குஜராத் மின் உற்பத்தி – சாதனைகளும் சவால்களும்

gujarat 1

நவம்பர் மாத ஆழம் இதழில் நான் எழுதிய குஜராத் மின் உற்பத்தி : சாதனைகளும், சவால்களும் என்ற கட்டுரை வந்துள்ளது. கட்டுரை வரக் காரணமான திரு மருதனுக்கும், திரு பத்ரி சேஷாத்ரிக்கும் எனது நன்றிகள். கட்டுரையின் முழு வடிவம் எனது இணையப் பக்கத்தில் உள்ளது. சுருக்கமான வடிவம் இதழில் உள்ளது.

உணவு. உடை. உறைவிடம். மூன்றும் தான் அடிப்படைத் தேவைகள் என கதைக்கிறோம். இந்த மூன்றில் கூட மனிதன் உயிர் வாழ உணவு மட்டுமே தேவை. அதுதான் அடிப்படைத் தேவையாக இருந்திருக்கக் கூடும். மனிதர்கள் வெளிகளில் வாழும் போது பல இயற்கை இன்னல்களுக்கு ஆளாகி இருக்கக் கூடும். உயிர்கள் அற்ப ஆயுளில் இறந்திருக்கக் கூடும். பறவைகளைப் பார்த்து மனிதனும் தனக்கேற்ற குடில்களை அமைத்துக் கொண்டு வாழப் பழகி இருக்கக் கூடும். ஆகையால் உறைவிடம் அத்தியாவசியமாகி இருக்கக் கூடும். நாகரிகம் வளர வளர உடை முக்கியக் கருதுகோளாகி இருக்கும்.

காலத்திற்கேற்றார் போல அத்தியாவசியத் தேவைகளின் அளவுகோல்களும் கூடுவது இயல்பே. அவ்வகையில் நாகரிக சமூகத்தின் அடிப்படை, இன்றியமையாத தேவைகளில் கல்வியும், மின்சாரமும் ஒன்றாகி விட்டது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, குறிப்பாக பொருளாதாரத்தில் வளர, இவை இரண்டும் அத்தியாவசமாகி விட்டன. மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்கிற மாநிலங்களுக்கு தொழிற்சாலைகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏராளம். மின்சாரத்திற்கான குஜராத்தின் திட்டங்களை மூன்று வழிகளில் பார்க்க வேண்டியுள்ளது. அவை

  1.  மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் விவசாயத்திற்கும்  தேவையான, தடையற்ற மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதா?
  2. மின்சார வரி எவ்வாறுள்ளது? மக்களின் மீது அதிக வரி திணிக்கப்பட்டுள்ளதா?
  3. மரபுசாரா எரிசக்திக்கு(காற்று, கதிர்) குஜராத் முக்கியத்துவம் கொடுப்பது அனைவரும் அறிந்ததே. அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் குஜராத்துக்கு லாபமா? நட்டமா?

மோடியின் சாதனைகளில் மிக முக்கியமாக முன்வைக்கப் படுவது தங்குதடையற்ற மின்சாரத்தை வழங்குகிறார் என்பதே. மரபுசாரா எரிசக்திக்கு (காற்று, கதிர், நீர்) மோடி முக்கியத்துவம் கொடுக்கிறார் என்கிற கருத்து பரவலாக உள்ளது. குறிப்பாக சோலார் CANAL, சோலார் சிட்டி, சோலார் CAPITAL என பல்வேறு திட்டங்களுடன் குஜராத் உள்ளதென நாள்தோறும் இணையங்கள், தொலைக்காட்சிகள் செய்தி பரப்புகின்றன. உண்மையிலேயே மரபுசாரா எரிசக்தியின் துணை கொண்டுதான் மின்சாரம் தடையின்றி கிடைக்கிறதா? குஜராத் மக்களின் இன்றைய மின்தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது மரபு சாரா எரிசக்திகளா? புதுப்பிக்கவியலா எரிசக்திகளா (அனல், அணு)? குஜராத் மின்மிகு மாநிலமாக இருந்தும், குஜராத் மக்களின் மின்சார வரி ஏன் தமிழகத்தைக் (இதர மாநிலங்களைக்) காட்டிலும் அதிகமாக உள்ளது? கதிராலைகள் அமைக்கப் பெற்றுள்ளதால் குஜராத்திற்கு என்ன லாபம்? புதுப்பிக்கவியலா மின் உற்பத்தி முறைகளோடு ஒப்பிட்டால், கதிராலையின் பங்களிப்பு திருப்திகரமானதாக உள்ளதா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய அவசியமுள்ளது.

