தமிழ் வழிக் கல்வியா? ஆங்கில வழிக் கல்வியா? – எது தேவை ?

tamil 1

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி முறை அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டில் சமச் சீர் கல்வியைக் கொண்டு வந்தால் மெட்ரிக் மாணவர்களோடு அரசு மாணவர்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டு வருவதால் கல்வித் தரம் உயரும் எனவும், ஏழை மாணவர்களும் மெட்ரிக் மாணவர்களுடன் சம நிலைப் போட்டியில் இருப்பார்கள் எனவும் திமுக அரசு அன்று தெரிவித்தது. அதிமுக அரசோ  இன்று ஆங்கில வழிக் கல்வியை ஏழை வீட்டுக் குழந்தைகளும் பெறச் செய்வதன் மூலம் போட்டியை சமன் செய்ய இயலும் எனக் கருதுகிறது.
சமச் சீர் கல்வி  முறையை, கடந்த காலத்தில் கொண்டு வந்த பாட முறையானது மெட்ரிக் பள்ளிகள் நடைமுறையில் சொல்லிக் கொடுக்கிற அதீதமான பாடத் திட்டங்களைக் குறைத்து அரசுப் பள்ளி மாணவர்களோடு மெட்ரிக் மாணவர்கள் போட்டி போடச் செய்யும் புத்திசாலித்தனமான ஒரு முடிவைக் கொண்டு வந்தது!.
சமச் சீர் கல்வி முறை என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று என்பதை பல நடைமுறை உதாரணங்களுடன் என்னால் நிருபிக்க இயலும். அரசுகள் தங்களின் கையாலாகாத் தனத்தை புதிய திட்டங்கள் மூலமாக சமூகத்தை சம நிலைப் படுத்துவதாக நாடகமாடுகின்றன என்பதே எனது கருத்து.
ஆங்கில வழிக் கல்வி அரசுப் பள்ளிகளில் தேவைதானா  என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமானால் கல்வி முறையையும் பெற்றோர் மனநிலை , ஆசிரியர், கல்விக் கட்டமைப்பு, அரசு- தனியார் பள்ளிக் கல்வித் திட்டங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாது வெறுமனே எனது கருத்தைப் பதிப்பித்தல் நலமாகாது.
tamil 2
இன்றைய கல்வி முறையும் பெற்றோர் மனநிலையும்  எவ்வாறு உள்ளது?
இன்றைய கல்வி முறை என்பது வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு எவ்வாறு மாணவர்களைத் தயார் செய்வது? பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் என்ன? இவற்றை பூர்த்தி செய்யும் ஒரு கல்விப் பாடத் திட்டமாகவே உள்ளது. கண்டுபிடிப்பார்களையோ, விஞ்ஞானிகளையோ, ஆன்றோர்களையோ உருவாக்குவது அதன் நோக்கமாக இல்லாத கல்வி அமைப்பைக் கொண்டுள்ளோம். இதை ஒருவன் இன்றைய பள்ளிச் சாலைகளில் பெறுவதென்பது இயலாத ஒன்றாக ஆகியுள்ளது.
பெற்றோர்களைப் பொறுத்த மட்டில் எனது மகன் படித்தவுடன் கை நிறைய சம்பாதிப்பானா  என்ற சுய நலத்திற்கு அடிமையாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஒரு வளரும் தேசத்தில் தன்னிலையை அதாவது வசதியான ஒரு வாழ்க்கையை உறுதிப் படுத்தும் அல்லது பிழைப்பை மட்டுமே உறுதி செய்யும் கல்வி முறையே போதுமானது என்ற முடிவிற்கு பெற்றோர்கள்
வந்து விட்டார்கள்.
