ஆணாதிக்கமும் பெண் சுதந்திரமும்:

ladies freedom1

ஆணாதிக்கம் என்ற வார்த்தையே மிகச் சிறந்த அரசியல் வார்த்தையா?அது எல்லா காலக் கட்டத்திலும் இருந்ததா என்பதை அறிவியலின் துணை கொண்டு நான் புரிந்து கொண்டதையே கருத்தாக்கி உள்ளேன்..
1. செக்ஸ் என்ற ஒற்றை ஆசையும் இனப் பெருக்க விருத்தியும் தான் தன் வாழ்நாள் சந்தோசம் என்றெண்ணியே ஆணும் பெண்ணும் வாழ்ந்துள்ளார்கள். இல்லையெனில் ஏன் ஒரு ஆண், ஒருத்தியோடு செக்ஸ் வைத்துக்கொள்வதற்காக  காடு மேடு என சுற்றி கஷ்டப்பட்டு வேட்டையாடி அவளுக்காகவும் , அவள் குழந்தைக்காகவும் கஷ்டப்பட்டிருக்க வேண்டும்?? இவனோடு உடலுறவு கொண்டு , பிள்ளையைப் பெற பத்து மாசம், வளர்க்க ஆயுள் என ஏன் பெண் நினைக்கவில்லை??
2. பெண்ணின் எண்ணிக்கைக்  குறைவாக இருந்த காலக் கட்டத்தில், ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் கொண்ட மானுட சமூகம் தான் நாம். மிக அபார திறமையுள்ள ஆணை மட்டுமே பெண் தேர்ந்தெடுத்துப்  பிள்ளைகளைப் பெற்றாள். அதை ஆண் சமூகமோ மாப்பிளை வீட்டாரோ தவறெனக் கருதவில்லை. திட்டவில்லை. காறி உமிழவில்லை. மாறாக திறமையான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற சித்தாந்தமே காரணம்!.
உதாரணம்: குந்தி தேவி, திரவ்பதி (பாஞ்சாலி).
3. விவசாயமும் மருத்துவமும் வளராத அக்காலக்கட்டத்தில் பிள்ளைப் பேறு தான் பெரும் செல்வம். தன் இனத்தை, சந்ததியை வளர்க்க வேண்டும். அது மட்டுமே எங்களை வளமிக்கவர்களாக  மாற்றும் என்று அச்சமூகம் நினைத்தது. பிறப்பின் போதே பல இறப்புகள். ஆண்கள் நிலங்களில் உழைப்பதும், பெண் என்பவள் குழந்தைகளைப் பெறுவதும் அதை பேணி  வளர்ப்பதும் மட்டுமே கடமையாக இருந்திருக்கிறது. மேலும் குழந்தை பிறக்கும் போதும் தாயும் சேயும் உயிருடன் இருந்தாலே அதுவே  பெரும் பாக்கியம் என அந்த சமூகம் கருதி இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் போதிய மருத்தவ வளர்ச்சியின்மையால் இறந்து போனதால் கூட, பெண் தன் வாழ்நாளை இறக்கும் வரையிலும் குழந்தை பெறவும் பெற்ற குழந்தைகளைப் பேணிக் காக்கவும் மட்டுமே இருக்க வேண்டிய பொருளாதாரம் சார்ந்த நிர்பந்தங்கள் ஏற்பட்டிருக்கலாம். அப்போது மனித சராசரி ஆயுள் 40. திருமணங்கள் பால்ய வயதில் நடந்த போதிலும் அதிகக் குழந்தைகள் தான் செல்வம் என எண்ணிய சமூகத்தில் பெண்ணின் பங்கு இனத்தை விருத்தி செய்வதே! இதை அடிமை எனக் கொள்ளலாகாது.
4. தாய் வழிச் சமூகமாக இருந்த மானுட இனம் , வணிகம், பயணம், வெளியே செய்ய வேண்டிய வேலைகளை ஆணே  கவனித்த காலக் கட்டத்தில் தந்தை வழி சமூகமாக மாறினோம். இங்கு தான் ஒரு கணவனுக்கு பல மனைவிகள் உருவாகினார்கள். அதாவது பொருள் வளம் உள்ள ஒருவனுக்கு மனைவியாவது தான் தனக்கும் தன் குழந்தைக்கும் நல்லது என அச்சமூகம் நினைத்தது. மேலும் திறமையான குழந்தைகளைக் காட்டிலும் , இனத்தை விருத்தி செய்ய ஒரு ஆண் பல பெண்களைத் தனதாக்கினான்.
