ஆம் ஆத்மியின் கிராம சபை திட்டம் செயல்படுத்தக்கூடியதா?

என்னுடைய கட்டுரை தமிழ் ஹிந்து இணைய இதழில் வெளிவர உதவிய நண்பர் திரு ஜடாயு அவர்களுக்கும், ஆசிரியர் குழுவிற்கும் எனது நன்றிகள்.

Kejriwal-dharna

 

ஆம் ஆத்மியை ஆதரிப்பவர்கள் அதை ஆதரிப்பதற்கு முன் வைக்கும் முதன்மையான மூன்று காரணங்கள் இவைதான்.

1.       ஆம் ஆத்மி ஊழலை ஒழிக்கப் பாடுபடுகிறது.

2.       ஆம் ஆத்மி அதிகாரப் பகிர்வு குறித்து பேசுகிறது.

3.       ஆம் ஆத்மி மக்கள் பங்களிப்புடன் கூடிய ஜனநாயகம் பற்றி பேசுகிறது.

கிராம சபை, மொகல்லா சபை ஆகியவற்றைக் கொண்டு வருவதன் மூலம் மேற்கூறிய மூன்று விடயங்களையும் தீர்க்க இயலும் என முன் வைக்கிறது. ஊழல் ஒழிய வேண்டுமா என எவரிடம் கேட்டாலும் அவர் பதில் என்னவாக இருக்கப் போகிறது? ஆம், ஊழல் ஒழிய வேண்டும் என்பதாகவே இருக்கும். அதுவே மற்றவைக்கும் பொருந்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆம் ஆத்மியை ஆதரிப்பவர்கள் வெறும் இந்த கருத்தை முன் வைப்பதை வைத்தே இவர்களை ஆதரிப்பதாகப் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. ஏனெனில் ஆம் ஆத்மி முன் வைக்கும் கிராம சபையின் செயலாக்கம் எவ்வாறு உள்ளது? அது நடைமுறைக்கு உதவுமா? அல்லது அதில் உள்ள குறைகள் என்ன? நிறைகள் என்ன? என ஆராய்ந்து அதை ஆதரிக்கிறார்களா எனத் தெரியவில்லை.

ஆம் ஆத்மி முன் வைக்கும் சுவராஜ் திட்டத்தில் கெஜ்ரிவால் தமது கனவு என சொல்லும் சுவராஜ் புத்தகத்திலும், தேர்தல் அறிக்கையிலும், அவரின் தேர்தல் பிரச்சாரங்களிலும் இடம் பெறும் கருத்தாக்கங்கள் மேற்கூறிய மூன்றையும் கொண்டு செயல்படுத்த இயலாது. அல்லது செயல்படுத்த முனைந்தால் அதன் ஆபத்து என்ன என்பதைப் பற்றி காண்போம்.

ஊழல் ஒழிப்புக் கொள்கை:

ஊழலை ஒழிக்கப் போவதாக சொல்லும் கெஜ்ரிவால் , இதரக் கட்சியினர் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுஙகள், ஓட்டை மட்டும் எங்களுக்குப் போடுங்கள் என்பது ஊழலை ஊக்குவிப்பதாகாதா? மாற்று அரசியலை முன்னிறுத்துபவர் மக்களுக்கு எவ்வாறு அறிவுறுத்த வேண்டும். ஓட்டுக்குப் பணம் வாங்குதல் என்பது ஒருவகையில் ஊழலே. நீங்கள் வாங்குவதன் மூலம் ஓர் அரசியல்வாதி வெற்றி பெற்றால் அவர் தேர்தல் செலவில் இழந்ததை மீட்கத் தானே முதல் முயற்சி எடுப்பார். அவர் ஊழல் செய்ய உதவாதீர்கள் என்றல்லவா சொல்ல வேண்டும். அதை விடுத்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்வது எவ்வகையில் இவர் மீது நம்பகத்தன்மையைக் கொண்டு வரும்.

