இது பெண்களின் நூற்றாண்டு பாகம் 2

george friedman

நான் எழுதிய ” இது பெண்களின் நூற்றாண்டு” என்ற கட்டுரை கிழக்குப் பதிப்பகத்தின் பிப்ரவரி மாத ஆழம் இதழில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை வெளி வர பேருதவியும் ஊக்கமும் அளித்து வருகின்ற ஆழம் ஆசிரியர் திரு மருதன் அவர்களுக்கும் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கும் எனது நன்றிகள். கட்டுரையின் முழு வடிவம் கீழே. முதல் பாகம் படிக்க விரும்புபவர்கள் இதை அழுத்தவும். தெளிவான தேவையான கருத்துகளுடன் கூடிய கட்டுரை ஆழம் இதழில்.
21 ஆம் நூற்றாண்டின் முடிவில்  மக்கள் தொகையின் அதிவேக பெருக்கம் ஒரு முடிவுக்கு வரும் என தெரிகிறது. ஏன் குழந்தை பிறப்பு விகிதம் குறைகிறது என்பதற்கான விடையே, கடந்த 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை இரு மடங்காகிப்  போனது தான் . மனித வளத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உள்ள சிக்கலே குழந்தை பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தச் செய்கிறது.
சீரான அல்லது குறைவான குழந்தை பிறப்பு விகிதமே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். மேலும் இருவேறு காரணிகளும் உலக மக்கள் தொகை அதிகமாவதைத் தடுக்கச் செய்கிறது.
1. குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்தது. 2. அதிக அல்லது நெடிய ஆயுள். நவீன மருத்துவத்தின் வளர்ச்சியும், தேவைக்கேற்ற உணவுப்பொருள் கிடைத்ததும் தான் இறப்பு விகிதம் குறைவதற்கும், நெடிய ஆயுளை மனிதர்கள் பெறுவதற்கும் மிக முக்கியக் காரணம். மேலும் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்களுக்கு ஏற்பட்ட உடல் நலம் குறித்த விழிப்புணர்வும் ஒரு காரணம்.
1800களில் , ஒரு பெண்ணின் குழந்தை பிறப்பு விகிதம் என்பது 6.5 க்கும் 8க்கும் இடையில் இருந்திருக்கலாம். சரியான புள்ளி விவரங்கள் இல்லாவிட்டாலும் இந்த குழந்தை பிறப்பு விகிதாச்சாரம் ஓரளவுக்குப் பொருந்தும். இன்று வங்கதேசத்தில் ஒரு பெண் 6 முதல் 8 குழந்தைகளைப் பெறுகிறாள். இதே எண்ணிக்கையை 1800களில் ஐரோப்பாவில் உள்ள பெண்ணும் 8 என்ற எண்ணிக்கை அளவில் பெற்று இருக்கிறாள். ஆனால் உலக மக்கள் தொகை ,  1750 ல் 1 பில்லியனிலிருந்து 1950 ல் 3 பில்லியன் ஆக உயர்ந்திருந்தது.
நாம் 21 ஆம் நூற்றாண்டில் கணக்கில் கொள்கிற 2.1 என்ற எண்ணிக்கை அளவில் தான் 1750க்கும், 1950க்கும் இடைப்பட்ட காலக் கட்டங்களில் மக்கள் தொகை உயர்ந்திருக்கிறது.  இதற்கு என்ன காரணம்? எட்டு குழந்தைகள் பிறந்தால் கூட,
பூப் பெய்துவதற்கு (பருவம் அடைவதற்கு) முன்பாக 6 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்.
