சரியும் ரூபாய்: பாதிப்புகளும் நன்மைகளும்

ஆழம் ஜூன் மாத இதழில் நான் எழுதிய “சரியும் ரூபாயும்: பாதிப்புகளும் நன்மைகளும்” கட்டுரையின் முழுவடிவம் அனைவரின் பார்வைக்காகவும் படைக்கப்படுகிறது.
 
 
ஆழம் இதழில் வெளிவர பேருதவி புரிந்த பொறுப்பாசிரியர் திரு. மருதன் அவர்களுக்கும், பதிப்பாசிரியர் திரு பத்ரிநாத் அவர்களுக்கும், மற்றும்  ஆழம் இதழின் ஆசிரியர் குழுவிற்கும், ஏனையோருக்கும் எனது நன்றிகள் பல……
 
 
 
ஆழம் இதழில் சுருக்கப்பட்ட வடிவத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதன் முழு வடிவம் இதோ:
 
 

இக்கட்டுரை எழுதப்படும் இந்நேரத்தில் ஒரு டாலரின் மதிப்பு  Rs 55 .55 . கடந்த ஆண்டு ஜூலை திங்களில் ஒரு டாலருக்கு 44 ஆக  இருந்த ரூபாயின் மதிப்பு இன்று 55 .55 ஆக சரசரவென சரிந்து விட்டுள்ளது. பலமுறை பணத்தின் மதிப்பு டாலரோடு ஒப்பிடுகையில் ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் இருந்துள்ளது யாவரும் அறிந்ததே! ஆனால் இம்முறை பணத்தின் மதிப்பு இந்த அளவு வீழ்ச்சி அடைந்திருப்பது தற்காலிகமாக இருக்கும் பட்சத்தில் ஐயப்பட வேண்டியதில்லை. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உதவியோடு பணத்தின் மதிப்பை உயர்த்தலாம் என்றாலும், இந்திய அரசு கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கைகள் உண்மையிலேயே சரியானவையா என்கிற ஐயப்பாடு எழுந்துள்ளது. இதுகுறித்த விவாதத்திற்குள் செல்லுமுன் பணவீக்கம் பற்றிய பொதுஅறிவை வளர்த்துக் கொள்வது அவசியமாகிறது.

பண வீக்கம் என்பது அரசு அச்சடிக்கும் பணத்தின் மதிப்பு குறைந்துவருவதே ஆகும்.பணவீக்கம் அதிகமானால் என்ன பிரச்சினை என்ற கேள்வி சாமான்யனுக்குக் கூட எழும். உதாரணத்திற்கு கடந்த வருடம் நீங்கள் நூறு ரூபாய்க்கு மூன்று சட்டைகள் வாங்கிய அதே தரத்திற்கு இப்போது நீங்கள் இரண்டு சட்டைகள் மட்டும்தான் வாங்க முடியுமென்றால் அதுவே பணவீக்கம் அதிகரித்தால் ஏற்படக்கூடியது. அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைக் கொண்டு முன்பு வாங்கியதை விட குறைந்த அளவே பொருள் வாங்க இயலும் என்பதே பண வீக்கம் அதிகரித்ததற்க்கான பொருள்.

இந்தியா எந்த வகையில் பணவீக்கத்தைக் கணக்கிடுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. இது குறித்து பொருளாதார வல்லுனர்கள் V . சண்முகம் மற்றும் D . G . பிரசாத் ஆகிய இருவரும் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். அதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் இந்திய அரசு பணவீக்கம் குறித்த கணக்கீட்டு முறைகளுக்கு வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும்  Consumer Price Index (CPI)  முறையைப் பயன்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள். நடைமுறையில் இன்று இந்திய அரசு Whole Sale Price Index (WPI) முறையில்தான்  பணவீக்கத்தை கணக்கிடுவதாகத் தங்கள் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

Wholesale Price Index (WPI):

WPI என்பது மொத்த விலைச் சந்தையில் பொருட்களின் சராசரி விலையின் நிலையில் ஏற்படும் மாற்றத்தை அளவிடுவதே. இந்தியாவில், மொத்தமாக 435 பொருட்களின் தரவுகளை அதன் விலையேற்றத்தை WPI என்ற குறியீட்டின் மூலம், அனைத்து பொருட்களையும் கொண்டு செய்கிற வர்த்தகத்தையும், கொடுக்கல் வாங்கலையும், பணப்பரிவர்த்தனைகளையும்  இம்முறையில் தான் கண்காணிக்கப் படுகிறது. இதுதான் இன்றைய இந்திய அரசாங்கம் பயன்படுத்தும் முறையாக இருக்கிறது.

