கவரி மான் – சிறுகதை :

friends

சார்…. சார்… உங்களை ரவிக் குமார் சார் கூப்பிடுறார். உடனே வரணுமாம். ஆபீஸ் அசிஸ்டன்ட் சொல்லி விட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சென்றான்.

அவனைப் பொறுத்த வரையில் மெசேஜை பாஸ் பண்ணனும். அவ்வளவு தான். என்ன மனுசன்டா இவன்னு நினைச்சுக்கிட்டே பாஸ் அறைக்குள் சென்றேன்.

சார்….. கூப்பிட்டீங்களா?

யெஸ் … சிவா , ப்ளீஸ் உட்காருங்க. எப்படி இருக்கீங்கன்னு சகல உபசரிப்புடன் வழக்கம் போல குசலம் விசாரித்தார்.

 

எல்லா கம்பெனியிலும் ஏன் தனி நபர் மீதான அக்கறையைக் காட்டுகிறார்கள்? அதன் பின்னரே ஏன் ஜாப் பற்றி பேசுகிறார்கள்?. ஒருவேளை அது ஒரு நெருக்கத்தைக் கொடுக்கலாம். வேலை வாங்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் வெறும் வேலையை மட்டும் பேசி விட முடியாது. உங்களைக் கவர வேண்டும். அவர் உங்களுக்கானவர் என்ற நம்பிக்கை வேண்டும். இது ஒரு தந்திரம் என்று கூட பார்க்கப் படும். ஆனால் இந்த தந்திரம் அவசியமானது. நம் வீட்டில், நமக்கு ஒரு சின்ன காரியம் ஆக வேண்டுமானால், சிறு குழந்தைகளிடமே நாம் காட்டுகிற அன்பு வார்த்தைகளைப் போன்றதே.

சிவா, நீங்க ஒரு கஸ்டமரை போய் பார்க்கணும்.  டி அண்ட் டி கஸ்டமர் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கே தெரியும்.

அந்த கஸ்டமர் சைட்ல இருக்கிற மகாராஜன், நம்மை மக்களை நோண்டு .. நோண்டுன்னு நோண்டி நொங்கை எடுக்கிறார்.

நீங்க தான் இந்த மீட்டிங் அட்டெண்ட் பண்ணனும். விவாதம் ஏதும் பண்ண வேணாம். ஏன்னா, அவங்க மூலமா நமக்கு மிகப் பெரிய கான்ட்ராக்ட் கிடைக்கப் போகுது.

ஓகே … சார். ஐ வில் டேக் கேர்  என்று சொல்லி விட்டு வந்தேன்.

ரெண்டு நாள் கழிச்சு டி அண்ட் டி கம்பெனிக்கு நானும் டிசைன் டீமும் போயிருந்தோம்.

ஐ ஆம் மகாராஜன், ப்ராஜெக்ட் மானஜர் . வெல்கம்.

யெஸ் ,  தாங்க்யூ மிஸ்டர் மகாராஜன். ஐ ஆம் சிவா, ப்ராஜெக்ட் மானஜர் , ஐஒடி கம்பெனி அண்ட் ஹி இஸ் நாதன், டிசைனர் .

மகாராஜன் கான்ட்ராக்ட் படி சில தேவையானவற்றையும், சில விஷயங்களை டெச்னிகல் , லாஜிக்கல் என காரணம் அடுக்கிக் கேட்டார். பொறுமையாகக் கேட்டுக் கொண்ட நான் சிலவற்றிற்கு தலையாட்டினேன். சிலவற்றிக்கு , வி வில் கம் பாக் டு யூ என்று சொல்லி வைத்தேன்.

மீட்டிங் முடிந்தது. பார்க்க தமிழ் மாதிரி இருக்கீங்கன்னு மெல்ல பேச்சுக் கொடுத்தேன். ஆமாங்க , என்னோட ஊர் நாகர்கோவில் என்றார்.

அப்படியா….. எனக்கும் அதே ஊர் தான் என்றேன். அப்போது எனக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. அந்தக் கணம் நாங்கள் கஸ்டமர் & கான்ட்ராக்டர் என்பதை மீறி எங்களுக்குள் இனம் புரியாத பரவசம். மனிதர்கள் இப்படித் தானிருக்கிறார்கள்.

