இரு தினங்களுக்கு முன் நடந்த நீயா நானாவில்( 26 – 08 – 12 ) நிலத் தரகர்கள் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், பொதுமக்கள் பேராசைப் பிடித்துத் தான் முதலீடு செய்கிறார்கள் என்றும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டு தரப்பிலும் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்தார்கள். இதற்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி நிகழ்ச்சி முடிந்து பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியது. இளங்கோ கல்லானை, சீனிவாசன் ஆகிய இருவரும் அவரவர் கருத்தை அழகாக பதிவு செய்தார்கள்.
நிலம் வாங்குவது, விற்பது குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வாக என் சிந்தனையில் உதித்த சில யோசனைகள்:
1 . இதுவரை பட்டா செய்யப்பட்ட நிலங்களுக்கு யார் உரிமையாளரோ அவர் உரிமையாளராக இருக்கலாம்.
2 . ஏற்கனவே நில உரிமையாளராக இருந்தவர், நிலத்தை விற்பதாக இருந்தால், அதை அவர் சார்ந்த நிலப்பகுதிக்கு அரசு நிர்ணயித்த விலைக்கு, அரசுக்கு மட்டுமே விற்க முடியும் என்று அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.
3 . புதிதாக நிலம் வாங்க விரும்புபவர், அரசை மட்டும் அணுகினால் போதுமானது. அரசு, நிலம் வாங்குபவரிடம் நிலப் பகுதிக்கு உள்ள விலைக்கு விற்கும். அந்த நிலம் அரசின் விதிமுறைகளின் படி பட்டா செய்யப்பட்டவுடன், நிலம் வாங்கியவருக்கு அந்த இடம் சொந்தமாகும்.
4 . சில பல ஆண்டுகளுக்குப் பின் ஒருவேளை நில உரிமையாளர் விற்பதாக இருந்தால் அன்றைய தேதியில் என்ன விலையை , அந்த நிலப்பகுதிக்கு அரசு நிர்ணயித்துள்ளதோ அதை அவர் பெற்றுக் கொள்ளலாம்.
அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த எனது பார்வை:
1 . பட்டா செய்யப் பட்ட பகுதிக்கு ( குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கு) என அலுவலகங்களை அரசு அமைக்க வேண்டும்.
2 . அரசு எந்த நிலப்பகுதி முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை ஆராய்ந்து அதற்கான விலையை நிர்ணயம் செய்யலாம்.
3 . தகவல் அறியும் உரிமையைப் போல, காலி மனை எங்குள்ளது, மனையுடன் கூடிய இல்லம் எங்குள்ளது என்பதை புதிதாக நிலம் வாங்க வருபவர்களுக்கு வாரத்தில் இரு தினங்களிலோ அல்லது தேவையைப் பொறுத்து அதிக தினத்திற்கோ, குறிப்பிட்ட நேரத்தில் அழைத்துச் சென்று காண்பிக்கலாம். அன்றைய தினத்தில் பார்க்க விரும்புபவர்களுக்கு சிறு தொகையையும் அரசுக்கு செலுத்த செய்து, அவர்கள் எந்த நிலப்பகுதியில் பார்க்க விரும்பினார்களோ அதைப் பார்க்கலாம்.
4 . ஒருவேளை ஏதோவொரு இடம் ஒருவரைக் காட்டிலும் மேற்பட்ட நபர்களுக்குப் பிடித்திருக்கும் பட்சத்தில், அதைப் பதிவு செய்த வரிசையின் கீழும், முதலில் யார் அதற்கு முன் பணம் செலுத்துகிறார்களோ அவ்வரிசையிலும் அவருக்கே முன்னுரிமைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் , ஒருவேளை ஒரே இடத்திற்கு ஒருவருக்கு மேற்பட்டவர்கள் வாங்க விரும்பினால் சிக்கலைத் தடுக்கவே இந்த யோசனை.