அரசு – தனியார் பள்ளிகள்:
அரசுப் பள்ளிகளை ஒப்பிடும் போது தனியார் பள்ளிகளின் நிலை மேலோங்கி இருந்ததை எளிதாக அடையாளம் காண இயலும். இதை ஆங்கில வழிக் கல்வி நடத்தும் பள்ளிகளோடு ஒப்பிடுவதற்குப் பதிலாக தமிழ் வழியிலேயே கல்வியைக் கற்பிப்பதிலும் தனியார் பள்ளிகள் சிறந்து விளங்கின. சிறந்து விளங்குகின்றன. இதைப் பெரும்பாலான கல்வி நிலையங்கள் எவ்வாறு செயல் படுகின்றன என்ற வகையில் மட்டும் ஒப்பிடுகிறேன்.
உதாரணமாக என்னையே எடுத்துக் கொள்வோம். ஐந்தாம் வகுப்பு வரை செட்டிக் குளத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பயின்றேன்.
ஆறாம் வகுப்பிற்கு சாத்தான் குளம் செல்ல வேண்டி இருந்தது.
1986 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கச் செல்கிறேன். அப்போது சாத்தான் குளத்தில்  ஒரே ஒரு மெட்ரிக் பள்ளி மட்டுமே இருந்தது. ஆனால் அப்போதுதான் கிருத்துவ மேலாண்மைக்குட்பட்ட தூய இருதய மேல்நிலைப் பள்ளியானது(தமிழ் வழிக் கல்வி)  உயர் நிலைப் பள்ளி அந்தஸ்தை வாங்கி இருந்த நேரம். இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வில் 100% தேர்ச்சியைப் பெற்று இருந்தன. தாலுகாவிலேயே முதல் மதிப்பெண்களை பெற்ற கல்வி நிறுவனமாக அது விளங்கியது. ஆனால் சாத்தான் குளத்திலிருந்த அரசு மேல்நிலைப் பள்ளி 70% தேர்ச்சியைக் காண்பிப்பதே அரிதாக இருந்தது. பெற்றோர்களுக்கு நமது மகன் இந்தப் பள்ளியில் படித்தால் தான் தேர்ச்சி பெறுவான் என்ற நம்பிக்கையும், அதிக மதிப்பெண்கள் பெறுவான் என்ற நம்பிக்கையும் பெற்றோர்களிடம்  நிலவி வந்தது. ஆகையால் தமிழ் வழிக் கல்வி செழுமையாக விளங்கிய காலத்திலேயே அரசு தமிழ் வழி பள்ளிக் கூடங்களின் இடத்தை தனியார் தமிழ் வழி கல்விக் கூடங்கள் பிடித்துக் கொண்டன.
இந்த இடத்தைத் தான் பின்னாளில் மெட்ரிக் பள்ளிகள் கையகப்படுத்தின. result oriented என்ற தாரக மந்திரத்தைப் பயன்படுத்தின. மாணவர்களுக்கு அதிக syllabus அதாவது சர்வதேச போட்டியில் வெற்றி பெறுவதற்கான பாடத் திட்டம் ஆகிய இரண்டையும் காரணம் காட்டி பெற்றோர்களைத் தங்கள் பக்கம் இழுக்கச் செய்தன. அதற்கு உலகளாவிய ஆட்சி மொழியாக உள்ள ஆங்கிலம் உதவியது.
தனியார் பள்ளிகளுக்குத் தேர்வு முடிவுகள் மட்டுமே முக்கியமானதாகப் படுகிறது. தனியார் பள்ளிகள் வணிகம் செய்வதன் மூலம் முடிவுகளை வெற்றி கரமாக வழங்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல் படுகின்றன. இவற்றுக்கெல்லாம் மாற்றாக அரசுகள் என்ன செய்திருக்க வேண்டும். அதைப் பின்னர் காண்போம். இச்சூழ்நிலையில் பணம் செலவு செய்ய அஞ்சாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான கல்வியை எங்கேனும் பெற முயற்சிப்பார்கள் என்பதே நிதர்சனம்.
