சாதியால் சமூக பலன்கள் உண்டா? இட ஒதுக்கீடு அவசியமா? சாதியை ஒழிக்கப் புறப்பட்டிருக்கும் சமூக முற்போக்குவாதிகளின் நிலைப்பாட்டோடு என்னுடைய நிலையையும் முன் வைக்கிறேன். எதில் உண்மையுள்ளது? எது சரி என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
- இட ஒதுக்கீடு அவசியம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இட ஒதுக்கீட்டின் மூலம்தான், சமூக, பொருளாதார அடிப்படையில், சமூகத்தில் பின் தங்கியுள்ளவர்களை முன்னேற்றச் செய்ய இயலும். நிச்சயமாக, அம்பேத்கார் கொண்டு வந்த சட்டத்தின் மூலமாகவே, அதை ஓரளவுக்கு சமன்படுத்த இயலும். அதனடிப்படையில், இட ஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். ஆனால், “Creamy Layer for sc/st” பற்றி என்னுடைய கருத்து வேறு. இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. IAS, IPS, இதர Group A, Group B, டாக்டர், எஞ்சினியர், அரசு வக்கீல் மற்றும் சுய தொழில் புரிவோர், நல்ல கம்பெனிகளில் பணி புரிவோர், எளிமையாக சொல்வதென்றால் எவர் ஒருவரால் வரி கட்ட இயலுமோ (SC/ST) , அவரின் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு என்பதை ஆதரிப்பது அபத்தம் என்றே கருதுகிறேன்.
2. என்னுடைய கேள்வி ரொம்ப எளிதானது. நல்ல பொருளாதார நிலையில் இருக்கிற தலித், அதே சமூகத்தை சேர்ந்த ஏழை வீட்டு மாணவர்கள் பலன் பெற உதவும் என்று இட ஒதுக்கீட்டை புறந்தள்ளுகிறார்களா? இல்லை, இவற்றை எதிர்க்காமல் இருப்பதுதான் முற்போக்குத்தனமோ என்னவோ? இதுபோன்ற விடயங்களில் தேவையில்லாத சமாளிபிக்கேசன் (சமாளிப்பான) செய்கிற அல்லது அதுகுறித்து வாய்திறக்காத முற்போக்குவாதிகள், எம்மாதிரியானவர்கள் என்கிற கேள்வியை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவர்கள் தங்களை முற்போக்காகக் காட்டிக் கொள்ள, எது உதவும் என்பதை மட்டும் குறியாக வைத்து செயல்படுவதால், அவரின் கருத்துக்களை எதிர்க்க வேண்டிய அவசியமாகிறது.
3. என்னைப் பொறுத்தவரையில், இன்றைய உலகில் பொருளாதார முன்னேற்றத்தை அடைந்த எவர் ஒருவராலும் தனது குழந்தைக்கு சரியான கல்வியைக் கொடுக்க இயலும். ஆகையால் கிரிமீ லேயர் அவசியமற்றது எனக் கருதுகிறேன். ஒருவேளை அவர்களுக்கு சமூக அந்தஸ்து இல்லையென வாதிடுவார்களானால், அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை வைக்க விரும்புகிறேன். SC டாக்டர் என்றால் யாரும் காண்பிக்க மாட்டார்களா என்ன? இல்லையென்று சொல்வோமேயானால் , அதைப் படிக்க வைக்கிற பள்ளிக் கூடத்திலேயே செய்திருப்பார்களே!!
4. சாதியால் ஒரு சமூகம், எந்த பலனும் இந்தக் காலத்தில் பெறவில்லை என்று சொல்வது, அவர்களே அவர்களை ஏமாற்றிக் கொள்ளுதல் அல்லது சாதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக சமூக பலன்களே இல்லையென்பது போன்ற இல்லாத மாயையை செய்யும் வேலை என்றே கருதுகிறேன். என்னால் சில உதாரணங்களோடு சாதியால் ஒரு சமூகம் அடையும் பலன்களை அடையாளம் காட்ட இயலும். தனது சமூகத்தில் உள்ள ஏழைகளை கைத்தூக்கி விடும் வேலையை எல்லா சாதிகளும் செய்கின்றன.
