நான் எழுதிய ” இது பெண்களின் நூற்றாண்டு” என்ற கட்டுரை கிழக்குப் பதிப்பகத்தின் பிப்ரவரி மாத ஆழம் இதழில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை வெளி வர பேருதவியும் ஊக்கமும் அளித்து வருகின்ற ஆழம் ஆசிரியர் திரு மருதன் அவர்களுக்கும் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கும் எனது நன்றிகள். கட்டுரையின் முழு வடிவம் கீழே. தெளிவான தேவையான கருத்துகளுடன் கூடிய கட்டுரை ஆழம் இதழில்.
ஒசாமா பின் லாடன் 2002 ல் அமெரிக்காவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது ” உங்களின் தேசம் பெண்களை நுகர்வுப் பொருளாகவும், விளம்பரப் பொருளாகவும் பயன்படுத்துகிறது. பயணம் செய்பவர்களுக்கு சேவை செய்பவர்களாகவும், வாடிக்கையாளர்களை வாயிலில் நின்று வரவேற்பு செய்பவர்களாகவும் உருமாற்றி உங்களின் லாபம் கொழிக்கச் செய்ய உபயோகப்படுத்துகிறீர்கள். இதையெல்லாம் பெண்களுக்கான விடுதலை என்ற பெயரில் ஆரவாரவுரை செய்கிறீர்கள்.”
ஒசாமா பின் லாடனின் அல் குவைதா இயக்கத்தின் பார்வையில் மேற்கூறிய வாசகம் சொல்ல வருகிற விஷயம் இதுதான். ” மரபுகளைப் போற்றும் வகையில் குடும்ப அமைப்புகள் செயல்பட வேண்டும். ” மரபான குடும்பங்கள் என்பது சில ஒழுங்கு நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும். அல் குவைதா சொல்கிற இந்த ஒழுங்கானது , வீடென்பது பெண்களுக்கானது. வெளியென்பது ஆண்களுக்கானது. பாலியல் உறவென்பது குடும்பத்திற்குள்ளானது , அது வீட்டோடு மட்டுமே இருக்க வேண்டும். வெளிகளில் பாலியல் உறவு என்பதை ஏற்க இயலாது. பெண் வெளிகளுக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பாலியல் தொல்லைகளுக்கும், தேவையற்ற பாலியல் உறவுகளுக்கும் சிக்கக் கூடும். குழந்தைகளைப் பெறுவதும், அடுத்த சந்ததியை உருவாக்கவும், அவர்களைப் பேணிக் காப்பதும் மட்டுமே பெண்களின் கடமை. அவ்வாறே அல் குவைதாவின் மரபான குடும்பங்களைப் பார்க்க வேண்டியுள்ளது என ஜார்ஜ் ப்ரீட்மன் (George Friedman ) “அடுத்த நூறு ஆண்டுகள்” ( The Next 100 Years) என்ற நூலில் தெரிவிக்கிறார். அமெரிக்கா என்பது இச்சிந்தனைகளுக்கு முற்றிலும் எதிரானது என தெரிவிக்கிறார்.
இந்த நூலில் அடுத்த நூறு ஆண்டுகள் எவ்வாறிருக்கும் என்ற தனது பார்வையை விவரிக்கிறார். உலகை அச்சுறுத்தும் நாடுகள் எவையாக இருக்கும்,எந்தெந்த நாடுகளுக்கிடையே போராபத்து இருக்கக் கூடும் என தனது யூகத்தை பல கோணங்களில் ஆராய்கிறார். சீனாவின் அனுமதி இல்லாமல் 2020 களில் எந்த முடிவையும் உலக நாடுகள் எடுக்க இயலாது எனத் தெரிவிக்கிறார். அமெரிக்க எழுத்தாளர் என்பதாலோ என்னவோ அடுத்த நூற்றாண்டையும் அமெரிக்காவே ஆளும் என்ற கருத்தை பதிப்பிக்கிறார்.
