ஜன் லோக்பாலில் உள்ள லோக் ஆயுக்த்தா லோக்பால் கீழ் வரவேண்டும் என்ற இவர்களின் கருத்து தவறு , அது மாநில நலனில் எம்மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற எனது கட்டுரை தமிழ் பேப்பர் இணைய தளத்தில் வந்துள்ளது. அதற்கான பிணையை அனைவரின் பார்வைக்கும் வைக்கிறேன் http://www.tamilpaper.net/?p=5711
மனதில் பட்ட விடயங்களை மட்டுமே எழுதி இருக்கிறேன். ஒரு கட்டுரை வடிவத்தில் கோர்வையாக எழுத அதிக நேரம் பிடிக்கும் என்பதால் எளிய முறையில் கருத்தை தெரிவிக்கிறேன். நீண்ட கட்டுரை அன்னா குழுவினர் குறித்து எழுத வேண்டும். தங்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரியப் படுத்தவும். நான் இவர்கள் குறித்த என் நிலைப்பாட்டை எடுத்து வைக்க உதவும்.
ஊழலை ஒழிக்க அன்னா குழுவினர் முயற்சிப்பதில் தவறில்லை. கொண்ட கொள்கைகளில் உறுதியின்மையை அரசியல் கட்சிகள் தான் செய்து வருகின்றன என்று பார்த்தால் இவர்களும் அதுபோல்தான் என்பதாகவேப் பார்க்கிறேன்.
1 . இவர்கள் என்றில்லை. எவரானாலும் அரசியலில் அதிகாரத்தில் இல்லாமல் வெற்றி பெறுவது என்பது மிகக் கடினம். அப்படி நீங்கள் போராட்டத்தின் மூலமாக, ஒரு இயக்கமாக வெற்றி பெற வேண்டுமானால், நீங்கள் அறிவிக்கிற ஒவ்வொரு விடயத்திலும் மிகக் கவனமாகக் கையாள வேண்டும். சாகும் வரை உண்ணாவிரதம் என்றவர்கள் இன்று அவர்களாகவே முன்வந்து உண்ணாவிரதத்தை முடிப்பது என்பது இது ஏற்றுக் கொண்ட அல்லது சவால் விடப்பட்டு பின் வாங்கிய நிலையாகவேப் பார்க்கிறேன். தாங்கள் கேட்டதை அரசு செய்ய வைக்க வேண்டும் என்ற கொள்கைப்பிடிப்புடன் உண்ணாநிலையை மேற்கொண்டீர்களேயானால் அதில் பிடிப்புடன் நின்று இருக்க வேண்டும். நாட்டிற்காக உயிரை விடவும் தயார் என்று சொல்லி அமர்ந்தவர்கள் இன்று அதில் ஒரு சிறிய முன்னேற்றத்தைக் கூட அடையாமல் போராட்டத்தைக் கைவிடுவது என்பது எம்மாதிரியான கொள்கைப் பிடிப்பு என்ற கேள்விக்குள்ளாகிறது.
2 . ஆங்கில ஊடகங்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரபலமான இவர்களின் போராட்ட முறைகள், ஆங்கில ஊடகங்களின் இன்றைய செயல் முறைகளால் முடிவுக்கு (அதாவது வெறும் உண்ணாவிரதமும் , வெறும் காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கையும் வேலைக்கு ஆகாது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பது ஐயமே!) வந்துள்ளது.
