சாதியை ஒழித்து விட்டால் சமத்துவம் மலருமா??

caste

சாதிகள் எப்படித் தோன்றின?

கி .மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து சாதியக் கட்டமைப்புகள் பலம் பெற்று வந்துள்ளன. அதற்கு முன்னர் வரையிலும் இனக் குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு குழுவிற்கான நிலப்பரப்பில் அன்னியர்கள் நுழைவதைத் தடுக்க, குழு அமைக்கப் பெற்று இருக்கலாம். அக்குழுவின் தலைவனாக ஒருவன் நியமிக்கப்பட்டு இருக்கலாம். அந்தக் குழு அமைப்புகள் தங்களை அறிமுகப்படுத்த வைத்திருந்த பெயர்கள் சாதியாக மாறி இருக்கலாம். சாதியை மதம் திட்டமிட்டு உருவாக்கி வைத்திருப்பது என்று சொல்வது முதிர்ச்சியற்ற ஒரு மன நிலையே!

சாதிகள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள தனக்குப் பாதுகாப்பான அமைப்பாக மாற்ற ஒவ்வொரு குழுவாலும் அமைக்கப் பட்டிருக்கக் கூடும்.

சாதி வேண்டுமென்றே உருவாக்கப் பட்டிருக்க முடியாது. எந்த சமூக அமைப்புகளும் தன் பாதுகாப்பை உறுதிப் படுத்த, உபரி வளங்களையும் உபரி நிலங்களையும் கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கும். அதுதான் இயல்பு.

எல்லாக் காலக் கட்டத்திலும் பொருளியல் முகவாதம் முன்னிலையில் இருக்கும். இங்கு பொருளியல் முகவாதம் என்பது அதிக நிலங்களையும், உணவு வளமும் உள்ள சமூகம் மேல் நின்றும், அவர்கள் அடிமைப் படுத்திய சமூகம் கீழ் நிற்க வேண்டிய சூழ் நிலையும் ஏற்பட்டிருக்கக் கூடும். அப்போது அது மேலிருந்து கீழாக ஒரு சமூகத்தை உருவாக்கும்.  அதை நடைமுறைப் படுத்த அதிகார வர்க்கம் என்ற ஒன்று பிறக்கும். அப்படித் தான் சாதியக் கட்டுமானங்கள் அமைக்கப் பட்டிருக்கக் கூடும்.

ஆகையால், வர்ணங்கள் சாதியை உருவாக்கி இருக்க இயலாது. இனக்குழு என்ற பழங்குடிகள் வாழ்க்கை முறைதான் சாதியை உருவாக்கி இருக்க முடியும். ஆனால் இங்கு மதம் வர்ணத்தைக் கொண்டு வந்தது , அதிலிருந்தே சாதிக் கட்டமைப்பு வந்தது என்பது ஏற்றுக் கொள்ள இயலாதது. வர்ணங்கள் இருந்த போதிலும் எல்லாக் காலக் காடத்திலும் பிராமணர்கள் தான் மேலாக இருந்தார்கள் என்று சொல்ல இயலாது. அது பற்றி பின்னர் பார்ப்போம். முதலில் இதைப் புரிந்து கொண்டு பின்னர் சாதி ஏன் ஒழியாமல் இருக்கிறது என்ற காரணத்தையும், ஏன் சாதி ஒழிக்கப் பட வேண்டும் எனவும் விவாதிக்கலாம்.

இந்து மதம் ஒரு போதும் இதுதான் மையக் கொள்கை என்று வைத்துக் கொண்டதில்லை. ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும்  அது இனக் குழுக்களின் வாழ்க்கை பண்பாட்டைப் பொறுத்து மாறியுள்ளது என்பதை அனைவரும் அறிவோம். சாதி என்பது முழுக்க முழுக்கத் தீங்கானது என்பது இன்றைய சமூகம் முன்வைக்கும் குற்றச்சாட்டு. சாதிகள் கெட்ட விசயங்களை மட்டுமே செய்து வந்துள்ளது என்பதை ஏற்க இயலாது.

சாதிகள் பல சமூக பண்பாட்டுத் தளங்களையும், கலாச்சாரப் பெருமைகளையும் தந்துள்ளது. மேலும் ஒழுங்கு முறை இருக்கிற பட்சத்தில் மட்டுமே பல நன் காரியங்கள் செய்து முடிக்கப் பட இயலும் என்பதே யதார்த்தம். ஆகையால் இன்று முற்போக்குவாதிகள் சொல்வது போல சாதி ஒழிக்கப் பட வேண்டியதல்ல. ஆனால் அது எப்படி இயங்க வேண்டும் என்பது பற்றிய மாற்று சிந்தனைகள் வர வேற்கப்பட வேண்டும்.

