திருக்கார்த்திகையும் நானும்:

karthikai 1

 

 

தீபாவளி நகரங்களின் திருவிழா என்றால், திருக்கார்த்திகையும் பொங்கலும் கிராமங்களின் திருவிழா. திருக்கார்த்திகையை அதிக மகிழ்வுடன் கொண்டாடுவது, சின்னஞ் சிறார்களும் பள்ளி மாணவப் பருவத்தினரும்தான். திருக்கார்த்திகை வரலாற்றை அறிஞர்கள் சொல்லட்டும். நான் என்னுடைய அனுபவத்தையும் எங்கள் கிராமம் கொண்டாடுகிற விதத்தை மட்டும் சொல்கிறேன்.

 

எங்கள் வீட்டில் திருக் கார்த்திகையையும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகையன்று அரிசிமாவும், மஞ்சள் தூளும் கலந்து மாக்கோலம் இடுவார்கள். வீட்டின் நிலைகளில், கதவுகளில் பட்டை போட்டு (சிலர் வட்டமாக) குங்குமமும் வைப்பார்கள். வீடு நிரம்ப கிளியாஞ்சட்டி விளக்குகளும் (மண்), கொழுக்கட்டையிலான விளக்குகளும் ஏற்றுவார்கள். மாவிளக்கும் பிடிப்பார்கள். சீனி கொழுக்கட்டை, பொறி உருண்டை செய்வார்கள். சிலர் வெல்லச் சீடையும், வெல்ல அடையும் செய்வார்கள். எங்க வீட்டில் பனைஓலைக்  கொழுக்கட்டை செய்ய மாட்டார்கள். அது எனக்கு எப்பவுமே சுதாம்மா வீட்டிலிருந்து  கிடைத்து தான் சாப்பிட்டுள்ளேன். பனைக் கொழுக்கட்டை பெரும்பாலும், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில்தான் பிரசித்தமானது. அதன் வாசமே தனி!. ருசியும் தனி. கார்த்திகை மாதம் முழுவதும் மாலையில், வீட்டின் மாடக் குழியில் (இப்போதெல்லாம் வெறுமனே வீட்டுத் திண்ணையில்) விளக்கேற்றுவார்கள்.

 karthikai 2

இது ஒருபுறம் இருக்கட்டும். நமது அனுபவம் ஒன்று இருக்கிறதே. அதை சொல்லா விட்டால் பிறகு என்னாகிறது? எங்கள் கிராமத்தில், சொக்கப் பனை ஏற்றுவார்கள். பனை ஓலைகளைக் கொண்டு அடர்த்தியாகக் கட்டி அதை எரிய விடுவார்கள். சிறுவர்கள் பனை ஓலையைக் கொண்டு எரித்து முடித்தவுடன் சைக்கிள் டயரை எரிப்போம்.

 

ஏலே… டயர்ல உள்ள கம்பியை எடுக்காதல … பெறவு சீக்கிரம் எரிஞ்சி தொலஞ்சிரும்பான் நண்பன். சைக்கிள் tube க்குத் தடை. டயர் நாற்றமாவது தாங்கிக் கொள்ளலாம். tube நாற்றம் கேட்கவே வேண்டாம். ( எவனாவது environmental pollution ன்னு இதுக்குப் பகுத்தறிவு பேசுனிய… அம்புட்டுதான். போங்கப்பா, போய் உங்க பகுத்தறிவை வச்சி நீங்க முன்னேறுங்க.. ஆ.. ஊன்னா… பண்டிகையை ஏழைகள் எப்படிக் கொண்டாடுவார்கள்னு கிளம்பி விடுவீர்களே)

 

அப்படி கொண்டாடுகிற ஒரு திருக்கார்த்திகையன்று, அப்போது நான் ஒன்பதாவது வகுப்புப் படித்தேன். ஒருத்தன் சொன்னான், ஏலே புளிய மரத்துல பேய் இருக்குமாமே… வாங்கல… பேய் நம்மள என்ன பண்ணுதுன்னு பாப்போம்னு கெளம்பிப் போனோம். அப்ப மணி ராத்திரி பதினொன்று. உள்ளுக்குள் வீட்டில் தேடுவார்கள் எனத் தெரியும். அதுக்குத் தான் உள்ளே போட்டு அடிக்குதே ஒழிய, பேயை எதிர்கொள்ள சுத்தமா மனசுப் பயப்படல. எல்லாம் பக்கத்துல நிறைய மக்காக்கள் இருக்கானுவல்லா. அதான்.

 

நெறைய பயலுக வீட்டுல பெருசா திட்ட மாட்டாங்க. இந்த மாதிரி விஷேச நாட்களில் கிராமத்துக் கோவிலில் பலரும் தூங்குவது வழக்கம். ஆனால், எங்கள் வீட்டில் அப்படியல்ல. வீட்டில் சொல்லாமல் இரவு ஏழு மணிக்கு மேலே செல்லக் கூடாது. அப்படிப் போனால் கூட வீட்டில் வந்துதான் தூங்கணும். இதுதான் என்னோட பயத்துக்குக் காரணம்.

 

திரும்பயும் பேய்க் கதைக்கு வருவோம். புளிய மரத்துக்குப் போய், புளியங்காயை பறிச்சித் தின்னாச்சு. ஏலே…. எவம்லாம் சுடுகாட்டுக்கு வாரான்… ஒரு தைரியசாலி சொல்ல, ஏலே அங்கெல்லாம் வேண்டாம்லன்னு சில மக்காக்கள் சொன்னார்கள்.

 

பயந்தாக்கொள்ளிப் பயலுவளா… வர்றவன் வா… வராதவன் போங்கள… பிஸ்கோத்துகளான்னு ஒரு குரூப் சொல்லிருச்சு. ஏலேய்… எங்களை பயந்தான்கொள்ளின்னு  நெனைச்சியோல. வால… அதையும்தான் பார்த்திருவோம்னு அம்புட்டு பேரும், சுடுகாட்டுக்குப் பயணம் … மன்னிக்கவும் வீறு நடைப் போட்டோம். ஏலே கார்த்திக்கை,  ஏம்ல பௌர்ணமி அன்னைக்கு வந்தது. இது அம்மாவாசையா இருந்தா… சூப்பரா இருக்கும்லா… என்றான் ஒரு மக்கா. இப்படிப் பேசிக்கிட்டே சுடுகாட்டை அடைந்தோம்.

 

அங்கே சுடுகாட்டில் சுற்றி நின்று கத்தினோம். எவம்ல சொன்னான் பேய் இருக்குன்னு. ( தனியா போகச் சொன்னா, அம்புட்டுப் பயலும் அம்பேல் ஆகிருவோம். அது வேற கதை). நல்லா டான்ஸ் , கும்மாளம் என இரவு ரெண்டு மணி வரை சுற்றினோம்.

 

வீட்டுல பன்னிரண்டு மணி வரைத் தேடி இருப்பார்கள் போல. வீட்டுக்கு வந்தவுடன் விழுந்த அடி இருக்கே. அது மறக்க இயலாதது. சொல்லாம போவியா… சொல்லாம போவியா… அன்றிலிருந்து இன்று வரை வீட்டில் சொல்லாமல் எங்கும் போவதில்லை. திருக் கார்த்திகை எனக்கு வீட்டில் எதையும் சொல்லி விட்டுச் செய் என்ற அரிய பாடத்தை என்னுள் விதைத்த நாள்!!! அனைவருக்கும் திருக் கார்த்திகை வாழ்த்துகள்.

One response

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s