வித்தியாசமான பேராசிரியர்

கல்லூரிகளும் பள்ளிக்கூடங்களும் பெற்றோரையும் மாணவர்களையும் ஒரு மிரட்டும் கருவியாக இருக்கின்ற காலக்கட்டம் இது. நமது கல்விமுறை result Oriented ஆக மாறிய பிறகு, கல்லூரிகளும் பள்ளிகளும் ஒழுக்கத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டன. அதிலும் பெயர் வாங்கின கல்லூரிகளும் பள்ளிகளும் ( பெயர் வாங்கிய கல்லூரி  என்பது  எல்லோரையும் பாஸ் செய்ய வைத்த கல்லூரிகள், அதிக அளவு placement ஏற்படுத்திக் கொடுத்த கல்லூரிகள்! ). அம்மாதிரியான ஒரு கல்லூரியில் படித்த போது, அத்தனைப் பேராசிரியரும் பாடத்தை மட்டும் சொல்லித் தந்த போது, வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தந்த பேராசிரியர் அவர்.
 
நான் கல்லூரியில் படிக்கும் போது Electric circuit theory எடுத்த பேராசிரியர் ரொம்பவே வித்தியாசமானவர். அப்போதெல்லாம் கல்லூரியில் நடைபெறும் இடைத் தேர்வுகளில்  யாராவது இரு பாடங்களுக்கு மேல் தேர்ச்சி பெறாமல் இருந்திருந்தால், அந்த மாணவன் கல்லூரிக்கு பெற்றோரைக் கூப்பிட்டு வரவேண்டும். மாணவனும், மாணவனின் தந்தையும் நின்று கொண்டிருப்பர்.
 
Conference Room ல் உள்ள இருக்கைகளில் முதல்வர் உட்பட அனைத்துத் துறைத் தலைவர்களும் அமர்ந்திருப்பார்கள்.  அவ்வாறு வருகின்ற மாணவனின் தந்தையை நிற்க வைத்து, கல்லூரியின் முதல்வர், அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பெயிலான பாடத்தின் பேராசிரியர் உட்பட அனைவரும் சொல்கிற கூட்டான கருத்து ” இதே மாதிரி இருந்தால் இந்த வருடம் போர்டு எக்ஸாம் எல்லாம் எழுதவிட முடியாது. உங்க பையனடோ TC ஐ வாங்கி விட்டு போக வேண்டியதுதான்” என்று மிரட்டுவது தான் அந்த மிகப்பெரிய கல்லூரியின் அதிபுத்திசாலிகள் உதிர்க்கும் உன்னத வார்த்தைகள்!
 
 ஒருமுறை அவர் வகுப்பறையில் இருந்த போது, ஒரு நண்பனின் தந்தை இதன் பொருட்டு கல்லூரியின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். ஆபீஸ் பாய் வந்து அழைத்துச் சென்றார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள் ” என்னய்யா … இது… பெரிய காலேஜ் …பெரிய காலேஜ் ன்னு சொல்றாங்க… TC ஐக் கொடுத்து அனுப்பவா…யா… “. ” அந்த பையன் விடுதியில இருந்து தங்கிப் படிக்கான்… அந்த பையனோட அப்பாகிட்ட போய் உங்க பையன் நல்லா படிக்கலன்னா, TC ஐ கொடுத்துடுவோம்னு சொல்றதுக்காயா… காலேஜ் இருக்கு.. என்ன பண்ணனும் … எப்படி இருக்கணும்.
 
எனக்கும் அந்த பையனோட அப்பாவை வரவழைப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. actual – ஆ  அந்த பையனோட அப்பா உட்கார்ந்திருக்கனும். முதல்வரும் , துறைத்தலைவர்களும் நிக்கணும்!. ” அந்த பையனோட அப்பா கேட்கணும். “ஏன்யா… எம்பையன் +2 ல, 1100 மார்க்குக்கு மேல வாங்கியவன்…  உங்க விடுதியல தானய்யா தங்கிப் படிக்கான். பின்ன எப்படியா… ரெண்டு பாடத்தில பெயிலானான்…ன்னு கேட்கணும்”.  முதல்வர் துறைத் தலைவரையும், துறைத்தலைவர் விடுதி காப்பாளரிடத்தும், சம்பந்தப் பட்ட பேராசிரியரையும் பார்க்கணும். அவர்கள் சரியான விளக்கத்தைக் கொடுக்கணும். அப்புறம் அந்த மாணவன்கிட்ட அன்பா .. பேசி அவனால ஏன் இப்ப.. படிக்க முடியலங்கிறதையோ, ஏன் படிப்பில விருப்பமில்லங்கிறதையோ கேட்கணும். அதை விட்டுட்டு ஆ…ஊன்னா… போர்டு எக்ஸாம் எழுத விடமாட்டோம்னு மிரட்டிகிட்டு, பாசாகிற மாணவர்களை வைத்து தேர்ச்சி பெற செய்வதில் என்னய்யா… பெருமை வேண்டி கிடக்குது. இதுல பெத்த காலேஜ்- ன்னு பெருமை பீத்திறதில என்னய்யா இருக்கு”… என்றார்.
 
