தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளைக் கூறியுள்ளது. அதில் தேர்தல் தேதியன்று யாரும் சின்னத்தையோ, தமது கட்சிக்கு சாதகமாகவோ, வேட்பாளருக்கு சாதகமாகவோ எதையும் 100 மீட்டர் இடைவெளிக்குள் செயல்படுத்தக் கூடாது என்பதே அது. இன்று மோடி தாமரை சின்னத்தை வாக்களித்து விட்டு வெளிவந்து 100 மீட்டர் இடைவெளிக்குள் காட்டியுள்ளதாகவும், மேலும் அம்மா மகனை மக்கள் அகற்றுவார்கள் என்ற பிரச்சாரத்தைப் பேட்டி என்ற வகையில் அளித்துள்ளதாகவும் , ஆதலால் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தேர்தல் ஆணையம். வழக்குப் பதிவு செய்வதெல்லாம் இருக்கட்டும். அதற்குமுன் இதே போன்ற சம்பவத்தை நேரடியாக அனுபவித்தவன் என்ற முறையில் கீழ்க்கண்ட விடயத்தைப் பகிர்கிறேன்.
மோடி இன்றைக்கு தாமரை சின்னத்தைக் காண்பித்ததைப் போலவே , 1998 தேர்தலில் நான் பூத் ஏஜண்டாக இருந்த போது, இதே போன்ற சம்பவம் நடந்தது. அப்போது சைக்கிள் சின்னத்தில் திருச்செந்தூரில் தனுஸ்கோடி ஆதித்தன் நின்றார். எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் சைக்கிளில் வந்தார். ஏப்ரல் மாத வெயில், அவருக்கு என்ன இவர்கள் சட்டமாத் தெரியப் போகுது, அவர் பள்ளியின் அருகிலேயே பார்க் பண்ண போனார். உடனே காவலர் அவரைத் திட்ட ஆரம்பித்து விட்டார். இங்கே நீ எப்படி சின்னத்தைக் கொண்டு வரலாம்னு திட்டி, அங்கே போய் விடுய்யா… என்றார்.
அப்போ நான் அங்கிருந்த preceding officer கிட்டே , சார் அவரைத் திட்ட சொல்லாதிங்க சார். அவர் என்ன பிரச்சாரமா பண்ணப் போறார். ஓட்டைப் போட்டுட்டு இப்ப போயிருவார். போலீஸ்கிட்டே சொல்லுங்கன்னேன். உடனே இல்ல தம்பி, எங்களுக்கு சொல்லி இருக்கிற ரூல்ஸ் இது. அதை நாங்க follow பண்ணனும் என்றார்.
நல்லது சார். சின்னத்தைக் காண்பிக்கக் கூடாதுன்னா, இந்த ஜக்கும் தான் இங்கே நிக்குது. கை சின்னம் மாதிரி எவனாவது நூறு மீட்டர் இடைவெளியில் காண்பிச்சா என்ன பண்ணுவீங்க. கையைக் கொண்டு வரக்கூடாதுன்னு சொல்வீங்களான்னு கலாயிக்க ஆரம்பித்தேன். அவர் விடுப்பா… நீ இப்படியெல்லாம் கேட்டேன்னா நான் என்னத்த சொல்றதுன்னார்.
தேர்தல் முடிந்த பிறகு, தம்பி நீ சைக்கிள் சின்னத்திற்கு எதிராக வேலை செய்துகிட்டு ஏம்ப்பா… அந்தப் பெரியவர் சைக்கிளைக் கொண்டுவரக் கூடாதுன்னு சொன்னால் சந்தோஷப் படாம , அதுக்குப் போய் வக்காலத்து வாங்குறேன்னார். எவனாவது பிரச்சினை பண்ணுறவனை, கள்ள ஓட்டுப் போடுறான்னு தெரிஞ்சா நீங்களெல்லாம் என்ன பண்ணுறீங்க…. ஒண்ணும் பண்ண முடியாது. அவர் ஏதோ வயசானவர், வந்து அவர்பாட்டுக்கு ஓட்டைப் போட்டுட்டு போறவர்கிட்டே போய் ஏன் இப்புடி கொலை வெறியைக் காண்பிக்கிறீங்க. உங்க கடமையுணர்ச்சி இருக்கே என்று மீண்டும் கலாய்த்தேன்.
இப்போது மீண்டும் விடயத்திற்கு வருவோம். முதலில் ஊடகங்களை ஓட்டுப்பதிவு நடக்கும் இடத்தில் ஏன் அனுமதிக்க வேண்டும்? தேர்தல் ஆணையமே தலைவர்கள் ஒட்டுப்போடுவதைப் படம் பிடித்து ஊடகங்களுக்குக் கொடுத்தால் போதாதா? மேலும் ஊடகங்கள் வாக்குப் பதிவிற்கு வரிசையில் நிற்பவர்களிடமே , நீங்கள் எப்படிப்பட்ட ஆட்சி அமைய விரும்புகிறீர்கள் என கேட்கிறார்கள். அதற்கு வாக்களிக்க வந்தவர், நான் strong, good governance and a stable government அமையவேண்டுமென எதிர்பார்க்கிறேன் என்கிறார். இப்படி ஊடகங்களையும் அனுமதித்து, 100 மீட்டர் இடைவெளிக்குள் பேட்டியுமெடுத்து அப்புறம் இது சரியா தவறா என்பது ஏன் என்று புரியவில்லை.
ஊடகங்களையும் உள்ளே விட அனுமதிப்பாங்களாம். 100 மீட்டர் இடைவெளிக்குள் பேட்டியும் எடுக்க அனுமதிப்பாங்களாம். தேர்தல் ஆணையம் இப்படி அரைகுறையா ரூல்ஸ் போட்டு வச்சிக்கிட்டு இது தப்பா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணுறதுக்கு பொம்மை மாதிரியே இருங்கப்பா… நீங்க தேர்தல் முடிஞ்சப் பிறகு தவறிழைத்தவர்களுக்கு வாங்கிக் கொடுத்த தண்டனைகளில் மக்கள் அப்படியே பூரிச்சுப் போய் கிடக்கிறாங்க. போங்கையா….