5. இதற்கு பிறகு உருவாகிய ஒருவனுக்கு ஒருத்தி என்ற காலக் கட்டத்தில்தான் பல மாற்றங்கள் வந்தன.  பெண்ணுக்கான கடமைகளாக வீடும் ஆணுக்கான கடமைகள் வெளி எனவும் நிர்ணயிக்கப் பட்டன. இதையும் சமூகம், சந்ததிகளின் நலன் கருதி அரவணைத்தது. பெண்மைப் புரட்சி என பலர் கூவினாலும் எல்லாக் காலக் கட்டங்களையும் கூர்ந்து கவனியுங்கள். மிருகங்களைப் போல உடலுறவோடு பெண்ணைக் கைகழுவி விட்டுப் போனால் ஆணுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் இயற்கையும் மனிதனின் பாலியல் எண்ணங்களும் தன் சந்ததியைப் பெருக்க வேண்டும் என்ற உத்வேகமும் அவனை அவளுக்காகவும், தன் வாரிசுக்காகவும் கத்தி, துப்பாக்கி என எதுவும் இல்லாமல்  கல் என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்து வேட்டையாட வேண்டிய அவசியமென்ன? இதை விட்டுத் தள்ளுங்கள். திறமையான பலம் வாய்ந்த குழந்தையைப் பெற்றெடுப்பேன் என பல ஆண்களோடு உறவு கொண்டதை, ஆணாதிக்க சமூகமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் பெண்ணால் பலரோடு வாழ்ந்திருக்க முடியுமா?
6. திறமையான பிள்ளைகள் மட்டுமே வேண்டும் என்றெண்ணிய பெண்ணின் கனவுகளில் தான் வலியவன் என்ற ஒன்றே எளியவனை வீழ்த்தி பல பெண்களைத் தனதாக்க செய்தது. அந்தக் காலக் கட்டத்தையும் இச்சமூகம் ஏற்றுக் கொண்டுதான் இருந்தது. ஆகையால் ஆண்  மட்டும் எப்படி பல பெண்களைக் கட்டிக் கொள்ளலாம் என்று வினா எழுப்புபவர்கள் அதற்குக் காரணமான ஒரு பெண் பல ஆண்களோடு உறவும் வாழ்க்கையும் கொண்டிருந்தாள் என்பதை மகாபாரதத்தைப் படித்துப்  புரிந்து கொள்ளவும். ஆனால் இங்குள்ள பகுத்தறிவு வாதிகள் , இதை ஆணாதிக்கம் என்று சொல்வதுதான் கேலிக்குரியது.இதையும் கேலி செய்கிறார்கள். ஒரே ஆண் பல பெண்களைத் திருமணம் செய்தாலும் ஆணாதிக்கம் எனக் சொல்வதுதான் மிகச் சிறந்த அறியாமை.

7. சரி, ஒருவனுக்கு ஒருத்தி காலக் கட்டத்திற்கு வருவோம். இதை இரு நிலைகளாகப் பார்க்க வேண்டியள்ளது. இங்குதான் பெண்ணுக்கான அடிமைத் தனங்களும், பெண்ணுரிமைகளும் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தன. இந்தக் காலக் கட்டத்தில் தன் தனிப்பட்ட பொருள்சார்ந்த தேவைகளுக்கும் ஆணை சார்ந்திருக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. தங்கள் குழந்தைகளை ஆறு வயதிலேயே வேலைக்கு அனுப்பும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக இயந்திரங்கள் பெருகின. இயந்திரங்களை நிர்வகிக்கவும், தொழிலை பெருக்கவும் அது குறித்த அறிவுள்ளவர்கள் தேவைப்பட்டார்கள். ஆகையால் மெல்ல மெல்ல தங்கள் குழந்தைகளை கல்வி கற்க செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவ்வாறிருந்தால் மட்டுமே பொருளாதார ரீதியான வளர்ச்சியைப் பெற முடியும் என அப்போதிருந்த சமூகம் செயல் பட செய்தது. அதன் விளைவாகவே மேலாண்மை மற்றும் பொறியியல் குறித்த படிப்புகளுக்கான தேவையும் வளர்ந்தது. சுருக்கமாக சொல்லப் போனால் தொழிற்சாலைகளில் மிக உயரிய பதவிகளை நிர்வகிக்க கல்வி அறிவு அவசியமானது.

