சாதிகளை ஒழித்தே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்வதால் சாதிகள் ஒழிந்துவிடும் என்றெல்லாம் நான் நம்பத் தயாரில்லை. சாதியைப் பிடித்து வைத்துப் பேசுவதால் சாதிகள் மறுமலர்ச்சி பெறப் போவதில்லை. அது கால மாற்றத்தாலும், அரசாங்கத்தை ஆள்பவர்கள் அமைக்கிற சட்ட திட்டங்களினாலும் மட்டுமே சாதிகள் ஒழிவதென்பது நடந்தேறும்.
விவசாயம் சார்ந்த வாழ்க்கைக்குள் இருந்த வரை கல்வி தேவையற்று இருந்தது. அது கிராமங்களின் பிடியில் இருந்த காலக் கட்டங்கள். நிலப் பிரபுத்துவ காலமது. கிராமத்தை நம்பி மனிதர்கள் வாழ்ந்தார்கள். அக் காலக் கட்டம் குலம், கோத்திரம், சாதி, மதம், அந்தஸ்து (பொருளாதார அளவில்) ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே மண பந்தங்கள் நடந்தேறின.
அந்தக் காலக் கட்டத்தை எடுத்துப் பாருங்கள். உறவுக்காரர்கள் நீங்கள் வாழ்ந்த பகுதியில், குறிப்பிட்ட நில அளவைக்குள் வாழ்ந்தவர்கள். குழு வாழ்க்கையாக வாழ்ந்த மனிதர்களுக்கு உறவினனை வெறுத்தோ, சாதியை புறந்தள்ளியோ எதையும் செய்ய இயலாது. காரணம், விவசாய நிலம் தொட்டு சொத்து வரை அண்ணன் தம்பிகளின் இடங்கள் அடுத்தடுத்து கிடந்த விளை நிலங்கள், வீடுகள் என அமையப் பெற்றிருந்த காலமது. அதாவது, பணி என்பது அவர்கள் சார்ந்த நிலப் பகுதிக்குள்ளாகவே சுருங்கி விட்ட காலமது. நாளை நமக்கு ஒரு பிரச்சினைன்னு வந்தா அக்கம் பக்கத்தில் இருக்கிற இவன் உதவிக்கு வேண்டும் என்ற எண்ணங்கள் மனிதர்களை, அவர்கள் வைத்திருந்த சட்ட திட்டங்களுக்குள் கட்டுப் பட்டு செயல் படுத்தின. ஆகையால்தான் அக்காலக் கட்டத்தினர் தாங்கள் உருவாக்கிய சட்ட திட்டங்களுக்கு வெளியே சென்றால் தங்களுக்கு அதிகப் பாதிப்பு ( எதிர் கால சந்ததியினருக்கு) என நினைத்து அதற்குள்ளாகவே வாழப் பழகி இருந்தார்கள்.
கிராமங்களை சென்று பாருங்கள். ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு வீதிகளில், தனி ஊர்களில் வாழ்ந்த காலக் கட்டம். தலித்துகள் ஊருக்கு ஒதுக்குப் புறத்திலும், மற்ற சாதிகள் ஊரை சுற்றியும் வாழ்ந்தார்கள். இப்போதும் கிராம வீடுகள் அவ்வாறே இருக்கின்றன. ஒவ்வொரு சாதியினரின் வீடுகளும் ஒவ்வொரு தெருவிலோ, ஒரு வீதியிலோ இருப்பதைக் காணலாம். ஆனால் அக்ரகாரம் போன்ற தெருக்கள் பிராமண வீடுகள் குறிப்பிட்ட காலம் வரை விற்பதாகவோ, வாடகைக்கு விடுவதாகவோ மட்டுமே இருந்தன. பணம் மட்டுமே பிரதானம் என மாறிய காலக் கட்டத்தில் சாதி பார்க்காது எவர் அதிக விலைக்கு வாங்குவாரோ அவருக்கு விற்க ஆரம்பித்தார்கள். இப்போது அக்ரக்ஹாரம் சென்று பாருங்கள். உயர், பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் வீதிகளாக மாறியுள்ளதைக் காணலாம்.
பிராமணர்கள் காலத்திற்கு ஏற்றாற்போல வெகு விரைவாக முடிவெடுத்து, அடுத்த கட்டத்திற்கு தங்களை எடுத்துச் செல்வதை நாம் காணலாம். கிராமங்களில் இருந்த அக்ரஹாரங்கள் தான் அதன் முன்னோடி. கிராமங்களை விட்டு நகரத்திற்குள் தஞ்சம் புகுந்த முன்னோடிகள் அவர்கள். மற்ற சாதியினர் முழுமையாக விவசாயத்தையும், அரசுப் பணியை மட்டும் நம்பி இருந்ததால் அவர்கள் வெகு விரைவாக முடிவெடுக்க முடியாது திணறிப் போனார்கள்.
நாம் வாழும் காலக் கட்டம் நிலப் பிரபுத்துவத்துவ காலத்தினின்று முழுமையாக வெளியேறாமலும் முதலாளித்துவக் கால கட்டத்திற்குள்ளாக முழுமையாக மாறி விடாமலும் இருக்கிற காலக் கட்டங்கள்.