அதை விடுத்து சமச் சீர் கல்வி வந்தால் சம நிலை வரும் என்ற மாயையை கடந்த கால திமுக அரசானது  கல்வியாளர்கள் துணைக் கொண்டு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியது போல பெருமை கொண்டுள்ளனர். உண்மை என்னவெனில், தனியார் பள்ளிகள் அனைத்தும் திமுக, அதிமுக ஆட்சியில்தான் அதிகம் முளைத்தன என்பதையும், சுதந்திரம் பெற்ற முப்பதாண்டுகள் வரை கல்வி நிறுவனங்களை சேவைக்காக அரசுக்குத் தானமளித்தன என்பதையும் மக்கள் அறியாமல் இல்லை.
அரசு ஆசிரியர் சேவைகளும் குமுறல்களும்:
எல்லாத் தொழில்களும் வணிகமயமாகியது போல ஆசிரியப் பணியும் மாறிவிட்டிருப்பதை அவர்களின் சேவை செய்யும் மனப்பான்மையில் காண இயலும். சில அரசு ஆசிரியர்கள் தங்கள் பணியை அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது. ஆனால் அதே வேளையில் பெரும்பான்மையான அரசு ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை செய்கிறார்களா என்ற கேள்வியை அவர்களே
கேட்டுக் கொள்ளட்டும். அரசு ஆசிரியர்கள் பெரும்பாலும் அரசைக் குறை கூறுகின்றனர். அவர்கள் முன் வைக்கும் காரணங்கள் , ஓட்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என இத்யாதி இத்யாதி விடயங்கள் வரை அரசுகள் தங்களைத் தேவையற்ற முறையில் துன்புறுத்துவதாகத் தெரிவிக்கின்றனர். பள்ளிக் கட்டமைப்புக் குறித்த  விடயங்களை அரசிடம் இருந்து பெறுவது கடினமாக உள்ளதாகவும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை எளிதாக நிராகரித்து விட முடியாது. தனியார் பள்ளிகளில் 9 ஆம்  வகுப்பிலேயே 10 ஆம் வகுப்பிற்கான பாடத் திட்டத்தையும், 11 ஆம் வகுப்பிலேயே 12 ஆம் வகுப்பிற்கான பாடத் திட்டத்தை நடத்துவது எளிது எனவும், அரசுப் பள்ளிகள் அவ்வாறு செயல் படுவதில்லை என்றும் குறிப்பிடுவதில் உள்ள நியாயத்தை மறுத்து விட இயலாது. கற்றல் – கற்பித்தலோடு மட்டுமே அரசுப் பள்ளிகள் செயல்பட வேண்டும் என அரசு விதி உள்ளதாக ஆசிரியர் ஒருவர் தெரிவிக்கிறார். அவர் முன் வைக்கும் இன்னொரு காரணம் படித்ததை வரி விடாமல் வாந்தி எடுக்கும் கல்வி முறையில் தான் தனியார் பள்ளிகள் விஞ்சி நிற்கின்றன என்றும், அதனடிப்படையில்தான் ஒருவன் அறிவு மிக்கவன் என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வீர்கள் என்ற கேள்வியையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் கேள்வியை எளிதாகத் தட்டி விட இயலாது.
அரசு கட்டமைப்பு:
கிராமந் தோறும் துவக்கப் பள்ளிகள் அமைய வேண்டும் அல்லது அருகாமையில் உள்ள கிராமம் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் கல்விச் சாலைகள் அமைக்கப் பட வேண்டும் என்ற செயல் திட்டத்தை அரசுகள் ஓரளவுக்கு நிறைவேற்றி உள்ளதைப் பாராட்டியாகத் தான் வேண்டும். அரசின் கொள்கைப்படி ஓராசிரியர் கல்வி முறையை மாற்றி இரு ஆசிரியர்கள் குறைந்த பட்சம் ஒரு பள்ளியில் இருக்கும் என அறிவித்து அதை நிறைவேற்றுவதாகவும் கூறுகிறது.