Consumer Price Index(CPI):

நுகர்வோர் விலைக் குறியீடு என்பது நுகர்வோரால் வாங்கப்படுகிற பொருளுக்கும் அதன் சேவைக்குமான, சராசரியாக அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை ஒரு புள்ளி விபர கணக்கை, காலத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிப்பதே! CPI என்ற இம்முறையை அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜப்பான், ஒன்றுபட்ட ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் சீனா உட்பட பல நாடுகள் கடைபிடிப்பதாக அக்கட்டுரையில் வெளியிடப்பட்டுள்ளது . மேலும் விபரங்களுக்கு http://www.rediff.com/money/2007/jun/07infla.htm  அழுத்தி அறியவும்.

WPI  என்பது ஒவ்வொரு வாரமும் கணக்கிடப்பட்டு வெளியிடப்படுகிறது. CPI என்பது மாதம் ஒருமுறையே வெளியிடப்படுகிறது.

நமக்கு, WPI மற்றும் CPI பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றாலும் பணவீக்கத்தின் மூலம் யார் யாருக்கு லாபம், யாருக்கு நட்டம் என்பதை அறியும் ஆர்வம் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பணவீக்கம் அதிகரித்தால் ரூபாயின் மதிப்பு குறைகிறது என்று பொருள்.

ஆனால்  இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தால், யார் யார் மூலமாக அரசுக்கு நன்மை என்பதையும்( நன்மை பெருமளவு  என்றில்லாவிட்டாலும் பணம் அதிகம் வரும் வழி என்று எடுத்துக் கொள்வோம்), எதன் மூலமாக தீமை என்பதையும் காண்போம்.
முதலில் பணம் வரும் வழியை அறிவோம். அதனோடு ரூபாயின் மதிப்பு யார் மூலமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை அறிவோம்.

1 . வெளிநாடுகளில் வாழ்கிற இந்தியர்கள்: அந்நிய செலவாணி மூலமாக இவர்கள் வாயிலாக வருகிற பணம் ( Foreign  Currency  Remittance ).  இதன் மூலமாக வருகிற பணம் என்பது NRI என்றழைக்கப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், அவர்களுடைய இந்திய வங்கிக்கு அனுப்புகிற பணத்தின் அளவு அதிகமாக இருக்கும். ஆகையால் சேமிப்பு என்பது NRI க்கு அதிகம். உதாரணமாக 10000 டாலரை ஒருவர் இன்று அனுப்பினால், டாலரின் விலை 55.55 எனக் கணக்கில் கொண்டால் அவருடைய வங்கிக் கணக்கில் 5 ,55 ,000 ரூபாய் இருக்கும். இதுவே டாலரின் விலை 40 ஆக இருந்தால், 4 ,00 ,000 ரூபாயாக இருக்கும். அதாவது அவருக்கு இன்று பணம் அனுப்பினால் 1 ,55 ,000 ரூபாய் சேமிப்பு அதிகம்.

2 . ஏற்றுமதி செய்பவர்கள்: குறிப்பாக தங்கள் வியாபாரம் மூலம், பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் மூலம் வருகிற வருமானத்தால் பணத்தின் மதிப்பு கூட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலமாக Textile Industries , உணவுப் பொருள் ஏற்றுமதி செய்பவர்கள், IT துறையில் இருக்கிற கம்பெனிகள் மூலம் பணத்தின் மதிப்புக் கூடும். இது போன்ற துறைகள் நிறைய வருமானத்தை ஈட்டும்.

3 . தங்கம் மற்றும் உலகளாவிய நிதி (Global Funds ) மூலம் பணத்தின் மதிப்பு கூட வாய்ப்பிருக்கிறது. உள்ளூர் தங்கத்தின் மதிப்பு கூட வாய்ப்பிருக்கிறது.

4 . இந்தியாவில் செய்யப்படும் அந்நிய முதலீடு மூலம் பணத்தின் மதிப்புக் கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அரசு அளவு கடந்த அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில்தான் சிக்கல் ஆரம்பமாகிறது.

மேற்கூறிய காரணங்கள் பணத்தின் மதிப்பை ஓரளவு ஈடுகட்டும் என்றாலும் பணத்தின் மதிப்பு குறைவால் பெருவாரியான சமூகம் எம்மாதிரியான பாதிப்புக்குள்ளாகும்?