இது ஒரு அனுபவம். அவர் போன்ற பேராசிரியரை நீங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கிறீர்களா? அவர் வித்தியாசமானவர் என்று சொல்வதற்கு இன்னொரு நிகழ்ச்சியும் இருக்கிறது.
 
கல்லூரியில் நடக்கும் “மிட் டெர்ம் எக்ஸாம் ”  drawing hall லில் வைத்துத் தான் நடக்கும். ஒரு desk – குக் பின்னால் mechanical ஸ்டுடென்ட் அல்லது electronics ஸ்டுடென்ட் இருப்பார்கள். தேர்வு மூன்று மணி நேரம்( 9  to 12 ) வரை நடக்கும். மணி 9 ஆனவுடன் மற்ற துறை மாணவர்கள்,  எழுத ஆரம்பித்து விடுவார்கள். Electrical students  மட்டும் இவரது தேர்வு நாளில் 9 மணிக்கு வினாத்தாளை மட்டும் வைத்திருப்போம். பேராசிரியர்தான் வித்தியாசமானவராயிற்றே!.
 
தேர்வு ஆரம்பிக்க இரண்டு நாட்களுக்கு முன்னால் இதுகுறித்த தனது பார்வையை இவ்வாறாக விளக்கி இருந்தார். ” எக்ஸாம் ஹாலில் 9 மணிக்கு வினாத்தாள் மட்டும் தரப்படும். ஒவ்வொருத்தரும், எந்தெந்த கேள்விக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அதற்குத் தகுந்தாற்போல மதிப்பெண் கொடுங்கள். நீங்கள் அவ்வினாவிற்கான மதிப்பெண்ணை கேள்விக்கு அருகாமையில் குறிக்கவும். எந்த கேள்விக்கு, பதில் தெரியாமல் முட்டை மார்க் போட்டிருக்கிறீர்களோ , அதற்குப் பிறகு அவ்வினாவிற்கான விடை எக்காரணம் கொண்டும் விடைத்தாளில் வரக்கூடாது. விடை எழுத விடைத்தாள்கள் 9 : 20 குத்  தரப்படும். சரியாகப் 11 : 40 மணிக்கு வருவேன். Additional  sheets ஐ நூல் வைத்துக் கட்டும் போது, உங்களின் மதிப்பெண் போடப்பட்ட  கேள்வித்தாளையும் விடைத்தாளின் கடைசிப் பக்கத்தில் வைத்துக் கட்ட வேண்டும். இரண்டரை மணிக்கு மேல எழுதுவதெல்லாம் கதைதான்… அதனால இந்த நேரமே தேர்வு எழுத போதுமானது” என்று சொல்லி விட்டார்.
 
எங்களுடைய  பதிலுக்கு நாங்களே மதிப்பெண்கள் போட்டு எழுதிவிட்டோம். பேராசிரியர் தனது வித்தியாசமான நடவடிக்கைகளை மட்டும் விடுவதாக  இல்லை. அத்தனைக் கேள்வித் தாள்களையும் எங்கள் கண்முன்னாலேயே  இரண்டு நாட்கள் வகுப்பறையில் வைத்துத் திருத்தினார்.
 
பிறகுதான் கூத்து ஆரம்பித்தது. முதலில், முதல் மதிப்பெண் எடுத்த மாணவனை அழைத்தார். அவனுக்கு விழுந்த திட்டு இருக்கிறதே… அதை வாழ்நாள் முழுக்க வகுப்பறையில் இருந்த ஒருவனும் மறக்க மாட்டான். முதல் மதிப்பெண் பெற்ற மாணவன், அவனுக்கு அவன் போட்ட மதிப்பெண்கள் 80 . பெற்ற மதிப்பெண்கள் 89 . அதுதான் பேராசிரியரின் கடும் கோபத்திற்குக் காரணம்.  என்னய்யா… உன்னையே உனக்கு evaluate பண்ணத் தெரியல… நீ இப்படி உன்னைப் பற்றி inferiority complex – ஓட இருந்தால் எப்படியா… பிற்காலத்தில sign பண்ணுவ…  எதிர்காலத்தில எந்த வேலை பார்த்தாலும்,  நீ செய்கிற வேலை மேல, உனக்கு  எப்படியய்யா நம்பிக்கை வரும். You must change your character.. என்று திட்டித் தீர்த்து விட்டார்.
 