மருத்துவ வளர்ச்சியின்மை, உணவு, சத்தாகாரமின்மை போன்ற காரணிகளே குழந்தைகள் பிறந்த போதே இறப்பதற்கும் பருவம் அடைவதற்கு முன்பே இறந்து போகச் செய்தன. அது ஏறத்தழ 19 ஆம் நூற்றாண்டு வரையிலும் நீடித்தது. அதுசரி, ஆனால் 19 ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டிலும் மருத்துவ வளர்ச்சி அதிகமாகியும் குழந்தை பிறப்பதை குடும்பங்கள் குறைத்துக் கொள்ள வில்லை. இதைப் புரிந்து கொள்வது மிகக் கடினமல்ல. உண்மையைச் சொல்லப் போனால் மக்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிக விருப்பப் பட்டார்கள். குழந்தை பெறுவதைத் தடை செய்ய குடும்பக் கட்டுப்பாடு போன்ற திட்டங்கள் இல்லாமல் இருந்ததும் முக்கியக் காரணம். மேலும் அச்சமூகம் குழந்தை அதிகமாகப் பெறுவதையே தங்கள் செல்வமாகக் கருதினார்கள்.
அப்போது இன்று போல இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் படவில்லை. அதிகமாக விவசாயத்தைச் சார்ந்தே மக்கள் இயங்கினார்கள். குறிப்பாக உடல் ரீதியான உழைப்பே ஒரு குடும்பத்தை வளம் கொள்ளச் செய்யும். அப்போது ஒரே குடும்பத்தில் நிறைய பேர் இருந்தால் அதுவே தங்கள் இல்லத்திற்கான வளத்தைப் பெருக்கும் என்று நம்பியதுதான் அதிக குழந்தைகள் பெற முக்கியக் காரணமாக இருந்திருக்கக் கூடும்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு அந்த குடும்ப உறுப்பினர்களே தங்களின் வயல்களில் பணிபுரிவதும் , அதுவே அவர்களின் வளத்தை காண்பிக்கச் செய்ய பேருதவி புரிந்திருக்கும். சமூகப் பாதுகாப்புக் கருதியும் தங்கள் குழந்தைகள் தான் தங்களின் எதிர்காலச் சொத்து. நிலத்தைக் கொண்டிருந்த ஒரு தந்தைக்கு தன்  நிலத்தில் பணி செய்ய ஒரு ஒழுங்கை குழந்தைகளுக்கு கற்பிப்பதன் மூலம் ஒட்டு மொத்த குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற எண்ணமும் அதிக குழந்தைகளே தங்களின் செல்வம் எனக் கருதியதற்குக் காரணம்.
ஆண்கள் நிலங்களில் உழைப்பதும், பெண் என்பவள் குழந்தைகளைப் பெறுவதும் அதை பேணி  வளர்ப்பதும் மட்டுமே கடமையாக இருந்திருக்கிறது. மேலும் குழந்தை பிறக்கும் போதும் தாயும் சேயும் உயிருடன் இருந்தாலே அதுவே  பெரும் பாக்கியம் என அந்த சமூகம் கருதி இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகள் போதிய மருத்தவ வளர்ச்சியின்மையால் இறந்து போனதால் கூட, பெண் தன் வாழ்நாளை இறக்கும் வரையிலும் குழந்தை பெறவும் பெற்ற குழந்தைகளைப் பேணிக் காக்கவும் மட்டுமே இருக்க வேண்டிய பொருளாதாரம் சார்ந்த நிர்பந்தங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
ஓர் இடைப்பட்ட காலத்தில் சிற்றின்பத்திற்கும் பேராசைக்கும் (செல்வா செழிப்புடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் ) நடைபெற்ற போட்டியின் விளைவாக குழந்தை அதிகமாகப் பெறுவது சற்று குறைந்துள்ளது. நகரம் சார்ந்த வாழ்க்கையில் தொழிற்சாலைகளில் பணி புரியக் கூட தங்கள் குழந்தைகளை ஆறு வயதிலேயே வேலைக்கு அனுப்பும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக இயந்திரங்கள் பெருகின. இயந்திரங்களை நிர்வகிக்கவும், தொழிலை பெருக்கவும் அது குறித்த அறிவுள்ளவர்கள் தேவைப்பட்டார்கள். ஆகையால் மெல்ல மெல்ல தங்கள் குழந்தைகளை கல்வி கற்க செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவ்வாறிருந்தால் மட்டுமே பொருளாதார ரீதியான வளர்ச்சியைப் பெற முடியும் என அப்போதிருந்த சமூகம் செயல் பட செய்தது. அதன் விளைவாகவே மேலாண்மை மற்றும் பொறியியல் குறித்த படிப்புகளுக்கான தேவையும் வளர்ந்தது. சுருக்கமாக சொல்லப் போனால் தொழிற்சாலைகளில் மிக உயரிய பதவிகளை நிர்வகிக்க கல்வி அறிவு அவசியமானது.
