எனது அத்தான் திரு. முருகன், ராமநாத புரத்திலிருந்து, எனது வேண்டுகோளுக்கு இணங்க எழுதித் தந்த கவிதை!. அத்தானுக்கு சமயங்களைப் பற்றிய அறிவும், இறைப் பாடல்களும் அத்துப் பிடி. ஏனைய நாட்டு நடப்புகளைக் கூர்ந்து கவனிப்பவர். மாமா தமிழ் பண்டிட் என்பதாலோ என்னவோ, அத்தானுக்கு தமிழ் மீதான ஆர்வமும், இறை பக்தியும் அதிகம். பனிச் சுமைக் காரணமாக அவரால் அதிகம் எழுத இயலவில்லை என்ற போதிலும், எனது நச்சரித்தலும், மேலும் அவருக்கும் உள்ள ஆர்வத்தினால் அவர் எனக்கு 08 /03 /99 அன்று எழுதிய கவிதையை அனுப்பியுள்ளார்.
பிள்ளையார் பிடிக்க முயன்று!
எண்ணமும் அறிவும் கலந்து
எண்ணற்ற காலத்தை இழந்து
மனித நேயத்தோடு விஞ்ஞானி
புதிது புதிதாய் வார்த்தவை
– அறிவியல் சாதனங்கள்!
இறந்தவனின் ஈமக்கிரியைச் செய்து
இருப்பவன் வாழ வேண்டிய அளவுக்கு
இழிநிலை இன்னும் ஒழியவில்லை!
ஆயிரம் வந்தென்ன?! – எத்தனை
அறிவியல் சாதனங்கள்!
வறுமைச் சூழலும்,
வகுப்பு வாதங்களும்,
வேலையின்மையும்,
முதலாளித்துவமும்,
அரசியல்வாதமும்,
வரதட்சிணைகளும்,
வாழ்க்கைத் தரத்தை
இயன்றவரை பாழ்படுத்த
கனவுகளைக் கற்பனைகளை
உண்மைபோல் காட்டி
இந்த யுகம் சராசரி சனங்களை
உயிரோடு சமாதி வைக்க
அடிபோடுகிறது !
மொத்தத்தில்.
மனிதநேயமுள்ள
விஞ்ஞானி மனம்
பதை பதைக்கிறான்!
மானுடம் மாண்புறவே
வளர்ந்த விஞ்ஞான வளர்ச்சி….
பிள்ளையார் பிடிக்க முயன்று
குரங்காகிப் போன
கதையாகி விட்டதென்று!
– முருகன் , 08 / 03 / 09 அன்று எழுதிய கவிதை.