மக்கள் தொகை என்பது எல்லாக் காலக்கட்டங்களிலும் எவ்வாறிருந்தது என்பதில் தொடங்கி, பெண்கள் எவ்வாறு மெல்ல மெல்ல சமூகத்தின் வெளிகளுக்கு வந்தார்கள் என அவர் எழுதியுள்ள நூலின் ஒரு பகுதியை மட்டும் இக்கட்டுரையில் பகிர்ந்து கொள்கிறேன்.
காலத்தின் கட்டாயமும் தேவைகளும் அல் குவைதா இயக்கங்களின் மரபான குடும்பங்கள் சார்ந்த பார்வையைத் தகர்த்தெறியும். அச்சிந்தனை முற்றிலும் தோல்வியில் முடிவடையும். கடந்த நூறாண்டுகளில் மனித வாழ்வியல் மாறி இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கான வெளியும் குடும்ப கட்டமைப்பும் நிறையவே மாறி இருப்பதைக் கவனித்தால் தெளிவாகத் தெரியும்.
இந்த மாறுதல்கள் சரியா தவறா என சொல்ல இயலாது!!! ஆனால் இந்த மாறுதல்களை இந்த நூற்றாண்டிலும் மட்டுப்படுத்த இயலாது. இதற்குக் காரணம் மக்கள் தொகையின் புள்ளியியல் முடிவுகளே. (Demographic Realities ). அதாவது குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்ததே குடும்ப கட்டமைப்புகள் மாறியதற்கான முக்கியக் காரணங்கள். பெண்கள் கடந்தஇரு நூற்றாண்டுகளைப் போல அதிக குழந்தைகளைப் பெறாமல் குறைவான எண்ணிக்கையிலேயே பெற்றுக் கொள்கிறார்கள். மக்கள் தொகை அதிவேக பெருக்கத்தை இந்த நூற்றாண்டில் மட்டுப் படுத்துகிற பொருளாக மட்டும் இதைக் கொள்ளலாகாது. அதனோடு பெண்கள் தன வாழ்நாளில் மிகக் குறுகிய காலத்தையே கருவை சுமக்கவும், குழந்தையைப் பெறவும் செலவு செய்கிறார்கள் என்பதாகவும் பொருள் கொள்ள வேண்டும். ஆகையால் அவர்களின் வாழ்க்கைத் தரமும் முன்னேறி உள்ளது.
மக்கள்தொகை அதிவேகப் பெருக்கத்தை ஏன் முடிவுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது? இல்லையெனில், மக்கள் தொகைக்கான தேவையைப் பூர்த்தி செய்வதும், சுற்றுச் சூழல் அதிக அளவில் சூறையாடப்படுவதையும் தடுப்பதில் சிக்கல் உண்டாகும். இதன் விளைவாக மக்களுக்குத் தேவையான உணவு, சக்தி மற்றும் பொருள் தேவைகள் அதிகமாகும். மேலும் புவி வெப்ப மயமாதலையும் சூழலியல் மாற்றங்களையும் குறைக்க இயலாமல் போகக் கூடும். இதனால் மக்கள் தொகை குறையும் என எண்ணலாகாது. மக்கள் தொகை அதிவேகப் பெருக்கத்துக்குக் காரணம், நடைமுறையில் மனித வாழ்வின் சராசரி ஆயுள் கூடிப்போனதும் தான். இதை பின்னர் விரிவாகக் காண்போம்.
வளர்ந்த நாடுகள் பிறப்பு விகிதத்தைக் குறைத்துக் கொள்வதைப் பார்த்து வளரும் நாடுகளும் ஏழ்மை நாடுகளும் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கையைக் குறைக்கச் செய்யும். இதன் மூலமாகவே இந்த நூற்றாண்டில் மக்கள் தேவைகளை சமன்படுத்த அல்லது பூர்த்தி செய்ய இயலும்.