Kejriwal-dharnaஊழலை ஒழிக்க விரும்பும் கெஜ்ரிவால் தம்மோடு உணவருந்த இருபதாயிரம் என ஒரு தொகையை முன் வைக்கிறார். இதைக் கட்சிக்கு நிதி பிரிக்கும் யுக்தியாக பயன்படுத்துவதாகவும் சொல்கிறார். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கட்சிக்கான நிதி வசூலை வெளிப்படையாக வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கட்டும். வெளிப்படை என்பதால் இது ஊழலை ஊக்குவிப்பதாகாதா? இது மேலை நாடுகளில் அரசியல்வாதிகள் நிதி பிரிக்கும் வகையைச் சேர்ந்ததே. ஒரு நபர் எதற்காக ஒருவருடன் உணவருந்த 20,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஒரே நாளில் 50 லட்சம் ரூபாய்கள் வசூலாகியதாக அவர்களே சொல்கிறார்கள். இதில் உள்ள சூட்சமம் படித்த இளைஞர்கள் தாங்களாக விருப்பப்பட்டு உணவருந்துவது போல காண்பிக்க முயல்கிறார். நாளை இன்னொரு அரசியல்வாதி தன்னிடம் உணவருந்த ஒரு லட்சம் ரூபாய்கள் என சொல்வார். அவர் இதன் மூலமாகவே கட்சி நிதி வசூலானது என்பார். அதாவது ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் படித்த இளைஞர்களை உணவருந்தச் செய்வதன் மூலம் கட்சிக்கான நிதியை செலுத்தாதா என்ன?

சுவராஜ் திட்டம் பற்றி நிறைய பேசலாம். இக்கட்டுரையில் இந்தியாவின் கட்டுமானம், தொழில் வளர்ச்சி பற்றியும், ஆசிரியப் பணியில் கிராம சபை பங்களிப்பைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

அணைத் திட்டங்கள்:

கெஜ்ரிவால் முன்வைக்கும் சுவராஜ் திட்டத்தில் ஏதேனும் அணை கட்டப்பட வேண்டுமானால் அது எவ்வாறு நிறைவேற்றப் படவேண்டும் என கீழ்க்கண்டவாறு சொல்கிறது. அது சரியா என பார்க்கலாம்.

// Plan for Water Scheme:

The water sources that fall under the boundaries of a village will automatically be treated as the
property of the village. No decision should be taken, like building a dam, on large water resources like
river, without the consent of the village sabhas.//

அணை ஏன் கட்டப்பட வேண்டியுள்ளது என்கிற அடிப்படையை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அணை கட்டப்படுவதன் மூலம் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், அதை முறையாக விவசாயத்திற்கும், நீரில்லா வறண்ட பகுதிக்கும், நீண்ட நிலப்பகுதி வரையிலும் நீரை, விவசாயத்திற்காக முறையாகக் கொண்டு செல்வதன் மூலம் மக்கள் தேவையையும் விவசாய வளர்ச்சியையும் பெருக்க இயலும் என்பதை அதன் அடிப்படை.

கிராம சபை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அங்கு அணை கட்டக்கூடாது என்கிறார். நீர் வசதியுடைய ஒரு மலைப்பரப்பிலோ, அல்லது தடுப்பணைகள் கட்ட ஏற்ற நீர் வளம் உள்ள பகுதியில் தான் இதை செய்ய இயலும்.

மலையடிவாரத்தில் வாழும் நீர் வளம் உள்ள செழிப்பான கிராமத்திற்கு அணை என்பது ஆபத்து. ஆகையால் அவர்களுக்கு மலைமேல் கட்டப்படும் அணை எப்போது வேண்டுமானாலும் உடையும் ஆபத்து என்கிற பரப்புரை மட்டுமே இடதுசாரி சிந்தனையாளர்களால் மேற்கொள்ளப்படும். மேலும் அதுவே சரியென ஒரு கிராம சபை எண்ணலாம். அவர்கள் இப்பகுதியில் அணைக் கட்டக் கூடாது என சொல்வார்கள். அவர்களுக்கு என்ன வந்தது , வெகுதொலைவிலுள்ள மக்களுக்கும் வறட்சிப் பகுதிக்கும் நீர் தேவைப்படும் என்றா பார்ப்பார்கள். ஆதலால் அணைக் கட்டப்படாது, விவசாயம் அப்பகுதி மக்களால் மட்டுமே செய்யக் கூடியதாய் அமையும்.

ஒருவேளை அரசு அணைக் கட்டுவதாக இருந்தால், நிலப்பரப்பைக் கொடுப்பவர்களுக்கு முறையாக வேலை வாய்ப்பு, இழப்பீடு என்பதை செய்ய அறிவுறுத்துவது சரியா? அல்லது கிராம சபை உத்தரவு கொடுத்தால்தான் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமா? என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. அரசுகளிடம் போராடி நிலங்களை இழப்பவருக்கு அனைத்துக் கட்சிகளும் போராடலாம். அப்பகுதி மக்கள் போராடி முறையான இழப்பீட்டையும், வேலை வாய்ப்பையும் கேட்டுப் பெறுவதுதான் சரியே ஒழிய, இதை இங்கு வர விட இயலாது என சொல்வதென்பது இந்தியாவின் கட்டுமானத்தையும், தொழில், விவசாய, மின் வளர்ச்சியையும் நிச்சயமாகப் பாதிக்கும்.