இந்த முன்னேற்றங்கள் ஒரு பக்கம் நடந்தாலும், 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலக் கட்டங்களிலும் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. நமக்குத் தெரிந்தே நமது தாத்தாவுடனோ, நமது பெற்றோருடனோ பிறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 8 முதல் 10 வரை இருக்கும். ஆனால் மூன்று குழந்தைகள் உயிரோடு இருந்தாலே பெரிய விஷயம். ஆனால் இன்று ஏறத்தாழ எல்லாக் குழந்தைகளும் பிறப்பில் இறப்பதில்லை.
18 ஆம் நூற்றாண்டில் ஒரு பெற்றோருக்கு 10 குழந்தைகள் இருந்தால் (உயிரோடு) அது கடவுளின் பரிசு. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு பெற்றோருக்கு 10 குழந்தைகள் இருந்தால் அது அவர்களுக்குப் பாரம். 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 10 குழந்தைகள் இருந்தால் அது பேரடி.  அதாவது இந்த நூற்றாண்டில் ஒரு குழந்தையை வளர்ப்பதென்பது மிகப் பெரிய செலவு. ஆகையால் ஒவ்வொரு பெற்றோரும் தங்களுக்கு 2 குழந்தைகள் இருந்தால் போதும் என்கிற மன நிலைக்கு வந்துள்ளார்கள்.
குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வோம். வளமான கல்வி, தரமான உணவு, ஆரோக்கியமான வாழ்வு ஏற்படுத்த அதிக குழந்தைகள் என்ற சித்தாந்தம் தான் ஒன்றைப் பெற்று வளமாய் வளர்ப்போம் என்ற சிந்தனையைத் தந்தது. நெடிய ஆயுளைப் பெற இயலும் என்ற மருத்துவ வளர்ச்சி பெற்றோரின் மனமாற்றத்திற்கு முக்கியக் காரணம்.
1800 களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மனிதர்களின் சராசரி ஆயுள் 40. 2000 களில்  கிட்டத்திட்ட  வளர்ந்த நாடுகளில் மனிதர்களின் ஆயுளை இரு மடங்காக 80 வயது வரை உயர்த்தி உள்ளது. ஐநாவின் கணிப்புப் படி வளர்ந்த நாடுகளில் 2000 ஆம் ஆடுகளில் 76 வயதாக இருந்த மனிதனின் சராசரி ஆயுள் 2050 ல் 82 ஆக உயரும் என தெரிவித்துள்ளது. ஏழ்மை நாடுகளில் 51 வயது வரை ஆயுள் என்பது 2050 ல் 66 வயதாக இருக்கும் எனவும் ஐநா தெரிவிக்கிறது.
பெண் குழந்தை பெறுகிற விகிதம் குறைந்து பொய் விட்டது. ஒரு குழந்தை நல்ல பணியில் அமர அதிக காலங்களைக் கல்விக்கு செலவழிக்க வேண்டியுள்ளது. கிட்டத்திட்ட 20 டு 25 வயது வரை கல்லூரியில் படிக்க வேண்டியுள்ளது. இதன் பின்னணியில் பொருளாதார வளமும், சமூக அந்தஸ்தும் ஒளிந்துள்ளது. அத்தனை பேரும் 25 வயது கற்கிறார்கள் என சொல்ல முடியாவிட்டாலும் , பெரும்பாலோர் இன்று குறைந்த பட்சம் பள்ளிக் கல்வியை பூர்த்தி செய்கின்றனர்.