வளர்ந்த நாடுகளான ரஷ்யா மற்றும் ஜெர்மனியில் மக்கள் தொகையின் சதவிகிதம் பெருமளவில் குறையும். இன்றைய ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகை 728 மில்லியன். ஐநாவின் (United Nations ) கணிப்பின்படி ஐரோப்பாவின் மக்கள் தொகையானது 2050ல், 557 மில்லியனுக்கும் 653 மில்லியனுக்கும் இடையில் இருக்கக் கூடும் என தெரிவிக்கிகறது. ஐரோப்பிய மக்கள் தொகை பெருமளவில் குறையும். 557 மில்லியன் மக்கள் தொகை என்பது ஐரோப்பாவில் ஒரு பெண் சராசரியாக 1.6 குழந்தை என்ற எண்ணிக்கையிலும், 653 மில்லியன் மக்கள் தொகை என்பது 2.1 குழந்தைகள் என்ற எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு கணிக்கப் பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஐரோப்பாவில் ஒரு பெண் 1.4 என்ற எண்ணிக்கையிலேயே கருவுறு விகிதம் அல்லது குழந்தை பிறப்பு விகிதம் உள்ளதாக ஐ நா அறிக்கைத் தெரிவிக்கிறது.
மரபின் அடிப்படையில் உற்று நோக்கினால், ஒரு நாட்டிற்கு மக்கள் தொகைக் குறைவு என்பது அரசியல் அதிகாரத்தையும்(உலகை வெல்லும்) குறைக்கச் செய்யும். இது ஐரோப்பாவிற்கு மிகப் பொருந்தும். ஆனால் அமெரிக்கா மற்றும் மக்கள் தொகை அதிகமான நாடுகளுக்கு மக்கள் தொகையை அதிகப் படுத்தாமல் இருக்கச் செய்தலிலும், மக்கள் தொகையைக் குறைத்தால் மட்டுமே அரசியல் அதிகாரம் செலுத்த இயலும்.
மக்கள் தொகை கடந்த இருநூறு நூற்றாண்டுகளில் எவ்வாறிருந்தது? 1750 ல் 1 பில்லியனாக இருந்த உலக மக்கள் தொகை 1950 ல் 3 பில்லியனாகக் கூடியது. ஆனால் 1950 க்கும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தில் உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை இரு மடங்காகிப் போனது. ஆம். உலக மக்கள் தொகை 2000 ல் 6 பில்லியனாக இரட்டிப்பாகி இருந்தது.
மக்கள் தொகையின் எண்ணிக்கை மட்டும் வளரவில்லை. அதற்கேற்றாற் போல், வளர்ச்சியும் இருந்தது. ஆனால், இது முற்றிலும் தொடந்திருந்தால் உலகம் கேடான முடிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். மக்கள் தொகையின் பிறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை உலக நாடுகள் செய்து வருகின்றன.
ஐநாவின் கணிப்பின் படி, 2000க்கும் 2050க்கும் இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை 50 % அளவிலேயே உயரும் . அதாவது 1950க்கும் 2000க்கும் இடைப்பட்ட காலத்தைப் போல இரு மடங்காக உயராது எனத் தெரிவிக்கிறது. 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியான 2050க்கும், 2100க்கும் இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை வெறும் 10% அளவிலேயே உயரும் எனவும் மற்ற கணிப்புகள் தெரிவிக்கின்றன.
