கடந்த மாதம் சொந்தத்தில் திருமணங்கள் என்ற தலைப்பில் நடந்த நீயா நானாவில் கலப்புத் திருமணங்கள் மட்டுமே சாதியை ஒழிக்க உதவும் என்ற கருத்து எதிர் தரப்பினரால் வலுவாக வைக்கப்பட்டது.
ஜாதிய ஒழிப்புகளை சொந்தம் தவிர்த்த திருமணங்கள் ஒழிக்கும் என்ற மாயையை ஏன் ஒருவரும் எதிர்கொள்ளவில்லை? இங்கு நம்மில் பலரும் சாதிக்கு வெளியில் இருந்து பேசுவதே நன்று என நினைக்கிறார்களோ என்ற அச்சம் உள்ளது.
அது குறித்த எனது பார்வை: சாதிய கொடுமைகள் காதல் திருமணங்களிலோ, சொந்தம் தவிர்த்த திருமணங்களிலோ எத்தனை சதவீதம் ஒழிந்திருக்கும் என்பதற்கு ஆய்வுகள் உண்டா? சொந்தத்தில் திருமணம் செய்தவர்களுக்குத் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதை இந்திய மருத்துவம் எந்த அளவுக்கு ஆய்வுகள் செய்யவில்லையோ அதுபோலவே கலப்புத் திருமணங்கள் சாதி ஒழிப்பில் ஏற்படுத்திய புரட்சிகளுக்கு ஏதேனும் தரவுகள் உள்ளதா? பள்ளியில் பிள்ளைகளை சேர்க்கும் போது இந்த கலப்புத் திருமணம் செய்தவர்கள் செய்த புரட்சி என்ன என்பதற்கு ஏதேனும் தரவுகள் உள்ளதா? தன் குழந்தைக்கு “சாதி இல்லை” என்று பள்ளிக் கூட சான்றிதழ்களில் புரட்சி செய்தவர்கள் எத்தனை பேர்?
எனக்குத் தெரிந்து எத்தனை இந்துக்கள் தங்களை கிருத்துவர்களாக காட்டினால் சாதி தெரியாது எனக் காண்பிக்க முயல்வது மட்டுமே இங்கு நடந்த புரட்சி!. இதில் கொடுமை என்னவென்றால் , பள்ளிக் கூட சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றில் மட்டும் இந்து என போட்டுக் கொள்வதும் வெற்று வெளி வேஷத்திற்காக கிருத்துவன் என்றும் அடையாளப்படுத்தியவர்கள் தங்கள் வாழ்வில் செய்த புரட்சி என்ன?அதே கிருத்துவன் தனது பெண்ணுக்கு மனம் முடித்து வைக்கும் போது, ஏதோ ஒரு கிருத்துவனுக்கு( வேற்று சாதி கிருத்துவனை) திருமணம் செய்து வைத்து , இங்கு சாதிகள் ஒழிந்து விட்டதல்லவா? ??? இதில் இந்து மதம் மட்டும் சாதியைத் தூக்கிப் பிடிப்பது போல புரட்சிப் பிரச்சாரங்கள்!!. காதல் திருமணமோ, வேறு சாதியில் திருமணம் செய்ததாலோ, இங்கு சாதிகள் ஒழிக்கப்பட்டதா? பருவத்தில் அவனுக்குப் பிடித்த பெண்ணை (அச்சுதந்திரத்தைக் காட்டிலும்) திருமணம் செய்து கொண்டான் என்பதைக் காட்டிலும் கலப்புத் திருமணங்கள் என்ன புரட்சியை இந்தியாவில் ஏற்படுத்தின?
சாதிய அடையாளங்களும் , மத அடையாளங்களும் தான் மனிதனை தீண்டாமைக்குள் தள்ளியது போன்ற விடயங்கள் அர்த்தமற்றது. இவை இல்லாவிட்டாலும் இனக்குழுக்களாக மனிதன் பிரிந்து கிடப்பான். சாதிய ரீதியாக அடித்துக் கொள்பவன், ஊர் பிரச்சினைக்கு சரி, தவறு என்பதற்கு அப்பாற்பட்டு இனக்குழுக்களாக பிரிந்து பாகுபாடுகளை கொண்டிருப்பான். தொழிலை அடிப்படையாகக் கொண்டே இங்கு மரியாதைகள் கிடைக்குமே ஒழிய,(அதுவும் ஒருவகையில் சாதிய தீண்டாமையைப் போலவே) பெரிதாக படித்த , நகரத்து சமூகம் இது போன்ற கருத்துக்களை முன் நிறுத்துவதே இன்றைய விவாத நிகழ்ச்சிகளில், முகநூலில், வலைத்தளங்களில் புரட்சி சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக காண்பிக்கிறது.
