இந்தியாவைப் பொறுத்தவரையில், கிரிக்கெட்டை விடுத்து மற்ற விளையாட்டுக்களில் எத்தனை வீரரைப் பற்றித் தெரியும் என்று கேள்வி எழுப்பினால், அதிக பட்சம் ஐந்து முதல் பத்து பேர் பெயரைச் சொல்லவே இந்தியா முழுக்கத் தேட வேண்டி இருக்கும். அந்த பத்து பேரில் தன் பெயரை இடம் பெறச் செய்த விளையாட்டு வீராங்கனை அவள். இருபத்திரெண்டே வயதான அந்த இளம் பெண்ணின் முகத்தில் ஒரு சாந்தம். தியான நிலையில் இருப்பது போன்ற முகம். விளையாட்டு வீராங்கனைக்கு ஏற்ற உடல் வாகு. இறகுப் பந்தாட்டத்தின் சிறகடித்துப் பறக்கும் இன்றைய பைங்கிளி அவள். சானியா என்ற பெயரை உச்சரித்துக் கொண்டிருந்த இந்தியாவிற்கு சாய்னா என்ற பெயரை உச்சரிக்க வைத்தவள்.
சாய்னா நேவால் பற்றிய பாடத்திட்டம் ஆந்திரப் பிரதேசத்தின் துவக்கப் பள்ளிகளில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சாய்னா வின் சாதனையாக நான் பார்ப்பது, சாயனாவால் ஈர்க்கப்பட்டு 176000 பேர் தங்களுடைய பெயரை இறகுப் பந்தாட்ட உறுப்பினராக பதிவு செய்ய வைத்ததுதான். இது இந்தியா முழுமைக்குமானதல்ல. ஆந்திர மாநிலத்தில் மட்டுமே, பதிவு செய்து பயிற்சி எடுத்து வருபவர்களின் புள்ளி விபரம். இன்னும் சொல்லப் போனால், ஆந்திராவில் கிரிக்கெட்டில் கூட இத்தனை பதிவு செய்த உறுப்பினர்கள் இல்லை.
86 ஆவது இடத்துடன் உலக பாட்மிண்டன் போட்டிகளில், பிலிப்பைன்ஸ் தொடரில் காலடி எடுத்து வைத்தவள், உலக பாட்மிண்டன் அமைப்பு வெளியிட்ட நிலைப் பட்டியலில், இன்று உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையாக விளங்குகிறாள். டாக்டர் ஹர்விந்தர் சிங் என்பவர் மலேசியா ஓபன் போட்டிகளுக்கு முன்பு கூறிய வாசகம் இதுதான் “Mark my words, she will bounce back strongly in the Malaysian Open. This girl just hates losing.” இப்படி திருவாய் மலர்ந்தது வேறு யாருமல்ல. அவளது தந்தைதான்.
அவர் கூறிய இன்னொரு வார்த்தை ” `bachcha’ did not let her Papa down “. சாய்னா இன்று அதை நிரூபித்து விட்டார். சாய்னா எந்தப் பேட்டியிலும் உதிர்க்கும் வார்த்தைகள் இவைதான்” என்னைப் பொறுத்தவரையில் கடினமாக உழைப்பதும் போட்டிகளில் வெற்றி பெறுவதும் மட்டுமே என் நோக்கம். ஒருபோதும் உலகின் தர வரிசையில் நான் எந்த இடத்தில் உள்ளேன் என்பதைக் காட்டிலும் , சரியாக விளையாடினால், நான் உயர்வேன். இல்லையெனில் தாழ்நிலைக்குச் செல்வேன் என்பது எனக்குத் தெரியும்.. ஆகையால் வெற்றி பெறுவதற்கு என்ன பயிற்சி வேண்டுமோ அதை மட்டுமே மேற்கொள்கிறேன். என்னால் உறுதியாக ஒன்றைச் சொல்ல முடியும். என்னால் முதல் ஐந்து நிலைக்குள் (World No within 5th spot) என்னால் வர முடியுமானால், நிச்சயம் ஒருநாள் முதலாம் நிலையை( World No 1st spot) அடைவேன்.” நம்பிக்கையுடன் கூடிய வார்த்தைகள்!.
சாய்னா மார்ச் 17 , 1990 ஹரியானா மாநிலம் ஹிசாரில் பிறந்திருந்தாலும், ஆந்திராவின் ஹைதராபாதில் தான் வளர்ந்தார். கோபிச்சந்த்தின் புள்ளேல்லா பயிற்சிப் பள்ளியில் இறகுப் பந்தாட்டத்தைக் கற்றுத் தேர்ந்தார். எட்டு வயது வரை கராத்தேயும் சுடோவும்தான் கற்று வந்தார். ஹைதராபாத் இடம் பெயர்ந்தவுடன் இறகுப் பந்துப் பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்தார். உலக இளநிலை( World Junior Championship) இறகுப் பந்தாட்டத்தை வென்று வாகையாளராக வலம் வந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும், ஒலிம்பிக் போட்டிகளில் அரை இறுதி வரை சென்று இறகுப் பந்தாட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே இந்தியரும் இவரே!. சூப்பர் தொடர் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியரும் இவரே.
இது மட்டுமல்லாமல், 2009 மற்றும் பின் வந்த ஆண்டுகளில் அவர் பெற்ற வெற்றிகளில் குறிப்பிடத்தக்கது 2010 ஆம் ஆண்டிற்கான காமன் வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், 2010 ஆம் ஆண்டிற்கான ஆசிய போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும், 2009 மற்றும் 2010 இந்தோனேசிய சூப்பர் சீரீஸ் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 2010 க்கான சிங்கபூர் ஓபன் சீரீஸ் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், 2010 க்கான ஹாங்ஹாங் சூப்பர் சீரீஸ் இல் தங்கப் பதக்கத்தையும், 2011 ,2012 க்கான ஸ்விஸ் ஓபன் grand பிரிக்ஸ்போட்டியில் தங்கப்பதக்கத்தையும், 2012 தாய்லாந்து ஓபன் சீரீஸ் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றெடுத்துள்ளார்.
மற்ற போட்டிகளில் அவர் பெற்ற பதக்கங்களை அறிய http://en.wikipedia.org/wiki/Saina_Nehwal பிணையை அழுத்தி தெரிந்து கொள்ளலாம்.
சாய்னா நேவால்( Saina nehval Biography) குறித்து T .S . சுதிர் எழுதிய புத்தகம் அவரது விளையாட்டை மட்டும் பேசாது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பேசுகிறது. நிம்பி புத்தகம் என்ற பதிப்பகம் வெளியிடப்பெற்றுள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூபாய் 250 மட்டுமே.
சாய்னா நேவால் இதுவரையிலும் அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருது மற்றும் இந்தியாவின் கேள் ரத்னா விருதுகளைப் பெற்றுள்ளார்.
சாய்னா இறகுப் பந்தாட்டத்தின் இன்றைய சிறகு. அது மேலும் மேலும் பறக்க வாழ்த்துவோம்.