தமிழக மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி?

Ganesh Ariticle_NEW1

 

தமிழக மின் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி? என்ற எனது கட்டுரை 2013, ஜூன் மாதஆழம் இதழில் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை கடந்த மாதம் வெளிவரும் என்ற நம்பிக்கையில் இணைத்து இல்லையெனத் தெரிந்தவுடன்
அழித்து விட்டேன்.  இக்கட்டுரை வெளிவர உதவிய திரு மருதன் அவர்களுக்கும், ஆழம் ஆசிரியர் குழுவிற்கும், கிழக்குப் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் திரு பத்ரி அவர்களுக்கும் எனது ஆழ்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.

ஓர் அரசு தமது மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்திற்கும்  இடைவிடாத மின் உற்பத்தியை அளித்தால் மட்டுமே அம்மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் முன்மாதிரியான மாநிலமாக திகழ இயலும். அப்படியானால் ஓர் அரசு மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். ஆனால் இதைப் பூர்த்தி செய்ய அரசின் முன்னிருக்கும் பிரச்சினை இதுதான். “எது பாதுகாப்பான மின் உற்பத்தி முறை, எந்த வகை மின் உற்பத்தி நிலையங்கள் தடையில்லா மின்சாரம் வழங்க பேருதவி புரியும், அதை நிறுவுவதற்கு தேசத்தின்/மாநிலத்தின் பொருளாதார நிலை எந்த நிலையில் உள்ளது, எவ்வகை மின் உற்பத்தி முறையில் அதிக மின் உற்பத்தி பெற இயலும் போன்றவற்றைக் கணக்கில் கொண்டே ஓர் அரசு தமது தேசத்திற்கான/மாநிலத்திற்கான மின் உற்பத்தி திட்டங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

