குழந்தை மனசு – சிறுகதை

அக்சயா என்னடி பண்றே… அம்மா எத்தனை தடவை சொல்லி இருக்கேன், கதவுல சுவத்துல கிறுக்காதன்னு… சொல்லிக் கொண்டே வந்த செல்வி அன்று என்ன நினைத்தாலோ தெரியவில்லை, அக்சயாவைப் போட்டு அடி… அடின்னு அடிச்சுத் தொலைத்து விட்டாள். தொலைத்தவளின் கோபம் புருஷன் பக்கமாகத் திரும்பியது. கொஞ்சமாவது பிள்ளைகளைப் பார்க்கீங்களா… என்ன பண்ணுதுன்னு?
ஆபீஸ்க்கு போயிட்டு வந்தா போதும், எப்ப பார்த்தாலும் டிவி இல்லன்னா, லேப்டாப் என்று புலம்பிக் கொண்டிருந்தாள். பொதுவாகவே அவளது கணவன் அவள் புலம்புவதைப் பொருட்படுத்துவதில்லை. ஒருவேளை அதுகூட ஆணாதிக்கமா அல்லது இவளுக்கு இதை விட்டா வேற என்ன தெரியும்ன்னு இளக்காரமா…  மனுஷன் ஆபீஸ்க்கு போயிட்டு வந்து கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணலாம்ன்னு பார்த்தா.. டெய்லி இதே பிரச்சினைதான்… என்று பல நேரங்களில் அவனும் அவன் பங்கிற்கு புலம்புவான்.
அன்றும் செல்வி அவனைத் திட்டிக் கொண்டிருக்க, அவன் வழக்கம் போல ஸ்பீக்கரை காதுக்குள் நுழைத்திருந்தான். வீட்டில் என்ன நடக்கிறது என்று அவனுக்குத் தெரிந்தாலும் பெரும்பாலான நேரங்களில் அவன் கண்டும் காணாமல் இருப்பதுதான் நிஜம். காரணம், அக்சயாவிடம் இருந்து பிரச்சினை கணவன் மனைவிக்குள் இடையே வந்து விடுகிறது.
செல்வியின் கணவன் கணேசுக்கு அடுத்தவர்களுக்கு அறிவுரை வழங்குவதாகட்டும், பொதுப் பிரச்சினைகளுக்கு விளக்கம் கொடுப்பதாகட்டும். அவனுடைய அணுகுமுறை மிக ஆழ்ந்த கோணத்தில் இருந்து பார்ப்பதாகத் தோன்றும். அவனைப் பொறுத்தவரையில், அவனுடைய தவறை அவனாகத் திருத்திக் கொள்வானே ஒழிய அடுத்தவர்கள் சொன்னால் சுத்தமாகத் திருத்திக் கொள்வதில்லை. அப்படி ஒரு குணம். நம்மில் பெரும்பாலும் பலரும் அடுத்தவர்கள் தங்கள் மீது தவறான அபிப்ராயம் வைத்திருந்தால் அதைப் பொருட்படுத்துவதில்லை என்பதே நிஜம்.
சுட்டிக் குழந்தை அக்சயா அடிவாங்கிய அடுத்த நிமிடம் அழுது புலம்பியதில் சாப்பிட்ட சாப்பாட்டை வாந்தி எடுத்துவிட, செல்வி மீண்டும் விஸ்வரூபம் எடுத்தாள். அக்சயா… என்னட்டி, அம்மாவுக்கு மீண்டும் மீண்டும் வேலை வச்சுக்கிட்டே இருக்க என்றவள் மீண்டும் அவளை அடிக்க இந்த முறை அக்சயா வீறிட்டு அழ ஆரம்பித்தாள். வாய் மட்டும் நல்லா பேசுற.. ஆனால் சொன்னால் மட்டும் புரிய மாட்டேங்குதோ… தொலைச்சுப் போடுவேன் .. தொலைச்சு என்று கத்தினாள்.
இப்போது கணேசுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஏய்…செல்வி, சின்ன புள்ளையைப் போட்டு ஏண்டி இப்படி அடிக்கிற… நீ அடிச்சதில தான் அது வாந்தி எடுத்துருக்குன்னு உனக்குப் புரியலியா.. பெரிசா கண்டிச்சு வளக்காலாம்… கண்டிச்சு… இங்க பாரு இன்னொருக்க நீ அக்சயாவை அடிச்ச, பார்த்துக்க…  என்றவன் தன் குழந்தையை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கினான்.
