கும்கி – திரை விமர்சனம்

kumki

படம் முழுக்க தியாகத்தையும் மரியாதையையும் ஆத்தோ ஆத்துன்னு ஆத்தியிருக்கிறார்கள். இனி கதைக்குச் செல்வோம்.

பழங்குடி இன மக்கள் வாழ்கிற நிலப் பகுதியில் பெரும் பணமுதலைகளால் கட்டிடங்கள்  காடுகளில் எழுப்பப்படுவதால் யானைகள் ஊருக்குள் வந்து விடுகின்றன. அதில் கொம்பன் என்ற மதம் பிடித்த யானை  பழங்குடி மக்களின் நிலப் பகுதிக்குள் நுழைந்து சிலரைக் கொன்று விடுகிறது. அதையடுத்து கிராமத் தலைவர் மற்றும் பொது மக்களிணைந்து கொம்பனை அடக்க கும்கி யானையை  ஏற்பாடு செய்கிறார்கள். கும்கியின் பயிற்சியாளர் குடும்ப சூழ்நிலைக் காரணமாக வர இயலாமல் போக, விக்ரம் பிரபு, தம்பிராமையா மற்றும் உதவியாளர் அஸ்வின் ஆகிய மூவரும் அந்த கிராமத்தில் நுழைகிறார்கள்.

கும்கிக்கு மாற்றாக இரு நாட்களுக்கு மட்டுமென மாணிக்கத்துடன்(யானை) வந்த விக்ரம் பிரபு, கிராமத் தலைவரின் மகள் மீது காதல் கொள்ள கிராமத்தை விட்டு வெளியேற மனமில்லாமல், கொம்பனை அடக்க தன் யானைக்குத் தேவையான பயிற்சிகளை  அளிக்கிறான். தன் காதலை அடைய அவன் கொடுத்த விலை என்ன? இப்போதெல்லாம் உங்கள் நெஞ்சம் கனக்கச் செய்ய யாரையாவது இறக்கச் செய்ய வேண்டும். அங்கு தான் இயக்குனர் நிற்பார் என்ற வகையில் இப்படத்தில் தனது எஜமானுக்காக மாணிக்கமும், தம்பி ராமையா மற்றும் உதவியாளன் அஸ்வினும் உயிர் துறக்கிறார்கள். அவனின் காதல் நிறைவேற அத்தனை பேரும் உயிர் நீத்தார்கள். அப்படியானால் ஏன் ஹீரோவும் ஹீரோயினும் சேரவில்லை?

பழங்குடி இன மக்கள் தங்களை கொம்பனிடம் இருந்து காப்பாற்ற வந்த தெய்வமாக, விக்ரம் பிரபு அன்ட் கோவை நினைக்கிறார்கள். தெய்வத்திற்கும் மூதாதையருக்கும் கொடுக்கிற அத்தனை மரியாதையையும் கொடுக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அத்தனை உபசரிப்புகளும் நேரம் தவறாமல் கிடைக்க வழி செய்கிறார்கள்.  நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களை அழிக்க சிறிதும் தயங்கவில்லை. ஒரு நிலை வரையிலும் காதல் பித்தில் அதைக் கண்டுகொள்ளாத ஹீரோ லக்ஷ்மிமேனன் ஜோடி யாருக்கும் தெரியாமல் அமர்ந்திருப்பதை வன அதிகாரிகள் பார்த்து விட்டு கிராமத்தில் ஊதி விடுகிறார்கள்.

அதன் பிறகு எப்படி ஹீரோ இவர்களை எதிர்த்து ஹீரோயினைக் கைபிடிப்பான் என்று எண்ணுகிற வேளையில், ஹீரோயினின் தந்தையான பழங்குடி இனத் தலைவர் ஹீரோவிடம், தம்பி அவங்க சொன்னதை விட்டுத் தள்ளுங்க…. உங்க மேலயும் என் பொண்ணு மேலயும் எனக்குப் பயங்கர நம்பிக்கை இருக்கு. நீங்க எங்களோட எல்லைச் சாமி என்கிறார். அதைக் காப்பாற்ற ஹீரோ ஹீரோயினிடம் உங்க அப்பா எனக்கு உன்னைத் தரமாட்டேன்னு சொன்னா, அத்தனை போரையும் எதிர்த்து நின்னுருப்பேன். ஆனா உங்க அப்பா அறுவடை நெல்லை எனக்குத் தந்துட்டு என்னை சாமியாய்ப் பார்க்கிறேன் என்கிறார் என்று ஹீரோவே  தங்கள் காதலுக்கு ஒரு கட்டத்தில் முற்றுப் புள்ளி வைக்கிறார்.

ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் எங்க வீட்டுப் பெண்களை கடந்த இருநூறு வருடங்களாக எங்க இனத்துக்குள்ளேயே தான் திருமணம் செய்து வைப்போம். எங்கள் குல வழக்குப் படி வெளியாட்களுக்கு மணமுடித்து வைப்பதில்லை என்கிறார்.

அதை நிறைவேற்ற பிரபு சாலமன் நினைத்தாரோ என்னவோ, ஹீரோவும் ஹீரோயினும் சேராமலேயே கதையை முடிக்கிறார். கலப்புத் திருமணத்தை ஆதரிப்பவர்களுக்கு கதையின் இந்த முடிவு எரிச்சல் அடையச் செய்யலாம்.

அனைத்து கதாபாத்திரங்களும் மிக அருமையாக கதைக்கு ஏற்ப நடிக்க வைக்கப்பட்டிருப்பது மிக அருமை. படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவு. ஒளியைப் பதிவு செய்த விதம் மிகவும் அற்புதம்.அதில் குறிப்பாக நாயகியின் கண்களில் உள்ள பயம் தெளிவாக காட்டபட்டுள்ளது. நாயகியின் காஸ்ட்யூம் அவரின் அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறது.

இடங்கள் (location) தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் அழகு. அதைவிட முக்கியம், அதை மிகவும் தெள்ளத்தெளிவாக காட்டிய பெருமை காமிராவை பயன்படுத்திய விதத்தையே சேரும்.

நாயகன், நாயகியை ரசிக்கும் விதத்தையும்,காதலித்த விசயத்தையும், மிகவும் அருமையாக, நிதானமாக காட்டப்பட்டிருக்கிறது.

வெறும் வாரிசு என்று தன்னை அடையாள படுத்த விரும்பாமல் விக்ரம் பிரபு இப்படத்திற்காக நிறைய வருத்தி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நாயகனின் வீரம், கோபம், தைரியம் என கேரக்டர் நடவடிக்கையை வைத்து சொல்லிருந்தாலும் அது கதைக்கு தாய்மாமன் (ராமய்யா) கிட்ட காட்ட மட்டும் தான் பயன்பட்டிருக்கிறது. யானைக்குப் பிறகே ஹீரோ என்பதால் இருக்கக்கூடும். அதன் அளவை நிருபிக்க யாரிடமும் வெளிபடுத்த முடியாத அளவுக்கு கதையை மிகவும் தந்திரமாக நகர்த்திய விதம் அருமை. அது பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகப் படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

தம்பி ராமையா மைனாவைப் போலவே தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மருமகனே ஒரு கட்டத்தில் ஊரை விட்டுப் போய் விடலாம் என்கிற காட்சியில் ” மாப்பிள… இப்ப என்ன அந்தப் பொண்ணு மாட்டேன்னா சொன்னுச்சு … என சொல்கிற காட்சியிலும், கொம்பன் இறங்கிட்டான் , கும்கி விரட்டப் போகுதுன்னேன்னு ஹீரோயின் சொல்ல , கோயில் யானை எப்படிம்மா கொம்பனை விரட்டும், அவனும் யானையும் திரும்பாதும்மா என்று சொல்லி விட்டு, அப்புறம் ஏன் இங்க இன்னும் இருக்கோம்னு கேட்கியா …. கிறுக்குப் பய உன்னைக் காதலிக்காம்மா…. அதான் இங்கேயே இருக்கான்னு சொல்கிற காட்சிகளில் நின்று விடுகிறார்.

காதலை வழக்கமாக பிரிப்பதற்கு  கத்தி, சண்டை, மோதல், மிரட்டல் போன்றவைகளை பயன்படுத்திய தமிழ் சினிமாக்களில், நம்பிக்கை என்ற ஒரே அற வழி ஆயுதமாக பயன்படுத்தி இருப்பது வித்தியாசத்தை காட்டுகிறது.

அனைத்துப் பாத்திரங்களும் கதையை உணர்ந்து நடித்திருக்கிறது. குறிப்பாக கிராமத் தலைவரும் ஜூனியர் பாலையாவும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்கிறார்கள்.

ராம நாராயணனைப் போல மிருகங்களை வைத்து காட்சிக்குக் காட்சி தில்லாலங்காடி வேலைகளை செய்யாமல் இருந்தமைக்காக பிரபு சாலமோனுக்கு ஒரு ஷொட்டு !.

மொத்தத்தில் கும்கி – யானையின் உயிர்த் தியாகம். ஹீரோவின் காதல் தியாகம்.

குறிப்பு: இதன் திரை விமர்சனத்தை நண்பர் தாமோதரன் எழுதி அனுப்பியுள்ளார். அவருக்கு எனது நன்றிகள். வாழ்த்துக்களும் கூட.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s