தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி – 2

RTI 3

” இந்தியாவிற்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம்” என்றே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வர்ணிக்கிறார்கள் தகவல் அறியும் உரிமைப் போராளிகள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி 1 ல் , இச்சட்டம் எவ்வாறு நிறைவேற்றப் பட்டது என்பதைக் கண்டோம். இப்பகுதியில், சட்டம் என்ன சொல்கிறது என்பதையும், எவற்றையெல்லாம் தகவல்களாகப் பெற முடியும் என்பதையும் பார்க்கலாம்.

சட்டம் என்ன சொல்கிறது?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 ன் படி, தகவலறியும் உரிமை என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை. இந்த சட்டத்தின் படி அரசு அலுவலர்களை கேள்வி கேட்கக்கூடிய அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அரசின் நிர்வாகத்திலிருந்து தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற இச்சட்டம் வழிவகை செய்கிறது. அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, செயல் திறன், அதிகாரிகளிடையே பொறுப்புடைமை ஆகியவற்றை மேம்படுத்துவதே இச்சட்டத்தின் அடிப்படை நோக்கம்.

எங்கெல்லாம் தகவல்கள் கேட்கப்படலாம்?

மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், அரசால் ஏற்படுத்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், நீதி மன்றங்கள், அரசிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி பெறும் நிறுவனங்கள் என பலதரப்பிலிருந்தும் நமக்கு தேவையான தகவல்களைப் பெற இயலும்.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஜம்மு-காஷ்மீர் தவிர அனைத்து மாநிலங்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.

யாரெல்லாம் தகவல்களைக் கேட்க முடியும்?

இந்தியக் குடிமகன் யாரும் இச்சட்டத்தின் கீழ் தகவல்களைக் கேட்க உரிமை உண்டு. அதேபோல், என்.ஆர்.ஐ என்றழைக்கப்படும் ” வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்திய வம்சாவளியினரும்  கூட தகவல்களை அறியும்  உரிமை இருக்கிறது. இந்தியக் குடிமகன்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தகவல் பெறும் உரிமைக்காக தங்களது விண்ணப்பங்களை, அந்தந்த நாடுகளிலுள்ள இந்தியத் தூதரக அலுவலகங்களில் விண்ணப்பிக்கத் தேவையான கட்டணத் தொகை மற்றும் அதை செலுத்தும் முறை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

RTI 4

தகவல் அறிய கட்டணம் எவ்வளவு?

நீங்கள் கேட்க விரும்பும் தகவல்களை பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவுத் தபாலில் மனுவாக எழுதி சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்பினால் கேட்ட தகவல் 30 நாட்களுக்குள் வீடு தேடி வரும். 

தகவல்கள் தரவில்லையெனில் என்ன தண்டனை?

எதற்காக இந்தத் தகவல்களைக் கேட்கிறீர்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள்? நீங்களும் சொல்ல வேண்டியதில்லை. கேட்ட தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரி தரவில்லையெனில், அதிக பட்சமாக 25000 ருபாய் வரையில் அபராதம் விதிக்க வழி செய்திருக்கிறது இச்சட்டம். இந்த அபராதமும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் சம்பளத்திலிருந்தே பிடிக்கப்படும். அதனாலேயே அதிகாரிகள் பதறியடித்துக் கொண்டு தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச சட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு மனுவைப் போட்டால் அரசு அலுவலகம் ஜெட் வேகத்தில் செயல்படும். “RTI அப்ளிகேசன்பா … என ஒட்டு மொத்த அலுவலகமும் அஞ்சி நடுங்குவதை நீங்கள் பார்க்க இயலும். இது போன்ற தகவல்களுக்கு பதில் அனுப்பி விட்டுத் தான் தங்கள் மற்ற பணிகளைக் கவனிப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!!!

எதெல்லாம் தகவல்கள்?

” விவரம் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளும் தகவல் என்கிற பிரிவின் கீழ்தான் வரும்.” என்கிறது இச்சட்டம். பதிவேடுகள், பதிவுப் பத்திரங்கள், ஆவணங்கள், குறிப்புகள், கருத்துரைகள், குறிப்பாணைகள், ஆலோசனைகள், செய்தி வெளியீடுகள், வரை படங்கள், படிவங்கள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஆணைகள், ஒப்பந்தங்கள், புகார்கள் நாள் விவர குறிப்பேடுகள், அறிக்கைகள், இ – மெயில்கள் எல்லாமே தகவல்கள் தான்.

