவர்களுக்கு கிளுகிளுப்பூட்டும் விடத்தில் எழுதி வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.”
 
 கொலை செய்தவள் கொலைசெய்ததற்கான சமூக காரணங்களை பற்றிய எந்தக் கட்டுரையையும் இதுநாள் வரை வெளியிடாத பத்திரிக்கைகள்,
லக்ஷ்மி அனுபவித்த பாலியல் சித்திரவதைகளை 
தொடர் கதையாக மாற்றி
 தங்களது வார இதழ்களில் சம்பாதித்து கொண்டிருந்தன.
 
தான் இன்று பத்திரிக்கை முன்பும் சமூகம் முன்பும் ஒரு விளம்பரப் பொருளாக மாறி நிற்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. உங்களுக்கு இன்னொரு சூடான செய்தி தருகிறேன் என்று அழைத்தவள் சொன்ன செய்தியை மட்டும் எந்த பத்திரிக்கையும் ஒரு பெட்டிச் செய்தியாக கூட வெளியிடாமல் பத்திரிக்கை ஒற்றுமையை பறைசாற்றிக்கொண்டன.
 
” நான்காம் எஸ்டேட் ” என்று நீங்கள் உங்களை சொல்லிக் கொள்ளும் அருகதையை இழந்து நாட்கள் பல ஆகி விட்டன என்ற செய்திதான் அது.  
 
 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s