காதல் திருமணங்களும், கலப்புத் திருமணங்களும், படித்த கல்விமான்களும் இன ரீதியிலான தீண்டாமையை , தொழில் ரீதியான தீண்டாமையைக் கைவிடவில்லை என்பதே நிதர்சனம். உதாரணம் : MNC யில் பணிபுரிபவன் பாஸ் ஐ மட்டும் சார் என்பான். வாட்ச்மன் வயது முதிர்ந்தவர் என்றாலும் பெயர் சொல்லிக் கூப்பிடுவான். என்ன ஒரு கல்விப் புரட்சி!!!! தன்னை விட தாழ்ந்த சாதியில் உள்ள வயது முதிர்ந்தவரை பெயர் சொல்வது தவறு என்பது போல வாட்ச்மனை பெயர் சொல்லி அழைப்பதும் தவறு தானே. அவ்வாறிருக்க, சாதியின் அடிப்படையில் மட்டும் மதிப்பிழத்தல் இருக்கப் போவதில்லை. அலுவலகத்தில் வாட்ச்மனை பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டே இங்கு சாதியை ஒழித்தால் சம சமூக அந்தஸ்து என்பது போன்ற பரப்புரைகள் எந்த மாறுதலையும் கொணரப் போவதில்லை. சமூகத்தில் மரபு வழி திருமணங்கள் இருக்கும் போது, மரபை உருவாக்கிய சாதிகளும் மதங்களும் இருக்கட்டும். அதனோடு அதை சரியாக புரிந்து கொண்டு வாழ்வை முன் நகர்த்திச் செல்வது தானே எழுத்தாளர்கள், முற் போக்கு வாதிகள் அறிவுறுத்த வேண்டியவை. இம்மாதிரியான சாதிய ரீதியிலான விடயங்கள் பேசும் போது, எழுத்தாளர்கள், முற் போக்கு வாதிகள் அதை ஆதரித்துப் பேச முன் வராததற்கு என்ன காரணம் ?
கலப்புத் திருமணங்கள் சாதியை ஒழித்து தீண்டாமையை ஒழிக்க உதவும் என எவரும் நினைப்பதில் தவறில்லை. ஏனெனில் அது முயற்சியாக /பரிசோதனையாக செய்து பார்க்க உதவும் என நீங்கள் நம்பலாம். ஆனால், ஒருபக்கம் சாதிய வாரியான கணக்கெடுப்புகள் எடுக்க அனுமதித்துக் கொண்டே, சாதி இதனால் ஒழியும் என்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. இட ஒதுக்கீடு என்பது ஒதுக்கப்பட்ட சமூகம் முன்னேற அமைக்கப் பட்டது , அது அவசியம் என்பதை நான் ஏற்கிறேன். ஆனால் அது இருக்கும் வரையில், இட ஒதுக்கீடு இன்றைய சூழ்நிலையில் தேவை தேவையற்றது (சரி தவறு என்பதற்கு அப்பாற்பட்டு) என்ற மனப்பாங்கை இந்திய சமூகம் சிந்தனைக் கிடங்கில் வைத்துக் கொண்டே சாதிய ஒழிப்பைப் பற்றி பேசுவதெல்லாம், தங்களை சமூக புரட்சியாளனாக காண்பிக்கவும், ஒடுக்கப்பட்ட மக்களின் Representative ஆக காண்பிக்கவும், சாதி இருந்தால் இருக்கட்டும் என்று பேசுபவர்களை பிராமணீயம்( உயர் சாதியினன்) என்று அடையாளப்படுத்த மட்டுமே உதவும்!!!
எனது இறுதிக் கருத்து:
” உங்களைத் தாழ்த்திப் பேசியவர்கள் மத்தியில் வாழ்ந்து காட்டுதலைக் காட்டிலும் பெரிய பழி தீர்த்தல் வேறொன்றுமில்லை.” அதாவது தீண்டாமை ஒழிய, நீங்கள் உங்கள் நிலையை உயர்த்தினாலே போதும். சாதியை எதிர்ப்பதால் மட்டும் தீண்டாமை ஒழியப் போவதில்லை. அது வேறு வேறு வடிவங்களில் மனித உறவுகளுக்குள் ஏற்றத்தாழ்வுகளைப் பிறப்பித்துக் கொண்டே இருக்கும். இந்த ஏற்றத்தாழ்வுகளோடு தன்னை நிலைநிறுத்த /முன்னேற்ற, ஒரு சமூகம்/சாதி அல்லது தனி மனிதன் பயணிக்க வேண்டியது மட்டுமே உங்களை தீண்டாமையில் இருந்து காப்பாற்றுமே ஒழிய, சாதி ஒழிவதால் அல்ல. சாதி கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து , பல எதிர்ப்புகளையும் தாண்டி தன்னை நிலைநிறுத்துகிறது என்பதற்கு எது அடையாளம்? மனித இயல்பே தன்னை மற்றவர்களிடம் இருந்து உயர் குடியாளனாகக் காண்பிக்க முயல்வதே!!!! ஆகையால், எல்லா காலக் கட்டத்திலும் மனிதன் ஏற்றத்தாழ்வுகளை எதிர்நோக்க வேண்டியிருப்பதும் அதை எதிர்த்துப் போராடி தன்னை நிலைநாட்டுபவனுக்கு மட்டுமேயான உலகம் இது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.
நீங்கள் சொல்லும் கருத்துக்கள் எல்லா ஊர்களிலும் நடக்கும் உண்மை தான்…
கலப்பு திருமணங்கள் நடப்பதும் சரி… (பெரியவர்களின் சம்மதத்துடன் அல்லது திருட்டுத்தனமாக)… நடந்த திருமணம் சில நாட்களில் பிரிந்தால் தான், அங்கே நீங்கள் சொன்ன பிரச்சனை ஆரம்பம் ஆகிறது… ‘மனங்கள்’ சேர்ந்தாலோ, சேர்த்து வைத்தாலோ இப்பிரச்சனை இல்லை… ‘பணங்கள்’ சேர்ந்தால் இப்படித் தான்…
மற்றபடி ஜாதி / தீண்டாமை – இவையெல்லாம் அவரவர் மனதை பொறுத்தது… எல்லார் உடம்பிலும் ரத்தம் சிவப்பாக தானே உள்ளது…? தனி மனித ஒழுக்கம் வளர்ந்தாலே போதும்… மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு முதலில் வளர வேண்டும்…
நல்லதொரு அலசலுக்கு நன்றி…