கிராம சபையின் அதிகாரம்:

ஆம் ஆத்மி முன்னிறுத்தும் கிராம சபை மற்றும் மொகல்லா சபையில் , அவர்களே அவர்களின் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வார்கள் என சொல்லப்படுகிறது. மேலும் பணப்பட்டுவாடாவை அந்தந்த மொகல்லா சபைக்கு கொடுத்து விடுவார்கள். எதிர்வரும் காலங்களில் மாநில அரசுக்கு பொது சேவைக்கான வரி மட்டும் கட்டினால் போதும். கிராம சபைகள் தங்களின் வருமானம் மூலமாகவே, அவர்களின் தேவைகளை அவர்களாகவே (அவர்களின் பிரச்சினைகளைத்) தீர்த்துக் கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை ஏதோவொரு பணிக்கு மாறுபட்ட கருத்துகள் நிலவும் பட்சத்தில் பெரும்பான்மை எங்கு கிடைக்கிறதோ அதற்கேற்றாற்போல செயல்படுவார்கள்.

ஆம் ஆத்மி அதிகாரப் பகிர்வு (power decentralize) பண்ணவும் அப்பகுதி மக்களே அதன் பிரச்சினை என்ன என்பதைப் புரிந்துத் தீர்த்துக் கொள்ளவும் எளிதாக இயலும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இதை முன் வைக்கிறது. power decentralise பண்ண வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இதில் உள்ள நடைமுறைச் சிக்கல் என்னவென்று பார்க்க வேண்டியுள்ளது. ஒருவேளை மூன்று மொகல்லா சபையில் நடுவில் இருக்கிற பகுதிக்கு சாலை வசதி தான் பெரும் பிரச்சினை எனக் கருத இயலும். அதனருகில் அதே தெருவில் உள்ள அடுத்த மொகல்லா சபைக்கு கழிவுநீர்ப் பிரச்சினை இருக்கக் கூடும். ஆம் ஆத்மி முன் வைப்பது போல , அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணப்பட்டுவாடாவை வைத்து ஒரு சபை சாலை போடும், இன்னொன்று கழிவு நீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும். சற்று சிந்தியுங்கள். சாலை வசதி போட்ட சபை காரர்கள் , அடுத்த சபையை கடந்தே பிரதான சாலைக்குச் செல்ல வேண்டுமென்றால், மீதிப் பகுதி சாலை வசதியற்று கிடக்கும். இது ஒரு பிரச்சினை.

கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதி மொகல்லா சபை , தாழ்த்தப்பட்ட மக்களை அல்லது எண்ணிக்கைப் பலம் குறைந்த சாதியினருக்குத் தேவையானவற்றைக் கிடைக்க விடாது மெஜாரிட்டி என்ற அடிப்படையில் செய்ய முனையும். கிராமங்களில் உள்ள தெருக்களைப் போய் பாருங்கள். பெரும்பாலும் ஒவ்வொரு சாதியினரும் ஏறத்தாழ அதே பகுதிக்குள் வாழ்வார்கள். அங்கு என்ன நடக்கும் ?

கெஜ்ரிவால் முன்னிறுத்தும் கல்வித் திட்டம் நடைமுறைக்கு உகந்ததா?

ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளார்கள். பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, டெஸ்க் போன்றவற்றை மாநில அரசுகள் முறையாக செய்வதில்லை. ஆசிரியப் பணியிடங்களை கிராம சபையே தேவையுணர்ந்து நிரப்பிக் கொள்ளும். அவர்கள் மாநில அரசையோ, அரசியல்வாதிகளையோ, அதிகாரிகளையோ சார்ந்து இயங்க வேண்டியத் தேவையில்லை என்பதே கெஜ்ரிவால் முன் வைக்கும் யோசனை. ஆசிரியர்கள் வகுப்பிற்கு முறையாக வராவிட்டால் அவர்களுக்கான தண்டனையைக் கிராம சபையே முடிவு செய்து கொள்ளும். இதுதான் சுவராஜ் திட்டத்தின் கல்வி முன்னேற்றம் குறித்த பார்வையாக முன் வைக்கிறார்.

gram_sabha_meeting

ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் தேவை, பள்ளிகளுக்கான முறையான கட்டமைப்பு வசதிகள் அரசு செய்து தரவேண்டும்  என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை.இன்றைய நிலையில் ஆசிரியர்களே அரசுப் பணியிடங்களை நிரப்பாத இடத்தில், குறைந்த சம்பளத்திற்கு ஆசிரியர்களைப் பணியில் அமர்த்திக் கொள்கிறார்கள் என்பதைக் கண்கூடாக நாம் அறிவோம்.