21 ஆம் நூற்றாண்டில் வளர்ந்த நாடுகளின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாகவும், வளரும் நாடுகளில் 2050 வரையிலான காலக் கட்டம் வரையில் மக்கள் தொகை எண்ணிக்கை நிலையாக உயரும் எனவும், ஆனால் இரண்டாவது பாதியில் வளர்ந்த நாடுகளைப் போல மக்கள் தொகைக் குறையும் என ஐநா தெரிவித்துள்ளது. ஏழ்மை நாடுகளில் உதாரணமாக வங்கதேசம், காங்கோ போன்ற நாடுகளில் (least developed Countries ) மக்கள் தொகை 2100 வரையிலும் கூடும். முஸ்லிம் நாடுகளின் மக்கள் தொகையும் ஏழ்மை நாடுகளைப் போல அதிகக் குழந்தைகளைக் கொண்டிருக்கும். ஆனால் இந்த ஏழ்மை நாடுகளில் கூட கடந்த நூற்றாண்டைப் போல பிறப்பு விகிதம் அதிகமாக இராது.
இந்த நூற்றாண்டில் 2.1 என்ற எண்ணிக்கையில் ஒவ்வொரு பெண்ணும் குழந்தைகளைப் பெறுகிறாள் எனக் கணக்கில் கொள்வோம். அதற்கு முன் கடந்த காலங்களின் கணக்கீடுகளைக் காண்போம். ஐநா வின் அறிக்கைப் படி, ஒரு பெண்ணின் குழந்தை பிறப்பிற்கான விகிதம் 4.5 . 2000 ஆம் ஆண்டின் கணக்கின் படி ஒரு பெண்ணின் குழந்தை பிறப்பு விகிதம் 2.7. இது உலக அளவிலான குழந்தை பிறப்பு விகிதம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிறப்பு விகிதத்தில் இது மிகக் குறைவாக ஒரு பக்கம் இருந்த போதிலும், உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இதை இப்படிச் சொல்லலாம். அதாவது கடந்த நூற்றாண்டைப் போலவோ, கடந்த காலத்தைப் போலவோ அல்லாது மிக மெதுவான வேகத்தில் மக்கள் தொகைக் கூடும்.
ஆண்டு 2050 ல், ஒரு பெண்ணின் குழந்தை பிறப்பிற்கான விகிதம் 2.05 ஆக இருக்கலாம் என ஐநாவின் கணிப்புத் தெரிவிக்கிறது. இது கணக்கில் எடுத்துக் கொண்ட 2.1 என்ற அளவைக் காட்டிலும் குறைவு என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியே. இவ்வாறிருந்தால் மக்களின் தேவைகளை சமன் செய்ய இயலும். ஐநாவின் இன்னொரு கணிப்பு, ஒரு பெண்ணின் குழந்தை பிறப்பு விகிதம் 1.6 ஆக இருக்கலாம் எனவும் தெரிவிக்கிறது.
மிக ஆர்வமாக நீங்கள் அறிய விரும்பும் செய்தி!. 44 வளர்ந்த நாடுகளைக் கணக்கில் கொண்டு பார்த்தால், ஒரு பெண்ணின் குழந்தை பிறப்பு விகிதம் 1.6 எனவும், வளரும் நாடுகளில் அது 2.9 அல்லது அதை விடக் குறைவாகவும் ஆகவும், ஏழ்மை நாடுகளில் 6.6 லிருந்து 5.0 ஆகவும் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2050 ல், ஏழ்மை நாடுகளில் ஒரு பெண்ணின் குழந்தை பிறப்பு விகிதம் 3.0 ஆக குறையும் என தெரிகிறது.
ஏன் இந்த குழந்தை பிறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டியுள்ளது?. இதற்கும் பெண்ணின் முன்னேற்றத்திற்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளுக்கான பதிலை அடுத்த தொடரில் காண்போம்.
நான் படித்த அருமையான வரிகள. படித்ததில் பகிர எண்ணியவை… எனது பக்கத்தில் பகிர்கிறேன். எனது அருமை நண்பருக்கு நன்றி. வாழ்த்துகள்.
TULASIDASS SUBARAMANI
National University of Malaysia
tulasidass@gmail.com
Thank you very much for visiting my site. Thanks for sharing my article.
With Love
Lakshmana Perumal