மேலும் குறைந்த பட்சம் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் எனவும் , ஒருவேளை 50 மாணவர்களுக்கு மேலிருந்தால் இரு ஆசிரியர் என்ற விகிதம் உள்ளதாக இருக்குமெனவும் அறிவித்து உள்ளது.
காலி இடங்களில் எந்த அளவுக்கு உடனடியாக ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப் படுகின்றன என்ற கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டும். ஏனெனில், இது நோய் வந்தால் மருத்துவரை அணுகி மருந்து சாப்பிட்டால் மட்டுமே நோய் தீரும் என்பதற்கு ஒப்பானது.
பல பள்ளிகளில் ஆசிரியப் பணி  இடங்கள் காலியானாலும் அரசின் அடுத்த அறிவிப்பு வரும் வரை, அங்குள்ள கிராமத்தில் படித்த மாணவர்களில் யாரையேனும் ஆசிரியர்களே பணிக்கு அமர்த்தி தங்கள் கைக்காசு போட்டுப் பாடம் சொல்லிக் கொடுப்பதையும் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.
இதில் என்னையே உதாரணப் படுத்திக் கொள்வேன். பொறியியல் படிப்பு முடித்து வேலை தேடிய பருவத்தில், செட்டிக் குளத்தில் நான் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர், பணி ஓய்வு பெற்று சென்ற போது மூன்று மாத  காலத்திற்கு நான்காம், ஐந்தாம் வகுப்பிற்குப் பாடம் எடுத்தேன்.
கட்டமைப்பிற்கு அரசின் நடவடிக்கைகள் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவே உணர்கிறேன்.
tamil 3
சமச் சீர் கல்வி மற்றும் ஆங்கில வழிக் கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் எனது கருத்து:
1. அரசுகள் குறைந்த பட்சம் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பது ஒரு வகுப்பிற்குப் பாடம் எடுப்பதாக இருந்தால் சரியானது. ஆனால் பெரும்பாலும்  குக்கிராமங்களில் 1 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரை 50க்கும் குறைவான மாணவர்கள் படித்தால் இரு ஆசிரியர்கள் என்பது போதுமானதல்ல. என்னைப் பொருத்தவரையில் தொடக்கப் பள்ளிகளில் குறைந்த பட்சம் வகுப்பிற்கு ஓர் ஆசிரியராவது நியமித்தல் அவசியம். தேவைப் பட்டால் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் அரசின் விகிதம் பொருந்தலாமே தவிர துவக்கப் பள்ளியிலும் அதே திட்டத்தைக் கொண்டிருத்தல் சரியானதல்ல.
2. தரமான கல்வி என்பது ஆங்கில வழிக் கல்வியை அரசுப் பள்ளிகளில் கொண்டு வருவது அல்ல. ஜெய மோகன் இவ்வாறு சொல்கிறார். அரசுப்பள்ளிகளுக்கு இன்று வரும் மாணவர்கள்,செல்வமோ கல்வித்திறனோ இல்லாத எளிய மாணவர்கள். அவர்களுக்கும் தரமான கல்வி கொடுக்கவேண்டுமென்றால் அதற்கு மேலும் அதிக தகுதி கொண்ட ஆசிரியர்கள் தேவை. இன்னமும் தீவிரமான பயிற்றுமுறையும் கண்காணிப்பும் தேவை.   ஆனால் எந்த அரசுத்துறையும்போல ஊழலும் பொறுப்பின்மையும் மலிந்த ஒன்றாகவே கல்வித்துறை உள்ளது. அரசு,கல்வித்துறைக்கு எந்த விதமான கவனமும் அளிப்பதில்லை. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. ஆசிரியர் பணியிட நியமனத்தில் தகுதியை மட்டுமே அளவுகோலாகக் கொள்வதில்லை. ஆசிரியர்களை முற்றிலும் கண்காணிப்பதில்லை. பாடத்திட்டத்தை நடத்தி முடிக்கும் அரசுப்பள்ளிகளே மிகக்குறைவு.