இந்து மதத்தின் அதிகாரம் முழுக்க முழுக்க ஒரே சமூகத்திடம் (பிராமணர்) இருந்தது என்பதும் தவறு. அது ஒரு சிலரால் பகுத்தறிவு என்ற பெயரால் திட்டமிட்டுப் பரப்பப் பட்ட பொய். அரசாண்ட சாதிகள் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்திலும், நிலங்களை வைத்திருந்த சாதிகள் குறிப்பிட்ட காலக் கட்டத்திலும், வியாபாரம் செய்தவர்கள் குறிப்பிட்ட காலக் கட்டத்திலும், தங்களை உயர் நிலையாளராக நிறுவியுள்ளார்கள் என்பதே வரலாறு.  ஆனால் பிராமணர்களும் வலுப் பெற்று இருந்தார்கள் என்பதை மறுக்க இயலாது. ஆகையால் எல்லாக் காலக் கட்டத்திலும் சாதி அடுக்குகள் இப்படித் தான் இருந்துள்ளன என்பது தவறு. ஆனால் தன் நிலங்களில் அடிமையாக  பணி  செய்தவர்கள் ஒடுக்கப் பட்ட சமூகமாகவே இருந்தார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகமும் தன்னை உயர் நிலையாளனாக காண்பித்துக் கொண்டிருப்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.

caste 1

இட ஒதுக்கீட்டின் அவசியம் :

ஆங்கிலேயர் தங்களுக்கு ஒத்தூதியவர்களுக்கு ஏற்ற இட ஒதுக்கீட்டு முறையை அமுல்படுத்தி வைத்தார்கள். அம்பேத்கார், காந்தி போன்றவர்களின் முயற்சியால் தலித் மக்களுக்கு இட ஒதுக்கீட்டு முறை சட்டமாக்கப் பட்டது. இட ஒதுக்கீட்டு முறை வருவதற்கு எந்த அளவுக்கு உயர் சாதியினரிடம் எதிர்ப்பு இருந்திருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் அது வருவதற்குப் பாடுபட்டவர்கள் பெரும்பாலோர் உயர் சாதியினர் என்பதையும் ஒடுக்கப் பட்ட சமூகமும் நினைவு கூற வேண்டியது இப்போது அவசியமாகிறது.

ஆட்சி அதிகாரங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மாறும் போது , ஒவ்வொரு சமூகமும் பயன் பெற பெரும் முயற்சிகள் இயல்பாகவே போராடியோ, தேவைக் கருதியோ நடந்தேறி வருகிறது. இட ஒதுக்கீட்டின் மூலம், சட்டத்தின் மூலம் ஒடுக்கப் பட்ட சமூகம் முன்னேற வழிவகைகள் கண்டறிந்ததில் தவறே இல்லை. அது தேவையும் கூட. ஆனால் அதே வேளையில், பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்கும் காலத்திற்கு மாறிக் கொண்டிருக்கிற வேளையில் இட ஒதுக்கீடு தவறு எனக் குறிப்பிடுபவர்களை ஆதிக்க சாதி வெறியர்கள் என ஓரம் கட்டும் முயற்சிகளும் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பதற்கு சமமானதே!!!

இன்று சதவிகித அளவில் குறைவாக உள்ள உயர்  சாதிகள், அவர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய சமூகங்கள் எப்படி முன்னேறும் என்ற கேள்வியை எழுப்புபவர்களை  ஆதிக்க சாதி வெறியர்கள்  என சொல்பவர்கள் தங்களை முற்போக்குவாதிகளாகக் காண்பிக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையிலான ஒடுக்கப் பட்ட சமூகங்கள் தங்கள் போராட்டத்தின் மூலமும் வாக்கு வங்கிகள் மூலமும் தங்கள் நிலையை நாட்ட இயலும். ஆனால் சதவிகித அளவில் குறைந்துள்ள மக்கள் எண்ணிக்கையிலான உயர் சாதியின் குரலை எழுப்ப விடாமல் பார்த்துக் கொள்வதும் ஜனநாயக் கொலைகளே!!

சாதி பற்றி பேசலாமா?

பகுத்தறிவு வாதிகள் தங்களின் வெற்றியாகக் குறிப்பிடுபவைகளில் ஒன்று, தமிழ் நாட்டில் தான் பெயருக்குப் பின்னால் சாதி போடும் பழக்கம் இல்லை. மற்ற மாநிலத்தில் இன்றும் சாதியைத் தங்கள் பெயருக்குப் பின்னால் போடுகிறார்கள். இன்றைய சூழலில்  தமிழ் நாட்டுல சாதிக்  கலவரம் அதிகமா??? அல்லது கேரளா போன்ற மாநிலங்களில் நாயர், நம்பூதிரி , ராவ் என்று சாதியைப் போடுற மாநிலங்களில் சாதிக் கலவரம் அதிகமா???

