கற்குவேல் அய்யனார் கோவில்

karkuvel ayyanar 3

கோவில் பற்றி எனக்குத் தெரிந்த விடயங்களைப் பகிருமுன் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
எங்கள் குல தெய்வமான கற்குவேல் அய்யனார் கோவில் பற்றி எழுதுவதில் எனக்குள் ஒரு மகிழ்ச்சி. யாரும் நம்புவீர்களா என்று தெரியவில்லை. எனக்கு விபரம் தெரிந்து 6 வயதிலிருந்தே வருடந்தோறும் பொங்கலுக்கு அடுத்த நாளான கரிநாளன்று கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு சென்று வருகிறோம். 1980களில் கோவிலுக்குப் பேருந்து வசதி எல்லாம் கிடையாது. எங்கள் ஊரான சாத்தான் குளத்திலிருந்து திருச்செந்தூருக்கு காலையில் 7:30க்கு ஒரு பேருந்து செல்லும். அது காயாமொழி சென்று, பின்னர் அதிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேரிக் குடியிருப்பு வரை செல்லும். மீண்டும் பேருந்து காயா மொழி வழியாகத் திருச்செந்தூர் செல்லும். அதைப் போல மாலையில் 4:30க்கு தேரிக் குடியிருப்புக்கு ஒரு பேருந்து வரும்.
காயாமொழி – சிவந்தி ஆதித்தனார், தனுஸ்கோடி ஆதித்தன், எஸ் ஆர் எஸ் ஆதித்தன், சி பா ஆதித்தன் மற்றும் சில தலைவர்கள் வாழ்ந்த வளர்ந்த ஊரது.
karkuvel ayyanar 1
கற்குவேல் அய்யனார் கோவிலானது தேரிக் குடியிருப்பிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் குதிரை மொழி என்ற கிராமத்தில் உள்ளது. குதிரை மொழியில் வீடுகள் எதுவும் கிடையாது. தேரிக் குடியிருப்பிலிருந்து கோவிலுக்கு நடந்தே வருடா வருடம் சென்று கொண்டிருந்தோம். கோவிலில் பொங்கலிட்டு கும்பிட்டு விட்டு மாலையில் பேருந்து வருவதற்குள்ளாக தேரிக் குடியிருப்பிற்கு வந்துவிட வேண்டும். இல்லையெனில், காயா மொழி வரை நடக்க வேண்டி இருக்கும். சில சமயங்களில் பொங்கலையொட்டி பேருந்துகள் குறைவான எண்ணிக்கையில் ஓடினால் , தேரிக் குடியிருப்புக்கு பேருந்து வராது.
அதுதான் கடியாக இருக்கும். சில நேரங்களில் அழுதது கூட உண்டு.
பொங்கல் இடுவதற்குத் தேவையானப் பொருட்களையும் ,  அபிஷேகத்திற்குத் தேவையான அத்தனைப் பொருட்களையும் சுமந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு போல்(Electric Pole ) கம்பி வரை கையை மாற்றாமல் தூக்கிச் செல்ல வேண்டும். அடுத்த கம்பி வரை இன்னொரு கைக்கு லக்கேஜை மாற்ற வேண்டும் என மனதிற்குள் வைராக்கியம் எடுத்தே தொக்கிச் செல்வோம். கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் இரு பக்கமும் வயல் இருக்கும். கருக்குமுள் மரங்களால் வேலி அமைக்கப்பட்டிருக்கும். கார்கள் கூட செல்ல இயலாத அளவுக்குப் பாதை இருந்தது. கோவிலுக்குச் செல்கிற பாதையில் சில குல தெய்வக் கோவில்களும் உண்டு.
karkuvel ayyanar 5
கோவிலில் பொங்கல் இடுவதற்குத் தேவையான விறகுகளைக் கோவிலைச் சுற்றிக் கிடைக்கும் பனை ஓலைகளையும், பாலை மற்றும் காய்ந்த கருக்கு முள்ளையும் கொண்டே பொங்கலிடுவோம். பொங்கல் இடுகிற நேரங்களில் கோவிலைச் சுற்றியுள்ள செம்மண் மலைகளில் /குன்றுகளில் ஏறி அதிலிருந்து கீழ் நோக்கி உருளுவது வழக்கம். மிகப் பரந்த மேடும்/கீழுமாக குறுத்து செம்மண் மணலும், சில இடங்களில் பாறை போல உறைந்த செம்மண் பகுதிகளும் மாறி மாறி இருப்பதைக்கண்டு மனம் மகிழும்.
கரும்பையோ, பனங்கிழங்கையோ தின்றுகொண்டே நடந்து செல்வோம். அப்பகுதி முழுவதும், முந்திரி மரங்களும், புளிய மரங்களும், ஆங்காங்கே பனை மரங்களும் இருக்கும். கோவிலில் பூஜை ஆரம்பிக்குமுன் கோவிலுக்கு வந்து விடுமாறு கட்டளை இட்டிருப்பார்கள். அய்யனார், பூரணம், பொற்கலை பேச்சி அம்மன், சுடலைமாட சாமி, கருப்பசாமி மற்றும் எண்ணற்ற வன தேவதைகள் சிலைகள் உண்டு. அனைத்து சாமிகளுக்கும் பூஜை செய்த பிறகு தேங்காய் விடலையை குதிரை வாகனம் அருகில் உள்ள தேங்காய் உடைக்கும் பகுதியில் உடைப்பார்கள். அப்போதெல்லாம் கரிநாளன்று கோவிலுக்கு யாரும் வருவது கிடையாது. ரொம்ப அரிதாக பொங்கல்  விடுமுறையைக் கொண்டாட வெளியூர்களில் இருந்து இரண்டோ மூன்று குடும்பங்களோ மட்டுமே வரும். ஆனால் மதியத்திற்குப் பிறகு மாலையில் தேரிக் குடியிருப்புக் கிராமத்திலிருந்து கிராம மக்கள் கோவில் பகுதிக்கு வருவார்கள்.