இந்தத் தகவல்கள் எப்படி இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும் அதைப் பெறுவதற்கு இச்சட்டத்தின் படி முடியும். அதற்கு உரிமையும் உண்டு. அதிகாரிகளின் பொறுப்புகள், அவர்களுடைய சம்பளம், அலுவலக நடைமுறைகள், அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்கள், பணிகளை செய்வதற்கான விதிமுறைகள், ஒழுங்கு முறை விதிகள் திட்டங்களை உருவாக்குவது, அமலாக்குவது, பட்ஜெட் ஒதுக்கீடுகள் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? திட்டப் பயனாளிகள் யார்? பொது மக்களைப் பாதிக்கும் கொள்கை பற்றிய அரசின் உத்தரவுகள், நிர்வாக நடவடிக்கைகளுக்கான காரணங்கள் ஆகியவற்றை இச்சட்டத்தின் கீழ் கேட்கும் உரிமை இந்தியக் குடிமகனுக்கு உண்டு.

அரசியல் மற்றும் சமூக நலன் கருதிய என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?

இதெல்லாம் சரி? எந்தத் தகவல்களைப் பெறுவது? எது சமூக நன்மை? எது தனி நபர் நன்மை? இதை வைத்து என்ன சாதிக்கலாம் போன்ற  கேள்விகள் எழக்கூடும். உதாரணமாக சமூக விடயங்களைப் பற்றியோ அரசியல் தலைவர்களைப் பற்றியோ அறிய  விரும்பினால் நீங்கள் பின்வருமாறு கேள்விகள் எழுப்பலாம்.

சோனியா காந்தியின் கடந்த ஆண்டு பயண செலவு என்ன? பிரதமர் மன்மோகன் சிங் வீட்டிற்கு இந்த வருடம் முழுவதும் எவ்வளவு மின்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது? நாடாளுமன்றத்தில் அழகிரி பெர்போர்மன்ஸ் எப்படி? கருணாநிதி எத்தனை நாள் சட்டசபை வந்துள்ளார்? ஜெயலலிதாவின் சொத்துக் கணக்கு என்ன? அமைச்சர்களின் காருக்கு எவ்வளவு பெட்ரோல் செலவாகிறது? சென்னை அண்ணா அலுவலகத்தில் ஒருநாளைக்கு சராசரியாக எவ்வளவு வாகனங்கள் போகிறது? தொகுதிக்கு அளிக்கப்பட நிதியில் இதுவரை என்னென்ன திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? இதுவரை என்ன நிறைவேற்றி இருக்கிறார்? இப்படி எந்தத் தகவலையும் விருப்பம் போல கேட்கலாம்.

சாதாரணக் குடிமகன் தனி நபர் நலன் சார்ந்து என்னென்ன கேள்விகள் கேட்கலாம்?

உதாரணமாக சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களை அலைய வைக்கிறார்கள் . அதைத் தவிர்த்து சாதி சான்றிதழ் உங்களைத் தேடி வர வேண்டுமா? கேள்விகளை இவ்வாறு தொடுங்கள்.

உங்கள் மனுவில் எழுப்பப்பட வேண்டிய கேள்விகள்:

1. சாதி சான்றிதழுக்கு என தனி விண்ணப்பப் படிவம் உள்ளதா?

2. சாதி சான்றிதழ் கேட்டு ஒருவர் விண்ணப்பித்தால் அதனை எத்தனை நாட்களுக்குள் தர வேண்டும் என்று அரசு விதிகள் எதுவும் இருக்கிறதா?

3. விண்ணப்பத்தில் தவறு இருந்தால் எத்தனை நாட்களுக்குள்ளாக தெரிவிக்கப் பட வேண்டும்?

4. சாதி சான்றிதழ் கொடுப்பதற்கு கால தாமதம் ஆக என்ன காரணம்?

5. சாதி சான்றிதழ் கேட்டு கடந்த மாதம் கேட்டு இதுவரை கிடைக்காதவர்கள் எத்தனை பேர்? அவர்களின் விவரம் வேண்டும்.

6. சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த கணேஷ் என்பவரின் மனுவின் நிலை என்ன? ( எனக்கு, எனது போன்ற கேள்விகளைத் தவிர்த்தல் நலம்)

7. கணேஷின் சாதி சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

8. கணேஷ் அளித்த மனு என்ன காரணத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?

9. போலியாக சாதி சான்றிதழ் பெற்றவர்களின் விவரம் வேண்டும்?

10. குறிப்பிட்ட கால அளவுக்குள் சாதி சான்றிதலோ , விளக்கமோ கிடைக்காவிட்டால் யாரிடம் முறையிட வேண்டும்.

11. அவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

இப்படி தகவல் அறியும் திட்டத்தின் கீழ் நீங்கள் தனி நபர் நலன் சார்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே போகலாம்.

யூகத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்க இயலுமா? அரசின் இலவச திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? என்பதைப் பற்றியும், எப்படித் தகவல்களைப் பெறுவது? பொதுத் தகவல் அதிகாரியின் கடமை என்ன? மூன்றாம் தரப்பினர் பற்றிய தகவல்கள் கேட்க இயலுமா? மனுவை எப்படி அனுப்புவது? மனு சாம்பிள் போன்றவற்றை அடுத்த பாகத்தில் காணலாம். பரக்கத் அலி அவர்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் புத்தகம் பற்றி அறிய இன்னும் பயணப்பட வேண்டியுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s