இது எம்மாதிரியான சமூக மாற்றங்களைக் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் கொண்டு வந்துள்ளது என்பதைப் பார்ப்போம். குறிப்பாக கல்யாண வயது தள்ளிப் போய் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் தங்கள் திருமண வயதைத் தள்ளிப் போடுகிறார்கள் அல்லது குழந்தைப் பெறுவதை தள்ளிப் போடுகிறார்கள். இதற்கு காரணம் , வாழ்க்கைத் தரத்தை உறுதிப் படுத்திய பின் திருமணம் செய்வோம் என்ற மன நிலையும், சிறிது காலம் சந்தோசமாக இருப்போம் என்ற எண்ணமும் திருமணத்தையும் குழந்தை பெறுவதையும் தள்ளிப் போட செய்துள்ளது.
இதற்கும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் என்ன சம்பந்தமுள்ளது என்ற கேள்வி எழக் கூடும். இந்த நூற்றாண்டு கடந்த நூற்றாண்டோடு ஒப்பிடுகையில் பெண்ணுக்கு என்னென்ன மாற்றங்களைக் கொணர்ந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு, டீன் பருவத்திலேயே குழந்தை பெற ஆரம்பித்து விடுவாள். தாயும் குழந்தையும் பிரசவத்தில் பிழைப்பது  என்பது ஒருபுறம். மனிதர்களின் சராசரி ஆயுள் 40 ஆக இருந்ததால், வாழ்நாள் முழுவதும் சந்ததி விருத்தியே அவளின் முக்கியப் பணியாக இருந்தது. அது தவறு என சொல்லி விடலாகாது . அதில் ஒரு சந்ததி விருத்திக்கான சமூகப் பங்களிப்பும், குடும்ப நலன் கருதியும் அதிக குழந்தைகள் பெறுவது தேவையான அவசியமான ஒன்றாக இருந்தது. அதை பெண்களை அடிமைப்படுத்திய வாழ்க்கை என்று சொல்வது சரியாகப் பொருந்தாத காலக்கட்டம்.
ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் நிலைமை முற்றிலுமாக மாறிப் போனது. இன்று ஒரு பெண் 13 வயதில் பூப் பெய்தினாலும் 45 முதல் 50 வயது வரை மாத விடைக்  காலம் (menopause )உள்ளது எனக் கருத்தில் கொள்வோம். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்களைக் காட்டிலும் இன்றைய பெண் இரண்டரை மடங்கு உயிர் வாழ்கிறாள் மேலும் அவள் ஒரு மடன்கிருக்கு அதிகமான காலக் கட்டத்திற்கு குழந்தை பெறும் பாக்கியமும் உள்ளது. இருப்பினும் மருத்துவத்தின் வளர்ச்சியும் கல்வியின் துணையும் பெண்ணுக்கான பல விடுதலைகளைப் பெற்றுத் தந்தன. அவள் உயிர் பிழைத்ததில் தொடங்கி  வாழ்க்கைத் தரத்தையும் உயரச் செய்துள்ளது.
தற்கால பெண்ணின் நிலையை கணக்கில் கொள்வோம். உதாரணமாக ஒரு பெண்ணுக்கு இரு குழந்தைகள் மட்டுமே உள்ளன என வைத்துக் கொள்வோம். 20 மாதங்களே அவள் அக்குழந்தைகளை வாழ்நாளில் சுமக்கிறாள். மேலும் 3 வருட இடைவெளியில் அக்குழந்தைகளை அவள் பெற்றெடுக்கிறாள் என வைத்தால், அவளுடைய பணிச் சுமை என்பது அதிக பட்சமாக குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் வரையான கால அளவு மட்டுமே. அதாவது, குழந்தை வளர்ப்பில் தன வாழ்நாளில் ஒரு பெண் 10% மட்டுமே கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
கருவுறுவதும் குழந்தை பெற்றலுமே வாழ்க்கையாக இருந்த காலம் போனதற்கு முக்கியக் காரணம் மருத்துவ வளர்ச்சியே! அதுவே அவளின் வாழ்க்கைத் தரத்தை உருமாற்றிப் போட்டுள்ளது. இது எம்மாதிரியான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது எனவும் பார்ப்பது அவசியம். குறைந்த காலத்தையே குழந்தை பெற தன் வாழ்நாளில் ஒரு பெண் செலவழிப்பதால் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல ஓர் ஆணை அதிகம் அவள் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. அது கடந்த காலத்தில் கணவனின் துணையில்லாமல்/சார்ந்தில்லாமல் குழந்தையை பெறுவதில் மிகப் பெரிய பொருளாதார சிக்கல் அவளுக்கு இருந்தது.