கிராம சபை மூலமாகவே தங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதைப் பற்றி பேசியவர், ஆசிரியர்களைப் பணியில் அமர்த்த எம்மாதிரியான இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று குறிப்பிடவில்லை. அந்தந்த கிராம சபைக்குட்பட்ட வருமானம் வழியாகவே இது நடந்தேற வேண்டும். ஏனெனில் மற்ற கிராம சபை மூலமாகவோ, அரசு தமக்கு ஆண்டில் வந்த வரவு மூலமாகவோ  இதை செயல்படுத்த வேண்டிய அவசியம் தேவையற்றது என்பதே இதன் அடிப்படை. சில கிராமங்கள் விவசாயத்தில் ஒரு பருவமோ, இரு பருவம் மட்டுமே செய்ய இயலும். பனைத் தொழில் சார்ந்த குடும்பங்கள், விவசாயக் குடும்பங்கள், இதர ஆண்டு முழுமைக்குமான வருவாயற்ற கிராம சபைகள் தங்களுக்கான வருமானத்தை எவ்வாறு ஈட்டும்? அவை எவ்வாறு பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களைப் பணியில் அமர்த்த இயலும்? அதாவது எந்தத் தொழிலுக்கும் ஒரு வேலைக்கான (ஆசிரியர், காவலர், engineer) சம்பளம் என்பது கிராம சபைக்கு, கிராம சபை வேறுபடும்.

நாளை இதன் சட்ட திட்டங்களை வடிவமைப்பதில் ஏற்படும் சிக்கல் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் ஆசிரியப் பணி இடங்களை நிரப்புதல் என்பது central authority கீழ் மட்டுமே இருக்க வேண்டும். அத்தகைய அரசால் மட்டுமே தேவையான பணியிடங்களை , எந்த மாவட்டத்திற்கு முதலில் அத்தியாவசியம் என்ற அடிப்படையில் அமர்த்தும் அல்லது அமர்த்த இயலும்.

அரசு நிர்வாகிகள், ஆசிரியர்கள் தங்கள் பணியில் ஒழுங்கைக் கொண்டு வர , அவர்களுக்கு முறையான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதே சரியான அணுகுமுறை. ஊழல் கொடுத்தலும் வாங்குதலும் தவறு என்கிற சிந்தனையை , ஒழுக்கத்தை கற்பிக்கும் வாழும் முறைகள் தான் இன்றைய தேவையேயன்றி கெஜ்ரிவால் முன்னிறுத்தும் கிராம சபை மேலும் சிக்கலை உருவாக்கும். ஆதிக்க சாதிகள் சில பதவிகளுக்கான பணியிடங்களை , அவர்களுக்குள்ளாகவே செய்யவே இது உதவும். தகுதி என்பதற்கு ஒரு கிராம சபை எதை அடிப்படையாகக் கொள்ளும்.

கெஜ்ரிவால் இதைத் தான் செய்யப் போகிறோம் என்கிறார், ஆனால் ஏன் எந்தத் திட்டத்திலும் அதை எவ்வாறு செயல்படுத்துவோம் என தெளிவாகக் குறிப்பிடவில்லை.

எதைப்பற்றியும் தெளிவுப்படுத்தாமல் அதிகாரப் பகிர்வை கெஜ்ரிவால் முன்னிறுத்துகிறார் என்பதை மட்டும் வைத்து அவரை ஆதரிப்பதை அவரை ஆதரிப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். அதிகாரப் பகிர்வை முறையாக எங்கு செலுத்த வேண்டும் என்கிற புரிதலின்றி செயல்படுதல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த உதவாது என்பது திண்ணம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஜமின்தார் காலக் கட்டங்களில் நடந்த முறையைத் தான் இன்று கிராம சபை என்ற முறையில் சொல்கிறார். சாதியக் கட்டுமானத்தில் சிக்கிக் கொண்ட சமூகத்திற்கான சமூக நீதியாகத் தான் இட ஒதுக்கீட்டுச் சட்டம், கல்வி, வேலை வாய்ப்பு என சகலத்திலும் பொதுச் சட்டங்கள் வாயிலாகக் கொண்டு வந்தார்கள். ஊழல் கிராம சபையில் நடக்காது என்பதற்கு என்ன அடிப்படை உள்ளது. ஆம் ஆத்மி மாற்றுச் சிந்தனை என்ற பெயரில் தற்போதைய நிலையில் நடைமுறைக்கு உதவாத விடயத்தை முன் வைப்பது விசித்திரம் மட்டுமல்ல. ஆபத்தும் கூட!!!

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s