5 . மனையுடன் கூடிய இல்லம் என்றால், அந்த இல்லம் எந்த பொருட்களால் செய்யப்பட்டுள்ளது என்பதையும், அந்த இல்லத்தின் காலத்தைப் (வயதைப்) பொறுத்தும் மனைக்கான விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும். விற்கும் போதும் அது எந்த விலைக்கு அரசு மனையைக் கிரயம் செய்துள்ளது என்பதை நிலம் வாங்குபவரின் பார்வைக்கு, அவர் அந்த இல்லத்தை வாங்கும் போது கொடுக்க வேண்டும். அதற்கான (Depreciation value )-ஐ அரசே அந்த இல்லத்தின் காலத்தைக் கொண்டு விலையைக் குறைப்பதற்கும் வழிவகைகள் இருக்க வேண்டும்.
6 . ஒவ்வொரு வருடமும் அரசே காலி மனைக்கான விலையையும், மனையுடன் கூடிய இல்லத்திற்கான விலையையும் மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட வருடத்தில் அரசுக்கு விற்கப் பட்ட இடத்தை, அந்த வருடம் முழுமைக்கும் அதே விலைக்கே அரசு நிலம் வாங்குபவர்களுக்கு விற்க வேண்டும்.
7 . புதிய பிளாட்டுகள் அரசின் நேரடிப் பார்வையில் வருவதனால், அரசின் அங்கீகாரம் பெற்ற மனையாக மாறிவிடுகிறது. இவ்வாறு வழிவகை செய்யும் போது விவசாய நிலங்களும், குளங்களும், ஏரிகளும், அரசு நிலங்களும் பாதிப்புக்குள்ளாகாது.
8 . அரசுக்கு இது சொந்தமாகும் பட்சத்தில், அரசும் புதிய நலத் திட்டங்களையும், தொழில் திட்டங்களையும் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களையும் , நகரங்களையும் கருத்தில் கொண்டு முன்னேற்றம் செய்ய வழிவகைகளை கண்டறிய வேண்டும். ஒருவேளை அரசு, சென்னைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்குமேயானால் மீண்டும் பல பிரச்சனைகளை அரசு எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.
இது நடைமுறை சாத்தியமற்றது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது . இது என் தனிப்பட்ட முடிவு மட்டுமே. ஏன் இது நடைமுறையில் சாத்தியம் என்பதற்கு, சமச்சீர் கல்வி ஓர் உதாரணம். இன்று சமச்சீர் கல்வியை எதிர்த்த சுயநிதிக் கல்விக் கூடங்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனவோ அதையே நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்க , நீதிமன்றத்தை அணுகி அரசு சட்டமாக்க இயலும்!. பாலங்கள் கட்ட வேண்டுமானால் அரசு எந்த தயவு தாட்சண்யமும் எளியவர்களிடம் காண்பிப்பதில்லை. சொல்லப்போனால் தன்னை விட எளியவர்களிடம், இதுநாள் வரை கருணைக் காட்டாத அரசுக்கு இதை சட்டமாக்கிக் கொண்டு வர அதிக ஆண்டுகள் ஆகாது.
இம்மாதிரியான செயல்களை அரசே ஏற்று நடத்தாதெனில், நிலம் குறித்த பிரச்சினைகள் வெறும் விவாதப் பொருளாக மட்டுமே இருக்கும் என்பது என்னுடைய கருத்து.
இது நடைமுறைச் சாத்தியாமா ? அல்லது நிச்சயமாக இதை நடைமுறைப்படுத்த முடியும் என்கிற முடிவை உங்களின் கைகளிலேயே விட்டு விடுகிறேன். இதை இன்னும் ஆழமாக பார்க்கப் பார்க்க மேலும் மேலும் பல நல்ல யோசனைகள் ஒவ்வொருவருக்கும் வரும். உங்களுக்கு தோன்றுகிற யோசனைகளை பதிவு செய்யுங்கள்.