மின் உற்பத்தியில் தமிழகம் எவ்வாறு உள்ளது? குஜராத் மின் மிகு மாநிலமாக விளங்குவதற்கு என்ன காரணம்? முதலில் மின் உற்பத்தியில் குஜராத்தின் கடந்த கால மற்றும் நிகழ் கால பங்களிப்பையும் தமிழகத்தோடு ஒப்பீடு செய்வது அவசியம்.
Attachment 1
மின்தட்டுப்பாட்டில் குஜராத் இருந்த இடத்தில்  தமிழகமும், தமிழகம் இருந்த இடத்தில் குஜராத்தும் இப்போது இருக்கின்றன. அதுகுறித்த சில புள்ளி விவரங்கள் இதோ.  “கடந்த 2005 ஆண்டுக் கணக்கின் படி மின் தேவையை (7647MW), மின் உற்பத்தித் திறனுடன் (7555MW) ஒப்பிடும் போது, மின் தட்டுப்பாடு/ பற்றாக்குறை என்பது தமிழகத்தைப்  பொருத்தவரையில் 1% –  என்பதாகத் தான் இருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டுக்  கணக்கின் படி மின்தேவையை (12813MW ), மின் உற்பத்தித் திறனுடன் (10566MW) ஒப்பிட்டால், மின் பற்றாக்குறை/தட்டுப்பாடு என்பது 18% -ஆக அதிகரித்துள்ளது.
Attachment 4
 குஜராத்தைப் பொருத்தவரையில் கடந்த 2005 ஆண்டுக் கணக்கின் படி மின் தேவையை (10162MW), மின் உற்பத்தித் திறனுடன் (7578MW) ஒப்பிடும் போது, மின் தட்டுப்பாடு/பற்றாக்குறை என்பது குஜராத்தில் 25% அளவில் இருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டுக் கணக்கின் படி, குஜராத்தின் மின்தேவையை (10951MW), மின் உற்பத்தித் திறனுடன் (10759 MW ) ஒப்பிட்டால், மின் பற்றாக்குறை/தட்டுப்பாடு என்பது 2% -ஆக குறைந்துள்ளது. இதைத்தான் மின்வாரியம் Peak Demand, Peak Met & Deficit என்று குறிப்பிடுகிறது.
இதேபோல தேவை (Requirement), இருப்பு (Availability) மற்றும் பற்றாக்குறை/தட்டுப்பாட்டில்  (Deficit) குஜராத், தமிழகத்தின் நிலைகளை ஒப்பிட்டுப் பார்த்து விட்டு தமிழகம் ஏன் மின்பற்றாக்குறை மாநிலமாக உருவெடுத்துள்ளது? அதற்கு என்ன காரணங்கள் இருக்கக்கூடும்? நிலைமையை எவ்வாறு சமாளிப்பது? Renewable Energy மூலம் மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வோம் என்ற அரசின் திட்டங்கள்  சரியா? இன்றைய நிலையில் குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தி (Renewable Energy) மற்றும் புதுப்பிக்கவியலா எரிசக்திகளின் (Non Renewable Energy) பங்களிப்பென்ன? போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடலாம்.
Attachment 3
2005 ஆம் ஆண்டில் தமிழக  மக்களின் மின்தேவை 47872MU(மில்லியன் யூனிட் ) ஆக இருந்தது. ஆனால் மக்களுக்குக் கிடைத்த மின்சாரம்  (Availability ) 47570MU ஆக இருந்தது. இதனால் ஏற்பட்ட மின் தட்டுப்பாடு /மின் பற்றாக்குறை என்பது 1% ஆக மட்டுமே இருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு கணக்கின் படி தமிழக மக்களின் மின்தேவை  85,685MU(மில்லியன் யூனிட் ) ஆக இருந்தது. ஆனால் மக்களுக்குக் கிடைத்த மின்சாரம் (Availability ) 76,705 MU ஆக இருந்தது. இதனால் ஏற்பட்ட மின் தட்டுப்பாடு /மின் பற்றாக்குறை என்பது 11 % ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Attachment 4
2005 ஆம் ஆண்டில் குஜராத் மக்களின் மின்தேவை 59681MU (மில்லியன் யூனிட்) ஆக இருந்தது. ஆனால் மக்களுக்குக் கிடைத்த மின்சாரம் (Availability) 52,724 MU ஆக இருந்தது. இதனால் ஏற்பட்ட மின் தட்டுப்பாடு /மின் பற்றாக்குறை என்பது 12% ஆக இருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு  கணக்கின் படி குஜராத் மக்களின் மின்தேவை  74,696 MU(மில்லியன் யூனிட் ) ஆக இருந்தது. ஆனால் மக்களுக்குக் கிடைத்த மின்சாரம் (Availability 74,429 MU ஆக இருந்தது. இதனால் ஏற்பட்ட மின் தட்டுப்பாடு /மின் பற்றாக்குறை என்பது 0 % ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்துடன் இந்த ஒப்பீடு செய்ய பல காரணங்கள் உண்டு. முதன்மையான காரணம் தமிழகமும் குஜராத்தும் மின்தேவையில் தலைகீழாக மாறிக் கிடப்பதே.
gen-graph

தமிழகத்தின் மின் உற்பத்தியில் அனல்(Thermal ) மின்நிலையத்தின் பங்கு 29%, புனல்(Hydro ) மின் நிலையங்களின் பங்கு 21%, எரிவாயுவின்  (GAS) பங்கு 5%, தனியார் மின் நிலையங்களின் பங்கு 12%, மற்ற (Sugar straw, Rice straw, Wastage) மின் நிலையங்களின் பங்கு 5%, மத்திய அரசின் மூலம் நிறுவப்பெற்ற மின் நிலையங்களின் பங்கு 28% ஆக உள்ளது.

 

தமிழகத்தின் மொத்த மின் நிறுவுத் திறனில் மரபு சாரா எரிசக்தியின்(Renewable Energy ) பங்கு 55% ஆக உள்ளது. மரபு சாரா எரிசக்தி என்பது காற்று, கதிரவன், நீர், கடலலை மற்றும் Bio mass போன்றவற்றின் மூலம் மின்சாரம் பெறுவதே.