அதிகம் கல்வியும் வேலை வாய்ப்பும் பெற்ற பெண்களுக்கு இனி இந்த கட்டுப்பாடுகள் அதிகமாகப் பொருந்தாது. பொருளாதாரம் முக்கியத்துவம் பெற பெண்களை திருமணத்திற்கோ அவள் சுதந்திரத்திற்கு எதிராகவோ வற்புறுத்துதல் என்பது 21 ஆம் நூற்றாண்டில் கடினம். பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கிற காரணத்தால் அன்பு கூட வந்து போகும். குடும்ப அமைப்பாக இருக்க வேண்டும் என்கிற உணர்வுப் பூர்வமான காரணங்களை முன்னிறுத்தி திருமணம் செய்துகொண்டாலும் விவாகாரத்துகள் அதிகமாக இருக்கும் என ஜார்ஜ் ப்ரீட்மன் தனது நூலில் தெரிவிக்கிறார். பெண் ஆணை சார்ந்தில்லாத பட்சத்தில் தன்னிச்சையான பல முடிவுகளை அவள் எளிதாக எடுக்கக் கூடும்.
இன்னொரு சிக்கலையும் ஜார்ஜ் ப்ரீட்மன் தன நூலில் முன் வைக்கிறார். 19ஆம் நூற்றாண்டில் டீன் வயதில் திருமணங்கள் முடியும். டீன் பருவத்தில்தான்  கணவனும் மனைவியும் பாலியல் ரீதியாக அதிக உணர்வுகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த நூற்றாண்டில் பெரும்பாலும் திருமணங்கள் 25 வயதுக்குப் பிறகோ, 32 வயதுக்குள்ளாகவோதான் திருமணம் செய்கிறார்கள். பாலியல் இச்சைகளுக்கான விருப்பங்கள் மிகக் குறைந்த காலக் கட்டத்தில் தான் இன்றைய திருமணங்கள் நடந்தேறுகின்றன. பதினான்கு வயதில் பூப் பெய்துகிற ஓர் ஆணோ பெண்ணோ 30 வயது வரையிலும் கன்னியாகவே இருப்பார்கள் என்று சொல்வதில் நம்பகத்தன்மை இல்லை என்கிறார். கன்னித் தன்மையோடு இனி வரும் காலங்களில் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.
நிச்சயமாக இது மரபார்ந்த குடும்ப வாழ்க்கையைக் குலைத்திருக்கிறது என்பதில் மாற்றமில்லை. இன்னமும் இதற்கான சரியான மாற்று வழிகளும் பிறக்கவில்லை. எவ்வாறிருந்தாலும் நெடிய ஆயுள், பிறப்பில் இருந்த இறப்பு விகிதம் குறைவு, குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், மக்கள் தொகை அதிவேகப் பெருக்கத்தை மட்டுப் படுத்தலில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.
இறுதியாக மக்கள் தொகை உள்ள நாடுகள் போர்க் காலத்தில் மிகப் பெரிய மக்கள் வளத்தோடு எதிரி நாட்டை எதிர் கொள்ளும் என்றும், ஆனால் அது அந்த நாட்டின்  வளர்ச்சியைப் பொறுத்தும் ராணுவ பலத்தைப் பொறுத்தும் இருக்கும் எனக் குறிப்பிடுகிறார். அமெரிக்க எழுத்தாளர் என்பதால் இந்த நூற்றாண்டை அமெரிக்காவே ஆளும் என்பதாகவே நூலில் விடை கொடுக்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s