3 . நாடு தழுவிய போராட்டம் என்கிற வெற்றுக் கூச்சல்களுக்கும், நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டது போல ஏற்படுத்திய பிரமைகளுக்கும், இந்தியா தான் அன்னா போன்ற கோஷங்களுக்கும் விடை தேடக் கூடிய இடமாக எலெக்டோரல் பொலிடிக்ஸ் இருக்கும். ஏனெனில் ஓட்டளிக்கக் கூடிய சாதாரணக் குடிமகனுக்குக் கூட, இவர்களைப் போல வெறும் ஊழல் தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை என்று பாராது சாதிய இட ஒதுக்கீடுப் பிரச்சினை, மதம், பொதுப் பிரச்சினை, மாவோயிஸ்ட் குறித்த பார்வை, மாநிலப் பிரச்சினை, மின்சாரத் தட்டுப்பாடு, விலை ஏற்றம், முந்தைய அரசுக்கு எதிரான மக்கள் மன நிலை, பணம் தரக் கூடிய அரசியல் கட்சிகளுக்கு விசுவாசம், கட்சி சார்ந்த அரசியல், இன்னும் இன்னும் பலப் பிரச்சினைகள் குறித்த பார்வைகளுடந்தான் அவன் ஓட்டளிப்பான்.
4 நாளொன்றுக்கு வேறு வேறு விதமானக் கருத்துக்களை அவர்களின் அணியில் உள்ளவர்கள் கூறுவது என்பது கேள்விக்குரியது. அரசியல் கட்சி தொடங்குவதில்லை என்பதில் தொடங்கி, அவர்களின் வெளி அறிவிப்புகள் முந்தைய தினத்துக்கும் அடுத்த தினத்துக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்! ரஜினிகாந்த் கூட அரசியலுக்கு வருவீர்களா என்றால், அது காலத்தின் கைகளில் இருக்கிறது, கடவுளின் கைகளில் இருக்கிறது என தன் அரசியல் நிலைப்பாட்டில் பிடி கொடுக்காமலேதான் இன்று வரை பேட்டிஅளிக்கிறார். இன்று வரை அரசியல் வாதிகளை விஞ்சுகிற வகையில்தான் பதில் அளித்திருக்கிறார் என்பதைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். ஆனால் இவர்கள் ஒவ்வொரு முறையும் எதை அனுமதிக்க மாட்டோம், எதை செய்ய மாட்டோம் என்று சொளிரார்களோ அதிலிருந்து வேறு பாதைக்குப் பயணிப்பதை நம்மால் உணரமுடிகிறது.
5 இதுவரையிலும் தேசத்தின் மற்ற பிரச்சினைகளைப் பொறுத்தவரை இவர்களின் பார்வையைப் பற்றி மக்கள் எவருக்கும் தெரியாது. ஊழலுக்கு எதிராக இருந்த போராட்டம், ஹரியானா தேர்தலில் ஊழல் கட்சி காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரம் என்ற போது ஆதரவளித்தவர்களில் ஒரு பகுதியினர் வைத்த கேள்வியே, அப்படியானால் தேர்தல் களத்தில் நின்ற மற்ற கட்சிகள் யார் என்று வைத்தது போல, நாட்டின் ஒவ்வொரு பிரச்சினையிலும் இவர்களின் பார்வைக்கு கிடைக்கப் பெறுகிற விமர்சனங்கள் ஏராளமாக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.
6 இவர்கள் எழுத்தாளர்களோ, பத்திரிக்கை நிபுணர்களோ, அரசியல் ஆய்வாளர்களோ தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற போது ஒரு குற்றச் சாட்டு வைத்தால், அரசியல் கட்சிகள் போலவே மறுத்துப் பேசுவதும், அவர்கள் மீதான விமர்சனத்துக்கு , ஒருபோதும் செவி மடுத்ததாகத் தெரியவில்லை.
அரசியலுக்குள் நுழைந்த பிறகு இன்றைய அரசியல்வாதிகள் குறித்த இவர்களின் இன்றைய கருத்துக்களே, நாளை அரசியல் கூட்டணி போன்ற முடிவுகளுக்குள் செல்லும் போது, இவர்களுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனம் மிகப் பெரிய விமர்சனமாக இருக்கும். அரசியலில் அதிகாரத்தில் இல்லாவிட்டால் என்ன மாதிரியான வெற்றியைப் பெற முடியும் என்பதை உணர ஆரம்பித்திருந்தால் நமக்கு மகிழ்ச்சியே. இன்னும் பலப் பல விமர்சனங்கள் உண்டு. அது விவாதம் வந்தால் உதாரணப்படுத்திக் கொள்ள முடியும்.