மனுவை அனுப்புவது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கட்டணத்துடன் மனு எழுதி தயார் செய்து விட்டீர்கள். மனுவை பதிவுத் தபாலில் அனுப்பினால் மட்டுமே உங்களால் வாதிட முடியும். இல்லையெனில் மனு கிடைக்கவில்லை என்று பதில் வந்தால் ஏதும் செய்ய இயலாது. ஆகையால் சாதாரண தபாலிலோ கூரியரிலோ அனுப்ப வேண்டாம். பதிவுத் தபாலில் அனுப்பும் போது acknowledgement மனுவை அனுப்பி வைக்க வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்டவர், ” பெற்றுக் கொண்டேன்” என்று acknowlegement கார்டில் கையொப்பமிட்டுத் தருவார். இந்த கார்டைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நேரிலும் மனுவை அனுப்பலாம். மனுதாரரோ அல்லது அவருக்கு வேண்டப்பட்டவரோ கூட மனுவை நேரடியாக அளிக்கலாம். அதைப் பெறுகிற பொதுத்தகவல் அதிகாரியிடம் இருந்து ஒரு ரசீதை மறக்காமல் வாங்குங்கள். அதில் அவ்வதிகாரியின் பெயர், கையெழுத்து, தேதி ஆகியவை சரியாகக் குறிக்கப்பட்டுள்ளதா என பார்த்து வாங்குங்கள். தங்களை அடையாளம் கண்டுகொண்டால் பிரச்சினை என எண்ணுபவர்கள் மனுவை பதிவுத்தபாலில் அனுப்பவும்.
தகவல் பெற கட்டணம்:
இச்சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற கட்டணம் செலுத்தியாக வேண்டும். இக்கட்டணம் செலுத்தும் முறையை இரண்டாகப் பிரிக்கலாம். ஓன்று மனுவை அனுப்பும் போது செலுத்த வேண்டிய கட்டணம், மற்றொன்று தகவல்களை சம்பந்தப்பட்டவர்கள் நமக்கு அனுப்பி வைப்பதற்காக செலுத்த வேண்டியது.
கட்டணம் அதிகமாக இருக்குமோ என சற்றும் சிந்திக்க வேண்டாம். வெறும் பத்து ரூபாய் தான்!!! இந்தப் பத்து ரூபாயை பணமாகவோ, காசோலையாகவோ, DD ஆகவோ கோர்ட் பீ ஸ்டாம்ப் ஆகவோகூட செலுத்தலாம். மாநில அரசுக்கு கோர்ட் ஸ்டாம்ப் முறை அனுமதிக்கப் படுகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் காசோலை அல்லது DD மட்டுமே அனுமதிக்கப் படுகிறது. நேரடியாக செலுத்தும் போது , ரசீதை மறக்காமல் வாங்கிக் கொள்ளவும்.
தகவல்களைப் பெற என்னென்ன கட்டணம் செலுத்த வேண்டும் எனப் பார்ப்போம். தகவல்கள் அச்சடிக்கப் பட்ட படிவத்திலோ, மின்னணு படிவத்திலோ இருந்தால் அதற்காக நிர்ணயிக்கப் படும் கட்டணத்தை மனுதாரர் இங்கே செலுத்த வேண்டும். அதுபற்றி விபரம் இங்கே:
- A 4 அல்லது A 3 அளவுள்ள பேப்பரின் ஒவ்வொரு பக்கத்துக்கும் இரண்டு ரூபாய் கட்டணம்.
- A 4 அல்லது A 3 தவிர பெரிய அளவிலான பேப்பருக்கு அதற்காக நிர்ணயிக்கப் பட்ட கட்டணம்.
- மாதிரிகள் அல்லது மாதிரி வடிவங்கள் ஏதும் நமக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கான கட்டணம்.
- பதிவேடுகளை முதல் ஒரு மணி நேரம் பார்வையிடுவதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.
- அதன் பிறகு பார்வையிடுகிற ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து ரூபாய் கட்டணம்.
- குறுந்தகடில் தகவல்கள் அளிக்கப் பட்டால் அதன் கட்டணம் 50 ரூபாய்.
- தகவலை அச்சு வடிவத்தில் கொடுத்தால் அதற்கான தொகை . பிரிண்டிங் செலவைப் பொருத்தும் பக்கங்களைப் பொருத்தும் கட்டணம் வித்தியாசப் படும்.
தாழ்த்தப் பட்டவர்கள், மலை சாதியினர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் ஆகியோருக்கு மனுவைப் பெற கட்டண விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. அதற்கான சான்றிதழை மட்டும் அவர்கள் சமர்ப்பித்தால் போதுமானது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருந்தாலும் , இச்சட்டத்தின் கீழ் தகவல் கேட்க ஒவ்வொரு மாநிலமும் விதிகளையும் கட்டண விவரங்களையும் வேறு வேறாக வைத்துள்ளன. அதை அந்தந்த மாநில அலுவலகங்களில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
தகவலுக்கான கால அவகாசம்:
தகவல்களைப் பெற கால அவகாசம் 30 நாட்கள் தான்! ஒருவேளை தகவலை “உதவி பொதுத் தகவல் அதிகாரி” தருவதாக இருந்தால் 35 நாட்கள். மனு தவறான நபரின் கைகளுக்கு சென்று பின்னர் பொதுத் தகவல் அதிகாரி கைக்கோ அல்லது சம்பந்தப் பட்ட அலுவலக அறைக்கோ வந்தாலும் 35 நாட்கள். மூன்றாம் தரப்பினர் பற்றிய தகவலுக்கான கால அவகாசம் 40 நாட்கள்.
முதல் மேல்முறையீடு மனுவிற்கான கால அவகாசம் சாதாரண மனுக்களுக்கு 30 நாட்கள். விதிவிலக்காக உள்ள மனுக்களுக்கு 45 நாட்கள். ஒருவேளை மேல்முறையீட்டு அதிகாரியிடம் இறந்து தகவலோ, உத்தரவோ , நிராகரிப்போ 90 நாட்களுக்குள் வரவில்லையெனில், இரண்டாம் மேல் முறையீடு செய்யவும் சட்டம் வழி வகுக்கிறது. அவ்வாறு இரண்டாம் மேல் முறையீட்டுக்கான மனுவிற்கான பதிலைப் பெற கால அவகாசம் 30 நாட்கள். விதி விலக்கான மனுக்களுக்கு 45 நாட்கள் ஆகலாம்.
மனுவை எப்படி எழுதுவது, சாம்பிளுக்கு ஒரு மனு எப்படி எழுதுவது ஆகியவற்றை அடுத்த பகுதியில் காண்போம்.
super and useful
Thank you very much friend.