செல்வி கோபத்தில் அங்கிருந்து அடுத்த அறைக்குச் சென்றாளே தவிர  சென்றவளுக்கும் குழந்தையை அடிச்ச மனசு கேட்கலை.  சிறு பிரச்சினையோ பெரிய பிரச்சினையோ அவன் அணுகுகிற விதமும் அதை எந்த நேரத்தில்  சொன்னால் எதிரில் உள்ளவர்கள் கேட்பார்கள் என்கிற சமயோசிதப் புத்தியும் உள்ளவன். அதை அறிவுறுத்தும் போது தனி நபராகத் தாக்காமல் அதை சமூகப் பிரச்சினை என்ற அளவிலேயே முன் வைப்பான்.
கோபத்தில் கத்தினானே ஒழிய, அவள் சமாதானமான நேரத்தில் மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுத்தான். செல்வி, சொல்றன்னு தப்பா எடுத்துக்காத… இதே நான் உன்னை திட்டினாலோ, அல்லது ஆண்கள் பெண்களைத் திட்டினாலோ ஆணாதிக்கம்ன்னு சொல்றீங்க… இப்ப.. பெண்கள் நீங்க  பண்ணுறதுக்கு என்ன பேர் வைக்கிறது.
ஒன்னு குழந்தைதானே , நம்ம திருப்பி அடிக்க மாட்டாள் என்கிற நினைப்புதான் காரணம். இன்னொன்னு அக்சயாவால் தனது பலத்தை தன்னிச்சையாகக் காட்டினால்கூட மீண்டும் அவளுக்கு நம்ம ஹெல்ப்தானே தேவை என்கிற உள்ளூர உள்ள நமக்கும் அறியாமல் இருக்கிற அந்த எண்ணமா? எனக்குத் தெரிந்து உலகத்தில இருக்கிற ஒவ்வொரு ஆம்பளையும் பொம்பளையும், தன்னால் தான் இது என்கிற எண்ணம்தான், தன்னை விட இயலாமையில் அடுத்தவர்களைச் சார்ந்து இருப்பவர்கள் மீது அவர்களையும் அறியாமல் செலுத்துகிற ஆதிக்கமாகப் பார்க்கிறேன் என்றான்.
இன்னொன்னு செல்வி, நம்மிடம் இல்லாத பொறுமைதான் நம்மையும் அறியாமல் கோபத்தை குழந்தை மீது காட்டுகிறோம்… இதுதான் காரணம்ன்னு நமக்குப் பல நேரங்களில் புரிகிறது. ஆனாலும் என்ன பயன்… 
சின்னப் பிள்ளை பேசுவதை நல்ல ரசிப்பதும், அதை வீட்டுக்கு வருகிற விருந்தினர்களிடம் பெருமையாகப் பேசுகிற இதே நாமதான்… நமக்குத் தேவைன்னா… வாய் மட்டும்  ரொம்ப பேசுறான்னு நம்ம குழந்தையைக் கண்டிக்கிறோம். வாய் பேசுற… படிக்க மட்டும் கரி வலிக்குதோ… என்று திட்டுகிறோம்.
கொஞ்சம் யோசிச்சுப் பார்… நாம பண்ணுற தப்பு என்னன்னு நாம உணர்வதில்லை. அதுதான்  வார்த்தைகளையும் நம்முடைய செய்கைகளையும் நம்மையும் அறியாமல் குழந்தைகளிடம் காட்டுகிறோன்னு சொல்ல, செல்வியின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் கோபத்தில் குழந்தையை அடிப்பதும், பின்னர் அவளே அதற்காக அழுவதும் தாய்மனசு என்ன என்பதை கணேஷ் பல நேரம் பார்த்திருக்கிறான்.
தன் குழந்தையிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்று குழந்தை இருக்கிற அடுத்த அறைக்கு வருகிறாள். அக்சயா.. அம்மாவிடம், அம்மா… இங்க பாரு, நான் வரைஞ்சு வச்சிருக்கேன் பாரு… இது தான் நீ.. இதுதான் தம்பி… இது அப்பா, இது நான்… என்று அரை மணி நேரத்திற்கு முன்பு அடிவாங்கியதை மறந்து விட்டிருந்தவள் தான் சுவற்றில் வரைந்ததை விளக்கிக் கொண்டிருந்தாள்.
அதுதான் குழந்தை மனசு…., எதையும் வஞ்சனையாய் மனதில் வைத்துக் கொள்ளாதது  என்பதை உணர்ந்தவளாய் செல்வி, அழகா இருக்குடா செல்லம், அம்மா சாரிடா…, இனி உன்னை அடிக்க மாட்டேன்டா… என்று  அவளைக் கண்ணீரோடு கட்டி அணைத்துக் கொண்டாள். அம்மாவின் கண்ணீரை அக்சயா துடைத்துக் கொண்டிருந்தாள்.