மின் நிறுவுதிறன்( Installed Capacity):

India Central Electriciy Authority july 2013, தரவுகளின் அடிப்படையில் குஜராத்தில் உள்ள மொத்த மின் ஆலைகளின் நிறுவுதிறன்(Installed Capacity) 26,034 MW. இதில் புதுப்பிக்கவியலா எரிசக்திகளான அனல்(Thermal) மற்றும் அணு(Nuclear) மின் நிறுவனங்களின் நிறுவுதிறன் 21294 MW. மரபுசாரா எரிசக்திகளான காற்று (Wind), நீர் (Water) மற்றும் கதிர்(Solar) மின் ஆலைகளின் நிறுவுதிறன் 4740 MW.

மின் உற்பத்தி:

2012 -13 ஆம் ஆண்டிற்கான மின்சார உற்பத்தி குறித்த  அனைத்து மாநிலங்களின் நிலையைப் பற்றி India Central Electriciy Authority வெளியிட்டிருந்தது. அத்தகவலின் அடிப்படையைக் கணக்கில் கொண்டால், குஜராத் மட்டுமே மின்சார தேவையைப் பூர்த்தி செய்ததில் முன்னிலை வகுத்துள்ளது தெரிய வருகிறது. (http://www.cea.nic.in/reports/yearly/lgbr_report.pdf,  Page No 25 & 26).

2012 – 13 ஆம் ஆண்டில் குஜராத்தின் மின் தேவை (93662MU),  மின் இருப்பு (93513), ஆகியவற்றைக் கணக்கில் வைத்துப் பார்த்தால் மின் பற்றாக்குறை/ தட்டுப்பாடு  0.3%  இருந்தது. CEA –யின் இத்தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் தங்குதடையற்ற மின்சாரத்தை குஜராத் கடந்த ஆண்டு வழங்கியுள்ளது. மின்தேவை, மின் இருப்பு ஆகியவற்றை MW அடிப்படையில் பார்த்தாலும் மின் பற்றாக்குறை 0.2% ஆகவே இருந்துள்ளது.

இதை வைத்துப் பார்க்கும் போது குஜராத் அரசு மக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும், விவசாயத்திற்கும் தடையற்ற, நிலையான மின்சாரத்தை வழங்கி உள்ளது புரியும் .

2012- 2013 கணக்கின் படி, தமிழகமோ 17.5% மின் பற்றாக்குறை உள்ள மாநிலமாக இருந்ததையும் காணமுடிகிறது. தங்குதடையற்ற, நிலையான மின்சார வசதியை செய்து கொடுப்பதன் மூலம் நிறைய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் குஜராத்தை நோக்கிப் படையெடுப்பது என்பது இயல்பே! இது மாநிலத்தின் பொருளாதார நிலையை உயர்த்த பெருமளவு உதவி புரியும் என்பதை உணர்ந்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிக மின் நிறுவனங்களை திட்டமிட்டு அமைத்ததன் மூலமே இது சாத்தியமாயிற்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மின்சார வரி:

குஜராத்தில் தமிழகத்தைப் போல எந்த மானியமும் மின்சார வரியில் வழங்கப்படவில்லை. சின்ன உதாரணம்: வீடுகளுக்கு முதல் 50 unit (அலகு)/ month வரையிலும் மானியமில்லாமல் பார்த்தால் தமிழகத்தின் மின்சார வரி Rs 2.60 . மானியத்தைக் கழித்துப் பார்த்தால் Rs 1.00.  அதே 100 Unit வரை உபயோகித்தால் மானியமில்லாமல் Rs 2.80. மானியத்தைக் கழித்துப் பார்த்தால் Rs 1. 50. தமிழகம் அனைத்து மக்களுக்கும் 500 Unit வரை உபயோகிக்கிற பட்சத்தில் வெவ்வேறு வரியை உபயோகத்திற்கு தகுந்தாற்போல வசூலிக்கிறது. 500 unit க்கு மேல் மின்சாரத்தை உபயோகிப்பவர்களுக்கு Rs 5.75 / unit என மானியமின்றி வசூலிக்கப் படுகிறது.