1 . முதலீடு: பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு பல வழிகளிலும் பணத்தின் மதிப்புக் குறைவதால் பெரு நட்டம் ஏற்படும். பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் வருகிற தயக்கம் மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும். எந்தெந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நாணயக் கடன் மற்றும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு இதன் மூலம் பலத்த நட்டம்
ஏற்படும். லாபம் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் உள்நாட்டு உற்பத்தி மேலும் குறையும். இதனால் பெரும்பாலான பங்கு சந்தை முதலீட்டாளர்கள் தங்கள் பங்கை திரும்பப் பெற முயற்சிப்பார்கள். இது ஜூன் மாதம் வரையிலும் எதிரொலிக்க வாய்ப்புகள் உள்ளதாக
வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

2 . இறக்குமதி செய்யப் படுகிற பொருள் மற்றும் எரிபொருள் விலை:
பெரும்பாலான ஏலேக்ட்ரோனிக் பொருட்களை  ( I Phone, Refrigerator, laptop, mobile phones, etc..)  டாலரிலோ, யுரோவிலோ வாங்கிய வியாபாரிகள் அனைத்துப் பொருட்களின் விலையையும் ஏற்றுவார்கள். ஆகையால் முன்பு சொன்னது போல அதே தரத்திற்குரிய பொருளை, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் வரும்.

சில மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதால் அவை அரசுக்கு அதிக வரி செலுத்தும். ஆகையால் அந்நிறுவனங்கள் அதிக விலைக்கு இறக்குமதி செய்வதால், உற்பத்தி செய்த பொருளின் விலையை உயர்த்தும். இது நுகர்வோரை பெருமளவு பாதிக்கும். பணப்புழக்கம் இருந்தால்கூட வாங்கும் சக்தி என்பது நுகர்வோருக்கு இயலாத காரியமாக இருக்கும்.

இதனோடு நாடறிந்த பெட்ரோல் விலை உயர்வும் இவ்வகையைச் சேர்ந்ததே! மேலும் ரூபாய் சரியும் பட்சத்தில், எரிபொருட்களின்  விலை கூடும்!.

3 . வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு, அவர்கள் செலவு செய்கிற யூரோவோ, டாலரோ பணத்தோடு மாற்று செய்யும் போது அதிக செலவு என்பதை அறிவோம். ரூபாயின் சரிவு இவர்களையும் பாதிக்கும்.

4 . வெளிநாடுகளில் தங்கள் குழந்தைகளை படிக்க அனுப்பலாம் என்றென்னும் பெற்றோர்களுக்கு இது நிச்சயம் தலைவலிதான்.

5 . இந்தியாவிலிருந்து திருப்பி எடுக்கப்படும் அந்நிய முதலீடு:  இந்தியப் பங்கு சந்தையின் வீழ்ச்சியும், ரூபாயின் வீழ்ச்சியும் சேர்ந்து அந்நிய முதலீடு செய்ய எவரும் முன் வர மாட்டார்கள். சில நிறுவனங்கள் பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாகத் தங்கள் பங்குகளைத் திரும்பப் பெறுவதாலும் அந்நிய முதலீடு திரும்ப எடுக்கப்படுவதாகவே உள்ளது. இத்தகைய காரணங்களால் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டும்.

பணவீக்கம் அதிகரிப்பதற்கு குறிப்பாக இந்திய பொருட்களின் ஏற்றுமதி மூலம் வருகிற வருவாயைக் காட்டிலும் இறக்குமதி செய்கிற பொருட்களின் அளவே அதிகமாக உள்ளது. டாலர் தேவையைச் சமாளிக்கவே இந்திய அரசு, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வைப்பிற்கு அதிகளவு வட்டி, கடன்களுக்கு அடமானமாக இந்தியாவின் முக்கிய அரசு நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடமானம் வைப்பது என இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட வழி தேடுகிறது.

இது போன்ற தருணத்தில், வெளிநாட்டு முதலீடு என்பது கடினமே! ஏழைகளும், நடுத்தர வர்க்கமும் மேலும் மேலும் இதனால் உருவாகும் பாதிப்புகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். அந்நிய முதலீடுகளுக்கு கொடுக்கப் பட்ட முக்கியத்துவத்தை ஏற்றுமதி செய்கிற பொருட்களின் அளவை, அதாவது  அதிகமாக உற்பத்தி செய்கிற வழிவகைகளை கண்டறியாமலும், இறக்குமதி செய்கிற பொருட்களின் அளவு (விலை) அதிகமாக இருக்கும் வரையிலும், பண வீக்கத்திற்கான கணக்கீடுகளை மாற்றாத வரையிலும் இம்மாதிரியான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதென்பது இயலாத காரியமே!.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s