வெளி நாட்டில் எந்த இந்தியனையும் எளிதில் காண இயலாத இடத்தில் ஒரு இந்தியனைக் கண்டால், இனம் புரியா மகிழ்ச்சி. அதைக் காட்டிலும் நம் மாநிலம் என்றால் கூடுதல் மகிழ்ச்சி. அதைக் காட்டிலும் நம் மாவட்டம், அதுவே நம்  ஊருக்குப் பக்கம், அதிலும் நம் ஊர் என்றால் மகிழ்ச்சிக்கு சொல்லவும் வேண்டுமோ? இது தான் இனப் பற்று என்பதோ? ஏனோ இந்திய மனித மனம் உறவுகளுக்குள் ஏங்கிக் கிடக்கிறது என்பதை வெளிக்காட்டும் கணங்கள் தான் அவையா? குடும்ப உறவுகளில் இருந்து பணி நிமித்தமாக வெளி வந்த மனிதனின் எதிர் வினைகள் தான் அவையா?

எனது ஊர் என்றவுடன், எங்கே படித்தீர்கள் என்றேன். நான் தூய இருதய மேல் நிலைப் பள்ளி என்றார். அப்படியா நானும் அங்கதான் படிச்சேன். நீங்க எந்த செட்? நான் 91ல் 10 ஆம் வகுப்பு படிச்சேன். சொனனது தான் தாமதம்….

டேய் மகா, என்னைத் தெரியுதாடா….

நீ… நீ….. அவன் என்னைப் பற்றி கேட்பதற்குள் , நான்தாண்டா சிவா…. உன்னோட எதிரி…. ன்னு சொல்ல, நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்  கொண்டோம். இருவரின் சட்டையையும் கண்ணீர் நனைத்திருந்தது. சில நிமிடங்கள் பேச இயலா மௌனம். பரஸ்பரம் நலம் விசாரித்தோம். வீட்டுக்கு வருமாறு கோரிக்கை விடுத்தான். வருகிறேன் என்று வந்து விட்டேன்.

காரில் ஏறி அமர்ந்தேன். பள்ளி நாட்கள் நினைவுக்குள் ஓடின . அப்போது நாங்கள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். அப்போ நான், ஜோசப், அந்தோணி மூணு பெரும் ஒரு அணி. பிரபோஸ், மகாராஜன், குமரன் மூணு பெரும் ஒரு அணி. எப்படி இந்த அணி பார்ம் ஆச்சுன்னு கேட்காதிங்க. சிரிப்பீங்க. முதல் இரு இடங்களுக்கு ஜோசப், பிரபோஸ் இருவருக்கும் போட்டி. எனக்கும் மகாராஜனுக்கும் மூன்று நான்காம் இடங்களுக்குப் போட்டி. குமரன், அந்தோணி இருவருக்கும் ஐந்து ஆறாம் இடங்களுக்குப் போட்டி.

இந்தப் போட்டி படிப்போட நின்னால் பரவாயில்லை. ஒவ்வொரு இடத்திலும் பகையாகவும் பொறாமையாகவும் வளர ஆரம்பித்தது. கிளாஸ் லீடர், விளையாட்டு டீம் கேப்டன் என கிளாஸ் முழுக்க இரு அணிகளாகப் பிரிந்து கிடந்தோம். ஒருமுறை கிளாஸ் லீடர் தேர்தல் வந்தது. எங்க அணியில் இருந்து நானும் எதிர் அணியில் இருந்து மகாராசனும் நின்றோம். அந்தத் தேர்தலில் ஒரே ஒரு ஓட்டில் நான் வெற்றி பெற்றேன். அது வரையிலும் கொஞ்சமாவது பேசி வந்த நாங்க , அதுக்கப்புறம் பேசவே இல்லை.

அதுக்கப்புறம் மின்னல் படத்தில் வருகிற மாதவன் அப்பாஸ் மாதிரி முறைச்சுகிட்டே இருப்போம். அது கிட்டத்திட்ட ஒன்பதாம் வகுப்பு வர நீடித்தது. பத்தாம் வகுப்பில் நல்லா படிக்கிற பையன்களை ஒவ்வொரு கிளாஸ்லேயும் பிரிச்சு போட்டாங்க. நானும் மகாவும் வேறு வேறு வகுப்பிற்கு பிரிந்து விட்டிருந்தோம். மெல்ல மெல்ல மகாராஜனுக்கு என் மீதும் எனக்கு மகாராஜன் மீதும் இருந்த கோபம், பொறாமை குறைந்திருந்தது.