குஜராத் முதல் 30 Unit வரை மட்டும் அடித்தட்டு ஏழை மக்களுக்கு Rs 1.50 என வசூலிக்கிறது. அதற்கு மேல் உபயோகித்தால் மற்றவர்களுக்கு என்ன வரியோ அதையே வசூலிக்கிறது. அதேபோல, கிராம பஞ்சாயத்துக்களைப் பொறுத்தவரை முதல் 50 Unit வரை Unit/month க்கு Rs 2.30 வரி விதித்துள்ளது. தமிழகத்தை ஒப்பிடும் போது RS 1.30 , ஒவ்வொரு அலகிற்கும் அதிகமாக வசூலிக்கிறது. கிராம பஞ்சாயத்தல்லாத பகுதியெனில் , முதல் 50 Unit வரை Unit/month க்கு Rs 2.80  வசூலிக்கிறது. மாதத்திற்கு 250 unit க்கு மேலாக உபயோகிப்பவர்களிடமிருந்து , Rs4.75 / unit என வசூலிக்கிறது.

  1. குஜராத் மின் வாரியம் லாபத்தில் இயங்குகிறது. தமிழகமோ நட்டத்தில் இயங்குகிறது.
  2. குஜராத் ஏன் மக்களுக்கு மானியம் தராமல் மக்கள் மீது அதிக வரியைத் திணிக்கிறது? தமிழகம் எவ்வாறு தருகிறது? இவ்விரு கேள்விகளுக்கும் விடை எளிதானது.

தமிழகம் மது விற்பனையின் மூலம் அதிக லாபமீட்டுகிறது. ஆகையால், தமிழக அரசு மின்வாரியம், போக்குவரத்து என பல்வேறு துறைகளில் மானியம் கொடுத்து சமாளிக்கிறது. தமிழகம் நட்டத்தில் இயங்க சில காரணிகளுள் முக்கியமானவை, அளவு கடந்த ஊழல் மற்றும் வரியை 2002 லிருந்து 2011 வரை ஏற்றாதது, அதிக கடனுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், தனியாரிடமிருந்தும்  மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கியது..  இது ஒருபுறம் இருக்கட்டும்.

குஜராத் மின்சாரவரியை அதிகரிப்பதற்கு சில காரணங்கள் முக்கியமானவை.

  1. குஜராத் மாநில அரசைக் காட்டிலும், அதிக அளவிற்கு தனியார் நிறுவனங்களே மின் ஆலைகளை அமைத்துள்ளன. Thermal ( 11580.2 MW),  Solar & Wind ( 3935.08 MW) . அதாவது குஜராத்தில் அமைக்கப்பெற்றுள்ள மொத்த மின் ஆலைகளில் 60% , தனியார் மூலமாக அமைக்கப்பெற்றுள்ளன. அவைகளிடமிருந்து அரசு வாங்கும் விலை நிச்சயம் அதிகமாகவே இருக்கும்.

உதாரணமாக 650 MW அளவிற்கு கதிராலைகள் அமைக்கப்பெற்றுள்ளன. இதை அரசு பெற, unit க்கு 15 Rs என முதல் 15 ஆண்டுகளுக்கும், அடுத்த 12 ஆண்டுகளுக்கு Rs 12 என ஒப்பந்தம் செய்துள்ளது. மாநில மற்றும் மத்தியத் தொகுப்பு நீங்கலாக , இதர மின்சாரத் தேவையை தனியாரிடமிருந்து அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. மின் வாரியமும் லாபத்தில் இயங்க வேண்டும். அதே நேரத்தில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கவும் வேண்டும் . ஆகையால்தான் மின்சார வரி குஜராத்தில் அதிக அளவிற்கு மக்கள் மீது திணிக்கப் பட்டுள்ளது. மது ஒழிப்பு அமலில் உள்ளதால் மானியம் வழங்க இயலாத சூழலில் அரசு உள்ளது போலும். அரசுகள் தங்கள் சொந்த செலவில் மின் நிலையங்களை அமைக்காமல் அதிக அளவிற்கு தனியாரிடம் விலைக்கு வாங்குவதன் மூலம் அவை அதிக லாபமீட்டும். தடையற்ற மின்சாரத்தைப் பெற்றாலும் அதன் சுமையை மக்கள் சுமக்க வேண்டி வருவது நல்ல செயல் அல்ல. இயன்ற அளவிற்கு அரசாங்கமே திட்டங்களைத் தீட்டுவதும், குறைந்த அளவில் தனியார் வசம் இருப்பதும் மட்டுமே மக்களுக்கு நியாயமான வரியை விதிக்க உதவும் என்பது எனது கருத்து.