கல்வி, மருத்துவச் செலவு இரண்டுக்கும் மனிதன் தன் சொத்தில் பாதியை செலவிட வேண்டிய காலமாக ஆரம்பித்தது.
8. மருத்துவம் குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்த போதும் பிள்ளைகள் பெறுவதை 1930 டு 1970 வரையில் இருந்த சமூகம் குறைக்கவில்லை. இந்தக் காலக் கட்டத்தில் வழக்கம் போல ஆண் வெளியையும், பெண் வீட்டையும், குழந்தைகளையும் கவனித்து வந்தாள். மெல்ல மெல்ல மருத்துவமும் கல்வியும் வளர வளர இரு விதமான மாற்றங்கள் மக்கள் தொகையிலும் வாழ்வியலிலும் ஏற்பட்டன. 1. மனித சராசரி ஆயுள் 70 ஐத் தொட்டது. 2.  பிறப்பில் இறப்பு குறைந்தது. 3. குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தது. பொருள் சேர்க்க வேண்டும் தாங்கள் சுகமாக வாழ வேண்டும் என்ற அடிப்படை எண்ணம் தான் காரணம்.
9. அதிகக் குழந்தைகளைப் பெறுவதே தங்கள் செல்வம் என எண்ணிப்  பெற்றெடுத்த காம இச்சைக்கும், செல்வம் சேர்க்க வேண்டும் என்ற பேராசைக்கும் போட்டி நடந்தது.. ஆம். காம இச்சை என்ற சிற்றின்பத்திற்கும்  பொருள் சேர்க்க வேண்டும் என்ற பேராசைக்கும் நடந்த போட்டியில் மனிதனின் காம இச்சைகள் தோற்றுப் போயின!!!! இதை இவ்வாறு சொல்லலாம். மனிதன் காம இச்சைகளைப் பெருமளவு குறைத்துக் கொண்டான் அல்லது கட்டுப்படுத்திக் கொண்டான். காம இச்சைகளை ஆணும் பெண்ணும் கட்டாயத்தின் காரணமாகக் குறைக்க ஆரம்பித்தார்கள். 13 வயதில் பருவத்திற்கு வருகிற ஆண் 27 டு 32 வரை காம இச்சைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழலைப் பொருள் வளம் சேர்த்தால் மட்டுமே மரியாதை என்ற ஒற்றைக் காரணமே மீண்டும் ஆண் பெண் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வர ஆரம்பித்தது.
10. என்ன மாற்றம் என கேட்கிறீர்களா? ஆம். அதுதான் இரண்டு குழந்தைகளைப் பெறுவோம், இயன்ற வரை சுகமாய் வளர்ப்போம் என்ற சிந்தனை வளர ஆரம்பித்தது. இரண்டே குழந்தைகள் என ஆரம்பித்த பிறகு மெல்ல மெல்ல ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி சமமாக1995 களுக்குப் பிறகு கிடைக்க ஆரம்பித்தது. இதற்கும் மருத்துவ வளர்ச்சிக்கும்  சம்பந்தம் உள்ளது.  அது யாதெனில் 1750 லிருந்து 1950 வரை 8 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் , அதன் பிறகான காலக் கட்டங்களில் (1975க்குப் பிறகு) மருத்துவ வளர்ச்சியின் காரணமாக 3 குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். பாதுகாப்பான உடலுறவு, கருத்தடை, கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு என மருத்துவம் பல வசதிகளைக் கொணர்ந்ததும், அதிக ஆயுள் தரச் செய்ததும் பெண்ணின் வெளி உலக வாழ்க்கைக்கு அடித்தளம் போட்டுத் தந்தது என்பதே உண்மை!