அடுத்து ஒரு மாணவனை எழுப்பினார். அவன் பெற்ற மதிப்பெண்கள் 48 . பேராசிரியர் இட்ட மதிப்பெண்களும் 48 . அவனை ஆகோ… ஓகோ…வென்று புகழ்ந்துத் தள்ளினார். யோவ்… நீ நல்லா வருவய்யா… உன்னோட anticipation mark is  48 .  நீ வாங்கி இருக்கிறதும் 48 . யாரெல்லாம், நான் போட்ட மதிபெண்ணில் இருந்து 2 , 3 மார்க் முன்ன பின்ன வாங்கி இருக்கீங்களோ அவங்க எல்லாம் உட்காருங்கப்பா… ஏன்னா.. உங்களுக்கு உங்க தரமும், நீங்கள் என்ன நிலையில் இருக்கீங்க என்பது தெரியுது. நீங்க எப்படி எதிர்காலத்துல உங்களை வளர்த்துக்கணும்னு தெரியும். வாழ்த்துக்கள் என்றார். நான் போடுற மார்க்கும் நீ போட்டிருக்கிற மார்க்கும் ஒண்ணா இருக்கணும்னு அவசியமில்ல… சற்று வித்தியாசம் இருக்கலாம். என்றார்.
 
 ஆனால் யாரெல்லாம் அதிக வித்தியாசத்தில் பேராசிரியர் போட்ட மதிப்பெண்ணைக் காட்டிலும் ரொம்ப அதிகமாகவோ, ரொம்பக் குறைவாகவோ போட்டிருந்தார்களோ அவர்களுக்கெல்லாம் அன்று அர்ச்சனை நடந்தது.  
 
பேராசிரியர் வாயிலாக நாங்கள் பெற்ற அனுபவம் ஏராளம். பெருமளவு நேரம், நம் கல்வி முறையை திட்டிக் கொண்டே இருப்பார். என்னய்யா… போர்டு எக்சாமுக்குத் திருத்தப் போனா…  30 க்கும் – 35 க்கும் இடையில் இருந்தால், ஒன்னு  29  குக் குறைவாகப் போடுன்கிறான். அல்லது 40 போட்டு பாஸ் பண்ணி வைன்னு சொல்றான். ஏன்…37 மார்க் வாங்கி பெயிலானா இப்ப என்னன்கிறேன்… பல நேரங்களில் நம்மைத் திட்டுவதை விட்டு விடுவார். நமக்குப் பாடம் கற்றுக் கொடுத்த முறையையும், மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆசிரியர்களையும், பெற்றோரையும் திட்டிக் கொண்டிருப்பார்.
 
வித்தியாசமான மனிதர்கள் நம் நெஞ்சங்களில் நிறைந்து விடுகிறார்கள். வித்தியாசமான மனிதர்களோடு இருக்கிற வரையிலும் அவர்கள் கோமாளிகளாகவோ, கிண்டலை எதிர் கொள்பவர்களாகவோ, அதிக விமர்சனத்துக்குரியவர்களாகவோ, கேள்விப் பொருளாகவோ தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை விட்டு நெடுந்தூரம் விலகிய பின், நம் உரையாடல்களில் பெரும்பாலும் அவர்களே நிலை பெற்றிருக்கிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களை நாம் வாழ்நாளில் ஒருபோதும் மறப்பதில்லை. சிந்தித்துப் பார்த்தால், அதில் உள்ள உண்மை புரியும்.
 
வித்தியாசமான மனிதர்கள் நல்வழிக்காட்டினாலும் சரி, அவர்கள் வித்தியாசமாய் மற்றவர்களில் இருந்து வேறுபட்டு நின்று, சமூகம் ஏற்றுக் கொள்ளாத வழிமுறைகளைப் பின்பற்றினாலும் சரி, அவர்களை நாம் எளிதில் மறந்து விடுவதில்லை. படித்த காலத்தில், அவரைப் பற்றி பல கிண்டல் வசனங்கள் உதிர்த்தோம். ஆனால் அவரைப் பற்றி நண்பர்களைக்  காணும் போது இன்று நினைவு கூர்கிறோம். அவரின் பார்வையில் இருந்த உண்மையையும் சேர்த்துத் தான்! பேராசிரியரின் பெயர் பிச்சுமணி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s