3.கல்விக் கட்டணம் அதிகமிருந்தும் தனியார் கல்வி நிலையங்களுக்கு
பொது மக்கள் செல்வதற்கு ஆங்கில வழிக் கல்வி வேலை பெற உதவும் என்றாலும், தீவிர அக்கறையையும், முறையான கட்டமைப்பு முறைகளையும் அரசுப் பள்ளிகள் காட்டாததால் தான் மக்கள் செல்கிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும். இதற்கு அரசுகள் செய்ய வேண்டியது இதுதான். ” தனியார் பள்ளியிலும் தமிழ் வழிக் கல்வி கட்டாயப் படுத்த சொல்லி வலியுறுத்த வேண்டும். அது நடை முறைச் சிக்கல் என்பதால் கட்டணத்தைக் குறைக்கச் சொல்வதோடு, அரசுப் பள்ளிகளின் தரத்தை முன்னேற்றுவதில் மட்டுமே
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
4. சமச் சீர் கல்வியை மத்திய பாடப் பிரிவான (CBSE) மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக தமிழ் வழிக் கல்வியை மேம்படுத்துவதுதான் சிறந்த வழி. அதை விடுத்து மெட்ரிக் பாடத் திட்டத்தைக் குறைப்பதாலும் ஆங்கில வழிக் கல்வியைக்

கொண்டு வருவதாலும் கல்வியில் சம நிலையை அடைவோம் என்பது மடைமையானது. சமச் சீர் கல்வி மூலமாக இரு பிரிவுகளாக குறைத்திருப்பதால் இன்னும் சில வருடங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே சமமான அளவுக்குப் போட்டி இருக்கும் என்பது ஒரு  ஏமாற்று வேலையே!.
5. என்னைக் கேட்டால் இன்னும் சில வருடங்களில் சர்வதேசப் பாடத் திட்டங்களை வழங்கும் பள்ளிகளும், CBSE பள்ளிகளும் குவிந்து கிடக்கவும் இந்த அரசுகள் வழி செய்யும்..தரமான ஆசிரியர்களையும், தரமானக் கல்வியையும் தராதிருக்கும் பட்சத்தில் மீண்டும் மத்திய வர்க்கம் CBSE கல்வி நிலையங்களையும், உயர் தர வகுப்பினர் சர்வதேச தர பள்ளிக்  கூடங்களையும் நோக்கிப் படையெடுப்பார்கள். சர்வதேசப்போட்டிக்குத் தங்கள் பிள்ளைகளைத் தயாரிக்கும் முனைப்புள்ள பெற்றோர்கள், அதற்காகப் பணம் செலவிட முனையும் நிலையில் அதற்கான கல்விமுறை இருந்துகொண்டுதான் இருக்கும். அரசுக்கல்வியை அந்தத் தரத்துக்குக் கொண்டுசெல்லத் தொடர்ந்து முயல்வதே ஒரே வழியாகும்.
6. வேலை வாய்ப்பைப் பெருக்குவதற்கான கல்வி முறையை தமிழ் வழிக் கல்வி வழியாக செய்ய இயலும். இல்லையெனில் “மெல்லத் தமிழினிச் சாகும்” என்பது உண்மையாக வாய்ப்புகள் அதிகம். உதாரணமாக 500 தமிழ் வழிக் கற்கும் மாணவர்களையும் , 500 ஆங்கில வழிக் கற்கும் மாணவர்களையும் எழுதச் சொன்னால், பிழைகள் பொதுவாக தமிழ் வழி மாணவர்களிடம் குறைவாக இருக்கும் என்பது நிதர்சனம். அதுவே ஆங்கிலத்திற்கும் பொருந்தும் என்றாலும் தமிழ் உயிருடன்
இருக்க  தமிழ் வழிக் கல்வி ஒருபடியேனும் உதவும்.
7. மாணவர்களின் நம்பிக்கை அவர்கள் பேசும் தாய் மொழியில் தான் இருக்குமே ஒழிய அந்நிய மொழியில் அல்ல. என்னைப் பொருத்தவரையில் அந்நிய மொழியை வெளி பயிற்சிகள் மூலமும், அனுபவத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்பது எனது அனுபவம்.