ladies freedom
11. அது எப்படி எனக் கேட்கிறீர்களா? 40 வயதுதான் சராசரி ஆயுள் என்ற காலக் கட்டத்தில் , சந்ததி விருத்தியே செல்வம் எனக் கருதியதால் சராசரியாக  8 முதல் 10 குழந்தைகளை உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பெற்றார்கள். ஒரு குழந்தைக்கு தாயின் அரவணைப்பு மூன்று முதல் ஐந்து வயது வரை எனக் கணக்கிடுங்கள். அப்படியான காலக் கட்டத்தில் ஆணோ பெண்ணோ  இதனை சமூகப் பங்களிப்பாக மட்டுமே கருத்தில் கொண்டிருப்பார்கள். ஆனால் மருத்துவத்தின் வளர்ச்சி ஆயுளை 70க்கு நகர்த்திய போது , ஒரு குடும்பத்திற்கு குழந்தை எண்ணிக்கை 2.7 என சராசரியாக உலகம் முழுமைக்கும் உள்ளது. இங்கு இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. பெண்ணின் மாத விடாய் கால அளவு 13 லிருந்து 45 டு 50 ஆக இப்போது உள்ளது. இருப்பினும்  ஒரு பெண் என்பவள் தன் வாழ்நாளில் அதிக பட்சமாக குழந்தை வளர்க்க (தாயின் தேவை) 10 வருடங்களே செலவளிக்கிறாள். இந்த கல்வி மாற்றமும், மருத்துவ வளர்ச்சியும், பொருள் சேர்க்க வேண்டும் என்ற பேராசையும் பெண்ணுக்கான அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றித் தருகிற காலமாக 2000 ற்கு அப்பாற்பட்ட காலமுள்ளது என்றே பார்க்க வேண்டும்.
12. பெண்களில்  குறிப்பிட்ட அளவுக்கு வெளி வேலைகளுக்கு வந்துள்ள காலக் கட்டமிது. இனி வரும் காலங்களில் என்ன நடக்கும் ?
13. பொருள் சார்ந்த அதாவது தனக்கான தேவையைத் தானே ஒரு பெண் பூர்த்தி செய்கிற காலக் கட்டமாக மாற மாற சுதந்திரம், பெண்ணடிமையிலிருந்து  விடுதலை என்ற கோஷங்களுடன் நிறைய விவாகாரத்துகள் நடைபெறும். பொருள் சேர்க்க வேண்டும் என்ற பேராசைக்காக தன் காம இச்சையை ஆணும் பெண்ணும் கட்டுக்குள் குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்கு (13 முதல் 28 வயது வரை) அடக்கி வைக்க வேண்டி இருப்பதால் முறையற்ற கள்ள உறவுகள், பாலியல் வன்முறைகள், ஓரினச் சேர்க்கை கோரிக்கைகள்,  சிதறுண்டு போகிற குடும்ப வாழ்க்கை முறை என பல சிக்கல்களை இனி வரும் காலங்கள் எதிர் கொள்ளும். பால்ய வயதில் திருமணம் தவறென சொல்லியது ஒரு காலக் கட்டம். காலம் தாழ்த்திய திருமணம் சமூகச் சீர்கேடு என சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. அது போலவே பெண்ணடிமை என்ற கோஷம் நீங்கும். காலம் எல்லாவற்றையும் எதிர் கொண்டே இருக்கறது. காலமே தீர்வுகளையும் தந்திருக்கிறது. எந்த ஆண் சமூகம்  பெண்ணை அடக்கி வைத்தான் என்கிறோமோ அதே ஆண்  சமூகம் பெண்ணுக்கான கல்வியையும் கொடுக்கிறது.
14. ஆணாதிக்கம், பெண்ணடிமை, பெண் விடுதலை போன்ற பரப்புரைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. சமூகத் தேவைகள் தான் ஆண் பெண் உறவில் ஒருவருக்கான இடத்தை அவர்களின் பங்களிப்பை, மற்றவரின் தேவையை அல்லது தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய ஒருவர் மற்றொருவரை உபயோகிக்கிறார்கள் அல்லது தேவைகளை புரிந்து நடந்து கொள்கிறார்கள்  என்றே பொருள் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சமூகமும் அந்தந்த காலக் கட்டத்திற்குத் தேவை எதுவென நினைக்கிறதோ அதைத் தான் செயல் படுத்தி வந்துள்ளது, செயல் படுத்தி வருகிறது, செயல்படுத்தும். இதில் ஆணாதிக்கம் , பெண்ணடிமை, பெண் சுதந்திரம் போன்ற கூவல்களையும் அவ்வாறே பொருள் கொள்ள வேண்டியுள்ளது. இந்த கூவல் இல்லாவிட்டாலும் , அனைத்துக் காலக் கட்டங்களிலும் சமூகம் தான் வகுத்துக் கொண்ட பொது விதியின் அடிப்படையில் மட்டுமே செயல்படும் என்பதே நிதர்சனம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s