எத்தனுக்கு எத்தன்

சென்னையில் உள்ள தன் தங்கையின் மகனுடைய குழந்தையைப் பார்க்க தூத்துக்குடி மாவட்டம் செட்டிக் குளத்திலிருந்து ராசய்யா வந்திருந்தார்.
ராஜ், மாமா மீது மரியாதையும் மிகுந்த அன்பும் கொண்டவன். அந்தக் குடும்பத்திலேயே படிச்சு சென்னையில் நல்ல வேலையில் இருப்பது ராஜ் மட்டுமே.
ராசய்யாவின் பேச்சில் தென்படுகிற ஊர் பாஷை இருக்கிறதே, ரொம்பவே ரசிக்கத்தூண்டும். ஊர் பாஷையை பேசுபவர்களின் பேச்சை நகர வாழ்வியலில் ரசிப்பவர்களும் உண்டு. கிண்டலாகப் பார்ப்பவர்களும் உண்டு.
ராசய்யா எந்த பன்னாட்டு நிறுவனத்திலும் பணி புரியாததால் அது குறித்து அவர் ஒருபோதும் சிந்தித்தது கூட இல்லை. எப்பவோ ஒருவாட்டி சென்னைக்கு வந்து செல்வதால் அவர் தன்னை நகர மனிதர்களின் பாஷையில் சொல்வதானால் இடம், பொருள், பணிச்சூழல் காரணமாக நாகரிகமாக டீசன்ட் பொதுத் தமிழ் என அவர்களாக வைத்திருக்கும் மொழியைப் பேச வேண்டிய அவசியத்திற்கு தன்னை ஆளாக்கிக் கொள்ளவில்லை.
ஒருநாள் மட்டும் ராஜ் வீட்டில் தங்கி இருந்த ராசய்யா, மருமகனே, இன்னைக்கு கிளம்புறம்பா. போட்ட வேலையெல்லாம் போட்டபடியே கிடக்கு.
கழுதை, கரண்ட்ட வேற நினைச்ச நேரத்துக்கு விடுறானுக… நெல்லுக்கு தண்ணி வேற பாயிச்சலப்பா… கிளம்புறேன் என்றார்.
ஓகே மாமா. மாமா, என்னால இன்னைக்கு உங்களை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து வழி அனுப்ப முடியல. முக்கியமான மீட்டிங் இருக்கு மாமா. மன்னிச்சுகோங்க மாமா என்றான். இதுல என்னப்பா இருக்கு, நான் ஆட்டோ… கீட்டோ பிடிச்சு போய்க்கிறேன். பிள்ளைகளை நல்லா பார்த்துக்கோ என்றார்.
மாமா ஆடோக்காரங்க ரொம்ப பைசா கேட்பாங்க, ஏமாந்துறாதிங்க என்றான். பத்து நிமிடத்துக்கு மேல வெயிட் பண்ணியும் பஸ் வராததால், ஆட்டோவைப் பிடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவராய், அருகில் இருந்த ஆட்டோ நிலையத்தை நோக்கி வந்தார். பத்து நிமிஷத்தில பத்து பேர்கிட்ட பஸ் வருமா வராதா எனக் கேட்பதை கவனித்த ஆட்டோ டிரைவருங்க ரெண்டு பேரு, மச்சி, இந்த மாதிரி கிராக்கி கிடைச்சா நல்லா மொட்டை அடிக்கலாம்பா என்றனர்.
அந்த நேரம் பார்த்து அவர்களிடம் வந்த ராசய்யா, தம்பி…. ரயில்வே டேஷனுக்கு போகணும். என்ன காசு ஆகும் சாமி என்றார். இதோ… பாரு பெரிசு… எல்லா ரோடும் பிளாக் பண்ணிகின்னானுங்க… 100 ரூபாய் ஆகும். இஷ்டம்னா சொல்லு பெரிசு. ஏத்திக்கின்னு போறேன்.
தம்பி, படிச்ச புள்ளைகளா, பார்க்க… இருக்கீங்க. உங்களை நம்புறேன் தம்பி. என்னை ஏமாத்த மாட்டீங்கன்னு அந்த ஆத்தாவே சொல்ற மாதிரி இருக்கு என்று வெள்ளந்தியாய் சொல்ல, டிரைவர் சிரிச்சுகிட்டே, தோ… பாரு பெரிசு… நம்பு பெரிசு. பெட்ரோல் விக்கிற வேலையில, உனக்கோசம்தான் கம்மியா சொல்றேன். இதே வேற கஸ்டமரா இருந்தா… 160 கேட்பேன்னு சொல்ல ராசய்யா எறி உட்கார்ந்தார்.
ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோவிலிருந்து இறங்கின ராசய்யா, இந்தாங்க தம்பி நீங்க கேட்ட 100 ரூபாய். கரெக்டான சமயத்தில இறக்கினதுக்கு ரொம்ப நன்றி என்றார்.
ஸ்டாண்டுக்கு திரும்புன ஆட்டோ டிரைவர் எத்தன், தன் நண்பன் அழகேசனிடம் மச்சி இன்னைக்குதான் சரியா ஒரு கிராக்கி மாட்டிச்சுப்பா… என்றான்.
டேய்… ஆனால் இது ஏமாத்துன மாதிரி உனக்கு தோணலியா… மச்சி பிசினஸ்னாலே அடுத்தவனை ஏமாத்துறதுதான். அந்த ஆளு சரியான பட்டிக்காடுடா… இந்த மாதிரி ஆளுககிட்டதான் நம்மாலே சம்பாதிக்க முடியும். அந்த ஆளு பேரம் கூட பேசாததைப் பார்த்தாலே தெரியலடா, சரியான மாங்காய் மடையன்டா , இதுல நாம ஏமாத்தமாட்டோம்கிறதை , அந்த ஆத்தாவே வேற சொல்லுற மாதிரின்னு செண்டிமெண்டா பினாத்திகின்னு இருக்கிறார் ..பா.
என்னோட பேரே எத்தன். நமக்குத் தெரியாதாடா எப்படி அடுத்தவனை ஏமாத்துறதுன்னு. சென்னைடா… எத்தனை பேரைப் பார்த்திருப்பேன். பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தான் எத்தன்.
ராத்திரி ஊர் போய் சேர்ந்த ராசய்யா, மருமகன் ராஜுக்கு தொலைபேசியில் அழைத்தார். மருமகனே.. நல்ல படியா வந்து சேர்ந்திட்டம்பா… en
மாமா, பஸ்சில ரயில்வே ஸ்டேஷன் போனீங்களா.. ஆட்டோவில போனீங்களா..
ஆட்டோவில்தான் போனம்பா.. 100 ரூபாய் கேட்டாம்பா…
மாமா உங்களை நல்லா ஏமாத்தி இருக்கான். அதுக்கு 50 ரூபாய்க்கு மேல ஆகவே ஆகாது. இப்படிதான் மாமா இங்க ஆட்டோ டிரைவருங்க ஆள் பார்த்து ஏமாத்துவாங்க….. என்றான்.
ஒத்தைக்கு ரெண்டு டைம் வாங்கி உங்களை ஏமாத்தி இருக்கான்.
அதை ஏன் கேட்கிற , நீ சொன்னதால நான் ஆட்டோவில ஏறுவதற்கு முன்னாலேயே உஷாராயிட்டேன்பா..
எவ்வளவுன்னு கேட்ட அடுத்த செகண்டே 100 … ட்ரான். சரின்னு ஏறுனேன். இறங்கும் போது 100 ரூபாய் வாங்கின பிறகு அவனைப் பார்க்கணுமே என்னா.. ஒரு சிரிப்பு.
மருமகனே… ரொம்ப நாளா கள்ள நோட்டு 100 ரூபாய் என்கிட்டே வந்து மாட்டிகிச்சுப்பா. ஏற்கனவே செல்லாதுன்னு தூத்துக் குடியில ஒரு கடைக்காரன் சொன்னாம்பா.. எப்படி இத தள்ளுறதுன்னு பார்த்தேன். என்னை ஏமாத்திறதிலேயே ஆட்டோ டிரைவர் குறியா இருந்தாம்பா. பிசினஸ்ல, நம்மள ஏமாத்துறவனை ஏமாத்துறதில தப்பே இல்ல. இல்லியா…
100 ரூபாய்ன்னு சொன்னப்பவே மனசுக்குள்ள நினைச்சுகிட்டம்பா… டேய் உங்களுக்கு பட்டிக்காடுன்னா ஏமாத்துறதா நினைப்பா… நானும் அவனுங்க முன்னால அந்த ஆத்தாவே வந்து சொல்லுற மாதிரி இருக்குன்னு சொல்ல , நம்பு பெரிசுன்னு நம்பிக்கை தர்ற மாதிரி பேசுறானாம்.
மருமகனே, அவன் எத்தன்னா.. நாம எத்தனுக்கு எத்தன்னு அவனுக்கு தெரியாது மாப்பிள்ளை என்றார் ராசய்யா.