5. என்னால் சாதியால் இன்னமும் சமூகங்கள் அடையும் பலன்களை எளிதாக அடையாளம் காட்ட முடியும். சரவணா ஸ்டோர்ஸ் , ஜெயச் சந்திரன் ஸ்டோர்ஸ் மற்றும் இன்ன பிற மளிகைக் கடைகளிலும் அண்ணாச்சி ஆட்களை ஊரிலிருந்து அழைத்து வந்தே வேலைக்கு வைக்கிறார்கள். (மற்ற நிலப்பகுதி சாதிகள் செய்கிற சேவையை நான் அறியேன். நெல்லையிலிருந்து என்ன நடக்கிறது என்பதை என்னால் விளக்க இயலும். ) மேலும் திருமண வயதை நெருங்குகிற போது, சிறு கிராமங்களில் மளிகைக் கடையையும் அவர்களே வைத்துக் கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் அச்சமூகத்தைப் பொறுத்த வரையில் பலன் தானே. இது சரியா தவறா என்ற விவாதம் அவசியமற்றது என்றே நினைக்கிறேன். டிவிஎஸ் ஐயங்காகாரிலும், rmkv (பிள்ளை) நெல்லை கடைகளில் அதிக பட்சமாக எந்த சாதி ஏழைகளை பணியில் வைத்துள்ளார்கள் என்பதைப் பார்த்தே சமூக பலன்களை அறியலாம். குறிப்பாக, தனியார் நிறுவனங்களில்கூட உயரிய பதவியிலும், பணப் பட்டுவாடாவிலும், யாரை அமர்த்துகிறார்கள் போன்ற நடைமுறை கேள்விகளை விட்டு விட்டு சாதியால் எந்த பலனுமில்லை என்று எளிதாக கடந்து செல்வது சாதியை ஒழிக்க வேண்டும் என்ற வேட்கையில் சொல்ல மட்டுமே இயலும்.
6. என்னுடைய மேற்கூறிய கருத்து தவறு என நினைப்பவர்களுக்கு, வெளிநாட்டில் பணிபுரிகிற நாங்களே நமது நாட்டைச் சேர்ந்தவனை கம்பெனியில் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்பதை நாட்டுப் பற்றாக ஏற்றுக் கொள்கிற மனம், தன சாதிக் காரனுக்கு உதவினால் மட்டும் குற்றமாகக் கருதுவதை ஏற்றுக் கொள்ள இயலாது. இரண்டு செயல்களிலும் ஒளிந்து கிடக்கிற விஷயம் இதுதான். 1. எளிதாகக் கேள்வி கேட்க இயலும். 2. வேலையை சரியாக வாங்க இயலும். 3. ரொம்ம்பவே convincingஆக இருக்கும். 4. தனது சமூகத்தின் முன்னேற்றத்தில் தனது உதவி இருக்கிறது என்பதை நம்புகிற மனம் மட்டுமே. ஆகையால்தான், சாதியால் பலனேஇல்லை என்று ஒரு சமூகம் நினைக்கிற வரைக்கும் சாதிகள் இருக்கும்.
7. சாதிதான் பன்முக கலாசாரத்திற்கு உகந்தது என்று கருதுகிறேன். முரண்பட்ட விஷயங்களை உள்வாங்கிக் கொள்கிற சமூகமே மிகச் சிறந்த கலாச்சாரம். அதுவே நாகரிகமும் கூட!. அதன் வழியாக மட்டுமே பல்வேறு சடங்கு முறைகளையும், வழிபாட்டு முறைகளையும் கொண்ட சமூகமாக இச்சமூகம் விளங்கியுள்ளது என்பதை மறுக்க இயலுமா? இதற்குப் பொருள் சாதியை தூக்கிப் பிடிக்கிறேன் என்று பொருள் அல்ல.
8. சாதிய வெறியில் அலைவதே தவறு. காதலிப்பவர்களை வெட்டிப் போடுவேன், குடும்பத்தை இல்லாமலாக்குவேன் போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கதே! அடுத்தவர்களை பிறப்பை வைத்து இந்த வேலையை மட்டும் செய்ய வேண்டும் என்று சொல்வதை நானும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது தற்காலத்தில் ஓரளவுக்கு சாத்தியமில்லாமல் போனது குறித்து மகிழ்ச்சியே!
10. சாதியை ஒழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொள்வதால் அது ஒருபோதும்அழியப் போவதில்லை. ஏனெனில் இட ஒதுக்கீடு சமூக நீதியின் அடிப்படையில் இருக்கட்டும் என்ற முற்போக்கு கோசத்தை வைத்துக் கொண்டே சாதியை ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று பரப்புரைகளை பெரும் சமூகம் ஒருக்காலும் ஏற்காது.
11. என்னைப் பொறுத்தவரையில் , அவரவர் சமூகத்தின் அடிப்படையில் செயல்படுவதில் எந்தத் தவறுமில்லை. சாதி கால மாற்றத்தால் பொருள்வயமான வாழ்வியல் முறையில் அதுவாகவே அழியும் என்றால் அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முற்பட்டால் கூட அது அழிவதை யாராலும் தடுத்து விட முடியாது.
12. “எ(த்)தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்பது போலவே சாதியை ஒழிக்க முற்படுபவர்களும் அபத்தக் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.
எந்த விடயமும் தேவையின் அடிப்படையிலும், பலன்களின் அடிப்படையிலும் மட்டுமே ஜீவிக்க இயலும். சாதியால் எந்தப் பலனுமில்லை என்று ஒரு சமூகம் நம்புகிற காலக் கட்டத்தில் மட்டுமே சாதி மறையும் என்பது என்னுடைய கருத்து.