 

மரபு சாரா எரிசக்திக்கு அரசு முன்னுரிமை கொடுப்பதற்கு சொல்லப்படும் காரணங்கள் இவைதான். Green Energy, பச்சை வாயுக்களை (Green House Gas) குறைப்பது, இயற்கையின் மூலம் கிடைக்கப் பெறும் எரிபொருளைக் கொண்டு உற்பத்தி செய்தால், நடத்துவதற்கான செலவு (operating cost) குறையும் என சில காரணங்களை முன்வைக்கிறது.

 

 

இனி ஒவ்வொரு மின்னுற்பத்தி முறைகளைப் பற்றி முழுமையாக சொல்ல இயலாவிட்டாலும் , மின் உற்பத்தியில் அதன் பங்களிப்பையும், அதற்காகும் நிலப்பரப்பு, பொருட்செலவு, பாதுகாப்பான தன்மை என நன்மை தீமையைச் சுருக்கமாகக் காணலாம்.
solar
கதிராலைகள் (Solar Power Plant ):
கதிராலைகளை Green Energy எனவும், 5.6 – 6.0 KWH /SQ M என்கிற அளவில் வருடத்தில் 300 நாட்களுக்கு சூரிய ஒளி கிடைக்கும் என்பதால் அரசு கதிராலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இதன் மூலம் மின் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள் (Source) இலவசமாகக் கிடைப்பதும் அரசு கதிராலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான மிக முக்கியக் காரணங்கள். ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல பச்சை வாயுக்கள் இல்லா மின் உற்பத்திக்கு கதிராலைகள் அவசியம்தான். அதேபோல விபத்துகள் ஏற்பட்டால் பெரும் உடல் சேதம் ஏற்படும் வாய்ப்புகள் குறைவுதான்.
தமிழக அரசின் 2012 ஆம் ஆண்டின் அரசறிக்கைப் படி, 2013 to 2015 க்குள் 3000MW அளவுக்கு கதிர் மின் நிலையங்கள் அமைக்கப்பெறும் என அறிவித்துள்ளது.
தமிழக அரசின் திட்டத்தின் படி 2013 ஆம் ஆண்டில் 1000MW அளவிற்கு கதிராலைகளை அமைப்பதே நோக்கமாக உள்ளது. அரசு இணையதள செய்தியின் அடிப்படையில் பார்த்தால் SPV (Solar Photo Voltaic ) முறையில் மின் உற்பத்தி செய்தால் Poly /Multi Crystiline Silicon உபயோகித்தால் 1MW க்கு 4-5 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும் என தெரிவிக்கிறது. அதே வேளையில் Thin Silicon உபயோகித்தால் 1MW க்கு, 7.5- 9 ஏக்கர் நிலம் தேவைப்படும்.  மேலும் CSP (Concentrated Solar Power) முறையில் 1 MW மின் உற்பத்தி செய்ய 7.5 – 9.0 ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும்.
1MW க்கு 5 ஏக்கர் நிலப்பரப்பு தேவையெனக் கணக்கில் கொண்டால், 1000MW கதிராலை அமைக்க 5050ஏக்கர் (20.4 சதுர கிலோ மீட்டர்) நிலம் தேவைப்படும். உதாரணமாக, மனக் கணக்கு செய்தால் நீளம் 5 கிலோ மீட்டர் என இருபுறமும், அகலம் 4 கிலோமீட்டர் என இருபுறமும் இருந்தால் ஏற்படக்கூடிய நிலப்பகுதியே 20 சதுர கிலோ மீட்டர்களாகும்.
தற்போது கூடங்குளம் அணுஉலை பிரச்சினையில் இருப்பதால் அதற்காகும் நிலப்பரப்போடு இதை ஒப்பிட வேண்டியது அவசியமாகிறது. 2000MW அணு மின் உலையை நிறுவ 4சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு போதுமானது. ஆனால் 2000MW கதிராலை அமைக்க வேண்டுமானால் 40 சதுர கிலோமீட்டர்(10100 ஏக்கர்) நிலப்பரப்பு தேவை. ஆனால் கூடங்குளம் அணுஉலை போல ஓரிடத்தில் அமைக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
