யம்மா…ஏந்தான் இந்த அப்பா இப்படி இருக்காளோ …. சாப்பாட்டுத் தட்டுல மிச்சம் வைக்கக் கூடாதுன்னு வீட்டுல ரவுசு பண்ணுறார்னு பார்த்தா ஹோட்டல்ல வந்தும், பார்த்து ஆர்டர் பண்ணுங்க. மிச்சம் ஏதும் வச்சுறக் கூடாதுன்னு ஒரே அட்வைஸ். பத்தாக்குறைக்கு சாப்பாடோ, சப்ஜியோ மிஞ்சுச்சுனா பார்சல் போடுங்கன்னு வேற… ஏம்மா, அப்பா இப்படி பிச்சைகாரரா இருக்கார். தினம் தினம் ஏதும் மிஞ்சுதுன்னா பிரிட்ஜ்ல வச்சு காலையில் திண்கலாம்கிறார்.
போடி…. உங்க அப்பா எப்பவுமே இப்படித்தான். அவுக வீட்டுல யாருக்குத் தான் தாரள மனசு இருக்கு. பெருசா பேசுற… என்று தன் மகள் அமலாவிடம் அங்கலாய்த்தாள் அம்புஜம். ஊருக்கு செலவு செய்யும் போது உங்க அப்பனுக்குத் தெரியாதுடி…. நமக்கு சாப்பாடு வாங்கித் தரும் போதுதான் அவருக்கு கறி வலிக்கும். எப்பவெல்லாம் வாய்ப்புக் கிடைக்குதோ கிருஷ்ணாவை மட்டும் திட்டுவதோடு அல்லாமல், மாமியார் வீட்டையும் ஒரு பிடி பிடிச்சு பேசாமல் அவளுக்குத் தூக்கம் வருவதில்லை.
கிருஷ்ணாவைப் பொறுத்த வரையில் அவர் அப்படித்தான். கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாதவர். கிராமத்தில் அவர் வளர்ந்த விதம் அப்படி. பகட்டு வாழ்க்கையில் இன்னமும் நம்பிக்கையில்லாதவர். தன் மகளும் மனைவியும் உணவு விடயத்தில் கரித்துக் கொட்டுகிற எந்த பொழுதிலும்
அவர் கோபப் பட்டு பார்த்ததில்லை. உணவு கிடைக்காதவனுக்கு மட்டுமே பசியின் வலி புரியும். இவர்களுக்கு எங்கு புரியப் போகிறது என விட்டு விடுவார்.
இப்படியே இவர் பண்ணுறதுக்கு முடிவு கட்டணும். அப்பாவுக்கு பாடம் புகட்டனும்னு அம்மாவும் மகளும் பேசிக் கொண்டார்கள்.
சரிம்மா.. டிவியைப் போடு. அவர் வந்ததுக்கு அப்புறம் பேசுவோம்னு சொன்னாள் அமலா.
“தாராள மனசுக்காரர்” கிருஷ்ணா…. சிறந்த மனிதர்களை அடையாளப் படுத்தும் “சந்திப்போம் மாமனிதர்களை” என்ற நிகழ்ச்சியில் பங்குபெறும் கிருஷ்ணாவைப் பற்றிய கிளிப்பிங்கில் தன் தந்தை வருவதைக் கண்ட அம்புஜமும் அமலாவும் மேற்கொண்டு பேசாது மௌனித்திருந்தார்கள்.
சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத அனாதைக் குழந்தைகளுக்கு உணவும் கல்வியும் கொடுத்து நிறைய உதவிகள் செய்தமைக்காக ஜனாதிபதி விருதுக்கு உரியவர் கிருஷ்ணா என ஒவ்வொரு சேனலும், வெவ்வேறு வார்த்தைகளில் கிருஷ்ணாவைப் புகழ்ந்து கொண்டிருந்தன.
வீட்டுக்குள் எந்த சலனமுமில்லாமல் நுழைந்த கிருஷ்ணாவை ஆவி சேர்த்துக் கட்டியணைத்தார்கள் அமலாவும் அம்புஜமும்.
சிக்கனம், கஞ்சத்தனம், உதவுதல் மூன்றுக்குமான புரிதல் அவர்களுக்கு வந்துவிட்டதை அறிந்து உள்ளம் குளிர்ந்தார் கிருஷ்ணா.
நல்ல கதை சார்…
தொடர வாழ்த்துக்கள்….