karkuvel ayyanar 2
பெரும்பாலும் கோவிலுக்கு அருகிலுள்ள பம்புசெட்டிலேயே குளிப்போம். இன்னமும் ஞாபகம் உள்ள ஒரு விடயம், ஒருமுறை குனிந்து எழுந்த போது, தண்ணீர் விழக்கூடிய பம்பின் கூரிய பகுதியில் இடித்து தலையில் இருந்து ரத்தம் வடிந்ததை மறக்க இயலாது. கோவிலைச் சுற்றிலும் ஆங்காங்கே மக்கள் தண்ணீர் பிடிக்க ஏதுவாக பெரியபெரிய  புளியமரங்களுக்கு அருகில் பைப் வசதி செய்திருப்பார்கள். சாப்பிடுவதற்குத் தேவையான தண்ணீரை , அருகிலுள்ள பைப்பில் பிடித்து விட்டு அங்கேயே காலை மட்டும் மதிய சாப்பாடை சாப்பிடுவது வழக்கம்.
பெரும்பாலும் குல தெய்வம் கோவிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவுக்கும், கள்ளர் வெட்டுத் திருவிழாவுக்கும் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். பெரும்பாலும் பள்ளி விடுமுறை போன்ற பிரச்சினைகளாலும் மிகவும் அமைதியான சூழலில் அய்யனாரை வழிபடலாம் என்பதால் பொங்கலுக்கு அடுத்த நாள் கோவிலுக்குச் செல்வது வழக்கம். இன்று வரையிலும் வீட்டில் கரிநாள் அன்றுதான் சென்று வருகிறார்கள். இப்போது நான் சவுதியில் இருப்பதால் விடுமுறைக்குச் செல்கிற போது கட்டாயம் கோவிலுக்கு சென்று விடுவதுண்டு.
கோவிலின் பின்பகுதியில் கோபுரம் அளவுக்கு செம்மண் குவிந்து கிடக்கும். ஆனால் இதுநாள் வரையில் எந்த சூழ்நிலையிலும் கோவில் செம்மண் சூறாவளிக் காற்றிலோ, புயலிலோ சூழப் படாமல் இருப்பதுதான் மிக ஆச்சர்யம்.
karkuvel ayyanar 4
செம்மண்ணில் நடந்து செல்லும் போது பதிகிற கால் தடத்திலிருந்து , இங்கு நடப்போம், அங்கே  போவோம் என ஒவ்வொருவரும் சொல்கிற திசைகளில் நடந்து சென்றதை மறக்கவே இயலாது. புளியங்காய் பறித்து சாப்பிட்டது, கொல்லாம் பழம் சாப்பிட்டுத் தொண்டை கட்டியது மறக்க முடியாத அனுபவங்கள். உலகமே நம் கைக்குள் என்பது போல யாருமே கண்ணில் தென்படாத தேரிப் பகுதியில் அழகிய இயற்கையை ரசித்த தருணங்கள் ஏராளம்.
2000களில் பேருந்து வசதியும் , அதிக பக்தர்கள் வருகையை முன்னிட்டும் சிவந்தி ஆதித்தனார் போன்ற சில பல பண முதலைகளின் உதவியோடு மண்டபம் மற்றும் பெயிண்டு அடித்து கோவில் புதுப் பொலிவுடன் காணப்பட்டது. பேருந்து செல்கிற அளவுக்கு சாலை வசதிகள் பெருக பெருக தினம் இருமுறை கோவில் வரை பேருந்துகள் வருகிற அளவுக்கு வசதிகள் இப்போது வந்துள்ளன. 2000த்திற்குப் பிறகு நாங்களும் சாலை வசதி இருந்ததால், வேன் பிடித்து சென்று விடுகிறோம்.
karkuvel ayyanar 6
அரசுகளின் கண்கள் எந்த கோவிலில் வருமானம் வருகிறது என பார்த்து… பார்த்து… இறுதியில் கற்குவேல் அய்யனார் கோவிலை அரசு அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்து விட்டது. தனி அமைப்பு இருந்த போதிலும் அங்கு பணி செய்பவர்களுக்கு அரசு வருமானம் என பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
பொங்கலுக்கு அடுத்தநாள் இவர்கள் கற்குவேல் அய்யனார் கோவிலுக்கு செல்கிறார்கள் என இப்போதும் எங்கள் கிராமமான செட்டிக் குளத்தில் உள்ள அத்தனை பேருக்கும் தெரியும். இப்போதெல்லாம் கரி நாளன்றே 50 கார்கள்,வேன்கள் ,பேருந்து,  சில லாரிகள் என கூட்டம் நிரம்பி வழிகிறது.
கள்ளர் வெட்டுத் திருவிழாவைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள்.
கோவிலின் வரலாற்றையும், கள்ளர் வெட்டு சிறப்பு, கோவில் அமைந்துள்ள இடத்திற்கான பேருந்து வசதி ஆகியவற்றை அடுத்த பகுதியில் காணலாம்.

One response

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s