இதில் உள்ள இன்னொரு சிக்கல் ஆற்றல் அளவு (capacity factor). அதிக பட்சம் வருடம் முழுமைக்கும் கதிராலைகள் ஓடினால் கூட அதன் ஆற்றல் அளவு 45% ஐத் தாண்டாது என்பதே உண்மை.
2009 ஆம் ஆண்டின் தமிழக அரசின் ஆய்வறிக்கையின் படி Solar , BIO Mass மற்றும் Baggase Co-Generation ஆகியவற்றின் மின் நிறுவுத் திறன் 556 MW ஆகும். ஆண்டு முழுமைக்குமான மின் உற்பத்தித் திறன் 1220 மில்லியன் யூனிட்டுகளாகும். அந்த ஆண்டிற்கான ஆற்றல் அளவு 25% மட்டுமே!.
கதிராலைகளுக்கு மட்டும் கணக்கிட்டுக் காண்பிக்கிறேன். 1000 watt = 1 Unit. 556 MW என்பதன் மூலமாக ஒரு மணி நேரத்திற்கு 556 MW உற்பத்தி செய்ய முடியுமாயின், அதைத் தான் 556 MW /HR என சொல்கிறோம். இதை ஆண்டு முழுமைக்கும் தடையில்லாமல் மின் உற்பத்தி செய்தால், 556000 * 24hours * 365= 4870.05 மில்லியன் யூனிட்டுகள் மின் உற்பத்தி கிடைக்கும். இப்போது ஆற்றல் அளவு எவ்வாறு 25% வந்தது எனக் கணக்கில் கொள்வோம். 4870 மில்லியன் யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்ய வேண்டிய இடத்தில் 1220 மில்லியன் யூனிட்டுகள்மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. 1220/4870= 25%).
ஆற்றல் அளவு அல்லது குறிப்பிட்ட மின் உற்பத்தியின், உற்பத்தித் திறன் என்பது ஒவ்வொரு மின் உற்பத்தியிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கும். இதை ஓர் அரசு கணக்கில் கொள்ளவில்லையெனில், மின் ஆலைகளை நிறுவி விட்டு,  வெயில் இல்லை, காற்று இல்லை போன்ற காரணங்களை மட்டுமே கூறிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. அதிக பொருட் செலவும் செய்து, தேசத்தின்  மின் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாமல் போவது வருந்தக் கூடியதாக மட்டுமே அமையும்.
wind energy
காற்றாலைகள்:
இந்தியாவைப் பொருத்தவரையில் காற்றாலைகளின் மொத்த மின் நிறுவுத் திறனில் தமிழகத்தின் பங்கு 40% என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் காற்றாலைகளின் தற்போதைய மொத்த மின் நிறுவுத் திறன் 7134 MW ஆகும்.
காற்றாலைகளின் நன்மைகளாகப் பார்ப்போமேயானால், அது CO2 அதிகம் உமிழாததும், காற்று மாசுபடுதலைத் தவிர்த்தலும் ஆகும். மேலும், எந்த கதிர் இயக்கங்களும் காற்றாலைகள் மூலமாக வெளிவருவதில்லை. காற்றாலைகள், அணு கழிவுகள் போல் எதையும் தன்னுள் கொண்டில்லை என்பதும் இதன் பலம். மேலும் இது கதிராலையைப் போல CLEAN energy என்றே அழைக்கப்படுகிறது. காலம் முழுமைக்கும் காற்று இருக்கும் என்பதும் இதன் பலம். எந்த ஒரு ACID RAIN போன்ற தீய விளைவுகளை காற்றாலை மின் உற்பத்தித் தருவதில்லை. தமிழக அரசின் ஆய்வறிக்கைப் படி 2011-12 ஆம் ஆண்டில் மின் உற்பத்தியில் காற்றாலைகளின் பங்கு வெறும் 12.6% மட்டுமே!.
கதிராலைகளைப் போலவே காற்றாலைகளிலும் மின் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும். அதைப் போலவே காற்றாலைகளுக்கு தேவைப்படும் நிலப்பரப்பும்
