ஒரு சுவாராஸ்யமான செய்தி. இது 1989 – 90 ல் நடந்தது. சவூதியில் ஒவ்வொரு கிராமமும் ஏறத்தாழ 50 கிலோமீட்டர் (நம்மூரைப் போல நிச்சயமாக அருகில் கிடையாது) இடைவெளி கொண்டவை. இதை மனதில் கொண்டு சவுதி அரசு, கிராம மக்களை (Bathu) நகர எல்லைக்குள் கொண்டு வர முயற்சி செய்தது.
ஏன் சவுதியா அரசு அவ்வாறு கொண்டு வர முயற்சி செய்தது ? காரணம் எளிது. மின் வழித்தடம், பெட்ரோல் வழி, தண்ணீர் பைப், கழிவு நீர் அகற்றல், பாதாளச் சாக்கடை, சாலை வசதி, பெட்ரோல் பாங்கு, வங்கிக் கிளை மற்றும் இன்ன பிற அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்தித் தருவது, மேலும் அதைத் தொடர்ந்து பராமரிப்பது போன்றவற்றிற்கு ஆகும் செலவு அதிகம். நமக்கேத் தெரியும், கடல் நீரைக் குடிநீராக்கித் தான் சவுதியின் அனைத்து ஊர்களுக்கும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆதலால் சமாளிப்பது கடினம் என முடிவெடுத்து கிராம மக்களை நகரத்திற்குள் குடி பெயரச் செய்ய அரசு முடிவெடுத்தது.
இதை மனதில் கொண்டு ஒவ்வொரு பெரிய நகரிலும் வீடுகள் கட்டும் பணியையும் தொடங்கியது. கிராம மக்களிடம் விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு , ஏற்கனவே விவசாய பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் நிலம் ஒதுக்கித் தரப்படுமென்றும், வசிக்க அதன் அருகிலுள்ள நகரத்திலும், ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு அனைத்துப் பெரிய நகரத்தின் எல்லையிலும் வீடுகள் கட்டித் தரப்படுமென்றும், குறைந்த பட்ச வருமானம் வேலையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட வருடங்களுக்குத் தருமென அரசு அறிவித்தது. ( இப்போதும் கூட அரசு பணியில்லாதவர்களுக்கு நிறைய சலுகைகள் காட்டுகிறது).
ஆனால் கிராம மக்கள் அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அரசு இறுதியில், கட்டிய வீடுகளை ஈராக் – குவைத் போரில் பாதிக்கப்பட்டு சவூதியில் அடைக்கலமான மக்களுக்கு வழங்கியது. இப்போது கல்வி மூலமாக நகரங்களில் மெல்ல மெல்ல குடியேறி வருகிறார்கள்.
குறிப்பு: இதை எனக்குச் சொன்னது , ஒரு சவூதி நண்பர். அரசுப் பணியில் மிக உயரிய இடத்தில் இருப்பவர். எங்கும் படித்த செய்தியல்ல.