தவிப்பு – சிறுகதை

waiting for you

 

மணி இரவு பத்து. மூன்றாம் பிறை வந்து போய் விட்டிருந்தது. கும்மிருட்டு. ஆலமரத்தடி. நான் மட்டும் தனியாக!. தென்றலாய்க் காற்று வீசுகிறது. தூரத்தில் தெரியும் சைக்கிளின் டைனமோ வெளிச்சம். மரத்திலிருந்து வரும் பறவையின் மெல்லிய முனங்கல். எதையும் ரசிக்க இயலாதவனாய் நான். இயலாதவன் என்பதைக் காட்டிலும் ரசிக்க விரும்பாதவனாய் நான்!.

ஒன்பது முப்பதுக்கெல்லாம் வந்து விடுவேன் என்றாள். இன்னும் வரவில்லை. நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையுடன் நான். வருகிறேன் என்று அவளே ஒத்துக் கொண்டாள். ஆனாலும் நேரம் கடக்கிறது.  இன்றொரு நாளில் காத்துக் கிடப்பதில் என்ன தவறு இருக்கிறது! எதிர்ப்பிற்கிடையில் வாழ்வு துவங்கும் நாள்!. இருட்டில் வாழ்வைத் துவக்குவது அபசகுனமா? புது உயிர்களே இருட்டின் விளையாட்டில் உருவாகியது தானே!  இதிலென்ன இருக்கிறது! என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

எத்தனையோ முறை அவளுக்காகக் காத்துக் கிடந்தவன். மூன்றாண்டுக் காதல். முதலில் பார்க்க மறுத்தாள். பின்னர் முறைத்துப் பார்த்தாள். அவளைப் பார்க்க வைப்பதே முதல் பணியாகக் கொண்டதால் முறைத்தால் என்ன! இளித்தாலென்ன! பேச முற்பட்ட போது மறுத்துப் பார்த்தாள். பேசி விடக் கூடாதென்று முடிவெடுத்தே வருவாள் போல! இம்முறை பேச வைப்பதென முடிவெடுத்தேன்.

கல்லூரியில் ஆண் பெண்ணோடு பேசக் கூடாது. ஆகையால் பேச மறுக்கிறாளா? அல்லது பேச விருப்பமில்லையா? விருப்பத்தை, நாம்தான் வர வைக்க வேண்டும். எப்படி வர வைப்பது? இரவுத் தூக்கங்கள் கெட்டுப் போன பல நாட்கள். சில மாதங்கள். பார்க்க மாட்டாளா என்ற தவிப்பு. இப்போது பேச மாட்டாளா என உருவெடுத்திருக்கிறது. எப்படிப் பேசுவது? எதைப் பேசுவது? எங்கு பேசுவது? அப்படியே எதைப் பேசினாலும், நின்று கேட்பாளா? நின்று கேட்டால் கூட, ஏற்றுக் கொள்வாளா? நான் பேசுவதைக் காட்டிலும், அவள் என்ன பேசுவாள் என்ற தவிப்பு . தவிப்பு மாற்றத்தைத் தருமா? ஏமாற்றத்தைத் தருமா? அவள் குறித்த தவிப்புகள் ஏமாற்றமாகி விடுமோ என்ற அச்சம் . அச்சப்படுபவன் காதலிக்க ஆசைப்படக் கூடாது. ஆகையால், பயம் தளர்த்தப் பழகி இருந்தேன்.

அன்று கல்லூரியின் ஆண்டு விளையாட்டு விழா. முடுக்கு முடுக்கான பல வழிப் பாதைகள் உள்ள கல்லூரி. ஈசான முடுக்கில் பேசுவது  நல்லதென அங்கே தனியாக வந்தவளை மடக்கினேன். மாலினி, ஒரு நிமிஷம்…! உங்க கிட்ட பேசணும்.

என்ன பேசணும்? யாரும் பார்த்தால் பிரச்சினை ஆகிவிடப் போகிறது.

யாரும் பார்த்தால் பிரச்சினை என்றால்,  உனக்கு என்னிடம் பேசுவதில் பிரச்சினையில்லை என்று நினைத்துக் கொண்டேன். உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு! உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா?

இங்க பாருங்க ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாருங்க…. உங்களைப் பற்றி யோசிக்கவெல்லாம், எனக்கு நேரமில்லை. வரவழைத்துக் கொண்ட வெறுப்பு வார்த்தைகள்!.

விருப்பத்தை நாமல்லவா வர வைக்க வேண்டும். மாலினி, நீங்க சொல்றது உண்மைன்னா, இன்னும் மூணு நாளைக்கு நான் உங்களைப் பார்க்கப் போவதில்லை. பேசப் போவதில்லை. நீங்கள் தனிமையில் இருக்கும் போது என் பற்றிய நினைப்பு வரும். படுத்துக் கிடக்கப் போகிற உங்கள் இரவுகள் என்னை ஞாபகப் படுத்தும்.