மிக அதிகமே!. ஆனால் கதிராலைகளைப் போல் அல்லாது , அதே நிலப்பரப்பை விவசாயம் போன்ற மற்ற விடயங்களுக்கும் உபயோகிக்க இயலும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு காற்றாலைகளை நிறுவுவதற்கும், அதிக மின் உற்பத்திக்கும் ஏற்ற மாநிலம்தான். ஆனால் பருவ காலங்களிலும், அதிக அளவு காற்று வீசினால் மட்டுமே அதிக மின் உற்பத்தியைப் பெற இயலும்.
தனியார் காற்றாலைகளின் நிறுவனங்களுக்கு அரசு முறையாக பணம் செலுத்தித் தீர்வு தரவில்லையெனில், மின் உற்பத்தியை அவை நிறுத்தி விடுவதும், மேலும் ஆண்டு முழுமைக்குமான மின் உற்பத்தியை காற்றாலைகளை நம்பி அரசால் இருக்க முடியாமல் போவதும் அரசின் முன் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள்!
மற்ற மின்  உற்பத்தி முறைகளைப் பற்றிய சுருக்கமான பார்வையையும், குஜராத் எவ்வாறு மின்பற்றாக்குறையற்ற  மாநிலமாக விளங்குகிறது என்பதற்கான காரணங்களையும், அணு மற்றும் அனல் மின் சக்தியின் மூலம் மின் உற்பத்தி அவசியமானதா போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடையைக் காணலாம்.
hydro
நீர்மின் உற்பத்தி:
30-09-2012வரையிலான காலக் கட்டத்தில், தமிழகத்தில் நீர்  மின் நிலையங்களின் மொத்த மின் நிறுவுத் திறன் 2186 MW ஆகும். மரபு சாரா எரிசக்தியான நீர் மின் திட்டத்தின் நன்மை எனப் பார்த்தால் கதிராலைகள், காற்றாலைகளைப் போலவே உள்ளது. ஆனால் அதன் தீமைகள் மற்ற மரபு சாரா எரிசக்தி முறைகளைக் காட்டிலும் அதிகம். சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதும், நீர் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதும், நில அரிப்பு உருவாகக்  காரணமாகவும் உள்ளது. மற்றொரு பிரச்னை, மக்கள் இடப்பெயர்ச்சி! அதன் மூலம் விளையும் பல பொருளாதார, சமூக, தனிப்பட்ட உணர்வுப் பிரச்னைகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும் தவிரவும், கதிராலைகளைக் காட்டிலும் ஐந்து மடங்கு நிலப்பரப்பு நீர் மின் ஆலைகளுக்குத் தேவைப்படுகிறது. இதர தீமைகள் கதிராலை, காற்றாலை போலவே உள்ளன.
இது குறித்து நான் எழுதிய கட்டுரை தமிழ் பேப்பர் இணைய இதழில்(http://www.tamilpaper.net/?p=6888) ஏற்கனவே வெளி வந்துள்ளது.
thermal
அனல் மின்சக்தி: (நிலக்கரி, ஆயில், காஸ் ):
Dirtiest Energy என்றழைக்கப்பட்டாலும் உலகின் பெரும் மின் தேவையை இன்றளவும் பெருமளவில் பூர்த்தி செய்வது அனல் மின் நிலையங்களே!. இந்தியாவின் மின் தேவையில் ஏறத்தாழ 68% (138806 MW ) அனல் மின் நிலையங்களின் பங்கு உள்ளது. தமிழகத்தில் அனல் மின் நிலையத்தின் மொத்த மின் நிறுவுத் திறன் 7527 MW (30-09-2012) ஆகும்.
தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் நிறுவப்பெற்ற அனல் மின் நிலையத்தின்(நிலக்கரி) நிறுவுத் திறன் 2970 MW ஆகும். இதன் மூலம் மின் உற்பத்திப்  பெற 16 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.  CIL (Coal India LTD ) மூலம் 13.5 மில்லியன் தமிழகத்திற்குக் கிடைக்கும். மேலும் தேவைப்படுகிற நிலக்கரியை  தமிழகமே இறக்குமதி செய்து கொள்ள வேண்டும்.