இயந்திரங்களுடன், தொழில் நுட்ப வாழ்க்கையில் அடியெடுத்த மனிதர்களால் கல்வியும் நகர்ப் புறமும் வளர்ந்தன. ஆம். மக்கள் கல்விக்கும், பணிக்குமாக நகர்ப் புறங்களில் குடியேறவும் செய்தார்கள். அது முதலாளித்துவத்துவ வாழ்க்கை முறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கின்றன. இங்கு அந்தஸ்தை நிர்ணயிக்கும் பொருளாக பணம், கல்வி, அவர் செய்யும் பணி முக்கியத்துவம் பெறும். முதலாளித்துவ காலக் கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ள நமக்கு சொந்தக் காரர்கள் அருகில் குடி இருக்கவில்லை. ஆகையால் அவர்களைச் சார்ந்து நமது அவசரத் தேவைகள் நிறைவேற வேண்டிய அவசியமில்லை.
முதலாளித்துவ காலக் கட்டத்தில் காலடி வைத்துள்ள நம் காலக் கட்டத்தினருக்கு அலுவலகத்தில் பணி புரியும் நண்பர்களும், அப்பார்ட்மெண்டில் ஏதேனும் ஒரு நண்பர் மட்டுடனுமான நட்பு மட்டுமே அவசரத்திற்கும், அன்றாட வாழ்க்கை நகர்வுகளுக்கும் உதவும் என நினைப்பதால் உறவுகளும், நிலப் பிரபுத்துவ மன நிலையில் இருக்கிற மனிதர்களும் இரண்டாம் பட்சமாகி விட்டார்கள். இங்கு முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது, இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தப் பட்ட , மிகவும் பிறபடுத்தப் பட்ட சமுதாயங்கள் அதிக அளவில் முன்னேறிய நிகழ்வு.
முதலாளித்துவ மன நிலைக்குத் தம்மைத் தயார் செய்து கொண்ட பெற்றோர்கள் காதலை அங்கீகரிக்க அவர்களுக்கு இது போதுமானதாக இருக்கிறது. “மண மகனும் மண மகளும் சம நிலையுடன், நல்ல சம்பளம் வாங்குகிற நிலையில் இருக்கிற பட்சத்தில் சாதிகள், மதங்கள் அவர்களுக்குப் பெரிதாக இல்லாது போல் காட்டிக் கொள்ள, பிள்ளைகள் விரும்பி விட்டார்கள். இப்பெல்லாம் நாம் சொல்லி எங்கே கேட்கப் போகிறார்கள், அதனால்தான் அவர்கள் விருப்பத்திற்காக திருமணத்திற்கு சம்மதித்து விட்டோம் என்று காரணம் அடுக்குவார்கள்.” இதில் யாரோ ஒருவர் கல்வியில், பொருளாதார அந்தஸ்தில், பணியில் பொருத்தமில்லாத ஒருவரைக் காதலித்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதே நிஜம்.
தேவையற்ற பொருளோ, அமைப்போ நீடித்து வாழ இயலாது. சாதிகளும் அவ்வாறே. மனிதர்கள் தங்களுக்கு எது பலனளிக்கும், பலனளிக்க உதவுகிறது என்ற அடிப்படையில் தான் ஒவ்வொரு விடயத்தையும் அணுகிறார்கள். அதனடிப்படையில் தான் முடிவெடுக்கிறார்கள். முதலாளித்துவக் காலக் கட்டம் ஓரளவுக்கு சாதிய வெறியை மடை மாற்ற உதவும். ஆனால் சாதி ஒழியுமா என்றால் அது கேள்விக் குறிதான். அதே போல் சாதியத்தால், அமைப்புகளை வலுப்படுத்தி அரச அதிகாரத்தை அடைவதன் மூலம் சமூகத்திற்கான நலனை கிடைக்கச் செய்யலாம் என நினைக்கிற முயற்சிகள் வெற்றி பெற்றால் அவை கட்டமைக்கும் சட்ட திட்டத்தினின்று விடுபட இயலாது.
என்னைப் பொறுத்த வரையில், கால மாற்றங்கள் தீர்மானிக்கிற விடயத்தில் மனிதர்கள் பெரும்பாலும் பயணிப்பார்கள் என்பதையும், அரச அதிகாரத்தை யார் கையில் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தும் தான் சமூகக் கட்டமைப்பு செயல் படும் என நினைக்கிறேன். சம கால அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை வைத்துப் பார்த்தால் சாதிய அமைப்புகளை ஒழிப்பதற்கான வழியே கண்களுக்குத் தென்பட வில்லை. எந்த விடயமும் தேவையின் அடிப்படையிலும், பலன்களின் அடிப்படையிலும் மட்டுமே ஜீவிக்க இயலும். சாதியால் எந்தப் பலனுமில்லை என்று ஒரு சமூகம் நம்புகிற காலக் கட்டத்தில் மட்டுமே சாதி மறையும் என்பது என்னுடைய கருத்து.
அந்தக் காலம் தான் விரைவில் வரட்டும்…