மூன்று நாட்கள் கழித்து மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள், என் பற்றிய நினைப்புகள் இல்லை என்பதை! நினைப்புகளுக்குள் நான் வருவேனேயானால் உங்களை நீங்கள் ஏமாற்ற முயற்சிக்காதீர்கள். அதற்குப் பெயர் தான் “காதல்”. ரத்தினச் சுருக்கமாய் சொற்களைக் கையாண்ட பெருமையில் அங்கிருந்து அவளுக்கு வழிவிட்டேன்.

எத்தனை நாள் சிந்தனை! பேசி விட்டேனே ஒழிய, என்ன சொல்லப் போகிறாளோ என்ற தவிப்பு.

மூணு நாள் கழித்து வெட்கத்தில் பார்த்தாள். மெல்லச் சிரித்தாள். மௌனத்தில் சம்மதித்தாள். கல்லூரியில் பேச தடை விதித்தாள்!

எத்தனையோ முறை அவளுக்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்திருக்கிறேன். பூங்காவில் காத்திருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் கோபம் வந்ததில்லை.

ஆனால் இப்போது ஏன் என்னையும் அறியாமல் கோபம் வருகிறது. காலம் நேரத்தை, மேலும் ஒரு மணிக்கு கடத்திக் கிடந்தது. இறுதிப் பேருந்து கடந்து சென்று விட்டது. வருவாள் என்ற நம்பிக்கைப் பொய்த்துக் கொண்டிருக்கிறதா? அவளின் உறுதிகள் இறுதியாகிக் கொண்டிருகின்றன.

ஒருவேளை வராமல் போய் விடுவாளோ? வரா விட்டால் என்ன செய்வது? வர வேண்டும் என எண்ணக் கிடக்கைகள் ஆவல் பட்டுக் கிடந்தாலும், நிஜத்தில் நடக்கிறக் காட்சிகள் எதிராக அல்லவா உள்ளன. வருவாள் என என்னையே நான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேனா?

ஒருபோதும் அவள் என் தவிப்புகளைப் புரிந்து கொள்வதில்லையா? பலமுறை சின்னஞ்சிறு சண்டைகள் வந்துள்ளன. துக்கங்களில் தூக்கங்களைத் தொலைத்த நாட்கள் தான் எத்தனை?  “முடிவாக முடியாது” என சொல்லி இருக்க வேண்டியது தானே!

இனியும் காத்துக் கிடத்தலில் பொருளில்லை. இதுதான். இவ்வளவு தான் என்றாகி விட்டதா?

முடிவெடுத்து விட்டேன். நான் அனுப்புகிற இக்குறுஞ்செய்தி இறுதிச் செய்தியாய் இருக்கட்டும். அது என் காதலுக்கான இறுதிச் சடங்காய் இருக்கட்டும்.பாழாய்ப் போன அலைபேசியும், பாட்டரி சார்ஜ் இல்லாமல் படுத்து விட்டதே.

வீட்டை நெருங்கிய போது மணி பன்னிரெண்டைத் தொட்டிருந்தது.

போதும் நம் காதலும், நான் காத்துக் கிடத்தலும்! இதுதான் நான் அனுப்ப வேண்டிய செய்தி. முன்னதாக அவளிடமிருந்து ஒரு செய்தி.

அன்பே! இன்றைய நடவடிக்கைகள் உங்களைக் கோபப் படுத்தி இருக்கக் கூடும். ஏன் , என்னை வேண்டாமெனவும் தூக்கிப் போடத் தோன்றி இருக்கும். இருப்பினும் என் தரப்பு கருத்தைப் பொருள் படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை, வரவழைக்கப் பட்ட நம்பிக்கை அல்ல. உங்கள் காதல் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை!. நீங்கள் எனக்கு முதன் முதலாய் அனுப்பிய அச்செய்தி ” காத்துக் கிடத்தலிலும் காதலித்துக் கிடத்தலிலும் உள்ள சுகமே தனி”. பலமுறை சூழல் காரணமாக உங்களைத் தவிக்க விட்டிருக்கிறேனே என்ற போது நீங்கள் அனுப்பிய செய்தி ” தவித்துக் கிடக்கிற போதெல்லாம் கனவுகளில் திளைத்துக் கிடக்கிறேன்” . அம்மா இல்லாமல், அப்பா என்னை வளர்த்தாளாக்கி இருக்கிறார். நம் காதலை அவர் புரியும் காலம் வரும்! காத்துக் கிடப்போம். இது தவிப்பல்ல , நாம் செய்ய வேண்டிய தவம்! உங்களிடம் வருகிறேன் என சொல்லிய நிமிடத்திலிருந்து , அப்பாவைத் தனித்து தவிக்க விடுதல் சரியாகாது என முடிவெடுத்ததாலே வர வில்லை.

உங்களுடன் மட்டுமே வாழ விரும்பும் ,

அன்பு மாலினி.

“தவிப்பு கூட தவம்” எனப் புரியச் செய்தவளுக்காகத் தவிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

2 responses

  1. ” காத்துக் கிடத்தளிலும் காதலித்துக் கிடத்தளிலும் உள்ள சுகமே தனி” தவிப்பு என்ற ஒரு உணர்வு கதைகளில் பல பரிமாணங்களில் பிரதிபலிக்கிறது….. இது ஒரு உணர்ச்சிக்குவியல்… நன்று….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s