அனல் மின் நிலையங்கள் தான் அதிக அளவு மின் உற்பத்தியில் பங்கு வகிக்கின்றன. தமிழக அரசின் 2009 ஆம் ஆண்டின் ஆய்வறிக்கைப் படி நிலக்கரி மூலப் பொருள் கொண்ட அனல் மின் நிலையத்தின் ஆற்றல் அளவு 81% ஆகும். காஸ் மூலப் பொருள் கொண்ட அனல் மின் நிலையத்தின் ஆற்றல் அளவு 52% ஆகும். மத்திய அரசின் மூலம் நிறுவப் பெற்ற அனல் மின் நிலையத்தின் ஆற்றல் அளவு 71% ஆகும்.
அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலப்பரப்பு, கதிர், காற்று , நீர் ஆலைகளைக் காட்டிலும் மிக மிகக் குறைவு என்பது இதன் மிக முக்கிய நன்மையாகப் பார்க்கப் படுகிறது. RENEWABLE Energy யைக் காட்டிலும் நிலக்கரி மின் உற்பத்தி முறை ரொம்பவும் நம்பத்தகுந்தது. (reliable). மூலப் பொருள் தேவையான அளவுக்கு இருக்கும் பட்சத்திலும், முறையான பராமரிப்பும் மேற்கொண்டால் தடை இல்லா மின்சாரத்தைப் பெற இயலும்.
நிலக்கரியின் தீமைகளைப் பற்றி சொல்வதானால் GREE NHOUSE GASES (GHG ) EFFECT என்பது மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கத்தினால் காடுகள் அழிக்கப்படுதலும், காற்று மாசுபடுதலும் தவிர்க்க இயலாதது. மேலும், நிலத்தின் திடத் தன்மையை இழப்பதால் நிலக்கரி சுரங்க தீ விபத்துக்குள்ளான பகுதி என்பது பல நூறாண்டுகளுக்கு அதன் எரியூட்டப்பட்ட தன்மை இருப்பதால், அந்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படலாம்.
nuclear
அணு மின்சக்தி:
இந்தியாவில் உள்ள மொத்த அணு உலைகளின் Installed Capacity is 4780MW . கல்பாக்கத்தில் உள்ள இரு மின் உலைகளின் மின் நிறுவுத் திறன் 2 *220MWe ஆகும். அணு மின் உலைகளின் நன்மைகளாகப் பார்த்தால் அணு ஆலைகள் மின் உற்பத்தியில் மிகச் சிறந்த பங்கு ஆற்றுகின்றன. அதற்காகும் நிலப்பரப்பு மரபு சாரா எரிசக்தி முறைகளோடு ஒப்பிட்டால் மிகக் குறைவு. இந்தியாவில் உள்ள மற்ற மின் நிலையங்களைக் காட்டிலும் அணு மின் நிலையத்தின் ஆற்றல் அளவு மிக அதிகம். நிலக்கரி மின் உற்பத்தியைப் போல அதிக அளவில் பச்சை வாயுக்களை அணுமின் நிலையங்கள் வெளி விடுவதில்லை.
இதன் தீமைகளாகப் பார்த்தால்,  நீர் மின் நிலையங்களைப் போல மக்களை இடப்பெயர்ச்சி செய்ய வேண்டி வரும். இதை நடத்துவதற்கான மூலப்  பொருளின் செலவும் அதிகம். மேலும் அணு உலைக் கழிவு குறித்த அச்சமும், விபத்து ஏற்பட்டால் அதன் மூலம்  கதிர் வீச்சு குறித்த அச்சமும் மிகப் பெரிய தீமைகளாக உள்ளது. கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சமும் உள்ளது.
குஜராத்
Renewable energy share –Year 2012                             
மீண்டும் தமிழகத்தையும் குஜராத்தையும் ஒப்பிடலாம். குஜராத்தில் உள்ள மொத்த மின் நிலையங்களின் நிறுவுத் திறன் 23927 MW ( As of Aug 2012). குஜராத்தில் மின் உற்பத்தியில் வெறும் 18% அளவிலேயே மரபு சாரா எரிசக்திகளின் பங்கு உள்ளது.
தமிழ்நாடு
Renewable energy Share – Year 2012
Energy tn
30.09.2012  வரையிலான காலக்கட்டத்தில்  தமிழகத்தின் மொத்த மின் நிறுவுத்திறன் 18,245 MW  ஆகும். புதுப்பிக்கவியலா மின் உற்பத்தியின் நிறுவு திறன்  8,141 மெகாவாட்டாகும். மரபுசாரா எரிசக்தியான காற்றாலை, தாவர சக்தி, நீர்  மற்றும் இணை மின் உற்பத்தியின் நிறுவு திறன்  10,104மெகாவாட்டாகும் . இது மாநில, மத்திய மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் நிறுவப்பட்டவையாகும்.