மகாவோட அப்பா , பத்தாம் வகுப்பு படிக்கிறப்ப இறந்து விட்டார். அந்த வயது நட்பும் பகையும் எல்லா வயதைக் காட்டிலும் இறுக்கமானது. யார் விட்டுக் கொடுப்பது என்பதில் இருக்கிற சிக்கல் யாராலும் பிரித்தெடுக்க இயலாதது. எனக்கு அவனோடு பேச வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் நானா அவனோடு சண்டை போட்டேன். அவன் தானே , நான் கிளாஸ் லீடர் போட்டியில் ஜெயிச்சுட்டேன்னு சண்டை போட்டான். பேசாமல் இருந்தான். அவனே பேசட்டும்னு இருந்தேன்.

ஆனாலும் அவன் அப்பாவின் இறப்பு எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. மகா நம்முடன் பேச மாட்டானா, பிரபோஸ் நம்முடன் பேச மாட்டானா என்று ஏங்கிய இரவுகள் உண்டு. தூக்கத்தைத் தொலைத்த இரவுகள் பல. ஒவ்வொரு இரவிலும் மகாவிடம் நாம் இப்படிப் பேச ஆரம்பிக்கலாமா, இந்த சந்தர்ப்பத்தில் பேசினால் சரியாக இருக்குமா? எப்படி பேசுவது? எங்கு பேசுவது? பேசினால் பேசுவானா எனப் பல கேள்விகள் துளைத்துக்  கொண்டிருந்த இரவுகள் கடினமானவை. அம்மா, என்னடா இன்னும் தூங்கலையா என்று கேட்ட நாட்கள் உண்டு.  காதலை வெளிப்படுத்தவே பலர் ஏங்கி இருப்பார்கள். ஆனால்  நட்பு எனக்குள் அந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஒருநாள் காதல் கடிதம் போல மகாவிற்கு  நீண்ட கடிதத்தை யாருக்கும் தெரியாமல் எழுதி வைத்திருந்தேன். அதில் முழுக்க முழுக்க நான் நல்லவந்தாண்டா , ஏண்டா என்னோட சண்டை போட்டேன்னு கேள்விகளும் என் ஏக்கத்தையும் கொட்டி எழுதி வைத்தேன்.

எங்களை நாங்கள் புரிந்து கொண்டாலும் ஈகோ எங்களுக்குள் யார் முதலாவது பேசுவது என்பதில் சிக்கல் இருந்தது. மகா சண்டையை மறந்து விடலாம் என்று மருத நாயகம் மூலம் தூது அனுப்பி இருந்தான். எனக்கும் அதில் உடன்பாடுதான். ஆனால் அவன் தான் என்னிடம் முதலில் பேச வேண்டும் என்று மருத நாயகம் மூலம் செய்தி அனுப்பினேன்.

அது மகாவிற்கு நிறைந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும். நான் தானே சண்டையை மறப்போம் என முதலில் அவனுக்குத் தூது அனுப்பினேன். அதன் பிறகும் சிவாவுக்கு இத்தனை ஈகோவா, அப்படியானால் அவனே பேசட்டும் என்று மருதுவிடம் சொல்லி விட்டான்.

ஆண்டுத் தேர்வு என்பதால் இதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்காமல் தேர்வுக்குத் தயாரானோம். தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பாகவே மகாவை, தந்தை இல்லாத காரணத்தால் அவனுடைய மாமா, அவனையும் அவன் தாயையும்  சென்னைக்கு கூப்பிட்டு சென்று விட்டதாகத் மருது மூலம் தகவல் கிடைத்தது.

காலச் சக்கரம் சுழன்றது. மகாவைப் பார்த்து இருபது வருடங்களாகி விட்டன. இன்று தான் அவனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது அலை பேசியை எடுத்தேன். கால் செய்யலாம்னு நினைத்துக் கொண்டிருந்த போது , மகா விடம் இருந்து ஒரு கால்.

எடுத்தவுடன் இருவரும் உதிர்த்த அந்த வார்த்தை ” மன்னிச்சிடு நண்பா”.

 

2 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s