8. உன்னுடைய குழந்தை எங்கு படிக்கிறது எனக் கேட்பவர்களுக்கு எனது பெண் சவுதி அரேபியாவில் DPS என்ற பள்ளியில் CBSE பாடத் திட்டத்தின் கீழ் படிக்கிறாள் என்பதே. இங்கு தமிழ் வழியில் படிக்க இயலாது என்பதால் படிக்க வைக்கவில்லை
என்று பொய்  சொல்ல மனம் ஒப்பாத காரணத்தால் இந்தியாவில் இருந்தாலும் பொருளாதார நிலையில் வலுவாக இருந்தால் தற்போதைய சூழலில் கல்வித் தரத்தைக் கணக்கில் கொண்டு நானும் ஆங்கில வழியில் தான் படிக்க வைத்திருப்பேன். அவ்வாறானால் நான் (நான் என்பது இவ்விடத்தில் பொது மக்கள் ) கொண்ட கொள்கைக்கும், செயல்பாட்டிற்கும் வித்தியாசமாகத் தோன்றும். இந்தக் கேள்விக்கு அரசுகள் தரமான கல்வியை, சர்வதேச போட்டியில் வெல்லும் வலிமையை அரசுப் பள்ளிகள் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
உதாரணமாக  மதுக் கடைகளை குடிகாரனாக இருக்கிற ஒருவன் மூடுங்கள் என மனதில் சரியெனப் பட்டதை சொல்கிறவனிடம் , மதுக் கடைகளை மூடுவதற்கு முன்முயற்சிகள் எடுப்பதற்குப் பதிலாக குடிகாரர்கள் அதிகமாகி விட்டார்கள். ஆகையால்தான் அரசு குடிகாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வீதிக்கு ஒரு ஒயின்ஷாப் திறக்கப் படும், தேவைப்பட்டால் வீட்டிற்கே Door Delivery சேவை செய்து தரப்படும் என்பது போலல்லவா ஆங்கிலத்தை அரசே முன்னெடுத்துச் செயல்படுத்தும் என்பதும், பாடத் திட்டத்தை சர்வதேச தரத்துக்குக் கொடுப்பதற்குப் பதிலாக சமச் சீர் கல்வி முறையை அமுல்படுத்தியதன் மூலம் ஏழைகளுக்கு வேலை வாய்ப்பையும் கல்வித் தரத்தை மேம்படுத்தியது போலவும் கழ(ல)க அரசுகள் நாடகமாடுகின்றன.
9. தமிழை வளர்ப்பதற்கும் தமிழர்களை மேம்படுத்தவும் தரமான கல்வியை வழங்கச் செய்யலாம். தேவைப்பட்டால் அரசு வேலை வாய்ப்பில் 50% தமிழ் வழிக் கற்றவர்களுக்கு எனவும் சட்டத் திருத்தம் கொண்டு வரலாம்.
கல்வி முறை குறித்த எனது இறுதிப்பார்வை இதுதான்.
சிறந்த கல்வி முறை என்பது இவ்வாறாகத்தான் இருக்க வேண்டும். 1. தரமான கல்வி.  அதை வழங்க வேண்டுமானால் கட்டமைப்பு(infrastructure), ஆசிரிய-மாணவர் விகிதம், பள்ளி, கல்லூரிகளைத் தொடங்க முறையான அனுமதி வழங்குதல்.
2. கட்டுப்படியான கல்வி(Affordability of  Education): தகுதியான மாணவர்களுக்கும் ஏழைகளுக்கும் கல்வி கிடைக்கச் செய்தல். 3. கல்வி  வழங்குவதில் நேர்மை: பொருளாதார அடிப்படையிலாக முன்னுரிமை வழங்காமை, ஆசிரியர் பொறுப்புணர்ந்து கல்வி சேவையாற்றுதல்.

 

3 responses

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s