2005 ஆம் ஆண்டில் 5727MW மின் நிறுவுத் திறனுடன் இருந்த குஜராத் தற்பொழுது 23,927MW மின் நிறுவுத் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 2005 ஆண்டில் conventional energy -யின்  மின்நிறுவுத் திறன் 9531MW-லிருந்து தற்போது 10365MW அளவுக்கே உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் புதுப்பிக்கவியலா மின் நிலையங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மரபு சாரா எரிசக்தியான காற்றாலைகள் தான் அதிகம் நிறுவப் பெற்றுள்ளன.
மேற்கூறிய செய்திகளை ஆய்வு செய்தால் சில விடயங்கள் புரியும்.
1. குஜராத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் மரபுசாரா எரிசக்தியைக் காட்டிலும் புதுப்பிக்கவியலா எரிசக்திகளே அதிக பங்காற்றுகின்றன.
2. தமிழகம் மரபுசாரா எரிசக்திக்கு குஜராத்தை விட அதிக முக்கியத்துவும் கொடுத்துள்ளதும் தெரிய வருகிறது. ஆனால் மரபுசாரா எரிசக்திகளை அதிக அளவு நம்பி இருக்க வேண்டிய நிலையில் இருப்பதும் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் உள்ள சிக்கல் எனக் கருதுகிறேன்.
3. குஜராத் அரசு அதிக அளவில் மின் நிலையங்களை அமைத்ததன் மூலம்தான் மின் மிகு மாநிலமாக விளங்குகிறது.
4. தமிழக அரசு தனியார் மற்றும் மத்திய அரசை சார்ந்து இல்லாமல் அதிக மின் உற்பத்தி நிலையங்களை தாமாகவே அமைக்க திட்டங்கள் வகுக்க வேண்டும்.
மனிதர்களின் பாதுகாப்பையும், சுற்றுச் சூழலைக் கருத்தில் கொண்டும்  மரபுசாரா எரிசக்திக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.. ஆனால் அவை வருடத்தில் குறிப்பட்ட கால  நேரத்திற்கு மட்டுமே மின் உற்பத்தியில் பெரிதும் பங்கு வகிக்கின்றன.
அதே வேளையில் புதுப்பிக்கவியலா எரிசக்திகளான அனல் மற்றும் அணு நிலையங்களுக்கும் ஓர் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு ஒரே வருடத்தில் 1000MW கதிராலைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை புதுப்பிக்கவியலா மின் நிலையங்களுக்கும் கொடுக்க வேண்டும். ஏனெனில் அனல் மற்றும் அணு நிலையங்கள் மின் உற்பத்தியில் அதிக ஆற்றல் அளவுடனும், அதை அமைக்க குறைந்த நிலப்பரப்பே தேவையென்பதும், மூலப் பொருள் இருந்தால் மின் உற்பத்தியில் தடை கிடையாதென்பதாலும் இதையும்  ஆதரிக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் 70% புதுப்பிக்கவியலா மின் மூலங்களான அணு/ அனல் மின் நிலையங்களாகவும் , 30% க்கு மரபு சாரா மின் மூலங்களான கதிர், காற்று, நீர், biomass மின் நிலையங்களாகவும் இருக்குமாறு  திட்டங்களைத் தீட்டினால்  மின் பற்றாக்குறையற்ற மாநிலமாக தமிழகத்தைக் காணலாம். இல்லையெனில், மற்ற மாநிலங்களில் கடன் வாங்கி மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் செயலைச் செய்தால் தமிழகம் மேலும் பின்தங்கிய மாநிலமாகவே மாறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Source:

One response

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s