4 responses

 1. அக்சயா சுவற்றில் கிறுக்கினால் சுத்தம் செய்வது செல்வி தானே தவிர கணேஷ் கிடையாது .அலோசனை கூறுவது எளிது . பல முறை சுத்தம் செய்வது செய்வது கஷ்டம் .இதே இடத்தில கணேஷ் இருந்தாலும் இதை தான் செய்வார் .உங்களுடைய ரசனை நன்றாக உள்ளது கட்டுரை எழுதுவதில் .கணேஷ் ஆபீஸ் இல் இருந்து வருகிறேன் வேலை அதிகம் என்று கூறுவது பொறுமை இல்லமையே காட்டுகிறது .கணேஷ் செல்விக்கு அலோசனை கூறுவது தான் ???????????????????????????

 2. //அதை அறிவுறுத்தும் போது தனி நபராகத் தாக்காமல் அதை சமூகப் பிரச்சினை என்ற அளவிலேயே முன் வைப்பான். //

  //ஒன்னு குழந்தைதானே , நம்ம திருப்பி அடிக்க மாட்டாள் என்கிற நினைப்புதான் காரணம். இன்னொன்னு அக்சயாவால் தனது பலத்தை தன்னிச்சையாகக் காட்டினால்கூட மீண்டும் அவளுக்கு நம்ம ஹெல்ப்தானே தேவை என்கிற உள்ளூர உள்ள நமக்கும் அறியாமல் இருக்கிற அந்த எண்ணமா?//

  நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அதனால்தான், கணேசும் அவனையும் அறியாமல் செல்வியிடம் கோபப்படுகிறான். இரண்டாவதாக அவன் அதை தனி நபர் பிரச்சினையாக அணுகாமல், பொதுப் பார்வையில் இருந்து ஆலோசனை வழங்குகிறான்.

  குழந்தையை எப்படி அணுகவேண்டும் என்பதற்குத் தான் ஆலோசனையே ஒழிய… நாம அப்படி இருக்கிறோமா என்பதல்ல பிரச்சினை. நல்லவராக இருந்துதான் ஆசிரியரா நல் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கணும்ன்னா, நமக்கெல்லாம் ஆசிரியர் கிடைக்குமா பாஸ்… ஒரு ஆசிரியன் என்ன சொல்லிக் கொடுக்கணும் என்பதை மட்டும் பாருங்க, அவர் எப்படின்றதைப் பார்க்காதீங்க.

  ஹீரோவை கொஞ்சம் தூக்கி சொன்னா.. உங்களுக்கு எல்லாம் பொறுக்காதே…

 3. எத்தனையோ மக்களை இந்தியா பார்திருகிறது .சிலரருக்கு மட்டும் தான் முக்கியத்துவும் .சில மனிதர்களை மட்டும் தான் அனைவருக்கும் தெரிகிறது.அந்த மனிதர்கள் மற்றவர்களுக்கு கூறியதை தானும் கடைபிடித்தார்கள் .எப்போதும் சமுதாய தளத்திலிருந்து பார்க்கும் கணேஷுக்கு ஏன் இது மட்டும் புரியவில்லை என்று தெரியவில்லை .
  நீங்கள் மற்றவர்களுக்கு கூறும் அலோசனையை ,முதலில் உங்களால் கடைபிடிக்க முடியுமா என்பதை பாருங்கள்.அப்பொழுதுதான் யாராக இருந்தாலு உங்களுடைய கருத்துக்களை எடுத்து கொள்வார்கள் .இல்லைஎன்றால் உபதேசம் ஊருக்கு மட்டும் தான் .தனக்கு இல்லை என்றால் ஆசிரியர் இருப்பார்.ஆனால் மனதில் இருக்க மாட்டார் .

  ஹீரோவாக இருக்கும் பட்ச்சத்தில் பிரச்சனை இல்லை. வெளியில் இருந்து பார்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அவர் ஹீரோவா இல்லை ?

 4. ” kulanthaiyum, theivamum kunaththaal onru, kutrankalai maranthuvidum manaththaal onru ” enbathu oru pazhaya thirayisaip padal.

  kaviya raman vaazhnthu kaatiyavan,
  bharathathil varum kannan vazhiyaik kaattiyavan.
  mr. Rajkumar sir, do you know a proverb in tamil,
  ” mudinthavan saathikkiraan,
  mudiyaadhavan podhikkiraan ”
  and in english,
  ” to err is human and to forgive is devine “

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s