gujarat 2

சோலார் மின் உற்பத்தியும் குஜராத்தும்:

உலகம் முழுமைக்கும் மரபுசாரா எரிசக்திக்கான விழிப்புணர்வும், அரசுகள்  அதிக அளவிற்கு மானியங்கள் அளிப்பதன் மூலமாக கதிராலைகளும், காற்றாலைகளும் அதிக அளவிற்கு நிறுவப்படுகின்றன. குஜராத்தில் 605MW (ஏப்ரல் 13) அளவிற்கு கதிராலைகள் அமைக்கப்பெற்றுள்ளன. இந்தியாவில் மூன்றில் இரு பங்கிற்கு குஜராத்தில்தான் அவை உள்ளன. மேலும் சாரங்கா கிராமத்தில்  கதிராலைகள் ஒரே இடத்தில் 214MW நிறுவப்பெற்றுள்ளது. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய சோலார் பார்க் என்ற பெருமையுடன் திகழ்கிறது. 500MW அளவிற்கு அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிக முக்கியமான ப்ரொஜெக்டாக solar canal project பார்க்கப்படுகிறது. இது நர்மதா ஆறு பாய்ந்து செல்லும் வாய்க்காலுக்கு மேலாக, சோலார் PVcell இன்ஸ்டால் செய்யப்பட்டு அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே  1MW அளவிற்கு நிறுவி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. மீதமுள்ள பகுதிக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. Solar Canal project ஐப் பொறுத்தவரை , இதுவே உலகில் முதல் திட்டமாகும். இதன் மிக முக்கிய நன்மையாகப் பார்க்கப்படுவது இதுதான்.

  1. இதற்கென(PV Cell Install செய்வதற்கென) தனி நிலம் ஒதுக்கவேண்டியதில்லை. இதன் மூலம் 11000 ஏக்கர் அளவிலான நிலப்பகுதி மிச்சமடைகிறது.
  2. தண்ணீரின் மேல் PV Cell நிறுவப்படுவதால், ஆண்டிற்கு 2 பில்லியன் லிட்டர் தண்ணீர் ஆவியாக செல்வது தடுக்கப்படும் என கணக்கிட்டுள்ளார்கள்.

குஜராத் அரசு இதனை நிறுவுவதால் ஏற்படும் நன்மை CO2 emission பெருமளவு குறையும்.

புதுப்பிக்கவியலா எரிசக்தியின் (Non Renewable) பங்களிப்பு 82 % அளவிற்கும், மரபுசார எரிசக்தியின்( Renewable Energy) பங்களிப்பு 18% அளவிற்கும் உள்ளது. இதைக் குறிப்பிடுவதற்கு முக்கியக் காரணமுண்டு.

  1. வருடம் முழுமைக்குமான மின் உற்பத்தி ஓரளவுக்குத் தங்குதடையின்றி கிடைக்க வேண்டுமானால், மின் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்கு மின் ஆலைகள் நிறுவப்பட வேண்டும்.
  2. ஒவ்வொரு மின் உற்பத்தி முறையும்(காற்று, கதிர், அனல், புனல், அணு), அதனதன் மின் உற்பத்தியில் எத்தகைய பங்களிப்பு செய்கிறது என்பதைப் பொறுத்து தடையற்ற மின்சாரம் வழங்க இயலும்.

குஜராத்தைப் பொறுத்தவரையில் அனல் மற்றும் அணு மின் சக்தியின் நிறுவுதிறனும் அதிகம். மின் உற்பத்தித் திறனும் அதிகம்.

மக்களுக்குத் தங்குதடையின்றி தரவேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் குஜராத் அரசைத் தாராளமாகப் பாராட்டலாம். ஆனால் அதே வேலையில், மின் வரியை எவ்வாறு குறைப்பது எனத் திட்டமிட்டு குஜராத் மின் திட்டங்களை அமைக்கவும் வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s