இக்கேள்வி இங்கு எழுப்புவது மிக அவசியமாகிறது. எனக்குத் தெரிந்து திருமண அழைப்பிதழ் போன்ற குடும்ப விழாக்களில் இன்றும் சாதி போடுகிறார்கள். பதிவு அலுவலகங்களில் போடாமல் விட்டது தான் உண்மையிலேயே சாதனை என்று சொல்வார்களேயானால் அவர்களைப் பரிதாபத்துடன் மட்டுமே பார்க்க இயலுகிறது.  சாதிப் பெயரை, பெயருக்குப் பின்னால் போடாமல் போனதால் இங்கு சாதி பற்றிய சிந்தனை மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறதா? சாதிப் பிரச்சினைகள் குறைந்துள்ளனவா? உறுதியாக இல்லை என்று சத்தியம் செய்து சொல்ல இயலும். மாறாக சாதிப் பெயர்கள் உள்ள கேரளா, ஆந்திராவைக் காட்டிலும் கலவரங்கள் தமிழ்நாட்டில் தானே அதிகமாக நடைபெற்று வருகின்றன.

தென் மாவட்டம் மட்டுமே சாதிப் பிரச்சினையைக் கொண்டுள்ளது போல சொல்லிக் கொள்கிற பெரும் சமூகம் கூட , இன்னொருவரின் சாதியைப் பற்றி அறிய முயல்கிறது என்பதைக் கூர்ந்து கவனித்தால் தெரியும். ஆனால் சாதியிலிருந்து தங்களை வெகு தொலைவில் வைத்துள்ளது போல பாவனையை மட்டுமே கல்வி கற்ற சமூகம் கொண்டுள்ளது. இதை இப்படிச் சொல்லலாம். சாதிப் பற்றி தெரியும் தந்திர அரசியல் வார்த்தைகளை கல்வி கற்ற சமூகம் மேற்கொள்கிறது என்பதே யதார்த்தம். இம்மாதிரியான உள்ளுக்குள் ஒன்றையும் வெளியில் வேறு மொழியில் பேசும் கள்ள மௌனம் எவ்வகையைச் சார்ந்தது.

நம்முடைய அரசியல் அமைப்பே சாதியின் அடிப்படையில் இயங்கும் போது சாதி தவிர்த்துப் பேசச் சொல்வது எவ்வகையில் பிரச்சினையைத் தீர்க்க இயலும். இன்று என்ன சாதி நீங்கள் ? என்று கேட்பது அநாகரிகம் என்ற ஒற்றை நிலையைத் தவிர சாதிக் குறித்த சிந்தனைகள் அவ்வாறே உள்ளன. நீங்கள் என்ன சாதி என்று அறியாமல் இருப்பது நல்லது தான். ஆனால் உள்ளுக்குள் அடுத்தவன் யார், எந்த சாதியைச் சேர்ந்தவன் என்ற மன நிலையை வளர்க்கும் அரசியலும், கற்ற சமூகத்தாலும் ஒரு புண்ணியமும் இல்லை.

அரசியல் ரீதியான மாற்றங்கள்  மட்டுமே, சாதியை மீண்டும் ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லும்.

மதம் தான் தனி மனிதனின் வாழ்வியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கும் விடையளிக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.

மனித குலம் இருக்கிற வரையில், இனக் குழுவாக மனிதன்  நிச்சயம் பிரிந்து கிடப்பான் என்பதே உண்மை. ஒவ்வொரு குழுவின் இயல்பே தன்னை உயர் குடியாளனாக மற்ற சமூகத்தின் முன் காண்பிக்க முயல்வதே !! இதில் இயன்ற வரை சமத்துவம் பேணிக்காக்க முயல்வதில் தவறில்லை. ஆகையால் சாதியை ஒழித்து விட்டால் சமத்துவம் மலரும் என்பதைக் காட்டிலும் பிற்போக்கான சிந்தனை எதுவும் இருக்க இயலாது. இது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தினான் என்பது போலத் தான் இருக்கும்.

எல்லா சமூக அமைப்பு முறைகளிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும். அதை வைத்துக் கொண்டே தீமைகளாக உங்கள் காலக் கட்டத்திற்குத் தவறாகப் படுபவைகளில் மாற்று நடைமுறைகளை அமல்படுத்துவதே வாழ்வியலை சரியாக அணுகும் முறை. அது இன்றைய காலக் கட்டத்திற்கு இட ஒதுக்கீடு அவசியம் என்பதை உணர்வது போல!!!

நாளை இந்நிலை மாறலாம். சிறுபான்மை சமூகமான உயர் சாதியினரும் அரசின் சலுகைகளில் சமமாக நடத்த வேண்டும் என்ற சிந்தனை நிலைப்பெறும் காலத்தில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் நிகழ்த்துவதும் சட்ட ரீதியிலான மாற்றங்கள் கொணர்வதும் போதுமானது. சாதியை ஒழிப்பதால் அல்ல!

2 responses

  1. எல்லாவற்றையும் ‘இப்படி இருந்திருக்க வேண்டும்’ என்று கற்பனையில் எழுதுகிறீர்கள்! வர்ணம் சாதியை ஏற்படுத்தியிருக்க முடியாது என்று அறைக்குள் அமர்ந்தபடி கற்பனையில் கண்டுபிடிக்கும் முன்பு படிக்க ‘வர்ணம் சாதியான கதை’ – மாமேதை அண்ணல் அம்பேத்கார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s